Sunday, December 27, 2015

பாலாறு பாழாகாமல், நீரோடும் பாலாறாக மாறவேண்டும்!

பாலாறு என்றால் வெறும் வறண்ட ஆறாக எப்போதும் காட்சி அளிக்கும். மணல் கொள்ளையில் பாலாறு பாழாகிவிட்டது. இந்த ஆண்டு மழையில் பல ஆண்டுகளுக்குப்
பின் வெள்ளமாக நீர் சென்ற காட்சியை பார்க்க முடிந்தது.

அப்பகுதி மக்கள் பாலாறு, தென்பெண்ணை ஆறுகள் இரண்டையும் இணைக்க வேண்டுமென்று நீண்ட காலமாக போராடி வருகின்றனர். கர்நாடக நந்திதுர்க்கத்தில் தொடங்கும் பாலாறு பின் ஆந்திர மாநிலத்தில் 33 கிலோ மீட்டர் பாய்ந்து தமிழகத்தை அடைந்து 222 கிலோ மீட்டர் தமிழ் மண்ணில் பயணித்து கல்பாக்கத்தின் அருகே உள்ள வயலூரில் வங்கக் கடலில் கலக்கின்றது. வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்ட விவசாயிகளுக்கு பாசன வசதியும், குடிநீர் வசதிக்கும் இந்த ஆற்று நீர் பயன்படுகிறது. இந்த ஆற்றில் செல்லும் உபரி நீரை கிருஷ்ணகிரி அருகே உள்ள நெடுங்கல் அணையிலிருந்து சந்தூர் வழியாக, வாணியம்பாடி அருகே உள்ள பாலாற்றில் துணை நதியான கல்லாற்றில் இணைக்க திட்டம் இருந்தும் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. இதற்காக கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து 55 கிலோ மீட்டர் நீளத்திற்கு கால்வாய் வெட்டவேண்டும் என்ற திட்டம் இருந்தும் அதுவும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்றினால் வீணாகும் நீரை, வாய்க்கால் வழியாக பயன்படுத்தி பாலாற்றை நீர் செல்கின்ற ஆறாக பார்க்க முடியும். வட மாவட்டங்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றி நீரோடும் பாலாறாக மாற்றவேண்டும் என்பதுதான் அனைவருடைய விருப்பமாகும்.


1 comment:

  1. superb....
    very good message....
    pls continue your good job.....
    thanks
    babu

    ReplyDelete