#கரிசல்காட்டு_வெள்ளந்தி_மனிதர்கள் #கூடி_விவசாயத்தை_மட்டுமல்லாமல் #ஊர்_அரசியலில்_இருந்து, தமிழ்நாடு அரசியல், அகில இந்திய அரசியல் மற்றும் உலக அரசியல் என்று ஆலமரத்து மேடையில் உள்ள செய்தித்தாள்களைப் படித்துவிட்டு அவர்கள் பேச்சு வழக்குகளில் பேசுவதை ரசிக்கலாம். *
பலமுறை இவர்களோடு ஊர் ஆலமர மேடையில் உட்கார்ந்து பேசுவதுண்டு. கே.எஸ்.ஆர் வந்துவிட்டார் என்று பெரிய மனிதர்களும், வயதில் மூத்தவர்களும் நமக்கு மரியாதை தருவது வெட்கமல்ல சற்று ஏற்கமுடியாத நிலையாக மனது திண்டாடும்.
•••••
கரிசல் மக்களிடத்தில் அன்பு இருக்கிறது பிரியமிருக்கிறது
பூமி வறண்டிருந்தாலும்
மனசில் ஈரம் இருக்கிறது
வேட்டி கருப்பாக இருந்தாலும்
மனசு வெள்ளையாக இருக்கிறது உடம்பு அழுக்காக இருந்தாலும்
நாக்கு சுத்தமாக இருக்கிறது..
வானம் பார்த்த பூமியான இந்த கரிசல் மண்ணின் துயர கீதத்தை இசைக்கும் போது எங்களுக்குத் தாங்க முடியாத துக்கம் நெஞ்சை அடைக்கும் இந்த மக்களைப்
பற்றி இதுவரை நாங்கள் சொல்லியதையெல்லாம் விட இன்னும் சொல்லாததே அதிகம் இருக்கிறது.
•••••
எங்கள் கரிசல் காடுகளில் ஒரு பழமொழி சொல்வதுண்டு.
"மழை பேஞ்சும் கெடுத்தது
ஓஞ்சும் கெடுத்தது"
ஆம்.இந்த வருஷம் மழை பேஞ்சு கெடுத்தது.காலம் தவறிப் பிந்திப் பெய்கிற இந்த மழையால் சம்சாரிகளுக்கு பெரிய நஷ்டம்.ஏற்கனவே ஒரு மாசம் பிந்திப் பெய்ததால் முன்கூட்டியே வயல்களிலும் தோட்டங்களிலும் காட்டுப்பயிர்களான நவதானியங்களை விதைத்து விட்டோம்.தாமதமாக கண்மாய்கள் நிரம்பியதால் வயல்களில் நெல்லும் தோட்டங்களில் பணப்பயிர்களும் விளைவிக்க முடியாமல் போனது.
மார்கழியில் எங்களுக்கு மழை தேவையில்லை.பனியில் கிடைக்கும் ஈரமே போதுமானது.சொல்லி வைத்தாற்போல் சரியான பருவத்தில் வரும் பருவ மழை இப்போது வருவதில்லை.பருவம் தப்பிய புயல் மழையே வருகிறது.
இயற்கை தன் பருவநிலையின் சமன்பாட்டை இழந்து விட்டதின் அறிகுறியே காலம் தப்பிப் பெய்யும் மழை.பாவம் பூமி என்ன செய்யும்.சம்சாரிகள் என்ன செய்வார்கள்.தாங்கிக் கொள்வதைத் தவிர வேறென்ன செய்ய.கடவுளிடம் முறையிடலாம்.
கரிசல் காட்டு மானாவாரி சம்சாரிகளுக்குத் தேவை சரியான பருவத்தில் பெய்யும் மூன்று மழைகள் போதும்.நிலம் நனைந்து தண்ணீர் வெளியேறுகிற அளவுக்கு ஒரு மழை.நாங்கள் விதைத்து முடித்து விடுவோம்.
அப்புறம் களைகள் எடுத்தவுடன் ஒரு மழை.பயிர்கள் பொதிதள்ளுகிற பருவத்தை எட்டிவிடும்.அப்போது ஒரு மழை போதும்.வெள்ளாமை களத்துக்கு வந்துவிடும்.என்னுடைய "சூல்"நாவலில் நம் முன்னோர்கள் மழை போதும் என்று முடிவு பண்ணி ஊரார் எல்லாம் சேர்ந்து மழையை வழியனுப்பி வைக்கும் ஒரு சடங்கை பதிவுபண்ணியிருப்பேன்.போன வாரம் விளாத்திகுளம் அருகே ஒரு கிராமத்தில் விவசாயிகள் அந்தச் சடங்கை செய்ததாக பத்திரிக்கைகளில் செய்தி பார்த்தேன்.

No comments:
Post a Comment