Wednesday, April 27, 2016

கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி

கடந்த 19.4.2016 அன்று "காராச்சேவும் - கடலைமுட்டாயும் - ஹாக்கிப்பட்டியும்" என்ற தலைப்பில் கோவில்பட்டி மற்றும் அதன் வட்டார கிராமங்கள், அங்கு நிலவிய கடந்த கால அரசியல், சமூகப் பார்வை என பல விஷயங்களை பதிவு செய்யலாம் என்று விரும்பினேன். இன்றைக்குள்ள அரசியல் சூழ்நிலையில் இப்போது அது தேவையில்லை என்று சில நண்பர்கள் சொன்னார்கள். இருப்பினும் 1996 வரை வேட்பாளராகவும், வேட்பாளரின் முகவராகவும், இன்று வரை களப்பணியாளராகவும் இருந்துள்ளேன்.

இத்தோடு இணைக்கப்பட்டுள்ள தேர்தல் கால 1996க்கு முந்தைய கால புகைப்படங்கள் கண்ணில் பட்டபோது பல தேர்தல் சம்பவங்கள் நினைவுக்கு வந்தன.

1952லிருந்து யார் யாருக்கு இடையே தேர்தல் களத்தில் போட்டி நடந்தது என்பதை வேட்பாளர்களின் பெயர்களோடு பட்டியல் இதோ.

1952 - ராமசாமி (காங்கிரஸ்) -  vs  - சண்முகம்
1957 - சுப்பய்யா நாயக்கர் (காங்கிரஸ்) -  vs  - செல்வராஜ்
1962 - என்.வி. வேணுகோபால் கிருஷ்ணசாமி (காங்கிரஸ்) -  vs  - ஆர்.எஸ். அப்பாசாமி (எஸ்.டபுள்யூ.ஏ)
1967 - எஸ். அழகர்சாமி (சி.பி.ஐ.) -  vs  - வி.ஓ.சி. ஆறுமுகம் பிள்ளை (காங்கிரஸ்)
1971 - எஸ். அழகர்சாமி (சி.பி.ஐ.) -  vs  - எல். சுப்பா நாயக்கர் (காங்கிரஸ்)
1977 - எஸ். அழகர்சாமி (சி.பி.ஐ.) -  vs  - பி. சீனிராஜ் (அ.தி.மு.க.)
1980 - எஸ். அழகர்சாமி (சி.பி.ஐ.) -  vs  - வி. ஜெயலட்சுமி (காங்கிரஸ்)
1984 - ரங்கசாமி (காங்கிரஸ்) -  vs  - எஸ். அழகர்சாமி (சி.பி.ஐ.)
1989 - எஸ். அழகர்சாமி (சி.பி.ஐ.) -  vs  - கே.எஸ். இராதாகிருஷ்ணன் (தி.மு.க.)
1991 - ஆர். ஷியாமளா (அ.தி.மு.க.) -  vs  - எல். அய்யாலுசாமி (சி.பி.ஐ.)
1996 - எல். அய்யாலுசாமி (சி.பி.ஐ.) -  vs  - கே.எஸ். இராதாகிருஷ்ணன் (ம.தி.மு.க.)
2001 - எஸ். ராஜேந்திரன் (சி.பி.ஐ.) -  vs  - கே. ராஜாராம் (தி.மு.க.)
2006 - எல். ராதாகிருஷ்ணன் (அ.தி.மு.க.) -  vs  -  எஸ். ராஜேந்திரன் (சி.பி.ஐ.)
2011 - கடம்பூர் சே.ராஜூ (அ.தி.மு.க.) -  vs  -  கோ.ராமச்சந்திரன்

இந்த தேர்தல் களங்களில் கிட்டத்தட்ட மங்கலான நினைவுகளோடு 1957ல் இருந்து சற்று நினைவுக்கு வருகிறது.

1952 பொதுத் தேர்தலில் கட்சிகளுக்கு சின்னங்கள் இல்லாமல் வர்ணங்களை அடையாளப்படுத்திய வாக்குப் பெட்டிகள் மூலமாக தேர்தல் நடந்தது. சுயேச்சைகளுக்கு தனி வர்ணமாக ஒரு பெட்டி என்று ஒதுக்கப்பட்டது. அன்றைய தேர்தல் ஆணையர் சுகுமார் சென் நாட்டில் எப்படி தேர்தல் நடத்துவது என்று முறைப்படுத்தினார்.

மஞ்சள், கறுப்பு வர்ணமடித்த அம்பாசிடர் காரில் மைக் செட்டைக் கட்டிக்கொண்டு, வேட்பாளரும், கட்சி நிர்வாகிகளும் ஒருவர் மீது ஒருவர் நெருக்கடியில் அமர்ந்துகொண்டு அப்போது கிராமங்களுக்கு சென்று வாக்குகள் கேட்பது உண்டு.  ஒரு வேட்பாளருக்கு ஒரு கார்தான் இருக்கும். அதிகபட்சம் இரண்டு கார்கள். அன்றைக்கு ஒரு காருக்கு வாடகை வெறும் 80 ரூபாய். வேட்பாளர்கள் இப்போது போல இல்லாமல் கிராமங்களில் நிர்வாகிகள் வீட்டில் என்ன கிடைக்கிறதோ, அதை உண்டுவிட்டு கிராம பம்புசெட்டு கிணறுகளில் குளித்ததெல்லாம் பார்த்துள்ளேன். அழகர்சாமி அவர்கள் 1977ல் போட்டியிடும்போது நல்லகண்ணுவும், கோடங்கால் கிருஷ்ணசாமியும், நானும் இந்த மஞ்சள் கறுப்பு வண்டியில்தான் கோவில்பட்டி தொகுதிக்கு உட்பட்ட திருவேங்கடம், குருவிகுளம் கிராமங்களில் வேகாத வெயிலில் பயணிப்பது உண்டு. சேவு, கருப்பட்டி மிட்டாய், வடை இவையெல்லாம் வண்டியில் வாங்கி வைத்துக்கொண்டு எங்காவது மோட்டார் கிணறில் தாகத்துக்கு தண்ணீர் குடிப்பது உண்டு. ஒரு சில இடங்களுக்கு போக்குவரத்து வசதி இல்லை என்றால், காடுகளைத் தாண்டி போகும்போது செருப்பு போட்டிருந்தாலும் காலில் முள் தைத்துவிடும். அந்த காலத்தில் கலைநிகழ்ச்சி இளையராஜா சகோதரர் பாவலர் வரதராஜன் நடத்துவார். அதேபோல தி.மு.க.வுக்கு சிவகங்கை சேதுராமன் நடத்துவார். ஒரு சில இடங்களுக்கு இரவில் செல்லவேண்டும் என்றால் வெள்ளி முலாம் பூசிய டார்ச் லைட்டும், பெட்ரோமாக்ஸ் விளக்கையும் எடுத்துக்கொண்டு மைக் இல்லாமல் கிராமங்களில் எல்லாம் பேசியது உண்டு. 1959, 1962 வரை எங்கள் பகுதியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சுதந்திரா, பிரஜா சோசலிஸ்ட் பார்ட்டி, சம்யுக்த சோசலிஸ்ட் பார்ட்டி என்பவை களத்தில் இருந்தன. இரட்டை மாடு பூட்டிய ஏர் (காங்கிரஸ்), நட்சத்திர சின்னம் (சுதந்திரா), கதிர் அரிவாள் (கம்யூனிஸ்ட்), மற்ற கட்சிகளுக்கு ஆலமரம், தீபம், குடிசை சின்னங்கள் எல்லாம் இருந்தன. கம்யூனிஸ்ட் கட்சி 1964ல் பிளவுபட்டபின், அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சி.பி.எம். சின்னமாக அமைந்தது. அப்போது காங்கிரஸ் வட்ட வடிவில் காளைமாட்டு சின்னத்தையும், கம்யூனிஸ்ட் சிகப்பு அட்டையில் கதிர் அரிவாளும், சுதந்திரா கட்சி நீல வண்ணத்தில் சட்டையில் குத்திக்கொள்ளும் பேட்ஜ்களை கொடுப்பார்கள். அவற்றை தபால் தலைகள், அயல்நாட்டு நாணயங்களை சேர்ப்பது போல விருப்பத்தோடு சேர்ப்பது ஒரு வாடிக்கை.

பிரச்சாரத்துக்கு காங்கிரசில் காமராஜர், செல்லப்பாண்டியன்; கம்யூனிஸ்ட் கட்சிக்கு எம்.கல்யாணசுந்தரம்; சுதந்திரா கட்சிக்கு லட்சுமி மில் ஆலை அதிபர் ஜி.கே. சுந்தரம், என்.ஜி. ரங்கா, எஸ்.எஸ். மாரிசாமி ஆகியோர் வருவார்கள்.

1957 தேர்தலில் தி.மு.க. உதயசூரியன் சின்னத்தில் கோவில்பட்டியில் போட்டியிடவில்லை. அந்தத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தை அனைத்துப் பகுதியினரும் அறியக்கூடிய வகையில் முதல் முதலாக 1989ல் போட்டியிட்டது அடியேன்தான்.

இத்துடன் இணைத்துள்ள எனக்கு முன்னாள் பிரதமர் வி.பி. சிங், வைகோ உரையாற்றும் புகைப்படம் எடுத்த கோவில்பட்டி காந்தி மைதானத்துக்கு ஒரு வரலாறு உண்டு. இந்த காந்தி மைதானத்தில் அண்ணல் காந்தி அவர்கள் உரையாற்றியுள்ளார். வ.உ.சிதம்பரனாரும் உரையாற்றியுள்ளார். பாரதிக்கும் தொடர்பு உண்டு. இதே மைதானத்தை ஒட்டிய ஒரு வாடகை வீட்டில் வ.உ.சி. ஏழ்மையில் வாடி, கோவில்பட்டி கோர்ட்டில் வக்கீலாக இருந்தார். இதே இடத்தில்தான் ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில் 1950ல் திராவிட முன்னேற்றக் கழகத்தை அண்ணா ஆரம்பித்தபோது தலைவர் கலைஞர் அவர்கள் நெல்லை மாவட்ட தி.மு.க.வை இதே இடத்தில் கொடியேற்றி துவக்கி வைத்து உரையாற்றினார் என்பதெல்லாம் வரலாற்று செய்திகள்.  இந்த காந்தி மைதானத்தில்தான் மூதறிஞர் ராஜாஜி, ஜெயப்பிரகாஷ் நாராயணன், அப்போதைய காங்கிரஸ் தலைவர் தாரகேஸ்வர் சின்ஹா, இவர்கள் மட்டுமல்லாமல் பேரறிஞர் அண்ணா, உரையை கேட்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.  இந்த மேடையில் காமராஜர், நெடுமாறனோடு அமரவும், பிற்காலத்தில் விவசாய சங்கத்தில் பணியாற்றியபோது நாராயணசாமி நாயுடு முதல் முதலாக உரையாற்றியதும் இன்றும் மனதில் உள்ளது. கலைஞர் அவர்களின் உரையை இந்த மேடையில் பார்வையாளராக கேட்டது மட்டுமல்லாமல் அதே மேடையில் தலைவர் கலைஞரோடு அமர்ந்து உரையாற்றக் கூடிய சூழ்நிலையும் பிற்காலத்தில் உருவாகின.  வைகோ அவர்களுடன் இந்த மேடையில் பல கூட்டங்களில் கலந்துகொண்டது மட்டுமல்லாமல் அவருக்கு பிடித்த இந்த காந்தி மைதானம் சிமெண்ட்டால் கட்டப்பட்ட மேடையாகும். கலைஞர் அவர்கள் இந்த மைதானத்தில் பேசிய "இளைஞர் குரல் அன்று போலவே என்றும் ஒலித்திட.... " என்ற பேச்சை நூல் வடிவமாக என்னை 2003ல் தயாரித்து தளபதி ஸ்டாலின் அவர்களுடைய 26.10.2003 தேதியிட்ட வாழ்த்துச் செய்தியோடு வெளியிட்டபோது கலைஞர் அவர்கள் என்னை பாராட்டினார். அது இந்த மேடையில் பேசிய பேச்சுதான்.

நான் 1989ல் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எஸ். அழகர்சாமி அவர்களை எதிர்த்து களத்தில் நின்றேன். அப்போதெல்லாம் ஆரோக்கியமான போட்டியாக இருந்தது. எட்டயபுரத்தில் அவர் வீட்டிற்கே வாக்கு சேகரிக்க சென்றபோது, என்னை வரவேற்று தேனீர் கூட அருந்திவிட்டுதான் செல்லவேண்டும் என்றார்கள்.  தேர்தல் பிரச்சாரத்தில் கீழஈரால் கிராமத்தில் திரு. அழகர்சாமி அவர்களை சந்திக்கும்போது "என்னப்பா, கடுமையான உழைப்பு போலிருக்கே. முகமெல்லாம் கருப்பாய் போய்டுச்சே" என்று என்னிடம் விசாரித்து, சற்றுநேரம் தூத்துக்குடி சாலையில் உள்ள காப்பி கடையில் காப்பி சாப்பிட்டுவிட்டு, பிரச்சாரத்தில் இறங்கும்போதெல்லாம் ஒன்றும் வித்தியாசங்கள் இல்லை. அழகர்சாமி அவர்களோடு கிட்டத்தட்ட 1970களில் இருந்து நல்ல அறிமுகம். சட்டக் கல்லூரியில் சேர்வதற்கு எனக்கு பரிந்துரை செய்தவர்களில் அவரும் ஒருவர். அதையெல்லாம் நன்றியோடு எண்ணிப் பார்க்க வேண்டும். அன்றைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.க. வுடன் கூட்டணியில் இல்லை. வைகோ அவர்கள் பரிந்துரை செய்து, தலைவர் கலைஞர் அவர்கள் அந்தத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பை வழங்கினார்.

அப்போது கோவில்பட்டி நகரத்திலும், குருவிகுளம் ஒன்றியத்திலும் தி.மு.க. கிளைக் கழகங்கள் முழுமையாக இருந்தன. கோவில்பட்டி ஒன்றியத்தில் வெறும் 35 கிளைகளாக இருந்ததை தேர்தல் பணியோடு 140 கிளைகளாக அன்றைய ஒன்றிய செயலாளர் பா. முத்துவோடு இணைந்து கூடுதலாக்கி அமைத்தோம். அச்சமயத்தில் தேர்தல் களத்தில் பா. முத்து, எம்.டி.ஏ. காளியப்பன், ஈ.ச. நாராயணன், நகர்மன்றத் தலைவர் தம்பி பாலசுப்ரமணியம் போன்ற நிர்வாகிகள் என்னோடு வாக்கு சேகரிக்கும் பணியில் இருந்தனர்.

அப்போதெல்லாம் பிரச்சாரம் காலையும், மாலையும் உண்டு. ஒவ்வொரு கிராமத்திலும் வீடு வீடாக சென்று வாக்குகள் கேட்பது உண்டு. நள்ளிரவு தாண்டி 2 மணி வரை கூட பிரச்சாரங்கள் செய்வது உண்டு. ஒரு கிராமத்திற்கு சென்றால் வேட்பாளர் வந்துவிட்டார் என்று வரவேற்பும், விருந்து உபசரிப்பும் நடக்கும். கிராமத்தில் வாக்குகள் கேட்டு திரும்பும்போது என்னிடம் ஒரு கவரில் வைத்து "இந்தாங்க, இது எங்க ஊர் உங்கள் தேர்தல் நன்கொடை" என்று 5 ஆயிரம், 10 ஆயிரம் என்று தருவதுண்டு. தேர்தல் காலத்தில் பூத் செலவுக்கு பணம் கொடுத்தாலே, வாங்க கிராமத்தில் மறுத்துவிடுவார்கள். களத்தில் சுவரொட்டிகளும், பிரச்சார சாதனங்களை பிற்காலத்தில் அமைச்சரான மைதீன்கான், ஸ்ரீவைகுண்டத்தில் எம்.எல்.ஏ.வான டேவிட் செல்வின் எடுத்துக்கொண்டு வந்து கோவில்பட்டியில் ஒப்படைப்பார்கள். அப்போது கோவில்பட்டியில் அழகர்சாமி அவர்களுக்கும், எனக்கும் கடுமையான போட்டி. தலைவர் கலைஞர் அவர்கள் எனக்கு பிரச்சாரத்திற்கு வந்த பொதுக்கூட்டம் மாநாடு போல கோவில்பட்டி நெடுஞ்சாலையில் ஸ்டேட் பாங்க் அருகில் சாலையை மறித்து போடப்பட்ட மேடையில் பேசும்போது, அவ்வளவு ஆர்ப்பரித்த கூட்டம். அந்தக் கூட்டத்தில் வைகோ, ஆற்காடு வீராசாமி அவர்கள் கலந்துகொண்டனர். வைகோ அவர்களிடம் கலைஞர் அவர்கள் ராதா ஜெயித்துவிடுவார் என்று சொல்லிவிட்டு புறப்பட்டார்.  அப்போது குருவிகுளம் ஒன்றியம், கோவில்பட்டி ஒன்றியம், எட்டயபுரம் பேரூராட்சி, கோவில்பட்டி நகரம் என உள்ளடங்கி 1 லட்சத்து 43 ஆயிரத்து 671 வாக்குகள். ஆனால் பதிவானதோ 1 லட்சத்து 58 ஆயிரம் வாக்குகள். இந்த நிலையில் நான் 31,724 வாக்குகளை பெற்றேன். என்னுடைய தொகுதியில் கதிர் அரிவாள், உதய சூரியன் களத்தில் இருந்தது. மற்றத் தொகுதிகளில் எல்லாம் காங்கிரஸ், அ.தி.மு.க.வில் ஜா, ஜெ. அணிகள் என்று பிரிவு பெற்று நின்றார்கள். கோவில்பட்டித் தொகுதியில் கைச் சின்னம் நின்றிருந்தால் அல்லது ஜா, ஜெ அணி நின்றிருந்தால் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பேன். அரசியல் சூழல் வேறு விதமாகியிருக்கும். வைகோ அவர்களும் கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

அன்றைக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் என்னை விட குறைவாக வாக்குகளைப் பெற்ற குமரி அனந்தன், சாத்தான்குளத்திலும், டேனியல்ராஜ் ஸ்ரீவைகுண்டத்திலும், ஓட்டப்பிடாரத்தில் முத்தையாவும் வெற்றி பெற்றனர். அப்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த ஆர். ஆறுமுகம் "என்ன பிரதர், நீங்கள் எல்லாம் ஜெயிச்சிருவீங்க என்று நினைச்சேன்" என்று வருத்தப்பட்டு சொன்னதெல்லாம் நினைவில் உள்ளது.  அப்போதெல்லாம் வாக்கு சீட்டுகள்தான். வாக்கு எண்ணிக்கை முடிய கிட்டத்தட்ட 30 மணி நேரம் ஆகும். அந்த தேர்தலில் பாரதி பிறந்த எட்டயபுரம் வரை 3000 வாக்கு வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தேன். எட்டயபுரத்துக்கு தென்பகுதியில் இருந்த கிராமங்களில் வாக்குகள் கிடைக்காமல் அப்போது வெற்றி வாய்ப்பு இல்லாமல் ஆகிவிட்டது.

நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில் அப்போது தி.மு.க. வில் முக்கிய களப்பணியில் வைகோ இருப்பார். அப்போது இந்த இரண்டு மாவட்டத்தில் முக்கிய நிர்வாகிகளாக கருதப்பட்டவர்கள் தினகரன் கே.பி. கந்தசாமி, ஏ.எல். சுப்ரமணியம், மஸ்தான், டி.ஏ.கே. லக்குமணன், கா.மு. கதிரவன், தூத்துக்குடி இரா. கிருஷ்ணன், சுப. சீதாராமன், புளியங்குடி பழனிச்சாமி, தூத்துக்குடி பெரியசாமி, தங்கவேலு, அடியேன் போன்றவர்கள் முக்கியமாக நிர்வாகத்தில் இருந்தோம். அன்றைக்கு ஒரு பாசப்பிணைப்பு இருந்தது.

பின் நாட்களில் 1996ல் மதிமுக சார்பில் களத்தில் இறங்கினேன். அப்போது குடைச் சின்னம். அப்போது 1,75,222 மொத்த வாக்காளர்கள். பதிவானவை 1,15,456. இதில் கம்யூனிஸ்ட் கட்சி அய்யலுசாமியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தேன். அப்போதும் வாக்காளர்களை சந்திக்கும்போது, பணத்தை எதிர்பார்க்காமல் அவர்களே தேர்தல் செலவை பார்த்துக்கொள்வார்கள் கிராமப்புறத்தில். அப்போது வேட்பாளருக்கு ஒரு தனி மரியாதையும் கௌரவமும் உண்டு.  எந்தவிதமான பிடுங்கலும், சிக்கலும் இல்லாமல் வீடு வீடாக, தெருத் தெருவாக வாக்குகள் கேட்பது உண்டு. தேர்தலில் வெற்றி வாய்ப்பிழந்த பின்னும், பலர் "நீங்கள் எல்லாம் இந்தத் தொகுதியில் ஜெயிலக்கலையே. எங்களுக்கு கொடுத்து வைக்கல" என்பார்கள்.  1996 தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிட்ட வைகோ அவர்கள் விளாத்திகுளத்திலும், தங்கவேலு சங்கரன்கோவிலும், நான் கோவில்பட்டியிலும் டெபாசிட்டை பெற்றோம். அப்போது களத்தில் இருந்த கண்ணப்பன் சிங்காநல்லூரில், எல். கணேசன் ஒரத்தநாட்டில், பொன்.முத்துராமலிங்கம் சேடப்பட்டியில், செஞ்சி ராமச்சந்திரன் செஞ்சியில், திருச்சி செல்வராஜ் போன்றவர்கள் எல்லாம் 10 ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகளை பெற்றார்கள். பிற்காலத்தில் இதில் ஒரு சிலர் நாடாளுமன்றத் தேர்தலில் அமைச்சர்களும் ஆனார்கள். இதுதான் நான் சந்தித்த கடைசித் தேர்தல்.

என்னுடைய தேர்தல் களத்தில் கலைஞர், வி.பி.சிங், வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் நம்பூதிரிபாட், தளபதி மு.க. ஸ்டாலின் எனப் பல முக்கியப் புள்ளிகள் எல்லாம் தேர்தல் களப் பரப்புரையை செய்தனர்.

அன்றைக்கு இருந்த தேர்தலும் இன்றைய தேர்தலும் பார்க்கும்பொழுது பல விதத்திலும் மாறுபட்டுவிட்டது. இப்போது வேட்பாளர்களும் அதிகம். கட்சிகளும் அதிகம். அப்போது சுயேச்சைகள் இரண்டு மூன்று பேர் களத்தில் இருப்பார்கள். தேர்தல் என்றால் பிரச்சாரம் ஒரு மாதம் நடக்கும். எனவே வாக்காளரை வீடு வீடாக சந்திக்க வேண்டும். அப்போது சுவரொட்டிகள்தான் பிரதான விளம்பரம் ஆகும். அதே போல் சின்னங்கள் பொறித்த டோர் ஸ்லிப் என்பது தவிர்க்க முடியாதது. இப்போதெல்லாம் சுவர் எழுத்துக்கள், பிளக்ஸ் போர்டுகள் என வந்துவிட்டன. வாக்காளர்களை கூட்டங்களுக்கு பணம் கொடுத்து அழைத்துவரவேண்டிய கட்டாயம். அப்போது கோவில்பட்டியில் கூட்டம் என்றால் கிராமங்களில் இருந்து அவர்களே பேருந்திலோ, சைக்கிளிலோ முன்கூட்டியே வந்து காந்தி மைதானத்திலோ, கிருஷ்ணன் கோவில் தெருவிலோ, சரஸ்வதி தியேட்டர் அருகிலோ கூடி விடுவார்கள். அன்றைக்கு வேட்பாளர் தங்கள் வீட்டு பிள்ளை என்று அந்தந்த கட்சியைச் சார்ந்தவர்கள் கொண்டாடுவதெல்லாம் உண்டு. கட்சி நிர்வாகிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டால் முழு ஒத்துழைப்பும், தேர்தல் முடியும் வரை வேறு எந்த பணியிலும் கவனம் செலுத்த மாட்டார்கள். என்ன செய்ய... அது ஒரு காலம். இது ஒரு காலம். அரசியல் இன்றைக்கு ஜாதி, மதம், பணபலம், குண்டர்பலம் என்று ஆகிவிட்டது.

ஒரு காலத்தில் சென்னையைச் சேர்ந்த ஐயங்கார் குலத்தைச் சேர்ந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரியர் திருச்செந்தூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். தினமணி நிறுவனர் ராம்நாத் கோயங்கா திண்டிவனத்தில் போட்டியிட்டார். சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜி.ஆர். தாமோதரன் பொள்ளாச்சியில் போட்டியிட்டார். வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மற்ற மாநிலங்களிலும் போட்டியிட்டது உண்டு. கிருஷ்ண மேனன் கேரளாவை விட்டுவிட்டு பம்பாயில் போட்டியிட்டார். திருநெல்வேலி பேட்டையில் பிறந்த காயிதே மில்லத் கேரளா மலப்புரத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். இப்படி பல உதாரணங்களைச் சொல்லலாம். இப்போதெல்லாம் இதை நினைத்துப் பார்க்க முடியுமா? காயிதே மில்லத் வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டு திருநெல்வேலிக்கு வந்துவிடுவார். இறுதி பிரச்சார நாளுக்கு மட்டும்தான் மலப்புரத்திற்கு போவார். அந்தத் தொகுதியில் வெற்றி பெற்ற பின், மலப்புரத்தில் சாதாரண கயிற்று கட்டிலில் அமர்ந்திருப்பவரிடம், யார் வேண்டுமானாலும் தங்களுடைய குறைகளை சொல்லலாம்.  இப்படியான புனிதமான பொது வாழ்வு இப்போது புரையோடிவிட்டது. இதற்கு காரணம் யார்? இந்த சூழல் ஏன்?  நல்ல கனவுகள் மெய்ப்படாமல், சீரழிவுகள் கண்முன் தெரிகின்றன. இதற்கு தீர்வு எட்டுமா என்பதுதான் நம்முடைய ஏக்கமும் சமுதாயத்தின் தாக்கமும் கூட.

அன்றைய கோவில்பட்டி தொகுதி தேர்தல்களின் மலரும் நினைவுகளை வெளிப்படுத்தும் புகைப்படங்கள்.






 









1 comment:

  1. அருமையான பதிவு ராதாகிருஷ்ணன் அவர்களே! மலரும் நினைவுகளை மலர் மாலை போல கோத்து வழங்கியது அருமை..என்ன எங்களுக்கு ஒரு வருத்தம்...கோவில்பட்டியில் நீங்கள் நின்றிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

    ReplyDelete

நம்மை விரும்பாதவர்களை தேடிக்கொண்டே இருக்கும் அளவிற்கு இந்த வாழ்க்கை அவ்வளவு பெரியதல்ல! நமக்கு அவர்கள் தேவையும் இல்லை . நாம் அடிமைகள் அல்ல. அதுதான் உண்மையான #தன்மானம், #சுயமரியாதை

நம்மை விரும்பாதவர்களை தேடிக்கொண்டே இருக்கும் அளவிற்கு இந்த வாழ்க்கை அவ்வளவு பெரியதல்ல! நமக்கு அவர்கள் தேவையும் இல்லை . நாம் அடிமைகள் அல்ல. அ...