Thursday, December 1, 2016

இன்றைய தி இந்து தமிழ் ஏட்டில் 01/12/2016 சேலம் இரும்பாலை குறித்து தமிழகத்தின் மஹாரத்தினம் விற்பனைக்கு என்ற தலைப்பில் என்னுடைய பத்தி வெளிவந்துள்ளது.
..................
பலிகடாவாகும் சேலம் இரும்பாலை!
-வழக்கறிஞர் கே.எஸ் .இராதாகிருஷ்ணன்
.........................................................................................
மத்திய உருக்குத்துறை இணை அமைச்சர் விஜய் தியோ சாய் அவர்கள் 28/11/2016 அன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக  சேலம் உருக்காலையை தனியாருக்கு அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார் .

ஆனால் சில நாட்க்களுக்கு முன்பு மத்திய கனரகத்துறை அமைச்சர் மஹாரத்தினம் அந்தஸ்த்து பெற்ற சேலம் உருக்காலையை தனியாருக்கு வழங்கும் திட்டம் எதுவுமில்லை என்று சென்னையில் அறிவித்துவிட்டு சென்றார்  . அதற்கு முரணாக இந்த ஆலையை தனியாருக்கு வழங்க கமுக்கமாக திட்டமிட்டது வெளியே வந்துவிட்டது .

ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் லாபம் ஈட்டும் சேலம் இரும்பாலையை மத்திய அரசிடம் போராடி பெற்றோம் தமிழகத்தின் உரிமை பறிபோகிறது !
பலிகடாவாகும் சேலம் இரும்பாலை!

மத்திய அரசு தமிழகத்தில் பொதுத்துறை நிறுவனமாக இயங்கி வரும் சேலம் உருக்காலையையை தனியார் வசமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. சர்வதேச சந்தையில் சிறப்பான இடத்தைப் பெற்ற சேலம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் 43 நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கும், பாபா அணுமின் நிலையத்திற்கும், கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கும், ரயில்வே துறைக்கும், இந்திய அரசின் நாணயங்கள் உற்பத்திக்கும் இந்த ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பயன்படுத்தப்படுகிறது. சேலம் உருக்காலையால் மத்திய அரசுக்கு மூவாயிரம் கோடி ரூபாய் அந்நிய செலாவணியும் கிடைக்கிறது. மறைமுக வரிகள் மூலம் 2700 கோடி ரூபாய் வருவாயும் கிட்டுகிறது. 2010ல் 2370 கோடி முதலீட்டில் உருக்கு உற்பத்திக் கூடம் நிறுவப்பட்டு, ஒருங்கிணைந்த உருக்காலையாக மாறியது. இதற்கு மத்திய அரசின் செயில் நிறுவனத்தின் உதவி இல்லாமல் கடனாகப் பெற்று நிறுவியதால் அதற்கு வட்டிச் சுமையும், விற்பனை வீழ்ச்சி என்ற காரணத்தைச் சொல்லி இந்த சேலம் உருக்காலையை விற்க மத்திய அரசு திட்டமிட்டது வேதனையைத் தருகிறது. பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் இந்த ஆலை சேலத்தில் நிறுவப்பட்டது. உலகம் முழுவதுமே தற்போது உருக்குத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. துருப்பிடிக்காத உருக்கினை உற்பத்தி செய்யும் ஒரே துறை சேலம் உருக்காலைதான். 4000 ஏக்கர் பரந்த நிலப் பரப்பில் பல்வேறு கட்டமைப்புகளோடு, ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பணியாற்றும் தமிழகத்தின் முக்கிய தொழிற்சாலையை தனியாருக்கு கொடுப்பதில் தமிழர்கள் அனைவரும் தங்களுடைய கண்டனங்களைத் தெரிவிக்கவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த ஆலையை துவங்கும்பொழுது, சேலம் வட்டாரத்தில் 23 கிராமங்களைச் சேர்ந்த 3002 குடும்பங்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது.  பண்டித நேரு காலத்தில் 298 பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினார்.  காலப்போக்கில் இந்த நிறுவனங்களை மத்திய அரசு ஒன்று ஒன்றாக தனியாருக்கு தாரை வார்க்கின்றது.  இதில் 31 நிறுவனங்கள் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் விற்கப்பட்டது. தற்போது இதில் 17 நிறுவனங்களை மூடவும், 76 நிறுவனங்களின் பங்குகளை விற்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் சேலம் உருக்காலையும் ஒன்று. மகாரத்னா என்ற விருதுப் பெற்ற 7 இந்திய நிறுவனங்களில், சேலம் உருக்காலை வருடம் முழுவதும் இயங்கி வருகின்றது. ஆசியாவிலேயே குறுகிய காலத்தில் பொருட்களை உற்பத்தி செய்த பெருமை இந்த ஆலைக்கு உண்டு. 

இந்த ஆலையை குறித்த வரலாறை சற்று திரும்பிப் பார்த்தால்; சேலத்திலுள்ள கஞ்சமலை வடக்குப் படுகை இரும்புத் தாது சுரங்கத்தை மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலைக்குக் கொடுக்காமல், தனியார் நிறுவனமான ஜிண்டலுக்குத் தமிழக அரசு நியாயங்களைப் புறக்கணித்துவிட்டு உரிமம் வழங்கியுள்ளது. கடந்த காலங்களில் பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையில் சேலம் இரும்பாலை அமைந்தது. சேலம் இரும்பாலைக்கும், சேதுக் கால்வாய்க்கும், தூத்துக்குடி துறைமுகத்துக்கும் பேரறிஞர் அண்ணா எழுச்சி நாள் என்று அறிவித்தார். அன்று தமிழகம் முழுவதும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த சேலம் இரும்பாலை எப்படி தமிழகத்துக்கு வந்தது என்பது தமிழகத்தின் சரித்திரத்தில் இடம்பெற்ற முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று.

பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது இதுகுறித்த முயற்சிகளை மேற்கொண்டார். ‘காமராஜ் பிளான்’ என்று முதல்வர் பொறுப்பிலிருந்து விலகிய அவர், அகில இந்திய காங்கியஸ் கமிட்டியின் தலைவரானார். அன்றைய பிரதமரான லால்பகதூர் சாஸ்திரியின் அமைச்சரவையில் நீலம் சஞ்சீவ ரெட்டி மத்திய அரசில் உருக்குத் தொழில் அமைச்சராக இருந்தார். தன்னுடைய மாநிலமான ஆந்திரத்திலுள்ள விசாகப்பட்டினத்தில் இந்த இரும்பாலையை அமைக்க விடாப்பிடியாக முயன்றார் அவர்.

காமராஜ், அன்றைய கம்யூனிஸ்ட் தலைவர் பி.இராமமூர்த்தியிடம் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு பிரதமர் சாஸ்திரியை சந்தித்து சேலத்துக்கு இரும்பாலை வேண்டும் என்று வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டார். சாஸ்திரியைச் சந்தித்து இதுகுறித்து தமிழக அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறையிட்டனர். அதன்பின்பு காமராஜ் அவசியம் இரும்பாலை சேலத்துக்கு வேண்டும் என்று சாஸ்திரியிடம் கேட்டுக்கொண்டார். 
இந்திராகாந்தி அவர்கள் கூட்டிய திட்டக்குழு கூட்டத்தில் அப்போது தமிழக முதல்வராக இருந்த கலைஞர் அவர்கள் கலந்து கொண்டார் அக் கூட்டத்தில் சேலம் உருக்காலைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை என்று தெரிந்தபோது கோபத்தோடு மத்திய திட்டக்குழு கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினார் .

இதை கண்ட பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் சேலம் இரும்பாலைக்கு உடனே அனுமதி வழங்கினார்அதன் காரணமாகத்தான் சேலத்தில் இந்த இரும்பாலை அமைந்தது.

இன்று ஜிண்டலுக்கு கஞ்சமலையை வழங்கிய முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி 1970 செப்டம்பர் 16 அன்று சேலம் இரும்பு உருக்காலைக்கு அடிக்கல் நாட்டினார்.சேலம் இரும்பாலையின் ரிஷிமூலம், நதிமூலம் என்று ஆராய்ந்தால் பல செய்திகள் உள்ளன.

கிழக்கிந்திய கம்பெனியின் குடிமைப் பணியில் இருந்த ஜோஷியா மார்ஷெல் கீத் என்பவர்தான் சேலம் கஞ்சமலை பகுதிகளில் இரும்பு இருப்பதை முதலில் கண்டிறிந்தவர். அதன்பிறகு அவர் சேலம் அருகிலுள்ள பூலாம்பட்டியில் 1847இல் இரும்பு தயாரிக்கும் ஆலை ஒன்றை நிறுவி, நிதி நெருக்கடியின் காரணமாக 1858இல் அந்த ஆலையை மூடிவிட்டார். கீத்தால் தயாரித்து இங்கிருந்து அனுப்பப்பட்ட இரும்பால்தான் இங்கிலாந்தில் பிரிட்டானியா டியூப்ளார் பாலமே கட்டப்பட்டது என்ற செய்தி இப்போதைய தலைமுறையினருக்கு வியப்பாக இருக்கும். சேலம் உருக்காலை உலக அளவில் புகழ் பெற்றது. மலேசியாவின் ரெட்டை கோபுரம், மெல்பேர்ன் மைதானம் போன்றவை சேலம் இரும்பைக் கொண்டுதான் அமைக்கப்பட்டுள்ளன.

சேலத்தைச் சேர்ந்த அருணாசல ஆசாரி தயாரித்த உருக்கு வாள் லண்டன் தொல்பொருள் காட்சியகத்தில் அவரது பெயரோடு சேலம், தமிழ்நாடு என்று எழுதப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 1893இல் தாமஸ் ஷொலாண்டு, 1917-18இல் டாக்டர் வி.எஸ்.துவே, 1944இல் எம்.கே.என். அய்யங்கார் ஆகியோர் கஞ்சமலை இரும்புத் தாதுவை ஆய்வு செய்து அரசிடம் அறிக்கைகள் வழங்கினர். ஆனால், உருக்கு உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி அப்போது கிடைப்பதற்கு பெரும் பிரச்சினையாக இருந்தது என்பதால், உருக்காலை முயற்சி அடுத்த கட்டத்தை எட்டவில்லை.

ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அன்றைய தி.மு.க. உறுப்பினர் ஈ.வெ.கி.சம்பத் ஆகியோர் அங்கே இரும்பாலை எப்படி உள்ளது என்று கவனித்து அதுபோன்ற உருக்காலையை நெய்வேலி நிலக்கரிக் கொண்டு சேலத்தில் அமைக்க நாடாளுமன்றத்தில் கோரிக்கை எழுப்பினர். அதன்பின் மேற்கு ஜெர்மனி நிபுணர்கள் கஞ்சமலை வந்து சேலத்தில் உருக்காலை அமைக்க முடியுமா என ஆய்வு செய்தனர்.

1960க்குப் பின் தமிழக அரசால் இந்த உருக்காலைக்கு 24,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. மேலும் இதுகுறித்து ஜப்பான் நாட்டோடும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு 2.5 லட்சம் டன் இரும்பு உற்பத்தி செய்யலாம் என்று 1966இல் தமிழக அரசு ஓர் அறிக்கையைத் தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பியலு. 1970இல் சேலம், விசாகப்பட்டினம் விஜயநகரில் உருக்காலைகள் அமைக்க, மத்திய அரசு முறைப்படி அறிவிப்பு செய்தது. 1973இல் சேலம் உருக்காலை இந்திய உருக்காலை ஆணையத்தின் சார்பு நிறுவனமாக அறிவிக்கப்பட்டு முதல் கட்டமாக ரூ.136 கோடி மூதலீட்டில் 32 ஆயிரம் டன் திறன்கொண்ட ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் (குtச்டிணடூஞுண்ண் குtஞுஞுடூ) உற்பத்தி செய்யும் குழு உருட்டாலை திட்டத்துக்கு மத்திய அரசு 1977இல் ஒப்புதல் அளித்தது.

தற்பொழுது சேலம் இரும்பாலை விரிவுபடுத்த ரூ.1,553 கோடி ஒதுக்கீடு செய்து பிரதமர் சமீபத்தில் வந்து கோலாகலமாக விழா நடந்தேறியது. உலகின் சராசரி தனிநபர் உருக்கு நுகர்வு ஆண்டுக்கு 170 கிலோ ஆகும். நம் நாட்டில் மட்டுமே 35 கிலோ வரை கணக்கு உள்ளது. இந்தியாவின் உற்பத்தி மொத்தம் 3.8 லட்சம் டன் ஆகும். உலக உற்பத்தியில் நாம் 3.4 சதமாக இருக்கிறோம். இத்துறையில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் ஒரிசாவில் போஸ்கோ என்ற தென்கொரிய உருக்கு உற்பத்தி ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நம் நாட்டின் தரமான உயர்தர இரும்பை வெட்டியெடுத்து தென் கொரியாவுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து நமக்கு தரமற்ற தாதுவை இறக்குமதி செய்கின்ற அவல நிலைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்கிற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

சேலம் உருக்கு ஆலைக்குப் பிரிட்டிஷ் அரசின் பாதுகாப்புச் சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. இந்த உருக்காலை தயாரிக்கும் தகடுகலை உலகின் 37 நாடுகள் வாங்குகின்றன. சேலம் உருக்காலை ரூ.800 கோடி அன்னிய செலாவணியும், எக்சைஸ் வரி, இறக்குமதி வரி என்ற வகையில் ரூ.1,200 கோடியும் இதுவரை ஈட்டித் தந்துள்ளது. நீண்டகால கோரிக்கையான வெப்ப உருட்டாலை 1995இல் அமைக்கப்பட்டு மாதம் ஒன்றுக்கு 15 ஆயிரம் டன்கள் முதல் 25 ஆயிரம் டன்கள் வரை இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் உற்பத்தி செய்து உலக சாதனை படைத்துள்ளனர்.

அதிகரித்து வரும் எவர்சில்வரின் தேவையைச் சமாரிளக்க சேலம் இரும்பாலை முக்கிய பங்காற்றி வருகிறது. இகு உற்பத்தியாகும் இரும்பு தகடுகள் ஜப்பான், அமெரிக்கா, ஹாங்காங், சிங்கப்பூர், ஸ்பெயின், போர்ச்சுக்கல், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இந்த எவர்சில்வர் தகடுகள் உற்பத்தியில் பன்னாட்டு அளவில் 12 பெரிய உற்பத்தியாளர்களில் சேலம் ஆலையும் ஒன்றாகும். சென்சிமிர் தாதுவின் மூலம் உருக்கு எவர்சில்வர் தகடுகளை உற்பத்தி செய்ய என்ன காரணத்தாலோ மத்திய அரசு அக்கறை காட்டாமல் இருக்கிறது.

இந்த ஆலை அமைய 60களில் ஏற்பட்ட பல சிரமங்கள் போன்று ஆலை அமைந்த பின்பும் பல சோதனைகளைச் சந்தித்தது. சந்தித்து வருகிறது. நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்கள் மதிப்புள்ள பல்வேறு கட்டமைப்புகள் கொண்ட இந்த ஆலையின் தற்போதைய மதிப்பு ஏறத்தாழ ரூ.4,000 கோடி. 1997 முதலே தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டங்கள் தீட்டியது. பொது மக்களும் தொழிற்சங்கங்களும் போராடின. உலக வங்கியின் மெக்கன்ஸி குழுவின் பரிந்துரையின்படி துர்காபூர், சேலம், பத்ராவதி, வங்கத்திலுள்ள இஸ்கோ போன்ற ஆலைகளைத் தனியாருக்கு விற்றுவிட பரிந்துரை செய்ததும் மத்திய அரசு ஆமாம் சாமி போட்டதும் கடந்த கால கசப்பான வரலாறுகள்.

இந்த ஆலையை விலைக்கு வாங்க டாடா – யூசினர் நிறுவனத்தினர் முயற்சி செய்தனர். இங்குள்ள மெக்னசைட் ஆலையையும் சரியாகக் கவனிக்காமல் 5,000 தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. சேலம் இரும்பாலைக்கு ரூ.18 கோடி செலவில் நாணயங்கள் தயாரிப்பதற்கான இயந்திரங்கள் நிறுவப்பட்ட பிறகும், மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய இடங்களில் அரசு நாணயங்கள் தயாரிக்க மிண்ட்களுக்கு 40 டன் எவர்சில்வர் தகடுகளை சேலம் ஆலை நிர்வாகம் அனுப்பியுள்ளது. ஆனால் 10 ஆயிரம் டன் இந்த ஆலையிலிருந்தே வழங்க முடியும்போது, அன்றைய பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அரசு ரோமிலுள்ள ராயல் மிண்ட் என்ற நிறுவனத்திடமிருந்து எவர்சில்வர் தகடுகளை இறக்குமதி செய்தது. ஆனால் குறிப்பிட்ட வெளிநாட்டு நிறுவனம் சரியான நேரத்தில் விநியோகம் செய்யவில்லை. அதிக விலையும் கொடுக்கப்பட்டது. மத்திய அரசே சேலம் இரும்பாலைக்கு இப்படி ஓர் அநீதியை இழைத்தது. மத்திய அரசிடம் வெப்ப உருட்டாலை, குளிர் உருட்டாலை இரண்டையும் பெறுவதற்கு ஒவ்வொரு முறையும் போராடி, பிறகு காலதாமதத்துடன்தான் சேலம் உருக்காலையில் இவை நிறுவப்பட்டன.

இவ்வளவு போராட்டங்களும், வரலாறுகளும் உள்ள சேலம் இரும்பாலையை மத்திய அரசு மாற்றாந்தாய் போக்கில் தொடர்ந்து நடத்துகிறது என்பது ஒருபுறம் இருக்க, கஞ்சமலை வடக்குப் படுகை சேலம் உருக்காலைக்கு வேண்டும் என்று மத்திய உருக்குத் துறை அமைச்சர் பஸ்வான் கடந்த செப்டம்பர் 5இல் சேலம் உருக்காலை விரிவாக்க விழாவில் கேட்டுக் கொண்ட பின்பும் தமிழக அரசு, ஜிண்டல் நிறுவனத்துக்கு காதும் காதும் வைத்தாற்போல வழங்கியது ஏன் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் புரிந்துணர்வுகள் என்னவென்று தெரியவில்லை. அங்குள்ள தொழிற்சங்கங்கள் இதை எதிர்த்துப் போராடுகின்றன. சேலம் உருக்காலை ஒரு பொதுத் துறை நிறுவனம். அதன் வளர்ச்சிக்குத்தான் கஞ்சமலை வடக்குப் படுகை திட்டமிடப்பட்டது.

1964இல் தயாரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பிய அறிக்கையிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கஞ்சமலையில் 30 சதவீதத்திலிருந்து 45 சதவீதம் வரை இரும்பு செறிவு உள்ளது. அதுமட்டுமல்ல, வடக்குப் படுகையில்தான் இரும்புத் தாது வளம் அதிகம் என்பதும் தமிழக அரசுக்குத் தெரியும். தமிழக அரசு மேச்சேரியில் இயங்கி வரும் ஜிண்டல் சௌத் வெஸ்ட் நிறுவனத்துக்கு கஞ்சமலைப் பகுதியைத் தாரை வார்த்தது கண்டனத்துக்குரியதாகும். ஒரு மில்லியன் டன் இரும்புத் தாதுவை வெட்டியெடுக்க 6.38 ஹெக்டேர் பரப்புள்ள சுரங்க உரிமை ஜிண்டலுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று திருவண்ணாமலையிலும் 35 மில்லியன் டன் இரும்புத் தாது எடுக்க அதே ஜிண்டல் நிறுவனத்துக்கு உரிமம் கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுத் துறை நிறுவனங்கள் வளர வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இதுபோன்ற நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுவதில் என்ன நியாயம் இருக்க முடியும்? இதற்கு தமிழக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது? அண்ணாவும், காமராஜூம், பி.இராமமூர்த்தியும் போராடிப் பெற்ற சேலம் இரும்பாலையின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. ஒரு பொதுத்துறை நிறுவனம் அரசியல்வாதிகளின் குறிப்பாக மாநில ஆட்சியாளர்களின் சுயநலத்துக்காகப் பலிகடா ஆக்கப்படுகிறது. இதைப்பற்றி தமிழக அரசியல் கட்சிகளும் கவலைப்படவில்லை. ஊடகங்களும் பொருட்படுத்துவதில்லை.

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன், திருச்சி பாரத் கனரக மின் நிறுவனம், கல்பாக்கம் அணுமின் உற்பத்தி நிலையம், ஆவடி ஆயுதத் தளவாட உற்பத்தி நிறுவனம் மற்றும் சேலம் இரும்பு உருக்காலை ஆகியவை தமிழகத்தின் பஞ்சரத்தினங்கள். இவைகளைப் பலவீனப்படுத்துவது என்பது தமிழகத்தையே பலவீனப்படுத்துவதுபோல். இதுகூடவா தெரியாது தமிழக ஆட்சியாளர்களுக்கு?

No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...