Friday, April 1, 2016

நெறியற்ற நடவடிக்கைகள்....

இன்றைய (01-04-2016) தினமணி நாளிதழில் தமிழக நீர் ஆதாரங்கள் குறித்து “நெறியற்ற நடவடிக்கைகள்....” என்ற தலைப்பில் தலையங்க பக்கத்தில் வந்த எனது பத்தி.

==============

நெறியற்ற நடவடிக்கைகள்....


- வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்

பெருமழையால் கர்நாடகம் மறுத்தும், தஞ்சை டெல்டாவுக்கு தண்ணீர் வரத்து இருந்தது.  இன்றைக்கு தண்ணீர் இருந்தும் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியாக இல்லை. நெல் சாகுபடியும் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. 2014ல் ஹெக்டேருக்கு 8400 கிலோ நெல் கிடைத்தது. 2015ல் சம்பா தாளடியில் சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு நெல் 5980 கிலோ என்று குறைந்துவிட்டது.  2015-16க்கான சம்பா சாகுபடியில் 5537 கிலோ என்று மீண்டும் குறைந்தது. 
காவிரி டெல்டா பகுதியில் சாகுபடி பணிகள் தொடங்கும்போது மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கவேண்டும். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக இந்த நாட்கள் தள்ளி போகின்றன. சில நேரங்களில் மேட்டூர் அணை திறப்பதில் சுணக்கமும் காட்டப்படுகிறது.  2012ல் செப்டம்பர் 17ல் தான் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. 2013ல் ஆகஸ்ட் 2ல் தான் திறக்கப்பட்டது. 2014ல் ஆகஸ்ட் 10ல் தான் திறக்கப்பட்டது. 2015ல் ஆகஸ்ட் 9ம் தேதியில் தான் திறக்கப்பட்டது.  குறிப்பிட்டப்படி ஜூன் 12ல் திறக்கக்காமல் தாமதமாக திறந்தால் நெற் பயிர்கள் வாடி விடுகின்றன. தாமதமாக திறப்பதால் அந்த நீரைக் கொண்டு விவசாயிகள் பாசன வசதி செய்வதால் எந்தப் பயனும் ஏற்படுவதில்லை. பயிர்களும் கருகி விடுகின்றன. இந்த ஆண்டு அதிக மழையால் பயிர்கள் மூழ்கடித்து அழுகிவிட்டன. கடந்த ஆண்டு மேட்டூர் அணை திறக்காமல் பயிர்கள் கருகின. இந்த ஆண்டு அதிக மழையால் பயிர்கள் அழுகிவிட்டன. ஆனால் காவிரி டெல்டாவில் சென்னை, கடலூர் போன்று பெரு மழைகள் இல்லாமலேயே வெள்ளத்தில் பயிர்கள் நாசமாகிவிட்டன. மழையில் பெய்த தண்ணீர் நீர் நிலைகளில் சேமிக்க முடியாமல் வேகமாக ஓடி கடலுக்குள் சென்றுவிட்டது.  ஏனெனில் நீர்நிலைகளை தூர்வாரப்படவில்லை. காவிரி கரைகளும் சரியாக பராமரிப்பு செய்யப்படவில்லை.  காட்டாமணக்கு, ஆகாயத்தாமரை, நாணல், புல், கருவேல மரங்கள் நீர் நிலைகளை ஆக்கிரமித்துக்கொண்டு நீர் இங்கு நிற்பதுமில்லை.  சோழர் ஆட்சிக் காலத்தில் டெல்டா பகுதியில் ஆயக்கட்டை நிர்வாகிக்க ஏரி வாரியம் இருந்தது. 

மூவேந்தர் காலத்தில் குறிப்பாக பாண்டியர் காலத்தில் கி.பி. 1785ல் பங்குனி, சித்திரை மாதங்களில் கிராமத்து மக்கள் ஒன்று கூடி நீர் நிலைகளை தூர்வாறினர்.  மதகுகளும், கதவுகளும் சரி செய்யப்பட்டன. சோழர் ஆட்சிக்காலத்தில் நடந்த மராமரத்துப் பணிகளை உத்தரமேரூர் கல்வெட்டே சொல்கின்றது.  அக்காலத்தில் ஊரில் பொதுவாக கணக்கில் இருந்த பொன், நெல், நிலம் போன்ற சொத்துக்களை வைப்பீடாக கொண்டு அதிலிருந்து வரும் வருமானத்தைக் கொண்டு குடி மராமரத்துப் பணிகள் சிறப்பாக, செம்மையாக நடந்தது.  இன்றைக்கும் திருச்சி-தஞ்சை மாவட்டத்தை வளப்படுத்துகின்ற உய்யக்கொண்டான் கால்வாய் இன்றைக்கும் விவசாயிகளின் கொடையாக அப்பகுதியில் உள்ளன.  இந்த வாய்க்கால் ராஜராஜ சோழனால் வெட்டப்பட்டு தொழில்நுட்பத்தோடு வெள்ளக்காலத்தையும் மனதில் கொண்டு வெட்டப்பட்ட கால்வாயாகும்.  இந்த கால்வாயின் தலை மதகினை குலோத்துங்க சோழன் கி.பி. 1205ல் கட்டினான். அன்றைக்குக் கட்டிய கால்வாய் இன்றைக்கு தஞ்சை மாவட்ட டெல்டா பகுதிக்கு மூன்று நீண்ட வாய்க்கால்களாக அமைந்து பாசனத்திற்கு பயன்படுகிறது.  இந்த உய்யக்கொண்டான் முதல் நீட்டிப்பிற்கு 12 ஏரிகளும், இரண்டு, மூன்று நீட்டிப்புகளில் தலா 3 ஏரிகளும் ஆக மொத்தம் 18 ஏரிகள் உள்ளன.  இந்த 18 ஏரிகளில் இதுவரை சரியாக தூர்வாரி மராமரத்து செய்யவும் இல்லை.   இதேபோன்று புதியகட்டளை மேட்டு வாய்க்காலில் 105 ஏரிகள் இதுவரை தூர்வாரப்படவில்லை. பல ஏரிகள் தற்போது காணாமல் போய்விட்டன என்றும் செய்திகள் வருகின்றன.  இம்மாதிரி பாசன நீர் மேலாண்மை நடவடிக்கைகளை செய்யாததால் காவிரி டெல்டா விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதுவரை செப்டம்பரில் நடவு செய்து சூல் வைத்து பூக்கும் இளம் பால் பருவத்தில் ஒன்று பாசன தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்படுகின்றன அல்லது தற்பொழுது பெய்த தொடர்மழை சூழ்நிலையில் பாதிப்புக்கு உள்ளாகின்றன.  என்ன செய்வான் விவசாயி! பாவம்!
தற்போது அக்டோபர், நவம்பரில் நடவு செய்யப்பட்ட பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டன. அந்த நீர் வடிய சரியான வடிகால் வசதி இல்லை. தேங்கி தண்ணீரால் புதிய நோய்களும் பயிர்களுக்கு வந்துவிடுகின்றன.  புகையான், குலைநோய், இலைசருகல் என பல நோய்கள் பயிர்களுக்கு பீடிக்கின்றன.  ஆந்திர பொன்னி ரகம் ஏக்கருக்கு 30, 35 மூட்டை விளைவது இன்றுக்கு 20லிருந்து 22தான் கிடைக்கின்றது. ஏபிடி 36 எனப்படும் கல்ச்சர் ரக நெல், 30 முதல் 40 மூட்டை வரை கிடைக்கும். ஆனால் அதுவும் ஒரு ஏக்கருக்கு 20 மூட்டைதான் கிடைக்கின்றது.  இப்படியான நிலை காவிரி டெல்டா விவசாயிகளுக்கு. 
தமிழகத்தில் மொத்தம் 39,202 ஏரிகள் உள்ளன.  இதில் 13,699 ஏரிகள் தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன.  ஆனால் நடைமுறையில் 3267 ஏரிகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது.  இந்த நீர்நிலைகளை பாதுகாக்கவும் இல்லை. இதை குடி மராமரத்து செய்யவும் ஆட்சியாளர்களுக்கு மனமில்லை. இதைவிட வேறு என்ன பணிகள் அரசுக்கு பரிவாரத்துக்கு இருக்கின்றனவோ தெரியவில்லை.
இப்படி முக்கியமான பொறுப்புக்களை ஆட்சியில் உள்ளவர்கள் தட்டிக் கழிப்பது முறைதானா? 
வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்
என்று மன்னனை வாழ்த்திய ஒளவையார் காலத்தில், நீர் நிலைகளை அரசர்கள் எவ்வளவு கவனமாக கவனித்தார்கள் என்பதற்கு இதைவிட வேறு என்ன சொல்ல முடியும்.
நீர் நிலைகளை எல்லாம் ஆக்கிரமித்து கபளீகரம் செய்து சமூக விரோதிகள் வீட்டு மனைகளாக்கி தங்களை வளப்படுத்திக்கொண்டார்கள்.
விவசாயிகள் பாதித்தால் நாடு பாதிக்கும் என்ற உணர்வே இல்லாமல் இந்த நீர் நிலைகள் பிரச்சினையில் பாராமுகமாக இருப்பது மிகவும் கண்டனத்துக்குரியாது. விவசாயி என்ன செய்வான். பெய்தும் கெடுக்கிறது. காய்ந்தும் கெடுக்கிறது. இயற்கையை குறை சொல்ல முடியாது. நீரை பயன்படுத்துவதில் சரியான அணுகுமுறை அரசாங்கத்திடம் இல்லை. நீர் மேலாண்மையும் சரியில்லை. காவிரியில் சுமார் 50க்கும் மேல் தடுப்பணைகள் கட்டவேண்டும் என்ற திட்டங்கள் இருந்தும் பல ஆண்டுகளாக அரசு கவனிக்காமல் இருக்கின்றது. மழைக்காலத்தில் பெய்கின்ற நீரை இந்த தடுப்பணைகளில் தேக்கி வைக்கலாம். இந்த சிந்தனையெல்லாம் அரசுக்கு இல்லாமல் விவசாயையை ஏங்கி அழ வைப்பதால் என்ன சுகமோ ஆட்சியாளர்களுக்கு.

இப்படித்தான் தமிழகம் முழுவதும் நிலைமை.  கேரளா, குமரி மாவட்டத்தில் நெய்யாறு அணையை மூடிவிட்டது. அடவி-நையனார், உள்ளாறு, செண்பகத் தோப்பு, அழகரணைத் திட்டம், முல்லைப் பெரியாறு, பாண்டியாறு புன்னம்புலா, பம்பாறு, சிறுவாணி, என கேரளாவோடு இந்த நீர்நிலைகளுக்கு எல்லாம் மோத வேண்டி உள்ளது. 
பி.ஏ.பி. என்று அழைக்கப்படுகின்ற பரம்பிக்குளம் - ஆழியாறு அணைத் திட்டம், கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு பாசன மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் அணை திட்டங்கள் ஆகும்.  1958 நவம்பர் 9ம் தேதி தொடங்கப்பட்ட இத்திட்டம் தமிழகம்-கேரளம் மாநிலங்களிடையே நதிநீர் பங்கீடு செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
இதன் துணை நதிகளான தூணக்கனவு, பெருவாரிப்பள்ளம் ஆகியவை கேரள வனப்பகுதியில் அமைந்துள்ளன.  பிரதானமான பரம்பிக்குளம் அணை தமிழக பொதுப்பணித் துறையால் கட்டப்பட்டு, கேரள மாநிலத்தின் பகுதியில் இருந்தாலும் தமிழக அரசுதான் பராமரிப்பு  செய்கின்றது.
இந்த திட்டத்தின் நீர் பங்கீடு குறித்து கேரளாவும், தமிழகமும் 30 வருடங்களுக்கு ஒரு முறை அமர்ந்து பேசி மறு ஆய்வு செய்து ஒப்பந்தந்தத்தை குறித்து ஆலோசனை செய்ய வேண்டும்.  ஆனால் தமிழகமும், கேரளமும் இதை சரியாக முறைப்படுத்தவில்லை.  கடந்த 1992 ஆம் ஆண்டு இரு மாநில அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்தது.  அப்போது கேரளா பகுதியில் அமைந்துள்ள பரம்பிக்குளம் அணையை தங்கள் பொறுப்பில் ஒப்படைக்க வேண்டும். தமிழ்நாட்டுக்குத் தேவையான தண்ணீரை தாங்கள் வழங்குவதாக கேரளா கோரிக்கை வைத்தது.  ஆனால் அணை பராமரிப்பு செலவை தமிழகம்தான் ஏற்கவேண்டும் என்ற நிர்பந்தத்தையும் ஏற்படுத்தியது.
படிப்படியாக பரம்பிக்குளம் அணையை கேரளா தன்னுடைய கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர திட்டங்களை தீட்டி வருகிறது.  இந்த அணையின் அருகே தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் 2013 ஆம் ஆண்டு கேரள அரசு தனது வனக் காவல் நிலையத்தை திறந்து அணைப் பகுதிகளை கண்காணிக்கத் தொடங்கியது.  கடந்த ஜனவரி 16ம் தேதி பரம்பிக்குளம் அணை மற்றும் துணை அணைகளின் பராமரிப்புப் பணிக்காக சென்ற தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகளை அங்கு அனுமதிக்காமல் கேரள வனத்துறை திருப்பி அனுப்பியது.
மற்ற பிரச்சினைகளான முல்லைப் பெரியாறு, குமரி மாவட்டத்தில் நெய்யாறு, நெல்லை மாவட்டத்தில் அடவி  நயினார், உள்ளாறு, விருதுநகர் மாவட்டத்தில் செண்பகவல்லி-அழகர் அணை திட்டம், கோவை மாவட்டத்தில் பம்பாறு, சிறுவாணி போன்ற நீராதார பிரச்சினைகளில் கேரளா வம்பு செய்வதைப் போல பரம்பிக்குளம்-ஆழியாறிலும் பிரச்சினை செய்ய துவங்கிவிட்டது.  தமிழக அரசின் கட்டுப்பாட்டில் பரம்பிக்குளம் அணை இருப்பதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிவிக்கப்பட்டும், கேரளா இப்படி வம்படி வேலை செய்ய தொடங்கிவிட்டது.
45 லட்சம் ஏக்கர் கோவை-திருப்பூர் மாவட்டங்களுக்கு பாசன வசதி கிடைத்தும், குடிநீர் வழங்கும் இந்த பரம்பிக்குளம் திட்டத்தை கேரளா முடக்கப் பார்க்கிறது.
எப்படி காவிரி பிரச்சினையில் ஒப்பந்தத்தை திரும்ப அமர்ந்து பேச முடியாமல் தள்ளப்பட்டதோ, அம்மாதிரியே திரும்ப 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமர்ந்து பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தை ஆய்வு செய்யாமல் இருப்பது முறையற்ற நடவடிக்கையாகும்.  ஒத்துழைப்புத் தராமல் கேரள அரசை மத்திய அரசு கண்டிக்காமல் பாராமுகமாகவே இருக்கின்றது.  கவனத்தோடு கவனிக்க வேண்டிய தமிழக அரசும் கண்மூடித்தனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதும் வேதனையை தருகின்றது.

தமிழகத்தின் நீர் ஆதார உரிமைகள் அண்டை மாநிலங்களால் பறிக்கப்படுவது நெறியற்ற வாடிக்கைதனங்களாகிவிட்டது.

கர்நாடகத்தோடு காவிரி, தென்பெண்ணை, ஒகேனக்கல் போன்ற நீர் ஆதாரப் பிரச்சினைகள்; ஆந்திரத்தோடு பாலாறு, பொன்னியாறு, பழவேற்காடு ஏரி பிரச்சினைகள் என்று தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது.  இதற்கான தீர்வுகள் சரியான முறையோடு அணுகவில்லை என்பதுதான் வேதனையான விஷயம்.  எதிர்கால தமிழகம் இதனால் எப்படியெல்லாம் பாதிக்கப்பட போகின்றதோ?

வளமில்லாத மாடு, உழ முடியாத கலப்பை என்பது மாறி, நீர் இல்லாத விவசாயம் என்று விவசாயி எதிர்காலத்தில் ரணங்களையும் பாடுகளையும் சந்திப்பான் என்ற அச்சத்தை விட பயங்கர கொடுமை ஏற்பட்டுவிடுமோ......


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...