-------------------------
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்,
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி,
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்,
வைத்துக் கிடந்த மலர் மார்பா ! வாய்திறவாய்,
மைத்தடங் கண்ணினாய் ! நீஉன் மணாளனை,
எத்தனை போதும் துயிலெழ வொட்டாய்காண்,
எத்தனை யேலும் பிரிவற்ற கில்லாயால்,
தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்.
----------------
பதவுரை
குத்துவிளக்கு – நிலைவிளக்குகள், எரிய – நாலாபக்கமும் எரியா நிற்க, கோட்டுக்கால் – ஆனைத் தந்தத்தாலான் கால்களையுடைய, கட்டில்மேல் – கட்டிலின் மீது, மெத்தென்ற – ம்ருதுவான, பஞ்ச – அழகு, குளிர்ச்சி, ம்ருதுத்தன்மை, வாஸனை, வெண்மையாகிய ஐந்து சிறப்புக் குணங்களையுடைய, சயனத்தின் மேலேறி – திருப்பள்ளியின் மீதேறியிருந்து, கொத்து – கொத்துக் கொத்தாக, அலர் – மலர்ந்த, பூ – பூவைத்தரித்த, குழல் – கூந்தலையுடைய, நப்பின்னை – நப்பின்னைப் பிராட்டியின், கொங்கைமேல் – ஸ்தநங்களின் மேல், வைத்துக்கிடந்த – வைத்துக்கொண்டு கண்வளர்ந்து அருளுகிறவனாய், மலர்மார்பா – அத்தாலே அகன்ற திருமார்பையுடையவனே, வாய் திறவாய் – வாயைத் திறந்து ஒரு வார்த்தை சொல்லவேணுமென்ன அவன் வாயைத் திறந்து மறுமொழி கூறப்புக நம்மையொழியத் தாங்களே எழுப்புவதே என்று கண்ணாற் காட்டிய ஸம்ஞ்ஜையைக்கண்டு, மை – மை தீட்டிய, தடம் – விரிந்த, கண்ணினாய் – கண்ணுடையவளாய், பிரிவு – அவன் பிரிவை எத்தனையேலும் ஒரு நொடிப்பொழுதும் கூட, ஆற்ற கில்லாய் – பொறுக்கமாட்டாத நப்பின்னைப் பிராட்டியே, நீயுன் மணாளனை – உன் மணவாளனான க்ருஷ்ணனை, எத்தனை போதும் – ஒரு ஷைணப்பொழுதும், துயிலெழவொட்டாய் – தூக்கத்தை விட்டு எழுந்திருக்க விடுகிறதில்லை இப்படிச் செய்வது, தத்துவமன்று – உன் ஸ்வரூபத்துக்கு ஒவ்வாது, தகவு அன்று – உன் ஸ்வபாவத்துக்கும் சேராது என்கிறார்கள்.
“நிலை விளக்குகள் நாற்புறமும் ஒளிவீச, தந்தக் கால்களையுடைய கட்டிலில் மெத்தென்ற பஞ்சு படுக்கையின் மீது, கொத்து கொத்தாகப் பூத்திருக்கும் பூக்களைச் சூடிய கூந்தலுடைய நப்பின்னையின் மார்பில் தலையை வைத்து துயில்பவனே. வாய்திறந்து பேசுவாயாக.
மை தீட்டப்பட்ட அழகிய கண்ணுடைய நப்பின்னையே.
நீ உன் கணவனைச் சிறுபொழுதும் துயில் நீங்க விடமாட்டாய்.
சிறு கணமாகிலும், நீ அவனைப் பிரிந்திருக்கவும் மாட்டாய்..
நீ இவ்வாறு இருப்பது சரியன்று.”
என்று தனது ஆதங்கத்தை தத்துவமாகப் பாடுகிறாள் கோதை..!
நப்பின்னைப் பிராட்டியை எழுப்புவதற்கு இவர்கள் முற்பட்டபோது அவளும் எழத் துணிந்தாள். அப்போது, ‘நம்மைக் கருதி வந்த இவர்களுக்கு இவள் முற்பட்டவளாதல் கூடாது’ என்று நப்பின்னையைக் கட்டித் தழுவிக் கிடந்தான். கட்டிலில் கிடந்த அவளும் மயங்கிப் போனாள். அதனால் இப்போது அவனை அழைத்தார்கள்.
கண்ணனும் நப்பின்னையும் இருக்கும் படுக்கை அறையில் குத்து விளக்கு எரிகிறது. யானைத் தந்தத்தால் செய்த கால்களைக் கொண்ட கட்டிலிலே மெத்தென்று விளங்கும் பஞ்ச சயனப் படுக்கை திகழ்கிறது. அங்கு கொத்தாகப் பூத்த மலர்களைச் சூடியிருக்கும் நப்பின்னையின் மார்பகமீது தன் திருமார்பணைத்துத் தழுவிக் கிடக்கிறாள் கண்ணன்.
அவனை அவ்வாறே வர்ணித்து, ‘கண்ணா வார்த்தை தர வேண்டும்’ என்று கேட்கின்றார்கள். பிராட்டியையும் அவனையும் பிரிக்கலாகாதென்ற கருத்தால் அவனை, ‘எழுந்திராயோ’ என்னாது, ‘வாய்திறவாய்’ என்று வேண்டுகின்றார்கள். கண்ணனும் பேச முற்படுகிறான்.
இப்போது அவளை எழுப்புகிறார்கள். ‘மை பூசிய அகன்று விரிந்த கண்களை உடையவளே, நீ உன் அருகிலே அவனை எப்போதும் வைத்திருக்கும் பேறு பெற்றவளாயிருந்தும் எங்களைக் காண அனுமதியாதவளாய்ப் படுக்கையை விட்டெழாமல் தடுக்கின்றாயே ஒரு கணமும் அவனைப் பிரிந்திருக்க முடியாதவளாய் இருக்கின்றாயே’ என்று மனம் வெதும்பி உரைக்கின்றார்கள்.
‘நீயன்றோ புருஷகாரமாய் விளங்கி அவனை எங்களோடு சேர்ப்பிக்க வேண்டும்.. அவ்வாறு செய்யாது அவனை அணைத்துக் கிடப்பது உன் சொரூபத்திற்கும் சுபாவத்திற்கும் பொருந்தாது’ என்னும் பொருள்பட, ‘தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்’ என்றார்கள் ஆய்ச்சியர்.
கண்ணனும் நப்பின்னையும் கலந்து கிடக்கும் பள்ளியறைக் காட்சி இப்பெண்களின் மனதில் அலை அலையான சிந்தனைகளை எழுப்பி விடுகின்றது. ‘இவளே விளக்குகளும் வேண்டுமோ?’ என்று எண்ணுகிறார்கள்.
கண்ணன் உறங்கும் கட்டில் யானைத் தந்தங்களால் செய்த கால்களை உடையது. அத்தந்தங்கள் இவன் கொன்ற குவலயா பீடம் என்னும் யானையினுடையவை. அதனை நினைக்கும்போது அவனுடைய ஒப்பில்லாத வீரம் கவனத்துக்கு வருகின்றது. வீரத்தால் பெற்ற நப்பின்னை உறங்குதற்கு ஏற்ற பொருத்தமே இது எனக் கருதுகின்றார்கள்.
கட்டில் மீது இட்ட மெத்தையை பஞ்ச சயனம் என்றார்கள். அழகு, குளிர்ச்சி, மென்மை, நறுமணம், தூய்மை என்னும் ஐந்து பண்புகளும் பெற்றிருப்பதாலே அவ்வாறு அழைத்தார்கள். அத்தகைய பண்பு உடையவனுக்கு இது ஏற்ற இடமென்று போற்றினார்கள்.
கொம்பினின்று போந்து குழலிலே பூக்கின்றனவாம் மலர்கள். நப்பின்னை கூந்தலில் ஏறியதும் மலர்களுக்கே மலர்ச்சி உண்டாகிறதாம். ‘வாய் திறவாய்’ என்றது மார்பை அவளுக்குக் கொடுத்தாலும் வாய்ப்பேச்சை எங்களுக்குத்தரலாமே என்று சொல்லுவதற்காம்.
‘மையிட்டு எழுதோம்’ என்றூ நோன்பு நோற்கிறோம் நாங்கள். எங்களுக்கு அவனைக் காண்பித்து மையெழுத வாய்ப்புத் தராமல் தான்மட்டும் மைத்தடங்கண்ணினளாக நப்பின்னை இருக்கிறாளே என்று குறை இரந்தார்கள்.
‘சற்றும் அவனைப் பிரியவொண்ணாமல் இருப்பது உன் விருப்பமென்றால் எங்களுக்கும் அதுவன்றோ விருப்பம்? அதற்கு உதவாமல் இருப்பது நீதி அன்று’ என்றார்கள். ‘உன் பெருமைக்கு ஏற்றதும் அன்று’ என்று சொல்லிக் காட்டினார்கள்.
தத்துவமும் தகவும் ஆனவள் நப்பின்னை மட்டுமண்று, கண்ணனும் அன்றோ? உன் உறவின் நெருக்கம் எங்களையும் சேர்ப்பிக்க உதவ வேண்டாமோ? என்று எடுத்துரைத்தார்கள்.
நப்பின்னை என்ற ஒப்பில்லாக் கருணை, ‘தொட்டனைத் தூறும் மணற்கேணி’யாதலாலே, அதனைக் கிளர்ந்தெழச் செய்தற்கு இத்தனை கிளிப்பேச்சும் பேசுகிறார்கள் இடைக்குலச் செல்வியர்.

No comments:
Post a Comment