------------------------
அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோ பாலா ! எழுந்திராய்,
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே ! குலவிளங்கே !
எம்பெருமாட்டி யசோதாய் ! அறிவுறாய்.
அம்பர மூடறுத் தோங்கி யுலகளந்த
உம்பர் கோ மானே ! உறங்கா தெழுந்திராய்,
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா !
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்,
-----------------
பதவுரை
அம்பரமே – ஆடைகளும், தண்ணீரே – குளிர்ந்த தீர்த்தமும், சோறே – அடிசிலுமாகிய இவற்றைவேண்டுவோருக்கு த்ருப்தி வரும் வரை, அறம் – (ஒரு பலத்தையும்) விரும்பாமல் தர்மபுத்தியாலே, செய்யும் – தாநம் செய்பவராய், எம்பெருமான் – எம் ஸ்வாமியான, நந்தகோபாலா – ஸ்ரீ நந்தகோபரே, எழுந்திராய் – எழுந்திருக்க வேணுமென்ன அவர் அநுமதி செய்தமை தோற்றிக் கிடக்க, இரண்டாம் கட்டிலே சென்று, கொம்பனார்க்கெல்லாம் – வஞ்சிக்கொம்பையொத்த ஸ்த்ரீகளுக்கெல்லாம், கொழுந்தே – முதன்மையானவளாய், குலம் – இக்குலத்துக்கு, விளக்கே – மங்களதீபம் போன்றவளே, எம்பெருமாட்டி – எங்கள் ஸ்வாமிநியான, அசோதாய் – யசோதைப் பிராட்டியே, அறிவுறாய் – எழுந்திருக்க வேணுமென்ன, அவளும் ஸ்ம்மதித்தவள்போல் தோற்றிக்கிடக்க, உள்ளே புக்கு, அம்பரம் ஊடறுத்து – ஆகாஸத்தையெல்லாம் இடைவெளியாக்கிக் கொண்டு, ஓங்கி – வளர்ந்த, உலகு – எல்லா உலகங்களையும், அளந்த – அளந்தருளுகையாலே, உம்பர்கோமானே – தேவர்களுக்கு அரசனானவனே, உறங்காது – தூங்காமல், எழுந்திராய் – எழுந்தருள வேணுமென்றெழுப்ப, அவன் எழுந்திராமல் கிடக்க முந்துற நம்பிமூத்த பிரானை எழுப்பாதே, முறை தவறிச் செய்தோம் என நினைத்து, செம் – சிவந்த, பொன் – பொன்னாற்செய்த, கழல் – வீரவாண்டயமணிந்த, அடி – திருவடிகள், செல்வா – விளங்கப்பிறந்த ஸ்ரீமானான, பலதேவா – பலராமனே, உம்பியும் – உனக்குத் தம்பியான க்ருஷ்ணனும் நீயும் அவன் சொல்வழி நடக்கும் நீயும், உறங்கேல் – தூங்காதே எழுந்திருக்க வேணும்.
‘அழகிய ஆடைகளும், தண்ணீரும், உணவும் எங்களுக்கு அளித்திடும் எங்கள் தலைவனே… நந்தகோபாலா… எழுவீராக…!’
கொம்பையொத்த அழகிய வதனத்தையுடைய பெண்களின் தலைவியே… எங்கள் குலவிளக்கே… யசோதையே எழுவீராக…!
ஆகாயத்தை விட ஓங்கி வளர்ந்து அனைத்துலகையும் உன் பாதங்களால் அளந்த கண்ணனே… தேவர்களின் தலைவனே… எழுந்து அருள்புரிவாயாக!
செம்பொன்னால் செய்த கழலை அணிந்த பலதேவனே…
நீயும் உனது தம்பியும் உறக்கத்திலிருந்து விழித்தெழுவீர்களாக…”
என்று கண்ணனுடன், நந்தகோபானையும், யசோதையையும், பலராமனையும் சேர்த்து எழுப்புகிறாள் கோதை…!
ஆயக் குலமகளிரை மணிக்கதவம் தாள் திறந்து உள்ளே செல்லும்படி அநுமதிக்கிறார்கள். அவர்கள் நந்தகோபன், யசோதைப்பிராட்டி, கண்ணன், பலராமன் ஆகியோரை எழுப்புகின்ற காட்சியை இப்பாசுரம் புலப்படுத்துகின்றது.
‘ஆடைகள், பருகுநீர், சோறு ஆகியவற்றை வேண்டுவோர் வேண்டும் வரை வழங்கும் வள்ளன்மை படைத்த எங்கள் குலத்தலைவா, நந்த கோபாலா, எழுந்திருப்பாயா’ என்று வேண்டுகிறார்கள். அவன் எழுந்திருப்பதாகத் தோன்றின மட்டில் இரண்டாம் கட்டில் இருக்கும் யசோதைப்பிராட்டியை எழுப்புகின்றார்கள்.
‘வஞ்சிக்கொம்பு போலிருக்கும் பெண்களுக்கெல்லாம் கொழுந்தாகத் திகழ்பவளே. ஆயர்குலத்தின் திருவிளக்கே. நந்தகோபன் எங்களுக்குத் தலைவனாகையால் ஆயர்குலத்தின் தலைவியாய் விளங்குபவளே. யசோதைப் பிராட்டி, எழுவாயாக’ என வேண்டி நின்றனர். யசோதையும் விழித்தெழும் தோற்றம் புலனாகவே மூன்றாம் கட்டிலுள்ள கண்ணனை எழுப்புகிறார்கள்.
‘விண்ணை ஊடுருவிக் கொண்டெழுந்து ஓங்கி உலகளந்த தேவர்கள் நாயக, உறங்காது எழுக’ என்று விண்ணப்பித்தவர்கள். அவன் எழுந்திராமை கண்டு, ‘அண்ணன் பலராமனை எழுப்பாமல் வந்தது முறையன்று’ என்று அவன் கருதுவதை உணர்ந்தவர்களாய், நான்காவது கட்டில் துயிலும் பலராமனை அழைக்கிறார்கள்.
அணிந்து மகிழும் போக்யப் பொருளான ஆடைகளையும், தாரகப் பொருளான தண்ணீரையும், போஷகப் பொருளான சோற்றையும் வாரி வழங்கும் இயல்புடையவன் நந்தகோபன், அவ்வாறே இம்மூன்று பொருள்களுமாய்த் திகழும் கண்ணனைத் தரவேண்டும் என இரந்தார்கள். உண்ணும் சோறு, பருகுநீர், உடுத்தும் ஆடை யாவும் கண்ணனாக அவர்கள் கருதியதை உணர்த்தினார்கள்.
‘கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே’ என்று யசோதைப்பிராட்டியை அழைத்தார்கள். கொம்புக்கு ஏதேனும் நேர்ந்தால் கொழுந்து முதலில் வாடிவிடும் அன்றோ? அதுபோல் எங்களுக்கு ஒன்று நேர்ந்தால் உன் முகமன்றோ வாடிவிடுகின்றது என்று கருதிச் சொன்னார்கள். ‘குல விளக்கே’ என்றும் அழைத்தார்கள். ஆயர்குலக் கொழுந்தும் ஆயர்குலத்தின் அணிவிளக்குமான கண்ணனுக்குத் தாயாக விளங்குவதால் யசோதையையும் இவ்வாறு வியந்து மகிழ்ந்தார்கள்.
‘அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமான்’ என்று கண்ணனைச் சிறப்பித்தார்கள். உலகு காக்கும் குணாதிசயமே விளைநீராக வளர்ந்தான் கண்ணன். அத்தகைய பேருருவம் கொண்டு தேவர்களையும் காக்கும் தேவதேவனாகத் திகழ்ந்தவன் எளியோமாகிய எம்மையும் காத்து, இரட்சிக்கவேண்டும் என்றனர்.
அண்ணனை எழுப்பி நம்மை எழுப்பும் முறை தப்பினர் என அவன் பேசாது கிடந்தமை அறிந்து பலராமனை எழுப்பினார்கள். ‘கண்ணன் பின்னே பிறக்க முன்னே பொற்கால் பொலிய இட்டுப் பிறந்தவன்’ என்று பலராமனைச் சிறப்பிக்கின்றார்கள்.
சகோதர பாசம் மிக்கவனாம் கண்ணன். இராமாவதாரத்திலும் பிராட்டியைப் பிரிந்து நெடுநாள் இருந்த இராமன் இளைய பெருமாளைப் பிரிந்தபோது அமுதும் செய்திலன். அதனாலே அண்ணன் பலராமனை எழுப்பக் கண்ணன் காத்திருந்தானாம்.
படுக்கையில் உறங்குவார்கள், படுக்கைக்கு உறக்கம் உண்டோ? ‘பலராமனாகிய நீயும் எழுந்து தம்பியுடன் எங்களை காத்தல் செய்வாய்! என்று வேண்டினர்.’
ஆயர்குல மகளிர் மன ஓட்டமெல்லாம் கவிதை உணர்வோட்டமாகி வரும் இப்பாசுரம் ஆண்டாளின் சங்கத் தமிழ்மாலையில் கற்பக மலராகித் திகழ்கின்றது.
No comments:
Post a Comment