*நெருக்கடி நிலையின்* *அரை நூற்றாண்டு* .
12 ஜூன் 1975, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஜக்மோகன்லால் சின்ஹா இந்திராகாந்தியை குற்றவாளியாக அறிவித்து அப்போதையத் தேர்தலில் அவரது வெற்றி செல்லாது எனவும் அவர் மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீ்க்கப்படவேண்டும் என அறிவித்தார். மேலும் ஆறு ஆண்டுகளுக்கு எந்தத் தேர்தலிலும் போட்டியிடக் கூடாதெனத் தடை விதித்தார். எனினும், லஞ்சம், அரசு அதிகாரிகளைப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தியது, மற்றும் அரசின் மின்சாரத்தைப் பயன்படுத்தியது போன்ற வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் அதன் விளைவு ...!!! 1975 ஜூன் 25 அன்று இந்திரா காந்தி ஒரு நாட்டையே செல்லாது என அறிவித்து அதிர்ச்சியைக் கொடுத்தார் .
பிரபல கார்ட்டூனிஸ்ட் அபு ஆப்ரஹாம் அன்று அதைச் சுவாரஸ்யமாகவே கார்ட்டூன் வரைந்து விமர்சித்தார் . பாத் டப்பில் படுத்துக் குளித்துக்கொண்டிருந்த பிரெசிடண்ட் ஃபக்ருதீன் அலி அஹம்மத் தனக்கு முன் நீட்டப்பட்ட ஒரு கோப்பை திறந்து பார்க்காமலேயே அதில் கையெழுத்துபோடுவதைப்போன்ற ஒரு கேலிச்சித்திரம்.
அடுத்த நாள் அமைச்சரவையில் வந்த உறுப்பினர்கள் இந்த விபரத்தை அறிந்துகொள்ளும் முன்பே இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் ஜனநாயகம் கொலைசெய்யப்பட்டிருந்தது . இந்திரா அதற்கொரு விளக்கமும் கொடுத்தார் . நான் 'ஜனநாயகத்தின் பேரிரைச்சலை நிறுத்தினேன்' என்று . எதிர்க்கட்சி தலைவர்கள் ஒட்டு மொத்தமாகச் சிறைக்குள் அடைக்கப்பட்டனர் . டிரேட் யூனியன் ஆர்வலர்கள் , பத்திரிகையாளர்கள் , கலைஞர்கள், எழுத்தாளர்கள் மாணவர்கள் என இந்திராவை எதிர்த்த அனைவரும் சிறைக்குள் வதைக்கப்பட்டனர் . இந்திராவின் அப்பா நேருவின் நெருங்கிய நண்பர்களான ஜெயப்ரகாஷ் நாராயணனையும் மொரார்ஜி தேசாயியையும் சிறைப்பிடிக்கவும் மகள் தயங்கவில்லை . முதல் முறையாக ஒரு பெண் சர்வாதிகாரியை பார்த்த உலகம் வியந்து நின்றது .
நாசி ஜெர்மனியின் நடந்ததை விடப் பத்து மடங்கு மனிதர்கள் நிர்பந்த கருத்தடைக்குள்ளானார்கள் . நாட்டிலிருந்தும் விரட்டப்பட்டவர்கள், மறைந்து போனவர்கள் ... தொலைந்துபோனவர்கள் .. 21 மாதங்கள். நாடு முழுதும் சிறைகளும் வதை முகாம்களும் முளைத்தன . பத்திரிகைகள் கோர கட்டுப்பாட்டுக்குள் வந்தன.. எங்கும் இளைஞர்களின் பெற்றோர்களின் உடன் பிறந்தவர்களின் உறவுகளின் கதறலும் பதற்றமும். இந்திய துணைக்கண்டத்தின் காற்றில் மரண வாடை...
குல்தீப் நய்யார் , சுந்தர் ராஜன் போன்ற பிரபல பத்திரிகையாளர்கள் சிறையின் இருட்டுக்குள் தள்ளப்பட்டனர் .
அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஏ கே கோபாலன், இந்திரா காந்தியை லேடி ஹிட்லர் என்று அழைத்தார் . ஆனால் அதற்கும் பதினாறு வருடங்களுக்கு முன்பே இந்திராவின் கணவர் ஃபிரோஸ் கண்டி , அவரை ஹிட்லருடன் முஸோலினியுடன் இணைத்துப் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . தீன்மூர்த்தி பவனில் நடந்த ஒரு விருந்தின்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் இந்திராவை ஃபாசிஸ்ட் என்று கூறிவிட்டு சென்றார் என்பது வரலாறு ,
குடிக்கத்தநீர் கூடக் கிடைக்காமல் மக்கள் வதைப்பட்ட , உயிருக்கு பயந்து மூச்சற்று வாழ்ந்த, அந்த இருண்டகாலத்தின் 50 ஆவது வருடம் இன்று நிறைவடைகிறது .
ஆம் நெருக்கடி நிலையின் அரை நூற்றாண்டு .
No comments:
Post a Comment