Sunday, April 10, 2016

குப்பையால் பொலிவிழக்கும் திருமலைநாயக்கர் மகால்

திருமலை நாயக்கர் மகால் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரால் கி.பி. 1636 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இத்தாலியக் கட்டிடக் கலைஞர் ஒருவரால் வடிவமைக்கப்பட்டதாகக் கருதப்படும் இக் கட்டிடத்தின் நான்கில் ஒரு பகுதியே தற்போது எஞ்சியுள்ளதாகக் கருதப்படுகின்றது. இது அந்த மன்னரின் அரண்மனையாகும். குறிப்பாக அக்காலத்தில் சாலைகள், திருக்கோவில்கள், கோபுரங்கள் கட்டுதல், அன்ன சத்திரங்கள் கட்டுதல், கிறித்துவ தேவாலயங்கள், இஸ்லாம் மக்களுக்கு மசூதிகள் கட்டவும் இடங்கள் வழங்கப்பட்டன.

இந்து, முஸ்லிம் கட்டிடக் கலைப் பாணிகள் கலந்து அமைந்த இந்தோ சரசனிக் பாணி என அழைக்கப்படும் கட்டிடக்கலைப் பாணியில் வடிவமைக்கப் பட்ட இந்த அரண்மனை, 58 அடி உயரம் கொண்டது. 248 பிரமாண்டமான பெரிய தூண்கள் தாங்கி நிற்கின்றன. கூரையில் விஷ்ணு மற்றும் சிவன் பற்றிய புராணக்காட்சிகள் ஓவியமாய் சித்தரிக்கப்பட்டுள்ளன. அக்காலத்தில் இந்த அரண்மனை இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டதாக அமைந்திருந்தது. ஒன்று சொர்க்க விலாசம் என்றும் மற்றது ரங்க விலாசம் என்றும் அழைக்கப்பட்டன. சொர்க்க விலாசம் மன்னரின் வசிப்பிடமாகவும், ரங்க விலாசம் அவரது தம்பியான முத்தியாலு நாயக்கரின் வசிப்பிடமாகவும் இருந்தது.


இந்த அரண்மனைத் தொகுதியில், இசை மண்டபம், நாடக சாலை, பல்லக்குச் சாலை, ஆயுத சாலை, வழிபாட்டிடம், வேறு அரச குடும்பத்தினர்க்கும், பணியாளர்களுக்குமான வசிப்பிடங்கள், அந்தப்புரம், பூங்காக்கள், தடாகங்கள் போன்ற பல்வேறு பகுதிகள் அடங்கியிருந்தன.

ஆனால் இன்றைக்கு நிலைமைகள் மாறாக உள்ளன.  தொல்லியல் சிறப்புடனும், மதுரையின் அடையாளங்களில் ஒன்றாகவும் திகழும் மதுரை திருமலைநாயக்கர் மகால், குப்பைகள் குவிந்து சுகாதாரச் சீர்கேடுடன் பொலிவிழந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

இந்த மகாலுக்கு ஆண்டுக்கு சுமார் 69 ஆயிரம் பேர் வருகை தருகின்றனர். தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இந்த மகாலில் நடைபெறும் ஒலியும், ஒளியும் மூலம் மதுரையின் பாரம்பரியம், பழைமையை வெளிநாட்டவர் புரிந்துகொள்கின்றனர்.

கடந்த 2009-ஆம் ஆண்டில் மாநில சுற்றுலாத் துறை மூலம் மகாலைச் சுற்றிலும் பூங்கா அமைக்கப்பட்டது. இப்பணியை மாநகராட்சி மேற்கொண்டதுடன், முன்பகுதியில் வாகனங்களை நிறுத்த அனுமதித்து, கட்டணம் வசூலிக்கப்பட்டது. மாநகராட்சியிடம் மகால் பகுதி இருப்பது தொல்லியல் விதிக்கு முரணானது என சுட்டிக்காட்டியதால், சமீபத்தில் பூங்கா பகுதிகள் மீண்டும் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால், வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்கும் முறை தொடர்கிறது.

தொல்லியல் துறைக்கு பூங்கா சென்றதால் மாநகராட்சி அதைக் கண்டுகொள்ளவில்லை. இதனால் மகாலின் பூங்காக்கள் பராமரிப்பின்றி புதர் மண்டியுள்ளன. அத்துடன் அவற்றில் அப்பகுதி குப்பைகளும் கொட்டப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் சீர்கேடு அடைந்து, மகாலுக்கு வரும் வெளிநாட்டவரும் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் பூங்கா பராமரிப்பு குறித்து பேசப்பட்டும் நடவடிக்கை இல்லை. தொல்லியல் துறையானது மகாலுக்கு வரும் பயணிகளிடமிருந்து கட்டணம் வசூலிக்கிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை வருவாய் கிடைக்கிறது.

மகால் பராமரிப்பு நிதியும் சுமார் ரூ.3 லட்சம் வரை அளிக்கப்படுகிறது. ஆனால், ஒட்டடை நிறைந்தும், காரைகள் பெயர்ந்தும் பராமரிப்பு இன்றியே மகால் உள்ளது. திருமலை நாயக்கர் சிலை வளாகத்திலும் குப்பைகள் குவிந்துள்ளன.

மகால் துப்புரவுப் பணியாளர், காவலாளி, காப்பாட்சியர் என 10-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதை அவசியம் அரசு நிர்வாகம் கவனிக்கவேண்டும்.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...