Tuesday, November 8, 2016

வீரமாமுனிவர் -(1680 -1747)


வீரமாமுனிவர் -(1680 -1747)
----------------------------------------------------------------
வீரமாமுனிவர் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது " தேம்பாவணி" யும், " பரமார்த்த குருகதை யும் " தான். 
இத்தாலியில் பிறந்து இந்தியாவிற்கு சமயப்பணி செய்ய வந்த கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி தான் தனது பெயரை வீரமாமுனிவர் என்று மாற்றிக்கொண்டார். முதலில் " தைரியநாதன் " என்று மாற்றியவர் பின்னர் அது வடமொழிக்கலப்பு என்பதால், தமிழில் இருக்க வேண்டும் என்று நினைத்து வீரமாமுனிவர் என்று வைத்துக் கொண்டார்.
கோவாவிற்கு வந்து இறங்கியவர், பின்னர் கொச்சி வழியாக அம்பலக்காடு வந்து, பிறகு நெல்லை மாவட்டம் காமநாய்க்கன்பட்டி, மணப்பாடு,குருக்கள்பட்டி, தூத்துக்குடி, வடக்கன்குளம்,கயத்தாறு  போன்ற இடங்களில் தங்கி சமயப்பணி செய்தார்.  இவருக்கு ஏற்கனவே, பிரெஞ்சு,லத்தின்,கிரேக்கம்,ஹீப்ரு,இத்தாலி,பாரசீகம்,ஆங்கிலம் போன்ற மொழிகள் தெரியும். (மனுஷன் 30 வயசுக்குள் இத்தனை மொழிகள் எப்படித்தான் படிச்சாரோ ?  நமக்கு ஒன்றரை மொழிகள் தான் தெரியுது...) 
இங்குள்ள மக்களிடம் பழகுவதற்காக தமிழை சுப்பிரதீபக்கவிராயரிடம் கற்றார். தமிழை காதலித்தார் என்றே சொல்லலாம். 
திருக்குறளின் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளிநாட்டவர் அறிய செய்தார். அதுமட்டுமின்றி, தேவாரம்,திருப்புகழ்,நன்னூல்,ஆத்திசூடி போன்றவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
தமிழறிஞர்களுக்கு இணையாக பல்வேறு பங்களிப்புகள்...
தமிழ் - லத்தின் அகராதி போட்டார் 
தமிழ் -போர்ச்சுகீசிய அகராதி உருவாக்கினார் 
சதுரகராதியை நிகண்டுக்கு மாற்றாக கொண்டு வந்தார்.

அக்காலத்தில் சுவடிகளில் மெய்யெழுத்துகளுக்கு புள்ளி வைக்காமலே எழுதுவது வழக்கம். புள்ளிக்கு  ஈடாக நீண்ட கோடிருக்கும். மேலும் குறில், நெடில் விளக்க என்று "ர" சேர்த்தேழுதுவது வழக்கம். "ஆ" என எழுத "அர" என 2 எழுத்துக்கள் வழக்கிலிருந்தது. (அ:அர, எ:எர) இந்த நிலையை மாற்றி "ஆ, ஏ" என மாறுதல் செய்தவர் இவர்.
உயிர் மெய்க்குறிலுக்கும், உயிர் மெய் நெடிலுக்கும் ஒற்றைக் கொம்பு,ரெட்டை கொம்பு வடிவங்களை தோற்றுவித்தார் ( நெ, நே )
      ஒரு வாக்கியம் முடிந்ததும் முற்றுப்புள்ளி (ful  stop ) வைக்கும் முறையையும், இரு சொற்களுக்கு இடையே இடைவெளி உண்டாக்கும் முறையையும் இவரே கொண்டு வந்தார். 
தமிழ் நாட்டிற்கு வந்து தமிழ் படித்து, " தொன்னூல் விளக்கம்" மற்றும் " கொடுந்தமிழ் இலக்கணம் " போன்ற இலக்கண நூல்களை எழுதியிருக்கிறார். இது பின்னாளில், கால்டுவெல் அவர்கள் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூல் எழுத உதவிகரமாக இருந்ததாக சொல்கிறார்கள்.

தமிழை தாய்மொழியாக கொண்டிராத ஒருவர் தமிழில் காப்பியம் எழுதுவது எளிதல்ல.மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3615 விருத்தம்|விருத்தப் பாக்களால் ஆனது இவரது தேம்பாவணிக்  காவியம். 
தமிழில் வந்த முதல் நகைச்சுவை இலக்கியம் இவரது பரமார்த்த குருகதை...பிரெஞ்சில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது இது.
              இங்குள்ள இந்து மத துறவிகள் காவி உடை அணிவதை பார்த்து, இவரும் காவி உடையணிந்து கொண்டு, கையில் ருத்திராட்சை மாலை, காதில் கடுக்கன் அணிந்து கொண்டு, சைவ உணவை சாப்பிட்டுக்கொண்டு வாழ்ந்தார். அப்படி இருந்தால் தான், தங்களையும் சமயத்துறவிகள் என்று இங்குள்ள மக்கள் நினைப்பார்கள் என்று நினைத்து இருக்கலாம். தமிழில் உரைநடைக்கு வித்திட்டவர் இவர் என்றே சொல்லலாம். 
சங்கரன்கோவில் பக்கம் உள்ள குருக்கள்பட்டியில் இவர் இருந்தபோது, தங்கக்காசு புதையல் இவரிடம் இருந்ததாக, நாயக்கர் படையால் தவறாக கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டதாக ஒரு தகவல் உண்டு. தஞ்சை மன்னர் சந்தாசாஹிப் புடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார்.
வண்டுகள் தொடாத ஒரே பூ செண்பகப்பூ . இது குற்றால மலைப்பகுதியில் உள்ளது என்ற செய்தியை சொன்னவர் வீரமாமுனிவர்.
இவர் கேரளாவில் உள்ள அம்பலக்காட்டில் இருக்கும்போது இறந்தார். தமிழுக்கு தொண்டு செய்த இந்த மாமனிதர் அங்கே போய் இறந்து விட்டாரே என்பது வருத்தம் தான்.
வீரமாமுனிவருக்கு இந்த ஒரே ஒரு போட்டோ மட்டுமே இருக்கிறது.


இன்று வீரமாமுனிவரின் 337 ஆவது பிறந்த நாள்...!வர் -(1680 -1747

No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...