Thursday, December 31, 2015

கனவுப்பிரியனின் கனவு உலகம்

எங்களின் தெற்குச் சீமை நாற்றாங்காலில் துளிர்விட்டுள்ள,  அன்புக்குரிய கனவுப்பிரியனின் படைப்புகள் யாவும் கவனத்தை ஈர்க்கக்கூடியது. ஒரு படைப்பாளி இயற்கை, சமுதாயம், மக்கள் பிரச்சனைகளின் மீது அக்கறையும் ஆர்வமும் இருந்தால்தான் தன்னுடைய ஆக்கப்பணிகளில் வெற்றிபெற முடியும்.

கனவுப்பிரியன் அதற்கு இலக்கணமாகத் திகழ்பவர். பாரதியை ஆதர்சனப் புருசனாகக் கொண்டு, தன் பணிகளை இலக்கிய உலகிற்கு ஆற்றிவருகின்றார்.  முத்துக் குளிக்கும் தூத்துக்குடி நகரில் பிறந்து, சாதாரண நடுத்தர மக்களோடு பழகி, அவர்களுடைய பாடுகள், நிலைமைகளைக் கொண்டு தன்னுடைய படைப்புகளை மக்களிடமிருந்தே உருவாக்கி இருக்கின்றார்.

குறிப்பாகத் தூத்துக்குடி, நெல்லை, தூத்துக்குடி, காயல்பட்டிண இஸ்லாமிய சகோதரர்களின் வாழ்க்கைப்பாடுகளைக் கூர்ந்து கவனித்து, ஆழமாகச் சிந்தித்து, சமுதாய அவலங்களையும் நிகழ்வுகளையும் தன் படைப்புத் திறனில் உருவாக்கியிருக்கின்றார். தூத்துக்குடி தெருக்களில் இளம் வயதில் அலைந்தபோது கண்டகாட்சிகள், அவ்வட்டாரத்தில் பயணிக்கும்போது அவரை ஈர்த்த செய்திகளும் நிகழ்வுகளின் பாதிப்புகளே அவரது படைப்புகள். அந்தப் படைப்புகளின் தொகுப்பாக இந்த கூழாங்கற்கள் சிறுகதைத் தொகுதி வெளியாகின்றது.  இப்படைப்பில் கனவுப்பிரியனின் நெல்லை, தூத்துக்குடி வட்டார மக்களின் பாடுகளையும் வாழ்க்கை முறைகளையும் லாவகமாகத் தன்கதைகளில் எடுத்துச் சென்றிருக்கிறார். 

கனவுப்பிரியன் அவருடைய சகா கார்த்திக் புகழேந்தி மூலம் அறிவேன். எப்படி கார்த்திக் புகழேந்தி கடந்த ஓராண்டுகளுக்கு முன்னால் இலக்கிய உலகின் வாசனையே இல்லாமல் வியாபாரஉலகத்திலிருந்து வியப்படையும் வகையில் தன் எழுத்துகளால் மின்னுகின்றாரோ அதேப்போல கனவுப்பிரியனும் வளைகுடா நாட்டில் தன்னுடைய பணிகளுக்கு மத்தியில் ஓய்வு நேரங்களில் அறையிலிருக்கும்போதுத ன்னுடைய மடிக்கணினி மூலமாகத் தன்னுடைய கதைகளை உருவாக்கியிருக்கிறார் இந்த ஏகலைவன்.

எப்படி திருவனந்தபுரம் சாலைத் தெரு மளிகைக் கடையில் அமர்ந்து கொண்டு ஆ.மாதவன் தன்னுடைய இலக்கியப் படைப்புகளைப் படைத்தாரோ அதுபோல கனவுப்பிரியனும் படைப்புலகில் பேரும் புகழும் பெறவேண்டும்.
கி.ரா என்னிடம் பேசும்போது,  “கனவுப்பிரியனின் இரண்டு கதைகளைப் படிச்சேன். பரவாயில்லை தொடர்ந்து எழுதலாம் இந்ததம்பி” என்றார்.  இதே கருத்தைத்தான் ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்னால், நண்பர். சாத்தூர். லெட்சுமண பெருமாள் எழுத்தைக் குறித்து பெருமைபட பேசிய கிராவின் குரல் கனவுப்பிரியனைப் பற்றிச் சொல்லும் போதும் ஒலித்தது.


வளைகுடா நாடுகளில் வேலைக்குச் செல்பவர்களுடைய அன்றாட வாழ்க்கை முறைகளையும், அவர்களது மகிழ்ச்சியான விசயங்களையும் கதைகளாகப் படைத்துள்ளார். கரிசல் இலக்கியத்தில் ஆர்வமும், அக்கறையும் கொண்டவர். கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் கி.ராவினுடைய கரிசல் காட்டுக்க டிதாசிகளையும், கதைகளையும் படித்து தன் கதையம்சத்தை உருவாக்கியவர்.  கிராவைத் தன் பிதாமகனாக நேசிப்பவர்.

எங்கள் நெல்லைச் சீமை தாமிரபரணித் தண்ணீரைக் குடித்தவர்களுக்கும், கரிசல் மண்ணின் சவருத் தண்ணீர் குடித்தவர்களுக்கும் இலக்கியம் தண்ணிபட்டபாடு. தமிழகத்தில்எந்தமாவட்ட்த்துக்கும், எந்தவட்டாரத்துக்கும்இல்லாதபெருமைஎங்களுக்குஉண்டு. 
சாகித்ய அகாதமி விருதுகளை அதிகமாகத் தட்டிச்சென்றவர்களே நாங்கள்தான். ரா.பி.சேதுப்பிள்ளை,  ஆ.சீனிவாசராகவன், பி. ஸ்ரீ ஆச்சார்யா தொ. மு. சிதம்பர ரகுநாதன், கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், வள்ளிக்கண்ணன், தி.க.சிவசங்கரன், தோப்பில் முகம்மதுமீரான், பூமணி, சு. சமுத்திரம், ஜோ டி குருஸ், ருத்ர துளசிதாஸ் இன்னும் சொல்லப் போனால் கரிசல் இலக்கியத்தை கொண்டாடும் மேலாண்மை பொன்னுச்சாமிஎன இந்தியாவிலே எங்கும் தென்படாத அளவில் தெற்குச் சீமையில் இராஜவல்லிபுரம் கிராமத்தில் ராபி.சேதுப்பிள்ளையும் வள்ளிக்கண்ணனும், குக்கிராமமான இடைச்செவலில் கு.அழகிரிசாமியும், அவரது தோழர் கி.ராஜநாராயணனும் சாகித்ய விருதினைப் பெற்றது எந்த மாவட்டத்துக்காவது, எந்த மாநிலத்துக்காவது சிறப்புகள் உண்டா?
பாரதி, வ.ஊ.சி மட்டுமில்லாமல், திரிகூடராசப்பக் கவிராயர், வீரமா முனிவர், ராபர்ட் கார்டுவெல், ஜி.யு.போப். வ.வே.சு.ஐயர், ரெய்னீஸ் ஐயர், உமறுப்புலவர், சுப்பிரமணிய சிவா, காவடிச்சிந்து அண்ணாமலை ரெட்டியார், ரசிகமணி. டி.கே.சி., ஆ.மாதவைய்யா, காசுப்பிள்ளை, வையாபுரிப் பிள்ளை, நாவலர் சோமசுந்தரபாரதி, பெ.நா.அப்புசாமி, வெள்ளேகால் சுப்பிரமணிய முதலியார், மு.சு. பூரணலிங்கம் பிள்ளை, இ.மு.சுப்பிரமணியம் பிள்ளை, பண்டிதமணி. ஜெகவீரபாண்டியனார், திரிகூட சுந்தரம் பிள்ளை, டி.எஸ்.சொக்கலிங்கம், ஏ.என்.சிவராமன், கி. பட்சிராஜன், .சி.பால்நாடார், தேவநேய பாவணார், பாஸ்கரத் தொண்டைமான்,  ச.வே.சுப்பிரமணியம், பா.ரா.சுப்பிரமணியம், எச்.ஏ.கிருஷ்ண பிள்ளை, என்று சொல்லிக் கொண்டே போகின்ற நீண்டபட்டியலான தமிழறிஞர்கள்…

உதயசங்கர், சுயம்புலிங்கம், சூரங்குடிமுத்தானந்தம், தேவதேவன், தேவதச்சன், சமயவேல், கிருஷி, நாறும்பூநாதன், போன்ற பல இன்றைய படைப்பாளிகளும் நீண்ட வரிசையில் கம்பீரமாக தமிழ் கூறும் நல்லுலகின் முன்நிற்கின்றனர்.

கலைகளின் வேர்களாகத் திகழ்ந்த ஆபிரஹாம் பண்டிதர், எஸ்.ஜி,கிட்டப்பா, விஸ்வநாததாஸ், காருக்குறிச்சி அருணாச்சலம் என இலக்கியம் கலைகளைகளை வென்றெடுத்த எங்களுடைய நிமிரவைக்கும் நெல்லைக்கு ஈடாக எந்த மண்ணும் கிடையாது. இது எங்கள் பெருமையும் செருக்கும் .
அது மட்டுமா தினத்தந்தியைத் துவக்கிய சி.பா.ஆதித்தனார், தினமணி ஆசிரியராக இருந்தடி. எஸ்.சொக்கலிங்கம், ஏன்.என்.சிவராமன், தினகரனைத் துவக்கிய கே.பி.கந்தசாமி, தினமலர் நிறுவனர் டி.வி.ராம்சுப்பையர், பிரபல பத்திரிகைகளில் ஆசிரியர்களாகத் திகழ்ந்த, திகழும் தினமலர் கிருஷ்ணமூர்த்தி, தினத்தந்தி சிவந்தி ஆதித்தனார், மாலன், தினமணி வைத்தியநாதன், சுதாங்கன் என எழுத்து, இதழியல் கலை, திரைப்படத் துறை
எங்கள் மண்ணின் எழுத்தாளர்கள் எப்படி மருத்துவத் துறையில் தனித்தனியாகச் சிறப்பு மருத்துவர்கள் இருப்பதைப் போல விவசாயிகளின் பாடுகளைச் சொல்லுவார்கள்; அல்லப்படும் தொழிலாளர்களின் கவலைகளைச் சொல்வார்கள்; கடலோரத்து மீனவச் சகோதரர்களுடைய கடும் உழைப்பைச் சுட்டிக் காட்டுவார்கள்;  நாட்டுப்புறவியல் எழுத்துக்கு எங்கள் கழனியூரானுடைய படைப்புகளே சாட்சியங்கள்; தலித்து மக்களின் இலக்கியங்களைப் பறைசாட்சும் பூமணி; மேற்கே பொதிய மலையின் தென்றலையும், குற்றாலச் சாரலையும் சொல்கின்ற படைப்புகள், திறனாய்வில் சிறப்புபெற்ற தி.க.சியின் எழுத்துகள்; தமிழர் பகுத்த ஐவகை நிலங்களின் வாழ்வியலை இலக்கியப் படைப்புகளாகக் கொண்டு வந்தவர்கள் எங்கள் நெல்லை மண்ணின் படைப்பாளிகள்.

இன்றைக்கு அந்த வகையில் தாமிரபரணித் தீராவாசத்தில் மழையடித்தும், நெல் மணிகளைப் பாவி, நாற்றாங்காலுக்கு நாள் குறிப்பது போல புதுப்புதுப் படைப்பாளிகள் தன்னகத் திறமைகளோடு புதுவரவாக வந்த வண்ணம் இருக்கின்றனர். அந்த வரிசையில், மாதவராஜ், சங்கரங்கோவில் செவக்காட்டு மண்ணைச் சொல்கின்ற கலப்பை ராமசாமி என்றைக்கும் சாகித்ய அகாடமி விருது பெறுவதில் நெல்லை மண் முதலிடத்தில்தான் இருக்கும். அதற்குத்தான் கனவுப்பிரியன் போன்ற இளம் படைப்பாளிகள் தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள். அவர் பணி சிறக்க வாழ்த்துகள்.

சென்னை.        வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்,
29-10-2015.        இணை-ஆசிரியர்,  கதைசொல்லி
            பொதிகை-பொருநை-கரிசல்

No comments:

Post a Comment

*You are in charge of taking care of yourself*, strive to make everyday Happy.One simplest ways to stay happy is letting go of the things that makes you sad.

*You are in charge of taking care of yourself*, strive to make everyday Happy.One simplest ways to stay happy is letting go of the things th...