கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா ! உன் தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறு சம்மானம்,
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடேசெவிப்பூவே,
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்,
ஆடையுடுப்போம் அதன்பின்னே பால்சோறு,
மூடநெய்பெய்து முழங்கை வழிவார
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.
----------------------
பதவுரை
கூடாரை – தன்னை ஆஸ்ரயியாதவர்களை, வெல்லும் சீர் – ஜயிக்கும் குணத்தையுடையவனான, கோவிந்தா – பஸுக்களை ரஷிக்கையாலே கோவிந்தா என்னும் பெயருடையவனே, உன் தன்னை – உன்னை, பாடி – ப்ரீதிக்கும் போக்கு விட்டுப் பாடி, பறைகொண்டு – ப்ராப்யத்தைப் பெற்று, யாம் – நாங்கள், பெறும் சம்மானம் – பெறும் படியான ஸம்மானமானது, நாடு – நாட்டார்கள், புகழும் – புகழும்படி, பரிசினால் – உபகார விஸேஷத்தால், சூடகமே – கையில் பூணும் முன்கைச்சரி, தோள்வளையே – தோளுக்கு ஆபரணமான பாஹுவலயம், தோடே – காதணியான தோடு, செவிப்பூவே – கர்ணப்பூ, பாடகமே - காலிலணியும் பாடகம், என்று அனைய – என்றாப் போலே சொல்லப்பட்ட, பல்கலனும் – பல ஆபரணங்களும், நீயும் நப்பின்னையுமாக இருந்து பூட்ட, யாம் நன்றாக அணிவோம் – நாங்கள் நன்றாகத் தரிக்கக் கடவோம், ஆடையுடுப்போம் – திருப்பரியட்டங்களை நீயுடுக்கவேண்டும், அதன் பின்னே – அதற்குப் பின், பாற்சோறுமூட – பால்சோறு மூடும்படி, நெய்பெய்து – நெய்பரிமாறி, முழங்கை வழிவார – முழங்கையால் வழியும்படி பிரித்துபட்ட வ்யஸநமெல்லாம் போகும்படி, கூடியிருந்து – நீயும் நாங்களும் சேர்ந்திருந்து, குளிர்ந்து – ஸுகிக்க வேணுமென்கிறார்கள்.
“பகைவர்கள் அனைவரையும் வெற்றி கொள்ளும் சிறப்புமிக்க கோவிந்தனே… உன்னைப் பாடித்தொழுது உன்னருள் பெற வந்துள்ளோம்…
நீயும் அகமகிழ்ந்து, இந்த நாடே வியந்து போற்றும் பரிசுகளான, கையில் அணியும் சூடகம், தோளில் அணியும் தோள்வளைகள், காதில் அணியும் தோடுகள், பூக்கள் மற்றும் காலில் அணியும் கடகங்கள் ஆகிய அணிகலன்களை எங்களுக்குத் தருவாயாக…
அவற்றை அணிவதுடன், புத்தாடை உடுத்தி, இந்த விரதத்தை நிறைவு செய்யும் வகையில், உன்னுடன் கூடி அமர்ந்து முழங்கையில் நெய் வழிய பால்சோறு உண்பதற்காக வந்துள்ளோம்… அருள் புரிவாயாக…” என்று கூடாரவல்லியன்று பாடுகிறாள் கோதை !
மார்கழி நீராட வேண்டும் கருவிகள் சொன்னோம். நோற்றபின் பெறத்தக்க பேறுகள் வேறுபலவும் உண்டு. அவையும் நீ எமக்கு அருள வேண்டும் என்று இப்பாசுரத்தில் வேண்டுதல் செய்கிறார்கள்.
‘தனக்குப் பகைவரானவரையும்’ வெல்லும் குணத்தையுடைய கோவிந்தா ! உன்னை விருப்பம் போலப் பாடிப் பரவி, நீ தரும் பேறுகளோடு நாங்கள் பெறவுள்ள பரிசுகள் நாடே புகழும் நலம் சான்றவை.
‘ஆடைகள் புதியன புனைவோம், பாற்சோற்றின்மீது நெய் வழிய ஊற்றி, அது முழங்கை வரை வழியும்படி உண்போம். கரங்களில் அணியும், சூடகமும், தோள்வளையும், காதுகளில் அணியும் தோடும், செவிப்பூவும், கால்களில் அணியும் திருப்பாடகமும் அணிந்து கொள்வோம். இவற்றை நீயும் நப்பின்னையுமாக எமக்கு அணிக்க வேண்டும்.’
இவ்வாறு கண்ணனோடு கூடியிருந்து குளிர்ந்து மகிழ வேண்டுமென்ற விருப்பதைத் தெரிவிக்கின்றார்கள்.
கூடாரை வெல்லுதல் என்பது எவரையும் கண்டு அடிபணியும் என்றும் கருதும் பகைவரை வெல்லுதல், இதனால் கூடியவரிடம் தோற்கவும் தயங்கமாட்டான் என்பதை உணர்த்தினார்கள். கூடுவாரை இனிமையாலே வெல்வான். கூடாரை வீரத்தால் வெல்வான். தனக்கு இனியாரை அழகாலும் நீர்மையாலும் வெல்லுமிவன் பகைவரை வில்லால் தோற்பிப்பான். குணங்களால் வெல்பவன் என்பதால் ‘சீர்க் கோவிந்தன்’ என்று சிறப்பித்தார்.
பசுக்களுக்கே தன்னைக் கொடுக்கும்படியான பண்பாளன் பிறர்க்கு எளிவந்தவனாக இருப்பான் என்று காட்டப் பசுமேய்ப்பவன் என்று பொருள்படும்படி கோவிந்தன் என்றார்கள்.
‘நாவுக்கும் மனதுக்கும் இதனைக் காட்டிலும் உயர்ந்தது இல்லை என்று சொல்லும்படியான திவ்ய நாம அநுசந்தான மாகையால்’ ‘உன்றன்னைப் பாடி’ என்று சிறப்பித்தார்கள்.
பரிசுகள் எவ்வாறிருக்க வேண்டுமெனில், எத்தனையோ காலம் எங்கெங்கோ பெற்ற அவமானம் மறக்கும்படி, நாட்டார் வியந்து பேசும்படி பரிசுகள் அமைய வேண்டும். ‘நாடு புகழும் பரிசாக’ அது சிறப்பிக்க வேண்டும்.
பக்திப் பெருக்கினாலே தலையிலும் மார்பிலும் வைத்துக்கொள்ளும் கைக்கு முதலில் முக்கியத்துவம் தந்து சூடகம் என்ற அணிகலனை முன்னே சொன்னார்கள். அவனாலே அணைக்கத் தகுந்த தோளுக்கு இடும் ஆபரணமான ‘தோள் வளையை’ அடுத்ததாக மொழிந்தார்கள்.
தோடு முன்பே அணிந்திருந்தாலும் அவனிடுவது போல் இராது என்பதால் மீண்டும் கூறினார்கள். செவிப்பூ என்னும் உறுத்தலில்லாத அழகு தரும் அணியை அடுத்து உரைத்தார்கள்.
மேலே இரண்டாம் பாசுரத்தில் நோன்பு நோற்கும் முறை கூறினவிடத்து ‘மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்’ என்றெல்லாம் சொன்னதற்கு மாறாக நோன்பின் நோக்கம் நிறைவேறுமளவில் இவையெல்லாம் அணிவோம் என்றார்கள்.
அவன் திருப்பரிவட்டம் இவர்கள் இடையிலே புடவையாகவேண்டும் என்ற கருத்தில் ‘ஆடை உடுப்போம்’ என்றார்கள்.
பால் வலமும் செழிப்பும் மிக்கது ஆயர்பாடியாதலே சோற்றை நீரில் ஆக்காமல் பாலிலே சமைப்பார்களாம். அச்சோறு மூடும்படி நெய்யை வார்ப்பார்களாம். அவனைப் பார்த்துக் கொண்டே உண்பார்களாம். அதனாலே உண்ணவும் மறந்த நிலையில் முழங்கை வழியாக நெய் வழிந்தோடும்.
கண்ணனோடு கலந்து மகிழ்ந்திருப்பதே லட்சியமாகக் கொண்டிருப்பதாலே பசிகெட உண்பதன்று நோக்கம் என்பதால் ‘கூடியிருந்து’ குளிர வேண்டும் என்ற ஆசையை வெளியிடுகின்றார்கள்.
தொட்டுக்கொண்டே சாப்பிடுவது என்பார்களே. அதனை மெய்ப்பிக்கின்ற உவகை பெண்களுக்கு ‘பிரிந்த துயரம் தீரும்’, ‘இணைந்து குளிர்ந்தே தீரும்’ என்ற நன்னம்பிக்கையின் பொன்னுருக்கி வார்த்த பாசுரம் இது.
இன்று மார்கழி 27-ம் நாளை கூடாரவல்லி என்று குறிப்பிடுவது உண்டு. மார்கழி மாதம் 30 நாட்களும் பாவை நோன்பு நிகழ்வில் ’கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா’’ என்று அழைக்கப்பட்ட நாள் மார்கழி 27 ஆகும்.

No comments:
Post a Comment