Tuesday, January 21, 2025

‘’#நிறைகுளம்” -#பெ_மகேந்திரன்

 ‘’#நிறைகுளம்” -#பெ_மகேந்திரன்



———————————————————-
எங்கள் கரிசல் மண்ணின் மைந்தர்
பெ. மகேந்திரன் அவர்கள் எனது இனிய நண்பர்! மனிதநேயமிக்க பண்பாளர்! அவர் நல்ல நாவலாசிரியர் ! இந்த கரிசல் மண் நிறைய கதை ஆசிரியர்களை நாவலாசிரியர்களை உண்டாக்கி எழுத வைத்து இருக்கிறது! அந்த வகையில் மகேந்திரன் ‘’நிறைகுளம்” என்கிற தலைப்பில் அற்புதமான தனது இராண்டாம் மண் வாசனை புதினத்தை படைத்துள்ளார்! அதை மின்னங்காடி. பதிப்பகம் வெளிட்டுள்ளது.
15 நாட்களுக்கு முன்பு நிறைகுளம் கிடைத்த நாவலை வாசித்து முடித்தேன்.
வாசிக்கும்போதே என் நினைவுகள் பிராயத்திற்குள் போய் விட்டது! பொதுவாகவே இந்தக் ‌கரிசல் பூமியில் மழையானது அளவின்றிப் பெய்து விவசாயத்தைக் கெடுக்கும்! பிறகு விதைக்கக் கூட வழியின்றி பெய்யாமலும் கெடுக்கும்!
இந்த சுற்று வட்டாரம் முழுக்கப் பெரும்பாலும் குளத்துப் பாசனம் தான்! பருத்தி துவரை, உளுந்து,எள், நாற்று சோளம் போன்றவை மானாவாரியில் பயிரிடுவார்கள். குளம் வற்றிப்போன காலங்களில். நீர் வரத்துள்ள கிணறுகளை வைத்திருப்பவர்கள் வாழை, நெல், கரும்பு, மிளகாய் கடலை போன்ற பயிர்கள் இருக்கும். எப்படிப் பார்த்தாலும் அது ஒரு வறண்ட பூமி தான். அந்த பூமியில் கிடைக்கும் விளைச்சலை கொண்டு அப்பகுதி மக்கள் வெள்ளந்தியாகவும் போதும் என்ற மனத்தோடும் கடுமையான வறட்சி காலத்தில் கூட வாழப் பழகிக் கொண்டவர்கள்! அந்த வகையில் போதிய நீர் வசதி இங்கே கிடையாது இந்த நிறைகுளம் நாவலில் வருவது எல்லாம் வானம் பார்த்த பூமி தான்!
ஆந்திராவில் இருந்து இங்கு வந்த மக்கள் எப்படி அந்த நிலத்தில் பாடுபட்டுத் தங்கள் வாழ்க்கையை காப்பாற்றிக் கொண்டார்கள் என்பதைக் கோபல்லபுரத்துல் கி ரா சிறப்பாக எழுதியிருப்பார்!
பேய்ந்து விளையுது மலையாள பூமி! காய்ந்து விளையுது கரிசல் பூமி!
என்று பாடும் இந்த புதினம் கந்தக பூமியான கரிசல்காட்டு விவசாயிகள் என்ன பாடுபடுகிறார்கள்? எவ்விதமெல்லாம் அன்றாடத்தை கடத்துகிறார்கள் என்பதை விரிவாகப் பேசுகிறது. ஏற்கனவே இந்தப் புதின ஆசிரியர் பெ மகேந்திரன் “வெள்ளாமை “என்ற தலைப்பில் கரிசல் வாழ் மக்களின் குடும்பங்கள் அவற்றின் பின்னணிகளை வைத்து அகரீதியாக தனது முதல் நாவலை வடித்திருந்தார்.!
இப்போது தனது இரண்டாவது நாவலான நிறைகுளம் புதினத்தில் வரும் கதாபாத்திரங்கள் பலரையும் புறவயமாக வைத்து எழுதியுள்ளார் என்று நினைக்கிறேன். . இந்த புதினத்தில் கதாநாயகன் சாத்தூரப்பன் அவருடைய மனைவி ராஜம்மாள் சுந்தரம் ராமசுப்பு கோபண்ணா ஆதிமூலம் சேது ராஜன் விவசாய சங்கத்தில் நின்று போராடும் விவசாய சங்க தலைவர் அழகர்சாமி (கோவில்பட்டி சட்ட மன்ற 25 ஆண்டுகள் இருந்த மாமனிதர் சோ அழகர்சாமி நினைவில் வருகிறார்)அவரது மகன் ராமகிருஷ்ணன் எனப் பல கதாபாத்திரங்கள் இக்கதையில் நடமாடுகின்றனர்! இந்த நாவலின் மூலம் ஒரு அருமையான கதை சொல்லியாக அவர் உயிர்த்திருக்கிறார்! நாவலில் ராமகிருஷ்ணன் போன்ற பல வித்தியாசமான கதாபாத்திரங்கள் அவர்களுடைய போராட்டங்கள் ஆதங்கங்கள் மற்றும் அந்த நதி நீரை தங்கள்பகுதிக்குக் கொண்டு வர வேண்டிமாவட்டஆட்சியர்அலுவலகத்திற்கு அலையாய் அலையும் ஒரு கேரக்டர்.
சாத்தூரப்பன் கிணற்றைப் பார்ப்பார்! வானத்தைப் பார்ப்பார்! எப்போதெல்லாம் மழை வரும் என்று எதிர்பார்த்துக் கிடப்பார். மாடுகள் சாணமிட்டால் அதை அள்ளி விவசாய நிலத்தில் உடனே சேர்த்து உரமாக்கி விட வேண்டும் என்ற வகையில் கடினமான வேலைகளைச் செய்து கொண்டிருப்பார்!
கிணற்றில் ஊற்று சொட்டு சொட்டாக வடிய தண்ணீர் அங்குலம் அங்குலமாக உயரும்! ஒரு அங்குலம் வந்த உடனே குழாய்களை இறக்கி மோட்டாரைத் தட்டுவார்! ஒரு கால் மணி நேரம் மோட்டார்ஓடியவுடன் நீர் நின்று விடும்! பின்னர் கிணறு வறண்டு விடும்! அதை வெத்து மோட்டார் என்பார்கள்!
இந்த நாவலில் வரும் ஆதி மூலம் தனுஷ்கோடியில் போட் மெயில் பாம்பன் தரைப் பாலம் புயலில் முற்றிலும் சேதம் அடைந்து அழிந்த போது அங்கிருந்து நிறைகுளத்துக்கு தப்பி வந்தவர்! அவருடைய தந்தை பெயர் வில்லாயுதம்! இப்படியாக இந்த நாவலில் இரண்டு வகைக் கதை சொல்லல்கள் நடைபெறுகின்றன!
நாவலின் பிற்பாதியில் ஆதி மூலமும் சமூக நலன் நாடும் ராமகிருஷ்ணனும் தனுஷ்கோடி அழிவின் போது விட்டு வந்த தனது தங்கை பூமயில் அங்கு இன்னும் உயிரோடு இருக்கிறாளா என்று ஆதங்கத்துடன் தேடிப் போகிறார்கள்!
பலவகையிலும் தேடி காவல்துறை உதவியுடன் பூமயில் இருக்கும் இடத்தை தேடிச் சென்று அவளைக் கண்டுபிடித்து விடுகிறார்கள்!
அந்த இடத்தில் பாசமலர் சிவாஜி கணேசன் சாவித்திரியின் ஞாபகம் தான் வந்தது! அப்பேற்பட்ட சகோதர பாசத்தில் கண்ணீர் பெருக அந்த காட்சி மனதை நெகிழும்படியான உணர்ச்சிப் பெருக்கில் சித்தரிக்கப்பட்டு இருக்கிறது! நாவலின் ஊடாக நடிகை சாவித்திரியின் இறப்புச் செய்தியும் வருகிறது. அந்த போட் மெயில் தனுஷ்கோடி புயலில் கவிழ்ந்த வங்க கடலில் முழுகும் போது அதில் ஜெமினி கணேசனும் சாவித்திரியும் பயணித்து நல்ல வேளையாகத் தப்பியிருந்தார்கள் அதையெல்லாம் ஆதிமூலம் பூ மயிலை அழைத்து வரும்போது சொல்லிக் கொண்டே வருகிறார். பெரும்பாலும் கரிசல் மண்ணில் வாழ்கிறவர்கள் தங்கள் உறவுகளைப் பிரிந்தாலும் அவர்களெல்லாம் தங்களுடனே வந்து இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்!
இப்படியாக இந்த நாவலில் ஒருபுறம் தனுஷ்கோடியின் கடல் புறமும் வருகிறது. அதன் மறுபுறமாக கரிசல்காட்டுக் கதையும் வந்து கொண்டிருக்கிறது!
கரிசல் மண் என்றால் வடக்கே கல்லுப்பட்டி திருமங்கலத்தில் தொடங்கி மேற்கே ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் சங்கரன் கோவில் கிழக்குப் பகுதியில் கயத்தாறு வரை ஒட்டப்பிடாரம் கோவில்பட்டி விளாத்திகுளம் அப்படியே மல்லாங்கிணறு காரியாபட்டி வழியாக திருமங்கலம் சென்று சேரும் பகுதிகளை கரிசல் பூமி என்று கூறலாம்! 45 ஆண்டுகளுக்கு முன் அதன் வரைபடத்தை கி ரா அவர்களும் நானும் ஆலோசனையில் கோவில்பட்டி மாரீஸ் 1981 இல் தயாரித்த காலங்கள் எல்லாம் நினைவிற்கு வருகிறது!
இந்த பகுதியில் விளையும் நெல் பருத்தி மிளகாய் போன்றவற்றையெல்லாம் அருகே உள்ள சாத்தூர் ராஜபாளையத்தில் கொண்டு போய் விற்று வருவதும் அதேபோல் விளைவதற்கு முன்பாகவே வியாபாரிகள் முன்பணம் கொடுப்பதும் அதற்காக விவசாயிகள் சந்தோஷப்படுவதும் அதற்கு ஏற்றவாறு விலை தீர்வதும் தொடர்கதையாகி அம்மக்கள் சந்தித்து வந்த பாடுகள்எனப்பலவும் நாவலுக்குள் துல்லிதமாக எழுதப்பட்டிருக்கிறது! அந்த கிராமத்திற்கு ஒரே ஒரு பேருந்து மட்டும் வந்து செல்லும்! அதுவும் அரைக் கிலோ மீட்டர் நடந்து சென்று தான் தார்ர சாலையைப் பார்க்க முடியும்!
ஒவ்வொரு 10 ஆண்டுகளில் நிலங்களை மறுபடியும் மறுபடியும் சீர்திருத்திப் பண்படுத்தி விவசாயம் செய்யும் போது கிடைக்கும் வருமானம் சொற்பமாக இருந்தாலும் அதை வைத்துக்கொண்டு காலத்தைக் கடத்துவார்கள்! அந்த வருமானத்தில் தான் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் நல்லது கெட்டது காரியங்களைப் பார்க்க வேண்டும். வாழ்க்கையின் ஜீவிதத்தையும் ஓட்ட வேண்டும்!
அதற்குள் தான் அவர்களது சடங்குகள் கலாச்சாரங்கள் திருவிழாக்கள் கோயில் வழிபாடுகள் யாவும் தொடர்ந்து செயல்படும். கடுமையான வெயில் காலங்கள் வந்தும் கடந்தும் போகும் காலத்தில் கரிசல் மண்ணைப் போலவே அந்த மக்களும் தோற்றம் பெறுவார்கள்.
நீண்ட போராட்டங்களுக்குப் பின்பு அந்தப் பகுதிக்குத் தண்ணீர் வேண்டும் என்று கேட்கும்போது அழகர் அணைத் திட்டம் அச்சன்கோவில் பம்பை வைப்பாறு செண்பகவல்லி கோதை ஆறு கீரியாறு போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் தான் இந்த வறண்ட பூமிக்குத் தண்ணீரும் செழிப்பும் கிடைக்கும் என்பதாகத்தான் இருக்கிறது இன்று அளவிலும் நிலைமை! இத்திட்டங்கள் இப்பூமியின் நீண்ட காலக் கனவு! இதை சிறுவயது முதல் நான் கேள்விப்பட்டு அவற்றின் முக்கியம் குறித்து அறிதலும் புரிதலுமாய் இருந்த நிலையில் நில்லாமல் 1983ல் உச்சநீதிமன்றத்தில் இந்த நதிகளை இணைக்கும் படி வேண்டி ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்தேன். அதற்கான தீர்ப்பு 2012 இல் கிடைத்தது. அப்படியான நல்லதொரு தீர்ப்பு வந்த பிறகும் இந்த பகுதிக்கு தேவையான சென்பகவல்லி அணை சீர்அமைப்பு,அழகர் அணைத் திட்டம், அச்சன்கோவில் -பம்பை -வைப்பாறு இணைப்புஇன்னும் யாரும் அதை அமல்படுத்தவில்லை.
நாவலில் பாத்திரமாக வரும் விவசாயத்தை மட்டுமே நம்பி உழைத்துக் களைத்த சம்சாரி அழகர்சாமி மகனாகிய ராமகிருஷ்ணனும் இதுகுறித்து பாடலாகவேப் பாடி இக்கதைகளை நகர்த்திச்செல்ல உதவுகிறார்! தண்ணீரை தேவைக்கு அழகர் அணைதிட்டம் வேண்டும் என அமைச்சர் வரை சந்தித்து வேறு சில சிலப்பாடுகள் எடுத்தும் இந்த வறண்ட பூமிக்கு நீர் பாசன இன்று வரை வரவில்லை என்பது பெரிய ஏமாற்றம். கரிசல் மண் கிராம பெயரில் குருவிகுளம், கரிசல்குளம், மலையங்குளம், குருஞ்சாக்குளம், வெள்ளாகுளம், நடையநேரி, மாரநேரி,
அய்யநேரி, அப்பநேரி குளம், ஏரி என அழைக்கப்படும். இந்த கதையாடல் கோமல் சுவாமிநாதனின் தண்ணீர் தண்ணீர், 1980 (அதே பெயரில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் எங்கள் கோவில்பட்டி பகுதியை படமாகியது) போல் உள்ளது .
மனித வாழ்க்கையின் பலவற்றையும் அவர்கள் உயிர்த்து இருப்பதன் ஞாபகங்களையும் நினைவு மீட்க்கும் வண்ணம் இந்த நிறைகுளம் நாவல் எங்கும் நிறுத்த முடியாமல் வாசிக்க வைத்து விடுகிறது! அங்கு வாழும் மக்களின் அழகியலோடும் தேவைப்படும் அரசியல் பார்வையோடும் கூர்மையான அவதானத்துடன் அந்த நிலப்பரப்பை நாவலாசிரியர் மகேந்திரன் அவர்கள் வரைந்து நமக்குத் தந்திருக்கிறார்!
மேற்சொன்னபடி தனுஷ்கோடி புயல் குறித்தும் அதனால் அலைக்கழிக்கப்பட்ட மக்கள் மற்றும் ஊரை விட்டு பிரிந்த மக்கள்! திருமணமாகி சென்ற பெண்கள்! சகோதரிகள்! அவர்களுக்கு இடையான பாசமும் துக்கமும் என ரத்தமும் சதையுமாக இந்த நாவல் அங்கு வாழும் மக்களின் சகிப்புத்தன்மையையும் வாழ்வியல் முறையையும் அதன் பாடுகளுடன் கோர்த்து அருமையாக விவரித்துச் செல்கிறது!
பெரும்பாலும் நதிக்கரைகளிலோ அல்லது விவசாய நிலங்களிலோ தங்கி அந்தப் பகுதியிலேயே நீண்ட நாள் வாழ்ந்து வரும் பூர்வீக பிராந்திய மக்களின் கதையில் எப்பொழுதும் நிறையாத குளங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
அவர்கள் வாயும் வயிறும் மனமும் நிறையாத பற்றாக்குறைகளைத்தான் “நிறை குளம்” என்று அவர் ஏக்கத்துடன்குறிப்பிடுகிறார்.
அதோடு அங்கு நடக்கும் சடங்குகளில் பிள்ளையாரைத் திருடிக் கொண்டு வருவது ஊர் பெயர் தெரியாதவர்களுக்கு எல்லாம் பசியுடன் வந்துவிட்டால் உணவளிப்பது எனப் பக்கத்துக்கு பக்கம் எதார்த்தம் கதையாகி மனதைப் பிசைகிறது . அருகில் இருக்கும் நகரத்திற்கு செல்லும் ஒரு தண்ணீர் பைப் லைன் உடைந்து அதன் வழியாக கசியும் நீர் அந்த கிராமத்திற்கு பயன்படுவதால் அதைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடும் இரக்கமுள்ள ஒரு இன்ஜினியரும் நாவலுக்கிடையே வருகிறார்.
இன்றைக்கு உலகெங்கும் நாவல்கள் பரவலாக எழுதப்பட்டு வருகின்றன. வளரும் நாடுகள் அல்லது வளர்ந்து வரும் நாடுகள் மூன்றாம் உலக நாடுகளின் நாவல்களில் விவசாயத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வாழும் பகுதிகள் அங்கே உழைப்பை மட்டுமே நம்பி வாழும் மக்கள் அனைத்தையும் இது மாதிரியான சிறந்த சித்தரிப்புகள்தான் கதைகளாக நாளாந்திரப் பாடுகளாகச் சொல்லப்பட்டு வந்து கொண்டிருக்கின்றன!
இந்தக் கதை சொல்லி மண்ணின் மைந்தராக இருப்பதாலும் நிறைகுளம் நாவல் கதையும் ஆவணமுமாகச் சிறப்புப் பெற்று வந்திருக்கிறது! மொழியும் நடையும் அலுக்காமல் வாசிப்பில் சுவாரசியம் தருகின்றன.கரிசல் மண்ணில் அன்றாடங்கள் பேசப்படும் பொழுது பலமுறை உணர்ச்சி பெருக்குகள் மனித மனதின் நுட்பங்கள் குணங்கள் யாவும் மனதில் சித்திரமாக வந்துபோகின்றன.
நொம்பல்,கிருத்துருவம், வெள்ளாவி, கம்பம்புல்லு, pad lock க்கு பாட் லாக், water rate க்கு வாட்ரேட்என பல சொற்கள் உண்டு
நிலங்களும் ரத்த உறவுகளுமாக இந்த நாவலை அவர் வாழ்ந்த அனுபவம் பெற்ற அனுபவம் கற்ற அனுபவங்களை கொண்டு ஒரு மானுடத் தன்மையை மிகுந்த கவனத்துடன் உழைப்புடன் கொண்டு வந்திருக்கிறார்.
இந்த நாவல் அவருக்கு ஒரு சிறப்பான அடையாளத்தையும் வரவேற்பையும் கொடுக்கும் என்று நம்புகிறேன் அவர் நிறைய எழுத வேண்டும் என்றும் அவரிடம் இன்னும் அனேக கதைகள் இருக்கிறது என்பதும் இந்த நாவலின் இடைவெளிகளுக்குள் பல வரலாறுகள் ஒளிர்ந்து கொண்டே இருக்கிறது என்பதையும் என் வாசிப்பில் உணர்ந்து கொண்டேன். சற்று 1960 கிராம காட்சிகள் என் மனதில் மலரு நினைவுகளாக வந்து சென்றது
அவரது நாவலுக்கு என் வாசிப்புரையை முன்வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சிறப்பான பதிப்பாக சிறந்த அச்சகத்துடன் இயற்கையான வடிவில் கொண்டு வந்த பதிப்பகத்தாருக்கும் வாழ்த்துகள்!
நாவலாசிரியர் அருமைப் பண்பாளர் பெ மகேந்திரன் அவர்களுக்கும் எனது அன்பும் வாழ்த்துகளும்!!
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
27-11-2025

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்