Wednesday, June 17, 2015

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆவணங்களும்.. மத்திய அரசின் மௌனங்களும்.. Subhash Chandra Bose Files.


தியாகச்சுடர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த ஆவணங்களை வெளியிட மத்திய அரசு ஏன் தயக்கம் காட்டுகிறது.

நாட்டின் விடுதலைப் போரில் கொதித்தெழுந்த அந்த ஆளுமையின் கீர்த்தியை தொடர்ந்து மறைத்து வருவது நியாயம் தானா?

நேதாஜி பிறந்து 118 ஆண்டுகள் ஆகின்றன. அவர் இறந்ததாகக் கூறப்படும் சம்பவம் முடிந்து 70 ஆண்டுகள் ஆகின்றன. மோடி பெர்லின் சென்றபோது,  நேதாஜியின் உறவினர் அவரிடம், “நேதாஜி 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி தைவானில் காணாமல் போனது பற்றிய ஆவணங்களை வெளிப்படுத்தும்படி” கோரிக்கை விடுத்த்திருந்தார்.

முன்னாள் பிரதமர் நேரு ஆட்சி காலத்தில் நேதாஜி குடும்பத் தாரை இந்திய உளவு அமைப்பு 20 ஆண்டுகளாக வேவு பார்த்ததாக  செய்திகள் வெளியானது. ஆனால் நேதாஜி சம்பந்தப்பட்ட ஆவணங்கள் பற்றி மூச்சுவிடக் காணோம்.

சுபாஷ் அக்ரவால் என்பவர், பிரதமர் அலுவலகத்திடம் , நேதாஜி பற்றிய  ஆவணங்களை வெளியிடுவதில் பொது நன்மை அடங்கி இருப்பதாக தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார்.

ஆனால், ஆவணங்களை வெளியிடுவதில், பொது நன்மை எதுவும் இல்லை என்று பிரதமர் அலுவலகம் நிராகரித்துள்ளது. ‘வெளிநாட்டுடனான உறவை பாதிக்கக்கூடிய தகவல்களை வெளியிடாமல் மறைக்கலாம்' என்று தகவல் பெறும் உரிமை சட்டத்தில்  அளிக்கப்பட்டுள்ள விதிவிலக்கை காரணம் காட்டி ஆவணங்களை வெளியிட முடியாது என்று கூறியுள்ளது.

சர்வதேச அளவில் அரசாங்கம் இம்மாதிரியான ஆவணங்களை 30 ஆண்டுகள் வரை ரகசியமாக வைத்திருக்கும். பின் அவை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். இந்தியாவில் இது குறித்த ஒரு தெளிவான நடைமுறை இல்லை.

காங்கிரஸ் கடந்தகாலத்தில் செய்ததையே பா.ஜ.க அரசும் செய்துவருகிறது.  நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் குறித்த தரவுகளையும் ஆவணங்களையும் மூடி மறைத்து வைக்காமல் அவருடைய தியாகங்களை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் அவற்றை வெளியிட வேண்டும். அதைவிட்டுவிட்டு மக்களை ஏமாற்றும் பம்மாத்து வேலையை மத்திய அரசு தொடரக்கூடாது.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
17-06-2015.


#KSR_Posts #KsRadhakrishnan

No comments:

Post a Comment

*Worrying is like sitting in a rocking chair*

*Worrying is like sitting in a rocking chair*. It gives you something to do but it doesn't get you anywhere.Worry is a total waste of ti...