Thursday, June 18, 2015

நதிநீர் பிரச்சனைகளில் சீனாவின் அத்துமீறலும் தமிழகத்தின் நியாயங்களும் - Water issues

முல்லைப்பெரியாறில் புதிய அணைகட்ட கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது என்றும், காவிரி டெல்டாவுக்கு குறுவைச் சாகுபடி பயிறுக்கு மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்படவில்லை என்ற விவாதம் நடத்திக்கொண்டிருக்கும்  நேரத்தில், சீனா நமது இந்திய எல்லையில் உள்ள அருணாச்சலப் பிரதேசம் மற்றும் திபெத் பகுதியில் பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே பெரிய அணைகள் கட்டவும்,
மின்சார தயாரிப்புக்காக மின் நிலையத்தையும் அமைக்கவுள்ளது சீனா.

திபெத்தின் குடிநீர், மின்சாரம், பாசனத் தேவைகளுக்காக இந்த அணையைக் கட்டப் போவதாக சீனா அறிவித்துள்ளது. இதன்மூலம் திபெத்தின் 16.2 லட்சம் விவசாயிகளும் பொது மக்களும் பயனடைவர் என்று கூறியுள்ளது.

பிரம்மபுத்திரா நதி அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பாய்கிறது. இந்த மாநிலங்களின் பெரும்பாலான குடிநீர், பாசனத் தேவைகளை இந்த நதி தான் நிறைவு செய்கிறது.

இந்நிலையில் அருணாசலப் பிரதேசத்தையே ஒட்டு மொத்தமாக சொந்தம் கொண்டாடி வரும் சீனா, இந்தியாவிடம் ஆலோசனை ஏதும் நடத்தாமல் பிரம்மபுத்திராவின் குறுக்கே அணையைக் கட்ட திட்டமிட்டுள்ளது கவலை தரும் விஷயமாகும்.

 திபெத்தில் உருவாகி இந்தியா, வங்கதேசம் வழியே பாய்ந்து இந்தியப் பெருங்கடலில் கலக்கும் இந்த நதியின் நீளம் 2,900 கி.மீ. ஆகும். பிரம்மபுத்திரா என்பதற்கு, பிரம்மனின் மகன் என்று பொருள். பிரம்மபுத்திராவில் 510 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறது  சீனா கட்டிவருகிறது. இதனால் இந்தியாவிற்கு வரும் தண்ணீர் அளவு குறையும் என்ற அச்சம் நிலவுகிறது.

இதேபோல், மீகாங் நதியின் மீதும் பல்வேறு இடங்களில் எட்டு அணைகளை சீனா கட்டிவருகிறது. இதனால் அதன் கீழை நாடுகளான தாய்லாந்து, லாவோஸ், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு அந்நதியில் கிடைக்கும் நீர் குறையும் என்றும், அதனால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று அச்சம் தெரிவித்துள்ளன.

அண்டை நாடுகளின் அச்சம் தேவையற்றது என்று கூறியுள்ள சீன நாட்டின் அயலுறவு அமைச்சகப பேச்சாளர் ஹாங் லீய், தனது கீழை நாடுகளின் கவலைகளை கருத்தில் கொண்டே மீகாங் நீரை பயன்படுத்துவது குறித்த திட்டங்களைத் தீட்டி வருகிறது என்று கூறியுள்ளார்.

இதேபோல், கடந்த வாரத்தில் சீனா சென்ற இந்திய அயலுறவுச் செயலர் நிருபமா ராவும் பிரம்மபுத்திரா (திபெத்தில் இந்நதியை யார்லங் சாங்க்போ என்றழைக்கின்றனர்) நதியின் மீது கட்டப்படும் அணையினால் இந்தியாவிற்கு ஏற்படும் பாதிப்பு குறித்துப் பேசியுள்ளார். ஆயினும் இரு நாடுகளுக்கும் இடையே நதி நீர்ப் பகிர்வு தொடர்பாக ஒப்பந்தம் ஏதுமில்லாத நிலையில், இந்தியாவிற்கு வரும் தண்ணீர் அளவும், அணை கட்டுவதால் அதில் எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்படும் என்பது தொடர்பான விவரங்கள் ஏதும் திரட்ட இயலவில்லை என்று கூறப்படுகிறது.

“பிரம்மபுத்திரா மீது அணை கட்டும்போது நீர் போக்கு தடுக்கப்படாது” என்று கூறியுள்ள அணை கட்டுமான பொறியாளர் லீ சாவோயீ, “அணை கட்டப்பட்ட பிறகும், மின்சார டர்பைன்களை வாயிலாகவும், கதவுகள் வழியாகவும் எவ்வித நிறுத்தமுமின்றி தண்ணீர் வெளியேறிக்கொண்டிருக்கும், எனவே தண்ணீர் வரத்தில் பாதிப்பு இருக்காது” என்று கூறியுள்ளார்.

பிரம்மபுத்திரா மீது அணை கட்டுவதன் காரணமாக அந்நதியைச் சார்ந்து சுற்றுச் சூழல் பெருமளவிற்குப் பாதிப்பிற்குள்ளாகும் என்று சீன பசுமை இயக்கமான கிரீன் எர்த் கூறியுள்ளது.

பிரம்மபுத்திராவின் நீர்வரத்தை அருணாச்சலப்பிரதேசப் பகுதிகளில் திசை திருப்ப சீனா கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டு வருகின்றது. அருணாச்சலப்பிரதேச எல்லைப்பகுதிகளிலும் சீனா அவ்வப்போது ஊடுருவி சிக்கலை உருவாக்கி வருகின்றது. பிரம்ம புத்திரா நதியிலும், அருணாச்சல எல்லைப்பகுதிகளிலும் எந்த ஒப்பந்தமும் இல்லாமல் சீனா அணைகளைக் கட்டக்கூடாது என்பதில் எல்லா நியாயங்களும் உள்ளன.


சீனா தாந்தோன்றித் தனமாக இந்தப் பிரச்சனையில் நடந்துகொள்வதும் முறையற்றது. இதேபோன்று காவிரியிலும், முல்லைப்பெரியாரிலும்  ஒப்பந்தங்கள், நீதிமன்றத் தீர்ப்புகள், நியாயங்கள் அனைத்தும் தமிழகத்தின் பக்கம் இருந்தும்  மத்திய அரசு தன்னுடைய பொறுப்பைத் தட்டிக்கழித்துக் கொண்டு பாராமுகமாக இருக்கின்றது ஏனோ?

சீனாவோடு ஏற்பட்டுள்ள சிக்கல்களில் மத்திய அரசு எவ்வளவு ஆர்வம் எடுத்துக்கொண்டுள்ளதோ அதே ஆர்வத்தை காவிரியிலும், முல்லைப்பெரியாற்றிலும் தமிழகத்தின் நியாயத்தை நிலைநாட்டுவதிலும் காட்ட வேண்டாமா?

சீனா கட்டும் அணையினால் இயற்கைப் பேரிடர்கள் வரும் என்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் சொல்கின்றனர். சீனாவில் கட்டிய "Xiaowon Dam" என்ற அணையைப் பார்த்தவுடனேயே எவ்வளவு தூரம் இயற்கையை அழித்து அது கட்டப்பட்டுள்ளது என்ற அச்சம் ஏற்படுகின்றது.

“Xiaowan Dam


அதே போல திபெத்தில் சீனா கட்டியுள்ள நீர்மின் நிலையமும் நமக்கு கவலையை உருவாக்குக்கிறது.
       Tibet's largest Zangmu  hydro power station
தமிழகத்துக்கு மட்டும் நதிநீர் ஆதாரங்களில் நியாயங்கள் கிடைக்க மறுப்பது ஏனோ?

-கே.எஸ். இராதாகிருஷ்ணன். 
18-05-2015.







No comments:

Post a Comment