Wednesday, November 23, 2016

கச்சதீவு



கச்சதீவு
..................
கச்சதீவு இரண்டு கட்டமாக இந்திய அரசு இலங்கைக்கு தாரைவார்த்துக்   கொடுத்தது. முதல் கட்டம் இந்திரா காந்தி - சிறிமா காலத்தில்  யூன் 1974 இல் கைச்சாத்தானது. 
1956 இல் இந்திய அரசு, தன் கடல் ஆதிக்க எல்லைக் கோட்டை, 3 கடல் மைல்களிலிருந்து (ஒரு கடல் மைல் என்பது, 1.15 மைல் அல்லது 1.863 கிமீ) 6 கடல் மைல்களாக விரிவுபடுத்தியது. இதே போன்ற போட்டி அறிவிப்பை இலங்கை அரசும் வெளியிட்டது. இதனால் இருநாடுகளுக்கும் இடையிலான சிக்கல் வலுவடைந்தது.    1973 இல், அன்றைய பிரதமர் இந்திரா இலங்கை சென்றார். பின், இரு நாடு அதிகாரிகளும் கூடிப் பேசினர். 1974 இல்,  இலங்கைப் பிரதமர், சிரிமாவோ பண்டாரநாயகா இந்தியா வந்தார். அண்டை நாடுகளுடன் சமாதான சகவாழ்வு என்ற இந்தியாவின் கொள்கை  இராமநாதபுரத்தை ஆண்ட மன்னர் சேதுபதிக்குச் சொந்தமான கச்சதீவு கைமாறக் காரணமாக இருந்தது.  1947 ஆம் ஆண்டு ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டம் கொண்டு வரும் வரையில் கச்சதீவு சேதுபதி மன்னர்களின் ஆட்சியில் இருந்தது.
இலங்கை - இந்தியாவுக்கு இடையில் 1974ஆம் ஆண்டு யூன் மாதம் 26ஆந் திகதி செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் பாரம்பரிய நீர்ப்பரப்;பு பகுதிகளில் ஒன்றான ஆதாம் பாலத்திலிருந்து பாக்கு நீரிணை வரையிலுமான பகுதிக்கு கடல் எல்லை நிர்ணயிக்கப்பட்டது. அகலாங்கு நெட்டாங்கு அடிப்படையில் வகுக்கப்பட்ட கடல் எல்லைக்கோடானது நீண்டகாலமாக இவ்விரு நாடுகளுக்குமிடையில் கச்சதீவு தொடர்பாக இருந்து வந்த தகராற்றிற்கு ஒரு முற்றுப் புள்ளிவைக்க உதவியது. இதனால் இவ்வுடன்படிக்கை முக்கியம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகின்றது. இவ்வுடன்படிக்கையில் உள்ள 5வது, 6வது சரத்துகள் கச்சதீவு இலங்கைக்குரியதாக இருந்தபோதிலும் இந்தியமீனவர்கள் பாரம்பரியமாக அனுபவித்து வந்த உரிமைகளை அனுபவிக்க வழிசெய்கின்றது. அச்சரத்துகள் பின்வருமாறு. (பின்னிணைப்பு - (ஐஐ) )

சரத்து - 5

“மேற்குறிப்பிட்டவற்றுக்குட்பட்டு இந்தியமீனவர்களும் யாத்திரிகர்களும் இதுவரை அனுபவித்தது போல #கச்சதீவுக்குச் செல்லும் உரிமையைப் பெறுவர். தொடர்ந்தும் அவ்வுரிமையை அனுபவிப்பர். இந்த நோக்கங்களுக்காக பிரயாண ஆவணங்களோ விசாக்களோ இலங்கையிலிருந்து பெறவேண்டுமென தேவைப்படுத்தமுடியாது. இதற்கு அவசியமும் இல்லை. இலங்கை இதற்கு நிபந்தனை விதிக்கவும் முடியாது”

சரத்து - 6

“இலங்கையினதும் இந்தியாவினதும் படகுகள் மற்றவரின் நீர்ப்பரப்பினதும் ஒவ்வொருவரினதும் நீர்ப்பரப்பினுள்ளும் பாரம் பரியமாக அனுபவித்து வந்த உரிமைகளைத் தொடர்ந்தும் அனுபவிப்பர்”

1974ம் ஆண்டு உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டபோது கச்சதீவானது இலங்கையின் எல்லைப்பகுதியினுள் வந்தமையினால் இலங்கைத்தரப்பில் மகிழ்ச்சியையும் வரவேற்பையும்பெற்றது. அதேவேளை தமிழ்நாட்டிலும், அகில இந்திய ரீதியிலும் கண்டனங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடாத்தப்பட்டன. இவ் ஒப்பந்தம் குறித்து பின்வருமாறு கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன
அதாவது இந்த உடன்படிக்கையின் 5 ஆவது விதி  இந்திய தமிழக மீனவர்கள் கச்சதீவை ஒட்டி மீன் பிடித்துக் கொள்ளலாம், மீன் பிடிக்கும் வலைகளை கச்சதீவில் உலர வைக்கலாம், அங்கு ஒய்வு எடுத்துக்கொள்ளலாம்,  கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழாவில் கலந்து கொள்ளலாம் எனும் சலுகைகள்  இந்திய மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று எழுதப்பட்டிருந்தது. (Article 5 of the Agreement says 'subject to foregoing, Indian fishermen and pilgrims  would be allowed access to Kachatheevu Island for rest, for drying of nets and to offer prayers in the local St. Anthony's Church  as hitherto and will not be required by Sri Lanka to obtain travel documents for these purposes.) 
1976 ஆம் ஆண்டு  மீண்டும் ஒரு உடன்பாடு  இந்திய - இலங்கை நாடுகளுக்கு இடையில் எழுதப்பட்டது. 
இரண்டாவது  கட்டத்தில் முதல் உடன்பாட்டில்  தமிழ்நாட்டுத் தமிழர்களின் நலன்களுக்கு பாதுகாப்பாக இருந்த பின்வரும் சரத்துக்கள் நீக்கப்பட்டன. 
*** இந்திய மீனவர்கள் கச்சதீவுக் கடலில் மீன் பிடிப்பதற்கும், அதன் நிலப் பகுதியில் தங்கி வலைகளை உலர விடுவதற்கும் அனுமதி அளிப்பதென்றும், 
*** வருடாவருடம் நடைபெறும் கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்சவத்தில் இருநாட்டு மக்களும் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை இருநாட்டு அரசுகளும் செய்து கொடுப்பதென்றும் இந்த ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டிருந்தது.
ஆனால், இந்திய வரைபடத்தில் இருந்து கச்சதீவை நீக்கி இராமநாதபுரம் கலெக்டர் உத்தரவு பிறப்பித்தது 1983-ம் ஆண்டு (மாவட்ட ஆட்சியரின் உத்தரவு எண்: RCF 23-75/83). அப்போது ஆட்சியில் இருந்தவர் எம்.ஜி.ஆர். 
இலங்கை அதிபருடன் பிரதமர் இந்திராகாந்தி செய்து கொண்ட ஒப்பந்தம் ஒருபக்கம் இருந்தாலும், அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற வரைபடத்தையே மாற்றி அமைக்கப்பட்டது எம்.ஜிஆர் ஆட்சி காலத்தில்தான். 

ஐ.நா சபையால் பல்வேறு தேவைகள் நிமித்தம் உலக கடற் பரப்புக்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளன.

1. உள்நாட்டு நீர்ப்பரப்பு
2. அரச எல்லைக்குட்பட்ட நீர்ப்பரப்பு (0 - 12 மைல்)
3. ஒட்டியுள்ள மண்டலம் (0 - 24 மைல்)
4. திறந்த வெளிக் கடல்
5. கரையோர அரசின் கண்டத்திட்டு (200அ ஆழம்வரை)
6. கண்டத்திட்டிற்கு அப்பாலுள்ள கடலடிப் பகுதி
7. தனிப்பட்ட பொருளாதார மண்டலம் (200 மைல்)

இலங்கையைப் பொறுத்தவரையில் இதன் அமைப்பு, அதன் அமைவிடம் காரணமாக சூழவர சர்வதேச கடல் எல்லைகளுக்கு அமைவாகத் தமது எல்லைகளைக் கொண்டிருந்த போதிலும் வடக்கு, வடமேற்குப் பகுதிகளில் இந்தியாவுக்கு இடைப்பட்ட கடற்பரப்பில் எல்லைகள் வேறுபட்ட இயல்பு கொண்டனவாக காணப்படுகின்றன காரணம் இலங்கை - இந்தியாவுக்கு இடைப்பட்ட கடற்பரப்பு குறுகியதாக காணப்படுவதினாலாகும். ஆரம்பத்தில் ஆள்புல எல்லை 3 மைல்களாகவும் பின்னர் 6 மைல்களாகவும் இருந்தபோது இலங்கை - இந்திய கடலோர எல்லைகளில் சிக்கல்கள் எழவில்லை. ஆள்புல எல்லையை 12 மைல்களாக விஸ்தரித்தபோது குறுகிய பாக்கு நீரிணைப் பகுதியின் இடைவெளி 24 மைல்களுக்கு குறைவாக இருந்தமையினால் இவ் எல்லைக் கோடுகள் ஒன்றின் மேல் ஒன்று மேற்படியும் நிலை தோன்றியது. (Overlap) இதன் காரணமாக அகலாங்கு நெட்டாங்கு அடிப்படையில் இலங்கை - இந்திய கடலோர எல்லைகள் வகுக்கப்பட்டன. 
1974 இல்  ஆதாம்பாலத்திலிருந்து பாக்கு நீரிணை வரையும், 1976 இல் மன்னார் விரிகுடாக் கடற்பரப்பிலும், வங்காள விரிகுடா கடற்பரப்பிலும் எல்லைகள் வரைவதற்கான இரு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன.
ஆனால் 1976 ஆம் ஆண்டு  1974 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட உடன்படிக்கையின் கீழ் தமிழக மீனவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த சலுகைகள்  பறிக்கப்பட்டன.  
இந்திய அரசு  கச்சதீவுப் பகுதிக்கு தமிழக மீனவர்கள் செல்லக்கூடாது, மீன்பிடிக்கவும் கூடாது, கச்சதீவு அந்தோனியார் திருவிழாவிற்கு யாத்திரியர்கள் போகக் கூடாது என  அறிவித்தது. அப்போது தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. 
அப்போது எம்ஜிஆர் முதலமைச்சராக ( 30-06-77 - 17-02-80) இருந்தார். 
கச்சதீவை தாரை வார்த்துக் கொடுத்தது குறித்து அப்போது கருத்து தெரிவித்த இராமநாதபுரம் மன்னர் இராமநாத சேதுபதி, மத்திய அரசின் இந்த முடிவு துக்ககரமானது, கண்ணீர் விட்டு அழுவதை தவிர வேறு வழியில்லை என்றார். 
1976 ஆம் ஆண்டு எழுதப்பட்ட உடன்படிக்கையைத் தொடர்ந்து 1983  இல் தமிழ்நாடு கடல்வள மீனவர் சட்டம் கொண்டுவரப்பட்டபோது கச்சதீவு எல்லை மாற்றி அமைக்கப்பட்டது.  இப்போதைய சிக்கலுக்கு  இந்தச் சட்டம் இன்னொரு காரணம் ஆகும்.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...