Thursday, November 10, 2016

கூட்டுறவு அமைப்புகள்

இன்றைய தமிழ் தி இந்துவில் (09:11:2016)
தமிழ்நாடு கூட்டுறவு அமைப்புகள் குறித்து என்னுடைய பேட்டி வெளியாகியுள்ளது.அதில் முன்னாள் தமிழக முதல்வர் பி.எஸ் குமாரசாமி ராஜா என்று குறிப்பிட்டிருக்க வேண்டும் . நான் குறிப்பிடத்தை,அதை தவறுதலாக அச்சிடப்பட்டுள்து. திருத்திக்கொள்ள வேண்டுகிறேன்
----------------
உள்ளாட்சி 35: நாட்டின் முதல் கூட்டுறவு உதயமான திருவள்ளூர், திரூர் கிராமம்!
Updated: November 9, 2016 14:35 IST | டி.எல்.சஞ்சீவிகுமார்
   

கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
நினைவுகளைப் பகிர்கிறார் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

பஞ்சாயத்து ராஜ்ஜியத்துக்காக நேரு வலியுறுத்திய மூன்று அம்சங்களில் ஒன்று கூட்டுறவு அமைப்புகள். இன்று உலகம் முழு வதும் கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக இயங்குகின்றன. ஆனால், தமிழகத்திலோ அவை தள்ளாடு கின்றன. ஊழல் புரையோடியிருக் கிறது. அவை அரசிடம் கையேந்து கின்றன. ஆனால், தமிழகத்தை ஒருகாலத்தில் தாங்கிப் பிடித்தது கூட்டுறவு அமைப்புகள்தான். நாட்டின் முதல் கூட்டுறவு அமைப்பு ஆரம் பிக்கப்பட்டதும் இங்கேதான். கூட்டுறவு அமைப்புகளுடன் நெருங்கிப் பழகி யவர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். அவருடைய கூட்டுறவு அனுபவங்கள் அலாதியானவை.

 
 
“இந்தியாவின் வளர்ச்சிக்கு கூட்டு றவு அமைப்புகள் முக்கிய பங்காற்றி யிருக்கின்றன. நமது நாட்டில் கூட்டுறவு அமைப்புக்கு நெடிய வரலாறு உண்டு. இன்றைய பாஜக ஆட்சியில் மாவீரன் திப்புசுல்தானை சுதந்திரப் போராட்ட வீரர் இல்லை என்கிறார்கள். அவரது வரலாற்றை மறைக்கிறார்கள், திரிக்கிறார்கள். ஆனால், திப்புசுல்தான் காலத்தில் கூட்டுறவு அமைப்புகள் மூலம் பண்டக சாலைகள் நிறுவப்பட்டன. நியாய விலையில் மக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டன. கூட்டு றவு அமைப்புக்கு மக்களையே உறுப் பினர்களாக்கினார் அவர். மக்களே முன்னின்று அந்த அமைப்புகளை நிர்வகித்தனர். பிற்காலத்தில் பஞ்சாயத்து ராஜ்ஜியங்களைக் கொண்டுவரும்போது நேரு இதைத் தான் வலியுறுத்தினார். அவரது கலப்புப் பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாக கூட்டுறவு அமைப்புகள் திகழ்ந்தன.

கூட்டுறவுத் தந்தை டி.ஏ.ராமலிங்கம்

நாடு சுதந்திரம் அடையும் காலத் துக்கு முன்பே 1904-ல் நாட்டின் முதல் கூட்டுறவுச் சங்கம் தற்போதைய திருவள்ளூர் மாவட்டத்தின் திரூர் என்கிற கிராமத்தில் தொடங்கப் பட்டது. சர்.டி.ராஜகோபாலாச்சாரியார் அந்தச் சங்கத்தின் முதல் பதிவாளராகப் பொறுப்பேற்றார். அதன் பிறகே இங்கிலாந்தில் 1944-ல் ராக்டெல் என்கிற பகுதியில் 29 நெசவாளர்கள் சேர்ந்து 28 பவுண்ட் மூலதனத்தில் கூட்டுறவு நுகர்வோர் அமைப்பை உருவாக்கினர். தமிழகத்தின் கூட்டுறவுத் தந்தை டி.ஏ.ராமலிங்கம் செட்டியார். அவர்தான் இங்கு கூட்டுறவு அமைப்புகள் உருவாகக் காரணமாக இருந்தவர். ‘ஏழைகள் தனியாகத் தங்களின் நலனுக்காக ஒரு காரியத்தைச் செய்ய இயலாது. அவர்கள் கூட்டு முயற்சியாகச் செய் தால்தான் வெற்றிபெற முடியும். எனவே, கூட்டுறவு என்கிற உறவு முறை வேண்டும்’ என்று அவர் வலியுறுத்தினார். இதன் அடிப்படை யில்தான் கூட்டுறவு இயக்கம் பிறந்தது.

நாடு விடுதலை அடைந்த பின்பு விவசாயிகளின் நலனுக்காக கூட்டுறவுச் சங்கங்கள் ஒவ்வொரு கிராமத்திலும் உருவாக்கப்பட்டன. கதர் கிராமத் தொழில், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், மகளிர், பால் உற்பத்தியாளர்கள், கால் நடை வளர்ப்போர், கரும்பு உற்பத்தி யாளர்கள், வீட்டுவசதி தொழி லாளர்கள் என அனைத்துத் தரப்பி னரும் தங்களுடைய நலன், பாதுகாப்பு கருதி தங்களுக்குத் தாங்களே கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கினர். விவசாயத்துக்கு நீண்ட கால, குறுகிய காலக் கடன்கள் வழங்கப்பட்டன. விவசாயிகளுக்கு உற்ற தோழனாக கைகொடுத்தது கூட்டுறவுத் துறை. 1904-ம் ஆண்டு முதல் கூட்டுறவு சட்டம் இயற்றப் பட்டது. பின்னர் அந்தச் சட்டத்தில் 1961, 1963, 1983 ஆகிய காலகட்டங் களில் திருத்தங்கள் செய்யப்பட்டன. தமிழகத்தில் கூட்டுறவு அமைப்புகள் ஒருகாலத்தில் மிக சிறப்பாக செயல்பட்டன. காரணம், அன்றைக்கு வாழ்ந்திருந்த தன்னலமற்ற மனிதர்கள். அவர்களை இங்கே நினைவுகூர்வது வரலாற்றுக் கடமையாக கருதுகிறேன்.

வ.உ.சிதம்பரம் நடத்திய கூட்டுறவு

வ.உ.சிதம்பரனார் தூத்துக்குடியில் தொழிற்சங்கத்தை தொடங்கி அதனை கூட்டுறவு முறையில் நடத்தினார். 1950-களில் நமது முன்னாள் முதல்வர் ராஜபாளையம் பி.எஸ்.குமாரசாமி ராஜா ,ஈரோடு ஏ.கே.சென்னியப்ப கவுண்டர், சென்னிமலை எம்.பி.நாச்சிமுத்து, சென்னை டாக்டர் நடேசன், மதுராந்தகம் வி.கே.ராமசாமி முதலியார், வேலூர் பி.எஸ்.ராஜகோபால நாயுடு, தஞ்சை நாடிமுத்துப் பிள்ளை, வேலூர் பக்தவத்சல நாயுடு, மணலி ராமகிருஷ்ண முதலியார், பொள் ளாச்சி நா.மகாலிங்கம், கோவில்பட்டி எஸ்.அழகிரிசாமி, என்.ஆர்.தியாகராஜன், திருச்சி அருணாச்சலம் உள்ளிட்ட பலர் கூட்டுறவு இயக்கம் சிறப்பாக இயங்க அரும்பாடுபட்டனர். மீனவர் நலனில் அக்கறை கொண்ட சிங்காரவேலர், தொழிலாளர்களின் நலனுக்காகக் போராடிய இடதுசாரி தலைவர்கள் பி.ராமமூர்த்தி, அனந்த நம்பியார், எம்.கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள் வளர பெரும் பணியாற்றினர்.

கூட்டுறவுச் சட்டப்படி சங்கத்தின் தலைவராக ஒருவர் இரண்டு முறை தான் பொறுப்பு வகிக்க முடியும் என்ற நிலை மாற்றப்பட்டது. 1983-ம் ஆண்டு கூட்டுறவுச் சட்டம், கூட்டு றவுச் சங்கம் சுயஅதிகாரத்துடன் செயல்பட வழிவகுத்தது. 1988-ல் திருத்தப்பட்ட இந்தச் சட்டம் செயல் படாத சங்கங்களை மாநில அரசு கலைக்கலாம் என்கிற உரிமையை அளித்தது. பழம் பெருமை பேசுகிறேன் என்று நினைக்க வேண் டாம். இன்றைக்கு ஊழல் அரித்து தின்றுவிட்ட கூட்டுறவு அமைப்பு களைப் பார்க்கும்போது கண்ணீர் வருகிறது. ஆனால், அந்தக் காலத் தில் கூட்டுறவுத் துறையில் பொறுப் பேற்ற நிர்வாகிகள் மிகவும் நேர்மை யுடன், கண்டிப்புடனும் பணியாற்றி னர். கூட்டுறவு நிதி மக்களின் பணம் என்பதில் தெளிவாக இருந்தார் கள். பத்து பைசாவை சொந்த உபயோகத்துக்குத் தொட மாட்டார்கள்.

ஈரோட்டைச் சேர்ந்தவர் எஸ்.கே. சென்னியப்ப கவுண்டர். காந்தியவாதி. இவர் ஒன்றுபட்ட கோவை மாவட்ட கூட்டுறவு வங்கியின் தலைவராக இருந்தார். தினசரி ஈரோட்டில் இருந்து கோவைக்கு வருவார். பயணத்துக்கு சொந்த பணத்தை செலவு செய்தார். அலுவலகத்துக்கு வந்த உடனே உதவியாளரை அழைத்து தனது சொந்தப் பணத்தைக் கொடுப்பார். அன்றைய தினத்துக்கான தனது மற்றும் விருந்தினர்கள், பார்வை யாளர்களுக்கான உணவு, காபி செலவுக்கான பணம் அது. கோவை அங்கண்ணன் கடையில் இருந்து சாப்பாடு வாங்கி வரச் சொல்லி சாப்பி டுவார். கூட்டுறவுத் துறை வாக னங்களில் தன் குடும்பத்தாரை ஏற்ற மாட்டார். இவரைப் போலவே மேடை தளவாய் குமாரசாமி முதலியாரும், தமது உறவினர் ஒருவர் சட்டத்துக்கு புறம்பாக உதவி கேட்டு வந்தபோது அவரை அலுவலகத்தை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டார்.

கட்சிகளால் சிதைந்த கூட்டுறவு

ஆனால், இன்று தமிழகத்தில் கூட்டுறவு அமைப்புகள் கட்சிகளின் தலையீட்டால் சிதைந்துவிட்டன. கூட்டுறவுத் தேர்தல்களில் முறைகேடு அரங்கேறின. தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டன. கூட்டுறவு பொறுப் பில் இருந்தவர்கள் கூட்டுறவு அமைப் பின் கணக்கிலேயே தமக்கும் தமது பரிவாரங்களுக்கும் ஆடம்பரச் செலவுகளுக்காக மக்களின் பணத்தை வாரி இறைத்தனர். கூட்டுறவு அமைப்புகள் ஆரம்பக் காலங்களில் செயல்பட்டது போன்று நிலைமை இன்று இல்லை. சுயநல விரும்பிகளின் பொறுப்புக்கு அவை வந்தன. ‘கூட்டுறவு அமைப்புகளுக்கு முழு சுயாட்சி அளிப்பதற்கான திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வரத் தயாராக உள்ளது’ என்று ஒருமுறை கூட்டுறவு அமைச்சர்கள் மாநாட்டில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித் துள்ளார். அது என்னவானது என்று தெரியவில்லை.

காலச் சக்கரம் சுழல வேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் கூட்டுறவு அமைப்புகளுக்கு தன்னாட்சி உரிமை வழங்க வேண்டும். அவை மக்களின் கைகளில் ஒப்படைக்கப்பட வேண்டும். உள்ளாட்சி அமைப்புக்கும் கூட்டுறவு அமைப்புக்கும் பெரிய வித்தியாசங்கள் ஒன்றுமில்லை. கூட்டு றவு அமைப்புகளை முற்றிலுமாக புனரமைக்க வேண்டும். காலம் தாழ்த்தாமல் அவற்றுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். இன்னும் சொல்லப்போனால் பஞ்சாயத்து ராஜ்ஜியத்துக்கு சட்டத் திருத்தம் கொண்டு வந்ததைப் போலவே கூட்டுறவு அமைப்புகளுக்கும் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும். அரசியல் தலையீடு இல்லாமல் உறுப் பினர்கள் நேர்மையாக, சுதந்திரமாக செயல்பட வேண்டும்.

தமிழகத்தில் சுமார் 30 ஆயிரம் கூட்டுறவு அமைப்புகள் இருக்கின்றன. அவை திறம்பட செயல்பட்டாலே போதும், தமிழகத்தின் தலையெழுத்து மாறிவிடும். பொருளாதாரமும், ஜன நாயகமும் தழைக்கும்.

கூட்டுறவு இயக்கம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் அமைப்பு மட்டுமல்ல; கூட்டுறவு அமைப்புகளின் செயல்பாடுகள் ஜனநாயகத்துக்கு பல பாடங்களைப் போதிக்கும் போதி மரம். ‘கூட்டுறவின் வெற்றி சங்கங் களின் எண்ணிக்கையைப் பொறுத்து அமைவதில்லை. உறுப்பினர்களின் நாணயத்தைப் பொறுத்து அமை கிறது' என்றார் காந்தி. அண்ணல் காந்தியடிகளின் வாக்கை காக்க வேண்டியது நமது கடமை அல்லவா!”

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...