Wednesday, April 20, 2016

ஜனநாயகமா? மரணநாயகமா?

அக்னி கக்கும் கொடிய வேகாத வெயிலில் மனித உரிமைகள் எல்லாம் மீறக் கூடிய வகையில் ஜெயலலிதா  பிரச்சாரக் கூட்டங்களுக்கு அழைத்து வரப்படுகின்ற மக்கள் படும் ரணத்துக்கு அளவே இல்லை. ஜனநாயக நாட்டில் இப்படியும் கொடுமைகளா? மனித உரிமை மீறல்கள், மனித உயிர்கள் கடைச் சரக்காகிவிட்டதா?

குடந்தையில் நடந்த மகாமகம் நிகழ்வில் ஜெயலலிதா பங்கேற்றபோது பொதுமக்கள் பலியானதும், தன் மீது வழக்குகள் தொடுத்தபோது விவசாயக் கல்லூரி மாணவிகள் எரிக்கப்பட்டதும், ஜெயலலிதாவின் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்ற விருத்தாசலத்தில் இரண்டு பேரும், சேலத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்துக்கு வந்த இரண்டு பேர் பலியானதும், கூட்ட நெரிசலில் மக்கள் மயங்கி விழுவதும் வாடிக்கையாகிவிட்டது.

இந்த வதையை எந்த கொடூரத்தில் சேர்க்க?

காலை பதினொரு மணிக்கு அழைத்துச் சென்று மாலை 4 மணி வரை காக்க வைப்பதா பிரச்சாரம்?  மக்களின் நலன் கருதி ஜெயலலிதா தன் பிரச்சாரத்தை மாலை 6 மணிக்கு பிறகு வைத்துக் கொள்ளலாமே?

ஜெயலலிதா ஈழப் பிரச்சினையில் போர் என்றால் மனிதர்கள் சாவது சகஜம் என்று எகத்தாளமாக சொன்னதைப் போல, தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் மனிதர்கள் சாவதையும் எளிதாக எடுத்துக் கொண்டதும் கொடுமையிலும் கொடுமை. இந்த பிரச்சினை மனித உரிமை ஆணையத்திற்கு சென்றால்.....?

தமிழக மக்களே சற்று சிந்திப்பீர். வெறும் காசுப் பணம், பிரியாணி என்று சிறு சிறு அற்பமான விஷயங்களை விரும்பினால், எதிர்காலத்தில் பெரும் பாதிப்புகளுக்கும், கேடுகளுக்கும்தான் உள்ளாக வேண்டும்.

துலாக்கோல் நிலையிலிருந்து இதை சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். எப்படியாவது வாக்குகள் வாங்கிவிட வேண்டும் என்ற பசப்பான வார்த்தைகளை நம்பினால் ஜனநாயகம் மரணநாயகமாகிவிடும்.

இது குறித்து தமிழ் இந்துவில் வந்த சமஸ் அவர்களின் பத்தியும் கவனத்தை ஈர்த்தது.

ஜனநாயகம் யார் கையில்?

ஜெயலலிதாவின் ஆரம்ப கால அரசியல் புகைப்படம் ஒன்று - ஜீப்பின் முன்புறம் உள்ள பேனட் மீது நின்றுகொண்டு மக்கள் மத்தியில் அவர் ஆவேசமாகப் பேசும் படம் அது. அங்கிருந்து ஒவ்வொரு தேர்தலிலும் அவர் பேசும் படங்களை வரிசையாக நகர்த்திக்கொண்டே வந்தால், அவரது தேர்தல் மேடைகளும் வாகனங்களும் அடுத்துவரும் காலத்தை முன்கூட்டிச் சொல்லும் குறியீடுகளாகத் தோன்றுகின்றன. காலந்தோறும் அவை மாறிவந்திருக்கின்றன. மக்களிடமிருந்து விலகிவந்திருக்கின்றன. அந்த மேடைகள் வெளிப்படுத்தும் மேலாதிக்க உணர்வையும் அந்நியமாதலையும் அடுத்து வரும் காலகட்டத்தில் மேலும் மேலும் அதிகரித்திருக்கின்றன ஜெயலலிதாவின் நிர்வாகச் செயல்பாடுகள்.

நாட்டிலேயே மக்களால் எளிதில் அணுக முடியாத முதல்வராகப் பெயர் பெற்ற ஜெயலலிதா, இந்தத் தேர்தல் காலத்திலும்கூட நாட்டு மக்களின் சூழலை நேரடியாகத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. சாலை வழிப் பிரச்சாரப் பயணம் என்பது வெவ்வேறு பகுதி மக்களை அவர்களுடைய நேரடி வாழ்க்கைப் பின்னணியில் சந்திப்பதற்கான வாய்ப்பு மட்டும் அல்ல; ஊர் சூழல் எப்படியிருக்கிறது, மக்களின் வாழ்க்கைப்பாடு எப்படியிருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்கான ஒரு வாய்ப்பும்கூட. தன்னுடைய பெரும்பான்மைப் பயணங்களை ஹெலிகாப்டர் வழியாகவே திட்டமிட்டிருக்கும் ஜெயலலிதா இப்போதும்கூட உண்மையான உலகத்துக்கு முகங்கொடுக்கத் தயாராக இல்லை.

இந்தத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு வடிவமைக்கப்பட்டிருக்கும் – கீழே வேட்பாளர்கள்; மேலே அவர் மட்டும் என்பதான – மேடை முடியாட்சிக் கால, சர்வாதிகார மனோபாவத்தின் அப்பட்டமான வெளிப்பாடு. தமிழகம் தவிர வேறெங்கும் மக்களாட்சி நடக்கும் ஓரிடத்தில் இப்படியான ஒரு மேடையமைப்பில் ஒரு மாநிலத்தின் முதல்வரோ, பிரதான கட்சியின் தலைவரோ உட்கார முடியுமா என்று கற்பனையிலும் நினைக்க முடியவில்லை.

ஏப்ரல் 11 விருத்தாசலம் நிகழ்வு தொடர்பாக அந்த நிகழ்ச்சிக்குச் சென்றுவந்தவர்களிடம் பேசும்போது நடந்தது ஒரு விபத்தாகத் தோன்றவில்லை. நம்முடைய அரசியல்வாதிகளின் ஆணவத்தினாலும் அதன் தொடர்ச்சியாக அதிகார வர்க்கத்தினரிடமும் கீழேயுள்ள நிர்வாகக் கட்டமைப்பினரிடம் ஊடுருவியிருக்கும் அலட்சியத்தாலும் நடத்தப்பட்ட கொலைகளாகவே தோன்றுகின்றன.

அக்கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அதிமுக வேட்பாளர்கள் 13 பேருக்கும் தலா 20 ஆயிரம் பேர் எனக் கணக்கிட்டு  2.6 லட்சம் பேரை அந்தத் திடலில் திரட்டத் திட்டமிட்டிருக்கிறார்கள். “ஆளுக்கு முந்நூறு ரூவா, சாப்பாட்டுப் பொட்டலம் கொடுத்தாங்கய்யா. வண்டி வெச்சிக் கூட்டிட்டுப் போனாங்க. காலையில எட்டு மணிக்கே வீட்டுலேர்ந்து பொறப்படச் சொல்லிட்டாங்க. அங்கெ கொண்டுபோய் உட்காரவைக்கும்போது மணி பதினொண்ணு இருக்கும். உட்கார்ந்த கொஞ்ச நேரத்துலேயே வெயில் சூடு மண்டையப் பொளக்க ஆரம்பிச்சுட்டு. காலுக்கு வேற செருப்பு இல்லாததால, காலைத் தூக்கி வச்சிக்கிட்டு நாற்காலியில உட்கார்ந்துருந்தோம். நேரமாக நேரமாக தண்ணித் தவிப்பு தாங்கலை. ‘அம்மா இதோ வந்துட்டாங்க, அதோ வந்துட்டாங்க’ன்னு சொல்லியே அந்தாண்ட இந்தாண்ட அசையவிடலை. மூணு மணிக்கு அம்மா வந்தாங்க. ‘தலை சுத்துது; கொஞ்சோண்டு தண்ணி கொடுங்கய்யா’ன்னோம். ‘அம்மா பேசி முடிக்கிறவரைக்கும் அசையக் கூடாது’ன்னுட்டாங்க. அதுக்கு மேல தாங்காம வரிசையா சரிஞ்சு விழ ஆரம்பிச்சுட்டாங்க” என்கிறார்கள்.

இப்படி 19 பேர் மயங்கி விழுந்து மருத்துவமனைக்குத் தூக்கிச்செல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் இறந்தவர்கள் என்று அரசு சொல்லும் கணக்கு இருவர். உள்ளூர் மக்கள் மேலும், இருவர் பெயர்களைச் சொல்லி, “அப்படியென்றால், அவர்கள் என்னவானார்கள்?” என்று கேட்கிறார்கள். இவ்வளவும் ஜெயலலிதா பேசிக்கொண்டிருந்தபோது, அவர் பார்க்கக் கூடிய 30 அடி தொலைவுக்குள் நடந்திருக்கிறது.

இத்தகைய சம்பவங்கள், உயிரிழப்புகள் ஜெயலலிதாவுக்கும் அதிமுகவினருக்கும் புதிதல்ல. சமீபத்திய 2014 பொதுத் தேர்தலின்போதுகூட இதே கடலூர் மாவட்டத்தில், சிதம்பரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் இப்படி ஒரு தொண்டர் உயிரிழந்தார். அரசியல்வாதிகளைப் பொறுத்த அளவில் உயிர்களுக்கு விலை உண்டு. தேர்தல் முடிந்ததும் நிவாரண நிதி வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் ஜெயலலிதா. மேலும், விருத்தாச்சலம் கூட்டத்துக்கு வந்து இறந்தவர்கள் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததாகச் சொல்லியிருக்கிறார். தன்னுடைய அடுத்தடுத்த பொதுக்கூட்டத் திட்டங்களிலும் அவர் பெரிய மாற்றங்களைச் செய்யவில்லை.

அருப்புக்கோட்டைப் பொதுக்கூட்டத்தில் கால்களிலும் தலைகளிலும் பாலிதீன் பைகளைக் கட்டிக்கொண்டு கொளுத்தும் வெயிலில் நான்கைந்து மணி நேரம் உட்காரவைக்கப்பட்டிருந்த வயதான பெண்களைப் பார்த்தபோது, விருத்தாச்சலம் மரணங்களை இதற்கு மேல் கொச்சைப்படுத்த முடியுமா என்று தோன்றியது. ஹெலிகாப்டரில் வந்திறங்கி, சுற்றிலும் குளிர்சாதனங்கள் நிறுவப்பட்ட ஒரு மேடையில் வசதியாக உட்கார்ந்துகொண்டு, கொளுத்தும் வெயிலில் வாடிக்கொண்டிருக்கும் மக்களிடத்திலும் தன்னைக் காட்டிலும் வயதானவர்களிடத்திலும் “நான் தவ வாழ்க்கை வாழ்கிறேன்; மக்களால் நான், மக்களுக்காக நான்; உங்களால் நான், உங்களுக்காக நான்” என்று ஒருவர் நாடக பாணி வசனம் பேசும்போது, வறிய மக்களின் வாழ்க்கையைப் பரிகசிப்பதுபோல இருக்கிறது.

2011 சட்டப்பேரவைத் தேர்தலில், தான் தேர்ந்தெடுத்த வேட்பாளர்களில் குறைந்தது 100 பேரை இந்த முறை வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்கியிருக்கியிருக்கிறார் ஜெயலலிதா. இந்தத் தேர்தலுக்கான வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருப்பவர்களில், இதுவரை 15 தொகுதிகளில் ஆட்களை மாற்றியிருக்கிறார். தனக்கு எது தேவை, எது நல்லதென்றே அவருக்குத் தெரிந்திருக்கிறதா என்று தெரியவில்லை. “உங்களுக்கு எது தேவை, எது நல்லதென்று எனக்குத்தான் தெரியும்” என்று மக்களைப்  பேசுகிறார் ஜெயலலிதா.

தான் விரும்பும் ஒரு மேடை. தான் விரும்பும் ஒரு கூட்டம். தான் விரும்பும் ஒரு பேச்சு. தன் பேச்சு மட்டும் கேட்கும் உலகம் என்ற நம்பிக்கை. அந்த உலகில் யாருக்கும் வாய் கிடையாது; உணர்வுகள் கிடையாது. அந்த ிதர்கள் யாவும் காதுகளாக மட்டுமே படைக்கப்பட்டவர்கள். வெறும் காதுகள். ஆங்கிலத்தில் ‘மெகலோமேனியா’ என்றொரு வார்த்தை உண்டு. தமிழில் ‘சர்வமும்நானே மனோபாவம்’ என்று அதை மொழியெர்க்கலாம். சுயமோகம், பாதுகாப்புவுணர்வின்மையின் உச்சத்தில் வெளிப்படும் மனோபாவம் இது. உள்ளுக்கும் வெளியிலுமாகத் தன்னைத்தானே போற்ற ஆரம்பித்து, பின் ஏனையோர் மீதும் அதே உணர்வை ஏவிவிடும் மனப்போக்கு. காணக்கிடைக்கும் காட்சிகள் அப்பட்டமாக அதைச் சொல்கின்றன.

‘தி இந்து’  18 ஏப்ரல் 2016,

No comments:

Post a Comment

Make a choice to get better, and to move forward. Move boldly against any currents*

*Make a choice to get better, and  to move forward. Move boldly against any currents*. Be persistent and consistent with your change, no mat...