மங்கல தேவி கண்ணகி கோட்டம் - தினமணி கட்டுரை
சோழநாட்டில் பிறந்து, பாண்டிய நாட்டில் நீதிகேட்டு,கணவனை இழந்த துக்கத்தில் கம்பம் அருகே உள்ள குமுளி மலை உச்சியில் கண்ணகி தன்னை மாய்த்துக் கொண்டதாக வரலாறு.
பின்பு சேரன் செங்குட்டுவனால் குமுளி மலையுச்சியில் 1337 மீட்டர் உயரத்தில் கண்ணகிக்கு சிலை அமைக்கப்பட்டது. அந்த இடமே மங்கலதேவி கண்ணகிக் கோட்டமாக விளங்குகின்றது.
“மங்கலமடந்தைக் கோட்டத்து ஆங்கண்
செங்கோட்டு உயர்வரைச்
சேணுயர் சிலம்பில்
பிணிமுக நெடுங்கற் பிடர்தலை திரம்பிய
அணியகம் பலவுல ஆங்கவை
அடையது
கடிப்பகை நுண்கலும் கவரிதழ்க்
குறுங்கலும
இடிகலப்பு அன்னா இழைந்துரு நீரும்
உண்டோர் கணை”
(சிலப்பதிகாரம், வரந்தரு காதை)
“மதுரை மாநகரை அழித்த பின்பு கண்ணகி கணவனால் வானூர்தி மூலம் அழைத்துச் சென்ற காட்சியைக் குறவர்கள் கண்டு செங்குட்டுவனிடம் கூறினார்கள். இமயத்திலிருந்து சேரன் செங்குட்டுவன் கல் கொண்டு வந்து செங்குன்ற மலையில், யானை போன்ற குன்றின் கழுத்துப் பக்கத்திலுள்ள வேங்கை மலைச் சோலைகளின் நடுவில், நீர்ச்சுனைகள் அருகில் கண்ணகிக் கோட்டத்தை அமைத்தான்” என்கிறது சிலப்பதிகாரம்.
சோழ நாட்டிலுள்ள காவிரிப் பூம்பட்டினத்தை விட்டுக் கணவனுடனும் கௌந்தியடிகளுடனும் புறப்பட்ட கண்ணகி, மதுரையிலுள்ள ஆயர் கோவில் மாதரை என்பாளிடம் வந்து சேர்கிறாள்.
சிலம்பு விற்க மதுரை சென்ற கோவலன், ஊழ்வினை காரணமாக மதுரையை ஆண்ட பாண்டிய அரசனால் கொலை செய்யப்படுகிறான். செய்தியறிந்த கண்ணகி, தன் கணவன் கள்வனல்ல என்பதைப் பாண்டிய மன்னனுக்கு உணர்த்திவிட்டு, கொண்ட கோபம் தணியாது தனது இடது மார்பைத் திருகி எடுத்து மதுரை மீது வீசி எறித்து நகரைத் தீக்கிரையாக்கினாள்.
மதுரை நகரின் கிழக்கு வாயில் வழியாகத் தன் கணவனோடு உள்ளே நுழைந்த கண்ணகி, தன்னந்தனியாக மேற்கு வாயில் வழியாக வெளியில் வந்து, பேரியாற்றங்கரையின் வழியாக 14 நாள்கள் நடந்து திருச்செங்குன்றம் என்ற நெடுவேள் குன்றம் என்னும் சுருளிமலையின் தொடர் சிகரத்தை அடைகிறாள். சுருளிமலை என்பது இராவண சம்ஹாரத்துக்காகத் தேவர்கள் கூடி இரகசியம் பேசிய தலம் என்று புராணம் கூறுகிறது.
சுருளிமலையின் தொடர்ச்சியான நெடுவேள் குன்றத்தின் உச்சியிலுள்ள சமவெளிப் பகுதியில், வேங்கை மரத்தடியில் நின்ற கண்ணகியை மலைவாழ் மக்கள் பார்த்து பயபக்தியோடு ‘தாங்கள் யாரோ?’ என்று வினவ, ‘கணவனை இழந்தவள்’ என்ற ஒரே பதிலுடன் தனது பேச்சை நிறுத்திக்கொண்டாள்.
அந்த சமயம், வான்வழியாகப் புஷ்பக விமானத்தில் வந்த கோவலன், கண்ணகியை அழைத்துக் கொண்டு வானுலகை அடைந்து விட்டான். இதைக் கண்ட மலைவாழ் மக்கள், இந்த அம்மையார் யாரோ ஒரு தெய்வம் என்றெண்ணி, அவளை, ‘மங்கலதேவி’ என்கிற பெயரைச் சூட்டி வழிபட ஆரம்பித்தனர். ஆகவேதான், அம்மலைக்கு ‘மங்கலதேவி மலை’ என்ற பெயரும் ஏற்பட்டது.
கண்ணகி எரித்து மதுரை அழித்த பின்பு, அந்த நகரமே மழையில்லாமல் துன்பத்திற்கு ஆட்பட்டதாகவும். மதுரை எரிந்தது போன்று சேர நாட்டிற்கும் ஏதும் தீங்கு நேரக் கூடாதென்று செங்குட்டுவன் அஞ்சியதாகவும் தெரிகிறது. எனவே மங்கலதேவி மலையில் சேரன் செங்குட்டுவன் இந்தக் கண்ணகிக் கோட்டத்தினை அமைக்கின்றான்.
சேரன் கட்டிய கோட்டத்திற்கு இராஜராஜ சோழன் முதன் முதலாகத் திருப்பணி செய்தான் என இலங்கை வரலாற்று நூலான ‘குளவம்சம்’ கூறுகிறது.
இராஜ ராஜ சோழனையடுத்து, பாண்டிய மன்னர்களான குலசேகர பாண்டியன், கனக வீர தொண்டைமான் ஆகியோர் இக்கோவிலைப் புதுப்பித்து திருப்பணிகள் செய்ததாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. நாயக்க மன்னர்கள் காலத்தில், புன்செய் ஆற்றுத் தம்பிரான்கள் வழிவந்தவர்கள் மானியங்களும், திருப்பணிகளும் இக்கோவிலுக்குச் செய்துள்ளனர். இங்குள்ள சேதமடைந்த கல்வெட்டுகளில் தமிழ் எழுத்துகள் இன்றும் பளிச்சென தெளிவாகத் தெரியும் நிலையில் உள்ளன.
பிற்காலக் கல்வெட்டுகளில் கண்ணகி பூரணி என்று அழைக்கப்படுகிறாள். இலங்கை மட்டக்களப்பு பகுதியில் கண்ணகி என்ற பத்தினித் தெய்வ வழிபாடு பூரண சந்திர (பௌர்ணமி) நாளில் நடக்கிறது. கன்னட நாட்டில், கண்ணகி கதையில் சந்திரா என்ற பெயரில் கண்ணகியைக் கூறுகின்றனர். இப்படிப் பல செவிவழிச் செய்திகளும் இலக்கியத் தரவுகளும் கண்ணகிக் கோட்டம் பற்றி நமக்கு கிடைத்துள்ளன.
கி.பி.1672ஆம் ஆண்டு ராணி மங்கம்மாள் மதுரையை ஆண்ட காலத்தில், காட்டூர் பகுதியில் நடந்த போரில் இக்கோவில் தமிழகத்தைச் சார்ந்தது என முடிவெடுக்கப்பட்டது. 1883ஆம் ஆண்டு கூடலூர் மக்கள் அரசு அனுமதி பெற்று இக்கோட்டத்திற்கு செல்லும் பாதையைப் புதுப்பித்தனர்.
1839 மற்றும் 1896 ஆகிய நில அளவை ஆவணங்கள், 1893ஆம் ஆண்டு இந்திய நில அளவை வரைபடம், 1916ஆம் ஆண்டு இந்திய சர்வேயர் ஜெனரல் வரைபடம், 1932ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மதுரை மாவட்ட கெஜட், அரசு ஆணை 182 (1.5.1918) சென்னை, பொது அரசியல்) ஆகிய ஆவணங்களின்படி இக்கோட்டம் தமிழகத்தின் எல்லையில் அமைந்துள்ளது.
1975ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் நில அளவைப் பதிவேடுகள் துறை இணை இயக்குநர் கணேசன், கேரள மாநில அரசு அதிகாரிகளுடன் பேசி இது தமிழகத்திலுள்ளதே என முடிவு செய்தனர். அதன் பின்பு தமிழக அதிகாரிகள் பல்வேறு சமயங்களில் இப்பிரச்சினையையொட்டி சர்வே செய்து, கண்ணகி கோட்டம், தமிழகத்தில் அமைந்துள்ளது என்று தெளிவாக்கியுள்ளனர்.
1959 வரை கண்ணகி கோவிலை கவனிக்காத கேரள அரசு, 1976லிருந்து ஆக்கிரமிப்பு செய்யத் துவங்கியது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்ணகி கோட்டம் பிரச்சினையில் கேரளாவோடு எவ்வித தீர்வும் ஏற்படாததால், 1986ல் கண்ணகிக் கோட்டத்தில் 90 வருடங்களுக்கு முன்பு, உடைந்த சிலையை சீர் செய்து, பளியங்குடி- கண்ணகி கோவில் சாலையை அமைக்க வேண்டும் என்றும், தமிழக பயணிகள் கண்ணகிக் கோட்டம் செல்லும்பொழுது கேரள காவல்துறையினரால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர் அவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும், கண்ணகி கோட்டம் தமிழகத்திற்கு சொந்தம் என்றும் வலியுறுத்தி சென்னை உயர்நீதி மன்றத்தில் ரிட் மனுவை (W.P.No 8758/1988) பொதுநல வழக்காகத் தாக்கல் செய்தேன். நீதிமன்றம் குறிப்பிட்ட ரிட் மனுவை விசாரித்து, தமிழகப் பயணிகளுக்கு பாதிப்புக் கூடாது என்று கருத்து தெரிவித்தது.
1,850 ஆண்டுகளுக்கு முன்னே அமைந்த கண்ணகி கோட்டத்திற்கு, சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த சுமார் பதினெட்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் காலம் காலமாக சித்திரா பௌர்ணமி அன்று சென்று கண்ணகியை பத்தினி தெய்வமாக வழிபட்டு வருவது தொடர்கின்றது.
4,500 அடி உயரத்தில் அமைந்துள்ள கண்ணகிக் கோட்டம் இதமான குளிரில் எழில் கொஞ்சும் இயற்கைச் சூழலில், ஒரே பரப்பளவில் அமைந்துள்ளது. கல்கூரையுடன் பழைய கட்டடக் கலையுடன் நான்கு கட்டிடங்கள் அமைந்துள்ளன. கட்டிடங்களின் முகப்பு பகுதி மதுரையைப் பார்த்து அமைக்கப்பட்டுள்ளது.
கண்ணகி வழிபாடு என்பது, நாட்டுப்புற திராவிடத் தெய்வ வழிபாடாகும். கண்ணகியைத் துர்க்கையம்மன், பகவதியம்மன் போன்ற நாட்டுப்புற தெய்வங்கள் போல மங்கலதேவி என்றும் பலர் அழைக்கின்றனர். மங்கல தேவி வழிபாடுகள் தமிழகத்தில் மட்டுமின்றி கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களிலும் உள்ளன. இலங்கையில் வைகாசி மாதத்தில் மங்கல தேவி வழிபாடுகள் இன்றும் நடக்கின்றன.
இக்கோட்டத்திற்கு மதுரை மாவட்டத்திலுள்ள கூடலூரிலிருந்து இரண்டு பாதைகள் வழியாகச் செல்லலாம். மற்றொரு பாதையாகக் குமுளி வழியாகப் பேருந்து மூலம் செல்லலாம். அங்கிருந்து தேக்கடி வரை சென்று காட்டுப் பாதை வழியாக கண்ணகி கோட்டத்திற்குச் செல்ல வேண்டும்.
குமுளியிலிருந்து கண்ணகி சிலை அமைந்துள்ள இடத்துக்கு மலைமீது 12கி.மீ பயணிக்க வேண்டும். இதில் 9கி.மீ செங்குத்தான மலைப்பயணம், மேலும் 6 கி.மீ அடர்ந்த காட்டுப் பகுதி.
தமிழக எல்லையிலிருந்த கண்ணகி கோட்டம் திட்டமிட்டு மத்திய அரசாலும், கேரள அரசாலும் கேரள மாநிலத்துக்குச் சொந்தமான இடம் என்று சொல்லிக்கொள்வது கயைமையான செய்தியாகும்.
ஒருகாலத்தில் வண்டிப்பாதை எங்களுக்குச் சொந்தம் என்று சொல்லிக்கொண்டு வந்த கேரளா, இன்றைக்கு கண்ணகி கோட்டமே எங்களுக்குச் சொந்தம் என்று உரிமைகொண்டாடும் நிலைப்பாட்டில் உள்ளது.
கேரளா, தமிழகத்திடமிருந்து அரிசி காய்கறிகள், பால், இறைச்சி, முட்டை, வைக்கோல், மணல் போன்ற அத்யாவசியப் பொருட்களை எல்லாம் பெற்றுக் கொண்டு நன்றியில்லாமல் வஞ்சிக்கின்றது.
குமரி மாவட்டம் நெய்யாறு, நெல்லைமாவட்டம் அடவிநயினார், உள்ளாறு, செண்பகத்தோப்பு அணை, அழகர் அணைத்திட்டம், முல்லைப் பெரியாறு, ஆழியாறு-பரம்பிக்குளம், பாண்டியாறு- புன்னம்புழா, பம்பாறு, சிறுவாணி மற்றும் அச்சன் கோவில்-பம்பை -தமிழக வைப்பாற்றோடு இணைப்பு போன்ற பல நீராதாரத் திட்டங்களுக்கு தமிழகத்தோடு வம்பு செய்யும் கேரளா, கண்ணகி கோட்டத்திலும் அதே போக்கை கடைபிடிப்பது தான் ஒரு சமஸ்டி அமைப்பின் முறையா? தேசிய ஒருமைப்பாடும், பன்மையில் ஒருமை என்பதும் வெறும் எழுத்தில் மட்டும் தானா?
- கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
தினமணி
25-04-2008.
==============================================
கண்ணகி கோட்டத்தைப் பற்றி கவனத்துக்கு வந்த சில செய்திகள்
தமிழகத்துக்கு சொந்தமான கண்ணகி கோட்டத்துக்கு கேரள தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தது அர்த்தமில்லையே!
மங்கலதேவி கண்ணகி கோவில் சீரமைப்பு: கேரள தொல்லியல் துறையினர் ஆய்வு
தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கல தேவி கண்ணகி கோவிலை சீரமைப்பது குறித்து கேரள தொல்லியல் துறையினர் திங்கள்கிழமை ஆய்வு செய்துள்ளனர்.
தமிழக கலை, கலாச்சார வடிவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோவில் இடிந்து மண்மேடாகி வருவதாகவும், அதனை சீரமைக்க உத்தரவிடவேண்டும் என்றும் கம்பத்திலுள்ள மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையினர் கேரள உயர்நீதிமன்றத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு தொடர்ந்திருந்தனர். இவ்வழக்கு தொடர்பாக பல்வேறு தகவல்களை நீதிமன்றம் கேரள தொல்லியல் துறை மற்றும் பெரியாறு புலிகள் சரணாலய அதிகாரிகளிடம் பெற்றது. சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்ட இக்கோவில்லை வனத்துறையினரின் உதவியோடு தொல்லியல்துறை சீரமைக்கலாம் என கேரள உயர்நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இதன்படி, திருவனந்தபுரத்தில் உள்ள தொல்லியல் துறை பொறியாளர் சதீஷ் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழுவினர் மங்கலதேவி கண்ணகி கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர். கண்ணகி கோவில், தமிழக பகுதியில் அமைந்திருக்கும் தோரணவாயில் அமைப்பு, தீர்த்த சுனை பகுதிகளை இக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்கு பின்னர், அக்குழுவினர் கூறியது: ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெறும் சித்திரை முழு நிலவு நாள் விழா முடிந்த பிறகு ஏப்ரல் 24ல் இக்கோவில் சீரமைப்பு பணிகள் குறித்து கேரள உயர்நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றனர்.
=========
சித்ரா பவுர்ணமி: ஆண்டுக்கு ஒருமுறை கண்ணகி தரிசனம், இந்த ஆண்டு ஆலயத் திறப்பு ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி அன்றைக்கு மட்டுமே என பொதுவாக குறிப்பிடப்படுவதால் பலர் ஆண்டுதோறும் சித்திரா பவுணர்மி அன்று குமுளி வரை வந்து ஏமாற்றம் அடைகின்றனர். சித்ரா பவுர்ணமி நாள் வரும் 21-4-16 அன்றே ஆகும். ஆனால் மங்கல தேவி கண்ணகி ஆலய திறப்பு 22-4-16 என அறிவிப்பு வந்துள்ளது. அதாவது சித்திரா பவுணர்மிக்கு மறுநாளே ஆலய திறக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக இந்நடைமுறையே பின்பற்றப்படுகிறது. மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் நாளே இங்கும் வழிபாடு என ஓர் மரபை வைத்துள்ளனர். இத் தகவல் சரிவர பரவாததால் பலர் குமுளி வரை வந்து ஏமாற்றம் அடைகின்றனர்.
=========
ஈழத்தில் கண்ணகியை “பத்தினித் தெய்யோ’ என்று அழைத்து வணங்குகிறார்கள். வைணவக் கோவில்களில் “சடாரி’ வைப்பது போல அந்தக் கோவில்களில் தலையில் “சிலம்பை’ வைத்து வாழ்த்துகிறார்கள்.
விழாக் காலங்களில் பல்லக்கில் சிலம்பை வைத்து சுமந்து செல்கின்றனர். 2000 ஆண்டுகளுக்கு முன் சேரன் செங்குட்டுவன் குமுளிக்கு மேலே வண்ணாத்திப் பாறையில் ஆலயம் எழுப்பி குடமுழுக்கு செய்த போது விருந்தினராக வந்த இலங்கை மன்னன் கயவாகு, கண்ணகி தெய்வத்தின் பால் பக்திக் கொண்டு ”அம்மையே என் தேசத்தில் உன்னை வைத்து வழிபாடு செய்ய உத்தரவு கொடு’ என கேட்க ஆசரீரி வாக்கு கிடைத்தது. அதன் பிறகு இலங்கை திரும்பிய மன்னன் கண்ணகி வழிபாட்டை தேசமெங்கும் பரப்பினான்.
=======
பிரிந்த கணவன் - மனைவி ஒன்று சேரவும், கணவர் ஆயுள் கூடவும் கண்ணகி கோட்டத்தில் பெண்கள் வேண்டிக்கொள்கிறார்கள்.
‘நிச்சயம் கண்ணகி எங்கள் கடவுள்தான். குடும்பக் கஷ்டங்கள் நீக்கும் கடவுள்’ என்கிறார்கள் கேரள - தமிழக எல்லையில் சஞ்சரிக்கும் குமுளி பகுதி மக்கள். இங்கே மங்களாதேவி என்றழைக்கப்படும் கண்ணகியின் கோவிலுக்கு வருடம் தோறும் சித்ரா பௌர்ணமி அன்று மட்டுமே பூஜை செய்கின்றனர். சரியான சாலை வசதி இல்லை... வனத்துறையினர் கெடுபிடி அதிகம் என ஆயிரம் சிக்கல் இருக்கட்டுமே... அத்தனையையும் தாண்டி வருடா வருடம் கூட்டமும் பிரமாண்டமும் கூடிக் கொண்டே போகிற இந்த சித்ரா பௌர்ணமி பூஜையே சொல்லி விடுகிறது கண்ணகியின் செல்வாக்கை!
‘‘இமயமலையில் இருந்து கல் கொண்டு வந்து சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு கட்டின கோவில் இது. கேரளாவோட தொல்பொருள் ஆய்வுத் துறையே இது 9ம் நூற்றாண்டைச் சேர்ந்ததுன்னு சொல்லியிருக்கு. நாங்க இந்தக் கோவிலை கண்ணகிக் கோட்டம்னு சொல்லுவோம். இங்கிருக்குற கண்ணகி ரொம்ப சக்தி வாய்ந்த சாமி. பிரிஞ்ச கணவன் - மனைவி ஒண்ணு சேரவும், கணவர் ஆயுள் கூடவும் இங்க வேண்டிக்கிறாங்க பெண்கள். ’’ என்கிறார்கள் குமுளி பகுதியைச் சேர்ந்த கண்ணகி பக்தர்கள்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 4380 அடி உயரத்தில் மலை உச்சியில் காலம் தந்த சிதிலங்களோடு நிமிர்ந்து நிற்கிறது கண்ணகி கோட்டம். வெயில் ஒரு புறம் காய்ச்சி எடுத்தாலும், குளிர்ந்த காற்று வீசி வெப்பத்தைத் தணிக்கிறது. அன்று, மதுரையை எரித்து விட்டு வெம்மையோடு வந்து நின்ற கண்ணகியை இந்தக் காற்று தான் குளிர்வித்திருக்க வேண்டும். இந்த இடத்தில்தான் கண்ணகியை கோவலன் புஷ்பக விமானத்தில் வந்து வானுலகத்திற்கு அழைத்துச் சென்றதாகச் சிலப்பதிகாரம் சொல்கிறது. கண்ணகி கோவிலின் அடியிலிருந்து சுரங்கப்பாதை ஒன்று மதுரை நகர் நோக்கிப் போகிறது என்ற செவிவழிச் செய்தி இன்றைக்கும் பக்தர்களிடையே அடிபடுகிறது.
கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளாகவே இந்தக் கோவிலில் கண்ணகி வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருவதாகச் சொல்கிறார்கள். தற்போது, பெரியாறு புலிகள் சரணாலயத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் இந்தக் கோவில் மாட்டிக் கொண்டதே சிக்கல். கேரள எல்லைக்குள் வேறு வருவதால், அம்மாநில அரசின் அனுமதி இல்லாமல் யாரும் கண்ணகிக் கோட்டத்தினுள் நுழைய முடியாது. சித்ரா பௌர்ணமி பூஜை தினத்திலும் அதிகாலை 5.30 முதல் மாலை 5.30 மணி வரைதான் பக்தர்களுக்கு அனுமதி. அதற்கும் கேரள அரசின் வனத்துறை, மத்திய அரசின் வனத்துறை என அனைவரிடமும் அனுமதி பெற வேண்டும்.
மற்ற நாட்களில் கோவிலின் உள்ளே கண்ணகி சிலை கூட இருப்பதில்லை. சித்ரா பௌர்ணமி அன்று, ‘கம்பம் கண்ணகி அறக்கட்டளை’யைச் சேர்ந்தவர்கள், பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட கண்ணகி சிலையை இங்கு கொண்டுவந்து பிரதிஷ்டை செய்துதான் பூஜை நடத்துகிறார்கள். புது மஞ்சள் தாலி, கண்ணாடி வளையல்களை கண்ணகி சிலை முன் வைத்து பூஜை செய்த பிறகு பெண்கள் அணிகிறார்கள். அன்னதானம், அரவணை பாயசம் என அந்த நாளே அமர்க்களப்படுகிறது.
ஒரு காலத்தில் ஏழு நாள் விமரிசையாக நடந்துகிட்டிருந்த விழா இது. இப்போ கேரள அரசோட கெடுபிடியால ஒரே நாளா சுருங்கிடுச்சுஎன ஆதங்கத்தோடு சொல்கின்றனர் அங்குள்ள தமிழ் மக்கள்.
கண்ணகி கோட்டத்துக்கு போகவே தனியா கேரளா கவர்மென்ட் பர்மிஷன் வேண்டியிருக்கு. நம்ம தமிழ்நாட்டுப் பகுதியிலயே நடந்து போக ரெண்டு ரூட் இருக்கு. அது வெறும் 9 கி.மீட்டர்தான். ஆனா, வேர்க்க விறுவிறுக்க டிரெக்கிங் பண்ணிப் போகணும். இளந்தாரிப் பசங்களாலதான் அப்படி மலையேறி வர முடியும். பெரும்பாலும் இது பெண்கள் வழிபடுற கோவில்ங்கறதாலதான் பிரச்னையே என்கின்றனர்.
தமிழகத்திலேயே பளியங்குடி பகுதியிலிருந்து சாலை அமைத்துத் தந்தால் கேரள அரசிடம் அனுமதி பெற வேண்டியதில்லை என்பது இந்தப் பகுதி மக்களின் நெடுநாள் கோரிக்கை.
நடந்து மலை ஏற விரும்பினால் தேனி, கம்பம், கூடலூரை அடுத்து பளியங்குடி எனும் மலை கிராமம் அடிவாரத்தில் இருந்து மலை ஏறலாம். இது தமிழக எல்லை வழியே தொடங்கும் மலைப் பயணம். 35 வயதுக்கு குறைவானவர்கள், மற்றும் மலை ஏறும் அனுபவமிக்கவர்களுக்கு இப்பாதை சாத்தியமானது. மற்றவர்களுக்கு மிக கடினமாக அமையக்கூடும். காலை ஆறு மணிக்கெல்லாம், ஏற முயற்சிப்பது நன்று. சுமார் ஏழு கிலோ மீட்டர் தொலைவுக்கு நடக்க வேண்டும்.
No comments:
Post a Comment