Friday, April 1, 2016

காங்கேயம் காளை !!!!

ஒரு ஊரின் சிறப்பை அறிய எவ்வளவு தூரம் செல்வீர்கள் என்று நிறைய பேர் கேட்பார்கள், அதற்க்கு இந்த பகுதி சரியான விடை அளிக்கும் என்று நம்புகிறேன் !! காங்கேயம் என்று சொன்னாலே நமது நினைவுக்கு வருவது காளை..... அதை சொல்லும்போது நானும் உங்களை போலவே எதையும் உணர்ந்தது இல்லை, ஆனால் நேரில் பார்த்தபோது ஒரு சிலிர்ப்பு இருந்தது உண்மை. 

ராஜபாளையம் நாய் பகுதி எழுத ராஜபாளையம் சென்று இருந்தபோது ஊருக்குள் நுழையும்போது தெரிந்த எல்லா நாய்களுமே ராஜபாளையம் நாய்கள்தான், ஆனால் உண்மையான ராஜபாளையம் நாய்கள் பற்றி தெரிந்துக்கொள்ள ரொம்பவே மெனக்கெட வேண்டி இருந்தது, அது போலவே இந்த காங்கேயம் காளைகளும் !! ஊருக்குள் நுழைந்து காங்கேயம் காளை பார்க்க வேண்டும் எனும்போது எல்லோருமே அந்த பக்கம் போங்க, இங்க இருக்கும் என்றெல்லாம் சொன்னார்கள். பழைய படத்தில் எல்லாம் போட்டோ வைத்துக்கொண்டு காதலியை தேடுவது போல ஒவ்வொரு காளையையும் பார்த்து ஏதோ ஒன்று குறையுதே என்று தோன்றியது, அந்த ஊரில் இருப்பவர்கள் அவர்களது காளைகள்தான் ஒரிஜினல் காங்கேயம் காளை என்று சொன்னாலும் என்ன குறையுது என்று சொல்ல தோன்றவில்லை. முடிவில், பல பல கிலோமீட்டர் காங்கேயத்தில் இருந்து தேடி சென்று ஒரு கிராமத்தில் கண்டுபிடித்தோம்....... அந்த கணம், யுரேகா என்று மனம் கூத்தாடியது !

#காங்கேயம் (ஆங்கிலம் :Kangeyam), இந்தியாவின்
தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
கொங்கு என்ற சொல்லுக்கு தேன், சாரல் என்று பொருள். மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் கிழக்குச் சரிவுப் பகுதியிலுள்ள வனப்பகுதியில் தேன் மிகுந்திருந்ததால் கொங்கு நாடு எனவும்,
குடநாட்டில் (கேரளாவின் வட பகுதி) மிகுதியாய் பெய்யும் மழையின் சாரல் மிகுந்து பெய்ததால்,
கொங்கு நாடு எனவும், கூறுவார் உண்டு. ஆனால் மிகச்சரியானது முடியுடை வேந்தர்களான சேர,
சோழ, பாண்டிய நாட்டின் வடமேற்கு எல்லை கங்கில்(ஓரத்தில்) அமைந்ததால் கங்குநாடு, என்று இருந்து காலப்போக்கில் கொங்குநாடு என மருவியது.  கன்னடத்தில் "கங்கநாடு" என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது, இத்தேசத்துள் இருபத்திநாலு நாட்டுப்பிரிவுகள் உள்ளன. அவற்றில் ஒன்றான காங்கயநாட்டில் உருவாகும் ஆவினங்களே காங்கயம் என்று அழைக்கப்படுகின்றன, இதில் கயம் என்பதற்கு Greatness, superiority, eminence, பெருமை என்று பொருள். ஆக, காங்கயம் என்றால் "காங்கயநாட்டு பெருமை" எனவும் இன்றைய சொல்லில் "கொங்கு நாட்டு பெருமை" என்றும் கொள்ளலாமா ?! காங்கயம் என்பது இன்று மருவி மருவி இப்போது காங்கேயம் என்றாகிவிட்டது.......இது வரலாற்று சோகமோ ? இந்த பகுதியில் காங்கயம் என்பது சரியான பெயராக இருந்தாலும், எல்லோருக்கும் தெரிந்த காங்கேயம் என்றே அழைக்க போகிறேன், அது இந்த பெயரை கொண்டு தேடுபவர்களுக்கு உதவியாக இருக்குமே என்பதேயன்றி வேறொன்றும் இல்லை !!

ஊருக்குள் செல்லும்போதே நிறைய இடத்தில் தேங்காய் எண்ணை தயாரிக்கும் பாக்டரி மற்றும் நெல் காய வைக்கும், உமி எடுக்கும் இடத்தை பார்க்கலாம் ! ஊருக்குள் நுழைந்து காங்கேயம் காளை ஏன் பேமஸ் என்று கேட்டால் நன்றாக பாரம் இழுக்கும், பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் என்று சொல்கிறார்களே தவிர அதை பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடியவில்லை, அப்போதுதான் "சேனாபதி காங்கேயம் காளை ஆராய்ச்சி மையம்" பற்றி கேள்விப்பட்டோம் !! காங்கேயம் ஈரோடு ரோட்டில் சுமார் முப்பது கிலோமீட்டர் சென்றால் நத்தகடையூரில் இருந்து சுமார் எட்டாவது கிலோமீட்டரில் ஒரு அழகான கிராம பகுதியில் குட்டபாளையம் என்னும் ஊரில் இருக்கிறது இது........ ஒரிஜினல் காங்கேயம் காளையை அங்குதான் பார்த்தோம் ! இதை நடத்துவது திரு.கார்த்திகேயன் அவர்கள், அவருடன் உரையாடியபோது காங்கேயம் காளைகள் என்பது நமது கலாசார பெருமை என்பது புரிந்தது !

மாடு, மாடு என்று சும்மா சொல்லி விட்டாலும் அதன் பூர்விக கதை கேட்டால் அப்படி சொல்லி திட்ட மாட்டோம் போல ! மாடு (ஆங்கிலத்தில்
cattle என அழைக்கப்படும்) அல்லது பசு (பேச்சு வழக்கில்) பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு
விலங்கு. மாடுகள் பொதுவாக மூன்று பாரிய பிரிவுகளாகக் காணப்படுகின்றன:

 அவற்றில் ஒரு வகையானது போஸ் டாரஸ் (Bos Taurus), இது ஒருவைகை ஐரோப்பிய இன எருதாகும் (ஆபிரிக்க மற்றும் ஆசிய மாடுகளுக்கு ஒத்தது).

 இரண்டாவது வகை மாடானது போஸ் இண்டிகஸ் எனும் விஞ்ஞானப் பெயரைக்கொண்ட காங்கேயம் காளை (ஆங்கிலத்தில் zebu ) என்பதாகும்.

 மூன்றாவது வகை மாடானது ஒரொய்ச் (aurochs) என்பதாகும் இவ்வகை மாடுகள் உலகில் இருந்து அழிந்துவிட்ட ஒரு இனமாகும். 

இவையே மேலே குறிப்பிட போஸ் டாரஸ் மற்றும் காங்கேயம் காளை இனங்களின் மூதாதய இனமாகும். சமீபத்தில், மாடுகளின் போஸ் டாரஸ் மற்றும் காங்கேயம் காளை இனங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால் மூவகை இனமாடுகளையும் ஓரின மாடுகளாக சேர்த்துவிட்டனர். எனினும் குழுவாக்கப்பட்ட ஓரினம் தற்போது இவ்வாறு Bos primigenius taurus, Bos primigenius indicus, Bos primigenius primigenius பிரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 42 வகை மாட்டினங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், பகுதிகளில் காங்கயம் இன மாடுகள் உள்ளன. திருநெல்வேலி, தஞ்சை, நாகப்பட்டினம் பகுதிகளில் உம்பளச்சேரி என்னும் இன மாடுகளும், அந்தியூர்ப் பகுதியில் பர்கூர் இன மாடுகளும், கிருஷ்ணகிரி, தர்மபுரிப் பகுதிகளில் ஆலாம்பாடி இன மாடுகளும், தேனிப் பகுதியில் மலைமாடு என்னும் இன மாடுகளும், மதுரை, சிவகங்கைப் பகுதிகளில் புலியகுளம் இன மாடுகளும் உள்ளன. 

காங்கேயம் மாடுகளை வண்ணங்களைக் கொண்டு மட்டும் மூன்று வகையாகப் பிரிக்கலாம். இவற்றில் 95 சதவிகிதம் மயிலை எனப்படும் வெள்ளை நிறமுடையவை. 2 சதவிகிதம் காரி எனப்படும் கருப்பு நிறம் உடையவை. 3 சதவிகிதம் செவலை என்னும் சிவப்பு நிறமுடையவை !

காங்கேயம் காளை என்பது தமிழ்நாட்டின்
காங்கேயத்தைத் தாயகமாகக் கொண்ட ஒரு மாட்டினத்தைக் குறிக்கும். இவ்வின மாடுகள் வறண்ட பகுதிகளிலும் வாழும் தன்மையுடையவை.

சிந்துவெளியில் கிடைத்த காளை முத்திரையில் இப்போது தமிழகத்தில் இருக்கும் காங்கேயம் காளையை போன்றே திமில் மற்றும் உருவ அமைப்பை ஒத்தாக அறியப்படுகிறது.சிந்து சமவெளியில் ஏறுதழுவல் நடத்திய முல்லை நில ஆயர்கள் இக்காளையை சிந்து சமவெளியில் இருந்து தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்ததாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். காங்கேயத்தில் இந்த மாட்டினத்தைக் காக்க அமைப்பு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1990-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 11 லட்சம் மாடுகள் இருந்தாகவும் தற்போது சுமார் 2.5 லட்சம் மாடுகள் மட்டுமே இருப்பதாக அறியப்படுகிறது. இந்த வகை மாடுகள் குறைய காரணம் என்பது.......

காரணம் - 1 : 

இந்த இன மாடுகள் ஒரு வேளைக்கு 3 முதல் 4 லிட்டர் வரையே பால் தருவன. எனவே வியாபார ரீதியாகப் பாலுக்காக மாடுகள் வளர்ப்பவர்கள் குறைவான பால்தரும் இந்த இன மாடுகளை வளர்க்க விரும்புவதில்லை. அதிகப் பால் தரும் வெளிநாட்டுக் கலப்பின மாடுகளையே வளர்க்கிறார்கள்.

காரணம் - 2 : 

வேளாண்மைத் துறையில் டிராக்டர் முதலான இயந்திரப் பயன்பாடு அதிகரித்து விட்டதால் நல்ல இழுவைச் சக்தி கொண்ட காளைகள் உழவுக்கும், வண்டிகள் இழுக்கவும் தேவையற்றனவாகி விட்டன. இதனாலும் வளர்ப்பது குறைந்து வருகிறது.

காரணம் - 3: 

அதிக அளவிலான மாடுகளை மேய்க்க முன்பு போல் தற்போது ஆட்கள் கிடைப்பதில்லை. இதனால் முன்பு நிறைய மாடுகள் வைத்து இருந்தவர்கள் எல்லாம் தற்போது அளவாக மாடுகள் வைத்துக் கொள்கிறார்கள் அல்லது மாடுகள் வளர்ப்பதையே நிறுத்தி விடுகிறார்கள்.
இதனால் இன்று காங்கேயம் காளைகள் அரிதாகிக்கொண்டே வருகின்றன, இன்னும் சில வருடங்களில் புத்தகத்தில் மட்டுமே இருக்கும் காங்கேயம் காளைகள் என்று !!

அவரது ஆராய்ச்சி மையத்தில் பேசிக்கொண்டு இருந்துவிட்டு, காங்கேயம் காளையை எப்போது பார்ப்போம் என்று காத்துக்கொண்டு இருந்தோம். நல்ல மோர், காற்றோட்டமான இடம் என்று இருந்த அந்த ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஒரு மண் பாதையில் காரை எடுத்துக்கொண்டு கிராமத்து குண்டும் குழியுமான ரோட்டில் சென்றுக்கொண்டே இருக்க ஒரு காடு போன்ற பகுதியில் காரை நிறுத்த சொல்ல, முள்வேலியை விளக்கி எங்களை கூட்டிக்கொண்டு போக ஒரு மரத்தின் நிழலில் ஓய்வெடுத்துக்கொண்டு இருந்தது....... காங்கேயம் காளை ! 

அந்த காளையை கட்டி வேறு வைக்கவில்லை, அங்கு அந்த ஒரே ஒரு காளையும், சுமார் முப்பது பசு மாடுகளும் இருந்தது (நீங்க நினைப்பது சரிதான் :-)), எனது கூட வந்தவர், ம்ம்ம்ம்ம் எந்திரி என்று சொல்ல அது மெதுவாக எழுந்தபோது வாமன அவதாரம் வானுயர எழுந்தது போல சுமார் ஆறு அடிக்கும் மேலே இருந்தது, அந்த கம்பீரத்தை எப்படி புரிய வைப்பது........ மனது, இதுதான் இதுதான் ஒரிஜினல் காங்கேயம் காளை என்று கூத்தாடியது. அது மூச்சு சத்தத்தை கேட்டாலே பயம் வந்தது........... அது, அது, அதுதான் காங்கேயம் காளை !!

காங்கேயம் ரக மாடுகளை நோய், நொடிகள் எளிதில் தாக்காது. தீவனப் பற்றாக்குறை இருக்கும் நேரங்களில் பனை ஓலை, கொழுக்கட்டைப் புல் என்று கிடைத்ததை உண்டு, உழவு, இழுவை வேலைகளைச் சோர்வடையாமல் செய்யக்கூடிய ஒரு ரகம். காங்கேயம் பசு இரண்டு லிட்டருக்குக் குறையாமல் பால் கொடுக்கும். இந்த மாட்டின் கால் குளம்பு, குதிரைக் குளம்பு போல இருக்கும். காலைத் தரையில் வைத்து இழுக்காமல் தூக்கிவைத்து நடக்கும். ஒவ்வொரு பசு மாடும் சராசரியாக 7 ஈத்து வரைக்கும் ஈனக் கூடியது. இந்த ரக மாடும் தினமும் ரெண்டரை லிட்டருக்கு குறையாமல் பால் கொடுக்கக் கூடியது தான். காங்கயம் காளைகள் கடும் வெயிலிலும் தொடர்ந்து 12 மணி நேரம் உழவு, பார வண்டி இழுத்தல் முதலான வேலைகளைச் செய்யும் திறன் கொண்டவை. எந்தத் தட்ப வெப்பச் சூழலையும் தாங்கும் திறன் கொண்டவை. மாட்டு வண்டியில் 4 டன் எடை கொண்ட பொருள்களைக் கழுத்தளவு நீருள்ள பாதையில் கூட இழுத்துச் செல்லும் அளவுக்குப் பலம் வாய்ந்தவை. இதன் பால் A-2 ரகத்தைச் சேர்ந்தது. இதில் கொழுப்புச் சத்துக் குறைவு. நீரிழிவு, இரத்த அழுத்தம், இருதய நோய்களை யெல்லாம் குணப்படுத்தும் மருத்துவ குணம் மிக்கது. ஆனால் கலப்பின மாடுகளின் A-1 ரகப் பால் நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாதது. இந்தப் பாலைக் குடிப்பதால் மேற்கண்ட நோய்கள் அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய காங்கேயம் மாடுகளைதான் காங்கேயதிலேயே அதிகம் காண முடிவதில்லை என்பதுதான் சோகம் !

மாட்டு சந்தையில் ஒரு காளையின் குறைந்தபட்ச விலை 35 ஆயிரம் ரூபாய். மயில காளை இனத்தை சேர்ந்த ஒன்றரை வயது கன்றுக்குட்டி, 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு ஜோடி காங்கேயம் எருதுகள் 1.75லட்சம் ரூபாய்க்கும், பூச்சி காளை (காங்கேயம் காளையின் ஒரு பிரிவு) 60 ஆயிரம் ரூபாய்க்கும் விலை போகின்றன. இது தவிர இந்த காளைகளை சினை சேர்க்க ஒரு தடவைக்கு ஆயிரம் முதல் மூன்றாயிரம் வரை கிடைக்கிறது என்கின்றனர். உடல்வாகு, கடின உழைப்பு, கொளுக்கட்டாம்புல் உள்ளிட்டவை காங்கேயம் காளை புகழுக்கு காரணம். விற்பனையின் போது "சுளி சுத்தம்' முக்கியமாக பார்க்கப்படும். காளை மற்றும் பசுமாட்டின் உடலில் இருக்க வேண்டிய இடங்களில் "சுளி' இருந்தால் அது சுளி சுத்தம் எனப்படும்; நல்ல விலை கிடைக்கும். கொம்பு நேராக, கூர்மையாக இருக்க வேண்டும். தலை, வால் நீட்டமாக இருக்க வேண்டும். இது தவிர இரண்டு பல், நான்கு பல், ஆறு பல் உள்ளிட்டவை குறித்து வியாபாரத்தின் போது பார்க்கப்படும். காங்கேயம் காளைகளின் வாழ்நாள் 20 ஆண்டுகள். பராமரிப்பு பொறுத்து வாழ்நாள் பத்தாண்டுகள் வரை அதிகரிக்கும். 

திருப்பூர் மாவட்டம், காங்கேயத்திலிருந்து கிழக்கே 11 கி.மீ., தொலைவில் திருச்சி மெயின்ரோட்டில் அமைந்துள்ளது ஓலப்பாளையம். இப்பகுதி அருகே உள்ள கண்ணபுரத்தில், "கண்ணபுரம் காங்கயம் காளை சந்தை' பல நூற்றாண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. 

வரும் ஆண்டு 6.4.2016 முதல் 12.4.2016 வரை இந்த சந்தை நடைபெறும்.

 காங்கேயம் காளை மற்றும் பசு வகைகள் சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. ஒவ்வொரு சித்திரை மாதத்திலும் இந்த சந்தை நடைபெறுகிறது....... வாங்களேன், நாம ஒரு காங்கேயம் காளையை வாங்கி வருவோம் !!

நன்றி : தோழமைகள் சுரேஷ்குமார் மற்றும் கார்த்திகேயன் சேனாதிபதி அவர்கள்.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...