இன்றைய தினமணியில் 01/11/2016 தமிழ்நாடு 60 குறித்து என்னுடைய பத்தி கொண்டாடவா ? சிந்திக்கவா? என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது
தினமணி கட்டுரை
தமிழ்நாடு - 60
============
- வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்
இன்றைய தமிழ்நாடு அமைந்து வருகின்ற நவம்பர் 1ம் தேதி அன்று 60 ஆண்டுகள் நிறைவு பெறும். இது நமக்கு மகிழ்ச்சியா? துக்கமா? என்று சொல்ல முடியாது. பல பகுதிகளை இழந்துள்ளோம். சிலப் பகுதிகளைப் பெற்றுள்ளோம். இதனால் நமக்கு நதிநீர் மற்றும் வன வளங்களின் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
சென்னை இராஜதானி என்று அழைக்கப்பட்ட ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகள் இணைந்த மாநிலமாக இருந்ததை 1956ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மொழிவாரியாக சென்னை மாகாணம் என்று பிரிந்த பின்பு அறிஞர் அண்ணா ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு என்று பெயரிடப்பட்டது. தமிழர்க்கு சொந்தமான பல பகுதிகள் வேறு மாநிலங்களுக்குச் சென்றுவிட்டன. இந்த ஆண்டு கடந்த காலத்தில் சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்ட தமிழகத்திற்கு பொன்விழா ஆண்டு ஆகும். கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் தோன்றிய நாளையொட்டி ஆண்டுதோறும் அந்த மாநில அரசுகள் விழாக்கள் நடத்தி வருகின்றன. ஆனால், தமிழகத்தில் இம்மாதிரி நிகழ்ச்சிகள் நடைபெறுவது இல்லை.
‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்உலகம்’
என்று தொல்காப்பியம் தமிழகத்தின் எல்லைகளை வரையறுத்து கூறுகிறது. ஆங்கிலேயரின் தவறான நிர்வாகத்தால் ஒவ்வொரு தேசிய இனம் மற்றும் மொழிவாரியாக மாநிலங்கள் அமையாமல் இருந்த நிலை ஏற்பட்டுவிட்டது. ஆங்கிலேயர் வங்கத்தை சூழ்ச்சியால் இரண்டாகப் பிரித்தனர். அன்றைக்கு காங்கிரஸ் கடுமையாக இச்சூழ்நிலையை எதிர்த்தது. இந்நிலையில், அய்க்கிய தமிழகம், விசாலா ஆந்திரம், நவக் கேரளம், அகண்ட கர்நாடகம், சம்யுக்த மகாராஷ்டிரம், மகா குஜராத் என மொழிவாரியான மாநிலக் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.
தெலுங்கு பேசும் மக்களுக்கு தனி மாநிலம் கோரி 1952இல் அக்டோபர் 13ஆம் நாள் பொட்டி ஸ்ரீராமுலு தொடங்கிய 65 நாள் உண்ணாவிரதம் டிசம்பர் 15இல் அவருடைய மரணத்தில் முடிந்தது. இப்போராட்டம் ஆந்திரத்தில் பெரும் புயலைக் கிளப்பி, 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இதன் விளைவாக கர்நூலை தலைமையகமாகக் கொண்டு ஆந்திரம் தனி மாநிலமாக ஆக்கப்பட்டது. இருப்பினும் ஆந்திரர்கள் தமிழகத்திற்குச் சொந்தமான வேங்கடமலையையும் தன் வசப்படுத்திக் கொண்டது மட்டுமல்லாமல் மெட்ராஸ் மனதே என்ற கோஷம் வைத்து அர்த்தமற்ற முறையில் போராடினார்கள்.
சென்னை மாகாணம், தமிழகம் உருவாகியதற்கு பலரின் தியாகங்கள் அளப்பரியவை.
தமிழகத்தின் வட எல்லையன திருத்தணியும், திருப்பதியும் தமிழகத்திற்குப் பெற சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யின் போராட்டங்கள் இன்றைக்கும் வரலாற்றில் உள்ளன. வடக்கு எல்லைப் போராட்டத்தில் ம.பொ.சி. அவர்கள், கொ.மோ.ஜனார்த்தனம், சோமா. சுவாமிநாதன், ஆ.தாமோதரன், கிருஷ்ணமூர்த்தி, அ.லூயிஸ், மு.வேணுகோபால், தங்கவேலு, ஆறுமுகம், ஜி.சுப்பிரமணியம் ஆகியோருடன் திருப்பதி மீது படையெடுப்பு என்ற போராட்டத்தையும் பிரச்சார பணியையும் மேற்கொண்டார். மங்களம் கிழார் என்பவரின் அழைப்பை ஏற்று வட எல்லைப் பகுதிக்கு புகை வண்டி மூலமாக திருப்பதி வரை செல்ல பயணப்பட்டார். ம.பொ.சி. திருப்பதி நுழைவைத் தடுக்க பலர் முனைந்தும் கீழ் திருப்பதியில் உள்ள குளக்கரை கூட்டத்தில் ம.பொ.சி. பேசும்பொழுது திட்டமிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் கூச்சலிட்டு, மரங்களில் இருந்து கிளைகளை முறித்து வீசினர். அதைப் பொருட்படுத்தாமல் வேங்கடத்தை விட மாட்டோம் என்று ஒரு மணி நேரம் கர்ஜித்தார். ம.பொ.சி. நடத்திய மொழிவாரி மாநிலப் பிரச்சினை வேகமடைந்து வெற்றிக் கொடியை நாட்டியது. ஆனால், திருப்பதி, சித்தூர், திருக்காளத்தி, திருத்தணி, பல்லவநேரி, கங்குந்திகுப்பம் போன்ற பகுதிகள் நியாயமாக தமிழகத்தோடு சேர்க்க வேண்டும் என்று ஆவணங்களோடு மத்திய அரசுக்குத் தெரியப்படுத்தினார்.
09.04.1953இல் 24.4.1953 வரை கடை அடைப்பும் பொது வேலை நிறுத்தமும் தொடர்ந்து 15 நாள்கள் (மறியல், போராட்டம்) நடைபெற்றது. புத்தூர் கலவரத்தில் ம.பொ.சி.யை தாக்க சதிகளும் தீட்டப்பட்டன. அந்தக் கலவரத்தில் நெல்லையைச் சேர்ந்த ஒருவர் ம.பொ.சி.யைக் காப்பாற்றியதாகவும் இவரை நெல்லை தமிழன் என்று ம.பொ.சி. போராட்ட வரலாற்றில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 1953ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி எல்லை தடையை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு 6 மாத சிறைத் தண்டனை ம.பொ.சி. பெற்றார்.
திருத்தணி எல்லைப் போராட்டத்தில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக தமிழக – ஆந்திர முதல்வர்கள் காமராஜரும், சஞ்சீவரெட்டியும் பேசி வடவேங்கடம் போன்று திருத்தணியும் ஆந்திரர்களின் ஆளுமைக்குச் செல்லாமல் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. ஒரு காலத்தில் வடஆர்க்காடு மாவட்டத்தில் இருந்த சித்தூர், திருப்பதி ஆகியவற்றை ஆந்திரர் எடுத்துக் கொண்டனர். இப்பிரச்சினை குறித்து திரும்பவும் திருப்பதியில் காமராஜரும், சஞ்சீவரெட்டியும் பேசியதன் விளைவாக தமிழக ஆந்திர சட்டமன்றங்களில் ஒரே நாளில் இதுகுறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ம.பொ.சி. அவர்கள் திருத்தணி எல்லைப் போராட்டம் மட்டுமல்லாமல் நாஞ்சில் நாடான கன்னியாகுமரி மாவட்டத்தையும், செங்கோட்டை, கூடலூர், தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை தமிழகத்தில் இணைக்க வேண்டும் என்ற போராட்டங்களுக்கும் துணை நின்றார்.
கன்னியாகுமரி, செங்கோட்டை தமிழகத்துடன் இணைக்கும் போராட்டத்தை வழி நடத்தியவர் பி.எஸ்.மணி ஆவார். சாம் நதானியெல், நேசமணி போன்ற போர்குணம் கொண்டோரின் தலைமையில் இக்கோரிக்கை பிறப்பெடுத்தது. பி.எஸ்.மணி – அழைப்பு இருந்தாலும், அழைப்பு இல்லை என்றாலும் தமிழகத்தில் நடக்கும் அனைத்து மாநாட்டுக்கும் சென்று குமரியை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்ற தீர்மானங்களை முன்மொழிய வேண்டிக் கொள்வது அவரது சலியாத நடவடிக்கை ஆகும். பலர் மணியினுடைய கோரிக்கையை காதில் போடாமல் அவரை தவிர்த்தபொழுதும் கூட சற்றும் கவலைப்படாமல் தொடர்ந்து போராடினார். மணிக்கு ம.பொ.சி. அவர்களுடைய ஆதரவு கிடைக்கப்பெற்றது. 1954இல் ஜூனில் நேசமணி தலைமை ஏற்று குமரியில் போராட்டங்களை நடத்தினார். சிறை சென்றார். ம.பொ.சி. அச்சமயத்தில் மூணாறு சென்று பிரச்சாரத்தை மேற்கொண்டார். நேசமணி கைதைக் கண்டித்து ம.பொ.சி. குரல் கொடுத்தார். அச்சமயத்தில் திருவிதாங்கூரில் கல்குளத்தில் நேசமணி கைதைக் கண்டித்து மக்கள் பேரணி நடத்தினர்.
1948ஆம் ஆண்டு ராஜஸ்தானுக்கும் குஜராத்துக்கும் ஏற்பட்ட எல்லை சிக்கலில் சிரோதி பகுதியை குஜராத்துக்கு அன்றைய துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் படேல் மாற்றம் செய்ததை தினமணி கார்ட்டூன் படமாக வெளியிட்டது. அந்தக் கார்ட்டூனை 1000 தாள்களில் அச்சிட்டு ஏன் திருவிதாங்கூரை தமிழகத்தில் சேர்க்கக் கூடாது என்று நியாயம் கேட்டார் மணி.
1950இல் கன்னியாகுமரி எல்லைப் போராட்டம் மிகவும் வேகம் அடைந்தது. இதுகுறித்து கொச்சி முதல்-அமைச்சரும் அன்றைய தமிழக அமைச்சர் பக்தவத்சலமும் பாளையங்கோட்டையில் சந்தித்துப் பேசினர். ஆனால், அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை மணி ஏற்றுக் கொள்ளாமல் கேரளத்துடன் குமரி மக்கள் இருக்க முடியாது என்பதையும் எந்த சமசர திட்டத்திற்கும் தயார் இல்லை எனத் தெரிவித்தார். குஞ்சன் நாடார் போன்ற பல்வேறு போராட்ட தளபதிகள் இப்பிரச்சினையில் அணிவகுத்தனர். அரசு அலுவலகங்கள் முன்னால் மறியல், பொதுக் கூட்டங்கள், மறியல்கள் போன்றவை நித்தமும் குமரி மாவட்டத்தில் நடைபெற்றன. 1954 ஆகஸ்ட் 11 அன்று 16 தமிழர்கள் போலீசாரால் சுடப்பட்டு மாண்டனர்.
நேசமணியின் தொடர் போராட்டம் நிறுத்தப்பட்ட பின்பும் குஞ்சன் நாடார் போன்ற தளபதிகள் போலீசாரின் குண்டர் தடியால் அடித்து உதைக்கப்பட்டனர். அச்சமயம் தலைமறைவாக இருந்த போராட்டத்தை நடத்தி வந்த மணியை திருநெல்வேலி மாவட்டத்தில் கேரள போலீசார் கைது செய்து திருவனந்தபுரம் சிறையில் வைத்தனர். இதுபோன்று செங்கோட்டையிலும் போராட்டங்கள் நடத்தி கரையாளர் கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் சிறையில் வைக்கப்பட்டார்.
இறுதியாக காமராஜரும் திருவிதாங்கூர் – கொச்சி உள்ளடக்கிய கேரள முதல்-அமைச்சர் மனம்பள்ளி கோவிந்தமேனன் ஆகியோர் பேசியபின் தேவிக்குளம் – பீர்மேடு பகுதிகளை கேரளம் எடுத்துக்கொண்டது. தேவிகுளம் – பீர்மேடு கேரளத்திற்கு சென்றதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. கன்னியாகுமரி – செங்கோட்டை தமிழகத்தில் இணைந்தது. இருப்பினும் கேரளம் பெரியாறு அணையை கையகப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் இருந்தபொழுது காமராஜர் அதற்கு இடம் கொடுக்கவில்லை. மாநில புனரமைப்புக் குழு பசலிக் கமிஷன் உறுப்பினராக இருந்த பணிக்கரால் தேவிகுளம் – பீர்மேடு தமிழகத்தை விட்டுப் போய்விட்டது என்ற குற்றச்சாட்டும் அப்பொழுது எழுந்தது.
நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்ட இணைப்பு விழாவில் 1956 நவம்பர் 1ஆம் தேதி காமராசர் கலந்து கொண்டார். அதே நாளில் செங்கோட்டை இணைப்பு விழாவிற்கு செங்கோட்டையில் சி.சுப்பிரமணியன் பங்கேற்றார். நாகர்கோவிலில் நடந்த விழாவிற்கு தியாகி பி.எஸ்.மணி அவர்களை அழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அதைப் பொருட்படுத்தாமல் மணி இரண்டு நாள் கழித்து நாகர்கோவிலில் ம.பொ.சி., என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரைக் கொண்டு குமரி மாவட்டம் இணைப்பு விழாவை சிறப்பாக நடத்தினார்.
மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியிலும் சிலர் ஆதரவாக இருந்தனர். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பொது உடைமைக் கட்சியைச் சார்ந்த ஜீவா போன்ற தலைவர்களும் மொழிவாரியாக தமிழகம் அமைய வேண்டும் என்ற கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று தியாகி சுந்தரலிங்கனார் 77 நாள்கள் உண்ணாநோன்பு இருந்து தன்னுடைய உயிரையே அர்ப்பணித்தார். தனது கோரிக்கையை கம்யூனிஸ்ட் தலைவரான ஐ.மாயாண்டி பாரதிக்கு கடிதம் மூலமாகத் தெரியப்படுத்தினார். தமிழ்நாடு என்ற பெயர் சூட்டவேண்டும் என்ற கோரிக்கையை அண்ணா முதல்வராகி நிறைவேற்றினார். தமிழ்நாடு என்ற பெயரிடக் கோரி நாடாளுமன்ற மக்கள் அவையில் பேரறிஞர் அண்ணாவின் கோரிக்கையை ஆதரித்து பூபேஷ் குப்தா குரல் கொடுத்தார்.
தட்சணப்பிரதேசம் என்று தக்கண பீடபூமி மாநிலங்கள் ஒன்றிணைக்க பண்டித நேரு நடவடிக்கைகள் எடுத்தபொழுது முதல் கண்டனக் குரல் அன்றைய முதல் காமராஜரிடம் இருந்து எழுந்தது. மொழிவாரியாக மாநிலங்கள் அமைய வேண்டும் என்று காமராஜர் விரும்பினார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் குரல் காமராஜரின் எதிர்ப்புக்கு வலு சேர்த்தது.
தமிழகத்திற்கும் கேரள மாநிலத்திற்கும் இடையே உள்ள எல்லை 830 கி.மீ. ஆகும். கோவை மாவட்டம் முதுமலை தொடங்கி தெற்கே நெய்யாற்றங்கரை – கொல்லங்ககோடு வரை நீண்டுள்ளது. தமிழக கேரள மாநிலங்கள் எல்லை தூரம் 203 கி.மீ. அளவில்தான் இதுவரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 627 கி.மீ. தூரம் எல்லைகள் நிர்ணயிக்கப்படாமலே இருக்கின்றது. இதற்கு கேரளா அரசு ஒத்துழைப்புத் தரவில்லை. இதனால் தமிழகத்தில் இருந்தாலும் தமிழகப் பயணிகள் சித்ரா பௌர்ணமியில் கண்ணகியை வணங்கச் செல்லும்போது கேரள காவல் துறையினரால் அத்துமீறி தாக்கப்படுகின்றனர். அண்டை மாநிலங்களோடு நதிநீர்ப் பிரச்சினையிலும், சமீபத்தில் கர்நாடகத்தோடு ஒக்கனேக்கல் பிரச்சினையில் தமிழகத்தின் நியாயங்களை வெளிப்படுத்தினாலும் கர்நாடகத்தின் எல்லை அத்துமீறல் தொடர்ந்தவண்ணம் உள்ளது.
கடந்த காலங்களில் தமிழர் இழந்த நிலங்கள் ஆந்திரத்திலும், கேரளத்திலும், கர்நாடகாவிலும் உள்ளன. தமிழகத்தில் உள்ள தாளவாடி கர்நாடகத்தில் சேர்க்க வாட்டள் நாகராஜ் தேவையற்ற போராட்டங்களை நடத்தி வருகிறார். ஏற்கனவே கொள்ளேகால், பெங்களூர், கோலார் ஆகிய பகுதிகளை கர்நாடகத்திடம் இழந்து உள்ளோம். 1956இல் தமிழகத்தின் விருப்பத்திற்கு மாறாக நெய்யாற்றங்கரை, நெடுமாங்கரை, தேவிகுளம் – பீர்மேடு கேரளத்தில் முறைகேடாக சேர்த்துவிட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையின் தெற்கேயிருந்து தமிழகத்தோடு இணைந்தது. நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு இழந்ததால் இன்றைக்கு காமராஜர் ஆட்சியில் நாம் கட்டிய நெய்யாறு அணையை கேரளா மூடிவிட்டது. தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை இழந்ததால் முல்லைப் பெரியாறில் கேரளா முரண்டு பிடிக்கின்றது. அது மட்டுமல்லாமல் நெல்லை மாவட்டத்தின் அடவி நயனாறு, உள்ளாறு, செண்பகவல்லி, விருதுநகர் மாவட்டம் அழகர் அணை திட்டம், பாலக்காடு பகுதிகளை இழந்ததால் கொங்கு மண்டலத்தில் சிறுவாணி, பம்பாறு, பாண்டியாறு-புன்னம்புழா, பரம்பிக்குளம்-ஆழியாறு பிரச்சினைகள் இன்றைக்கும் கேரளாவோடு தலைதூக்கி நிற்கின்றது.
கர்நாடகத்தோடு கொள்ளேகால், மாண்டியா, கோலாறு இழந்ததால் காவிரி, தென்பெண்ணை, ஒகேனக்கல் பிரச்சினை, ஆந்திரத்தில் சித்தூர், நெல்லூர், திருப்பதி இழந்ததால் பாலாறு, பொன்னியாறு, பழவேற்காடு ஏரி பிரச்சினை. கணேசபுரத்தில் தடுப்பணை கட்டப்படுகிறது. இவ்வளவு நதிநீர் ஆதாரங்களும், இயற்கை ஆதாரங்களும் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் நாம் இழந்த மண்ணால். இந்தத் தருணம் கொண்டாட்டமா? சிந்திக்கவா? என்று தெரியவில்லை. ஆனால் தென் மாவட்டங்களில் தமிழகத்தின் கலாச்சார பண்டைய தலைநகரம் ஏதென்ஸ், ரோம் நகர்களைப் போன்ற மதுரையைத் தலைநகராகக் கொண்டு தென் தமிழகம் ஏன் அமையக்கூடாது என்ற கோரிக்கையும் எழுந்து வருகின்றது.
தமிழகத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், இன்னொரு மாநிலம் அமைந்தால் பல சலுகைகளும், கிடைக்கும் என்று சிலர் வலியுறுத்துகின்றனர். மத்திய அரசின் பகுதியான புதுச்சேரிக்கே சிறப்புச் சலுகை இருக்கும்போது, தமிழ் பேசும் இன்னொரு மாநிலம் அமைந்தால் சில உரிமைகள் கிடைக்கும் என்று வாதிடுகின்றனர். இந்த வகையில் தென் தமிழகம் அமைய வேண்டும் என்ற கோரிக்கையும் விவாதத்துக்கு உரிய பொருளாகும். தென் தமிழகம் அமைந்தால் நிர்வாகம், மக்கள் நலப் பணிகள் என பல நன்மைகளும் உள்ளன. காலப் போக்கில் அரங்கன் பள்ளிகொண்ட காவிரியின் தென்கரை திருவரங்கரத்திலிருந்து குமரி முனையில் ஐயன் வள்ளுவன் சிலை வரை தென் தமிழகம் அமைய வேண்டும் என்ற சிலரின் விருப்பங்கள் நிறைவேற வேண்டும் என்று நீர்பூத்த நெருப்பாக உள்ளன. 1998லிருந்து மத்திய அரசு சிறு மாநிலங்கள் அமைய வேண்டும் என்று வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது திட்டங்கள் தீட்டப்பட்டது. உள்துறை அமைச்சர் அதற்கான முழு முயற்சிகளை மேற்கொண்டு உத்தராஞ்சல், ஜார்கண்ட், சட்டீஸ்கர் வரை பல மாநிலங்கள் அமைந்தன. தற்போது தெலுங்கானாவும் தனி மாநிலமாகிவிட்டது. ஒரே மொழி பேசும் மாநிலத்தை நிர்வாக ரீதியாக பிரிக்கலாம் என்று மத்திய அரசும் கொள்கை ரீதியாக ஏற்றுக்கொண்டுள்ளது.
தியாகங்கள் செய்து மீட்டுத் தந்த தணிகை, குமரி, செங்கோட்டை ஆகிய பகுதிகளோடு தமிழகத்தோடு இணைக்க போராடிய தியாகச் செம்மல்களின் கீர்த்தியை நினைவில் கொள்வோம். நாம் இழந்த மண்ணை எப்படி மீட்பது என்பதும் இப்போது சிந்திக்கப்படவேண்டிய விடயமாகும்.
#தமிழ்நாடு60
#tamilnadu60
#ksrposting
#Ksradhakrishnanposting
No comments:
Post a Comment