Monday, February 8, 2021

#திருப்பாவை ---------#பாசுரம்_28


கறவைகள் பின்சென்று கானம்சேர்ந் துண்போம்,
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து, உன்றன்னைப்
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்,
குறைவொன்று மில்லாத கோவிந்தா !, உன்ன்னோடு
உறவேல் நமக்கிங் கொழிக்க ஒழியாது,
அறியாத பிள்ளைகளோம் அன்பினால், உன்தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே,
இறைவா ! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.
----------------------
பதவுரை
கறவைகள் பின் சென்று – பஸுக்களின் பின்போய், கானம் சேர்ந்து – காட்டிலே தங்கி, உண்போம் – ஸரீர போஷணம் செய்து திரிந்தவர்களாய், அறிவொன்றுமில்லாத – சிறிதும் அறிவில்லாத, ஆய்க்குலத்து – கோபகுலத்திற் பிறந்த, யாம் – நாங்கள், உன்தன்னை – உன்னை, பிறவிபெறுந்தனை – ஸஜாதீயனாய்ப் பிறப்பிக்கத்தக்க, புண்ணியம் – புண்யத்தை, உடையோம் – உடைத்தானவர்களாய் உள்ளோம், குறைவொன்றும் – எவ்விதக் குறையும், இல்லாத – இல்லாதவனான, கோவிந்தா – கோவிந்த என்கிற பெயரினனே, இறைவா – ஸர்வ ஸ்வாமியே, உன்றன்னோடு – உன்னோடு எங்களுக்குண்டான, உறவு – ஸம்பந்தம், இங்கு – இங்கே, நமக்கு – உன்னாலும் எங்களாலும், ஒழிக்க – ஒழிக்கக், ஒழியாது – கூடாது, அறியாத – உலகியலையறியாத, பிள்ளைகளோம் – சிறுமியரான நாங்கள், அன்பினால் – உன்னிட முண்டான ப்ரீதியால், உன்றன்னை – உன்னை, சிறுபேரழைத்தனவும் – சிறிய பெயர்க்கொண்டு அழைத்ததைப் பற்றி, சீறியருளாதே – கோபித்துக்கொள்ளாமல், நீ – தேவரீர், பறைதாராய் – எங்கள் – அபேஷிதத்தைத் தந்தருள வேணும்.
“குறையே இல்லாத கோவிந்தனே…
நாங்கள் பசுக்களின் பின்னால் சென்று, காடுகளில் அவற்றை மேய்த்து, அங்கேயே எங்கள் உணவை உண்பவர்கள்…
நிரை மேய்ப்பதைத் தவிர வேறு அறிவென்பதை எங்களுக்கு இல்லை… அத்தகைய இடைகுலத்தில், உன்னைப் பெறுவதற்கு எத்தனை புண்ணீயம் செய்துள்ளோம்…
இறைவனே…!
உன்னோடு எங்களுக்குள்ள உறவைப் பிரிக்க யாராலும் முடியாது. அறியாத பிள்ளைகள் நாங்கள்…
உன்னிடமுள்ள உரிமைகள் காரணமாக, உன்னை ஒருமையில் அழைத்ததைப் பொறுத்தருள்வாயாக… எங்கள் நோன்பினை ஏற்று, எங்களுக்கு அருள் தருவாயாக…” என்று பாடுகிறாள் கோதை…!!
வேண்டியனவெல்லாம் தரும்படியாக என்னை அமைதற்கு நீங்கள் கைக்கொண்ட நெறிமுறைகள் யாது? என்ற வினாவைக் கண்ணன் எழுப்புகிறன்றான். அதற்கு விடையாகத் ‘தாங்கள் எளிய ஆயக்குலத்துப் பெண்கள்’ என மறுமொழி தருகின்றனர்.
‘கர்ம, ஞான, பக்தியான எக்கருவி கொண்டு வந்தீர்கள்?’ என்று கேட்பானுக்குப் பதிலுரைப்பது போன்று இப்பாசுரம் அமைகின்றது.
தாங்கள் வாழ்க்கை சால எளியதென்று காட்டுவாராய், ‘நாங்கள் ஆசார்யரையும் குருமார்களையும் பின்பற்றிச் செல்லுமத்தனை பெரியவர்கள் இல்லை, நாங்கள் மேப்ய்ப்பதற்காகக் கறவைகள் பின்னே செல்பவர்கள்.’
‘அவ்வாறு சென்று நாங்கள் அடையவிருப்பது புனிதத் தலங்களோ ஆலயங்களோ அன்று. மாடுகள் மேய்கிற காடு என்கிறார்கள். காடு வெல்வது ஆசிரமங்கள் அமைத்து வேள்வி புரிகிற தவம் செய்வதற்காக அன்று. கிடைத்ததை உண்பதற்காக. இக்கருத்துப்பட, ’கானம் சேர்ந்துண்போம்’ என்றார்கள்.

ஞான நெறியேனும் அவர்களிடம் உண்டா என்று அறிய விரும்பிய கண்ணனுக்கு அவர்கள் சொன்னார்கள். ‘நாங்கள் அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலம்’ என்பதாக. அவ்வாறே அன்பு கனிந்து பக்குவம் பெறுகிற பக்தி நெறியையும் அறியாதவர்கள் என்பதை உணர்த்தினார்கள்.
ஆனால் இயல்பான வாழ்வை மேற்கொண்டிருக்கிற ஆயர்கள் செய்த புண்ணியம் அற்ப சொற்பமென்று மதிப்பிட முடியாது. காரணம் யாதெனில் கண்ணனையே உடனுறையும்ச் செய்து அவனோடு பழகிப் பழகி வாழ்கிற அனுபவம் சித்தித்தவர்கள் அல்லவோ? அதனால் ‘உன் தன்னைப் பிறவி பெருந்தனை புண்ணியம் யாம்’ உடையோம் என்று பெருமிதமாய்ப் பேசினார்கள், இந்தப் புண்ணியத்துக்கு எந்தக் கர்மம், எந்த ஞானம், எந்த பக்தி இணையாக முடியும்?
அது மட்டுமின்றி எங்களுக்கு ஞானம் முதலியவற்றில் குறை இருந்தால்தான் என்ன? பூரணனும் புண்ணியனுமான நீ எங்களோடு இருக்கும்போது உள்ளடக்கியவர்களாய், ‘குறையொன்றும் இல்லாத கோவிந்தா’ என்றார்கள். ‘எங்கள் குறை என்ன பள்ளத்தை இட்டு நிரப்பும் மேடு நீயன்றோ?’ என்று பேசினார்கள்.
அவ்வாறிருந்தாலும் குறையை நிறையாக்க முன்வந்தால் தானே அது சரியாக இருக்க முடியும் என்றபோது, ‘உனக்கும் எங்களுக்கும் ஏற்பட்டிருக்கிற உறவு ஒழியும் தரத்தது அன்று. நீ மைத்துன நம்பி, நாங்களோ மாமியார் மக்கள். இந்த உறவை யார் ஒழிக்க முடியும்? எவ்வாறு தவிர்க்க முடியும்? உன்னாலும் விட முடியாது. எங்களாலும் விட முடியாது.’
நாங்கள் அறியாத பிள்ளைகள். அதனால் எவ்வகைக் குற்றம் செய்தாலும் பொறுத்தருள வேண்டும். உன்னை அன்பினாலே நாராயணன் என்று (நாராயணன் நமக்கே பறை தருவான்) சிறு பேர் இட்டு அழைத்தமையைப் பொறுத்துக் கொள்வாயாக என்றனர். ‘கோவிந்தாபிஷேகம் பண்ணின பின்பு முதல் திருநாமம் சொல்லுகை குற்றம்’ என்பார்கள் வியாக்கியான சக்கரவர்த்திகள்.
சீற்றம் கொள்ளலாகாது என்று வேண்டுகிற இடத்தில் ‘இறைவா’ என்று அழைத்தார்கள். எல்லாம் வல்லவனாகி, எல்லாம் பிழைகளைப் பெரிதாகக் கருதாத அளவுக்கு உயர்ந்தவன் அல்லவோ நீ?
எனவே, ‘எம்மை ஆட்கொண்டு எமக்குப் பறைதர வேண்டும்’ என்று விண்ணப்பித்தார்கள்.
இப்பாசுரத்தில் மேலோங்கி நிற்கும் ஆய மகளிரின் வாழ்வியல் நோக்கு குறிப்பிடத்தக்கது. இந்நோக்கைப் புலப்படுத்திக் காட்டும் ஆழ்வார் திருமகளின் கருத்து நுட்பம் அரியது. மாடு மேய்த்து உண்ணும் இடைக்குலத்தார் தங்கள் தாழ்வு சொல்லி வாழ்வு கேட்கிற நுட்பம் சிந்தனைக்கு உரியது.
இறைவனை அடைதற்கு மனிதர்கள் தாங்களாக ஏற்படுத்திக் கொண்ட உயர்வு தாழ்வுகள் ஒருக்காலும் தடையன்று என்பதை உருக்கத்தோடு உரைக்கின்றது இப்பாசுரம்.
கே.எஸ்.இராதா கிருஷ்ணன்
12-01-2021

No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...