Monday, February 8, 2021

#திருப்பாவை ----------#பாசுரம்_29


-------------------------------
சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து, உன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள்கேளாய்,
பெற்றம்மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து, நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது,
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா,
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும், உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாமாட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.
-----------------
பதவுரை
சிற்றஞ்சிறுகாலே – அத்யந்தம் விடியற்காலத்திலே, வந்து – வந்து, உன்னைச் சேவித்து – உன்னை வணங்கி, உன் – உன், பொற்றாமரை அடி – அழகிய தாமரை மலர் போன்ற திருவடிகளை, போற்றும் – துதிப்பதற்கு, பொருள் – ப்ரயோஜநத்தை, கேளாய் – கேட்டருள்வாய், பெற்றம் மேய்ந்து – பஸுக்களை வயிறு நிரம்பும்படி மேய்த்து, உண்ணும் – பின்பு தாங்கள் உண்கிற, குலத்தில் – இடைக்குலத்தில், பிறந்த நீ – பிறந்த நீ, குற்றேவல் – அந்தரங்கக் கைங்கர்யங்களை, எங்களை – எங்களால், கொள்ளாமல் போகாது – திருவுள்ளம் பற்றியருளாமல் போகக் கூடாது, இற்றை பறைகொள்வான் அன்று – இன்றைக்கு பறைகொள்வானன்று, காண் – ஒரு பயனையேற்று விலகுமவர்கள் அல்லான் நாங்கள் என்ன ஆனால் உங்கள் கருத்தென் என்ன, கோவிந்தா – கோவிந்தா, ஏற்றைக்கும் – காலமுள்ள தனையும், ஏழேழ் பிறவிக்கும் – தேவரீருடைய எல்லா அவதாரங்களிலும், உன்றன்னோடு – தேவரீரோடு, உற்றோமே யாவோம் – அநந்யார்ஹைகளாக இருக்கவேண்டும், உனக்கே – தேவரீருக்கே, நாமாட் செய்வோம் – நாங்கள் அடிமை செய்யக் கடவோம், நம் – எங்களுடைய, மற்றைக் காமங்கள் – மற்ற அபிப்ராயங்களை, மாற்று – தவிர்ந்தருள வேண்டுமென்கிறார்கள்.
“கோவிந்தா…
நாங்கள் அதிகாலையில் உனது பொன்போன்ற தாமரைப் பாதங்களை வணங்க வந்திருக்கும் காரணத்தைக் கேட்பாயாக…
ஆயர்குலத்தில் பிறந்தவனான நீ, பசுக்களை மேய்த்து, அவை தரும் பொருட்களை வைத்துப் பிழைக்கும் எங்களது இந்தச் சிறு பணிவிடைகளை ஏற்றுக்கொள்ளாமல் இருந்துவிடாதே…
நீ தரும் மோட்சத்திற்காக மட்டும் இந்த விரதத்தை நாங்கள் மேற்கொள்ளவில்லை…ஏழேழு பிறவிகளிலும் நீ எங்கள் குலத்தில் பிறந்து, எங்களை உனது உறவினர்களாக ஏற்கவேண்டும்…உனக்கு மட்டுமே சேவை செய்யும் பாக்கியத்தையும் எங்களுக்குத் தரவேண்டும்…
மேலும், எங்களது தீய எண்ணங்களையெல்லாம் நீக்கி எங்களுக்கு அருள் புரிவாயாக…” என்கிறாள் கோதை…!
இவ்வழகிய திருப்பாட்டில் ‘பிரபந்த சாரத்தை’ யே எடுத்துரைக்கின்றார்கள். தாங்கள் முன்பாடல்களிலெல்லாம் பறை என்று சொல்லியதன் பொருளை விளக்க முற்படுகிறார்கள்.
‘நாங்கள் அதிகாலைப் பொழுதிலேயே எழுந்து உன்னை நாடி வந்தோம். உன்னைச் சேவித்து நின்றோம். பொன்னின் ஒளிமிக்கதாய் பூக்களில் உயர்ந்ததான தாமரை போன்றதாய் விளங்கும் திருவடிகளை வணங்கி நிற்பதன் பொருள் யாதென்பதையும் தெளிவுபடுத்துகின்றோம்.’
‘பசுக்களை மேய்த்து உண்ணும் ஆயர் இனத்திலே விரும்பிப் பிறந்த நீ எங்கள் அடித்தொண்டிலிருந்து மீள்வது இயலாது கண்டாய். கோவிந்தனே! நாங்கள் இன்று உன்னிடம் ஏதோ பயனைப் பெற்று அதனால் நிறைவடைகிறவர்கள் அல்லர். எங்கள் நோக்கம் அதனினும் உயர்ந்தது. இன்று மட்டுமல்ல என்றும், ஏழேழ் பிறவி நேர்ந்தாலும், நீ எந்த அவதாரம் எடுத்தாலும் உன்னோடு உடனுறைபவர்களாய் நாங்கள் திகழவேண்டும். எங்களுக்கு வேறு ஆசைகளும் எண்ணங்களும் வராதபடி நீ காத்தருள வேண்டும். இதுதான் எங்கள் உண்மையான பறை.’
இந்த உன்னதமான அன்பின் மகத்துவத்தை, வைணவநெறியின் பிழிவை இத்திருப்பாசுரத்தில் எடுத்துரைக்கின்றார்கள்.
‘சிற்றஞ்சிறு காலே’ என்றது வைகறையின் குளிரையும் சேர்த்து அதிகாலைப் பொழுதை உணர்த்துகின்றது, மக்கள் பேச்சு வழக்கில் ‘காலம் காத்தாலே’, ‘வெட்டவிடியாலே’ என்று சொல்வார்களே. அதுபோல ஒரு வழக்கை இச்சொற்கோவை உணர்த்துகின்றது.

மெல்ல மெல்ல இருள் நீங்கி ஒளியேறும் காலத்தைச் சொல்லியதும் அந்த அனுபவம் நமக்குள் நிகழ்வதை இத்தொடர் உருவகப்படுத்துகின்றது.
வானவர் தம் சென்னி மலராவதும், உலகெல்லாம் அளந்து பொலிவாவதும், அனைவர்க்கும் பொதுவாவதும், கண்டால்விடாதிருக்கவும் விட்டால் பிழைக்க ஒண்ணாதிருப்பதும் ஆன திருவடி அவனுடையது என்று காட்ட, ‘பொற்றாமரை அடி’ என்றார்கள்.
அவன் ஆசைப்பட்டுப் பிறந்த குலம் மாடு மேய்த்து உண்ணும் குலம். எளியவர்களையும் பாதுகாப்பதையே நோக்கமாகக் கொண்டு இக்குலத்தில் பிறந்தானாம். பசுக்கள் வயிறு நிறைந்தாலன்றித் தாம் உண்ணாத குலம். அதனால் பரமகருணைக்கு உறைவிடமான குலம்.
‘பசுக்களைக் காக்க யாரேனும் இருந்தாலும் எங்களைக் காக்க உன்னையன்றி யாரும் இலர். ஆதலால் எங்கள் அடிமைத்தனம் உனக்கே உரியது, நாங்கள் பறை வேண்டி வந்ததாகச் சொன்னதெல்லாம் உன்னைக் காண்பதற்காகவேயன்றி வேறில்லை’.
’உண்மையில் நாங்கள் உன்னிடம் வேண்டுவது என்றும் உன்னைப் பிரியாமல் உன்னோடு ஒன்றியிருக்கிற வரம். நீ எங்கே, நாங்கள் அங்கே என்னும்படியான வாழ்வு ‘வைகுந்தத்திலும் எங்களோடு கண்கலந்த உறவு வேண்டும். நீ பிறந்து திரியுமிடத்திலும் உன்னோடு திரிய வேண்டும். இளையபெருமாளைப்போல என்றும் பிரியாதிருக்கவேண்டும்’.
இவ்வாறு வேண்டி நின்ற அளக்கலாகா அன்பின் திறம் கண்டு, கண்ணன் ‘உங்களுக்கு வேண்டுவது வேறு யாது?’ என்றான்.
‘உனக்கே என்கிற அடைக்கமுடியாத உறுதியோடு ஆளாகப் பணிபுரிய வேண்டும்’ என்றாற்கள். அவள் உகந்த அடிமைகளாக விளங்க வேண்டுமாம்.
அவ்வாறு அடிமைகளாக இருக்கும் அகமகிழ்வு ஒன்றே போதும். இதற்கு உபகாரமாகும் பொருட்டு. எம் அகங்கார மமகாரங்கள், ஆசைகள், காமங்கள் எல்லாம் ஒரு கணத்தில் அழித்து ஒழிக்க வேண்டும் என்றார்கள்.
ஒன்றுமில்லாத மூங்கில் குழாயில் இசைக் களஞ்சியங்களைக் குடிவைத்தவன் அவன். எங்களுக்கென்று எதுவுமில்லை என்ற வெறுமை உணர்வு ஏற்பட்டால் அவ்விடத்தில் அவன் மட்டுமே இசையாய் இசைப்பயனாய் நிறைவானன்றோ?
கே.எஸ்.இராதா கிருஷ்ணன்
13-01-2021

No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...