Monday, December 26, 2016

பாதுகாப்போம் தாமிரபரணியை

உயிர்மை இந்த டிசம்பர் (2016)
இதழில் தாமிரபரணிபற்றி எனது பத்தி
..............................................................
பாதுகாப்போம் தாமிரபரணியை!

வழக்கறிஞர்கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

பொருநையாறு தவழும் அந்த மண்ணைச் சார்ந்தவன் என்ற வகையில் 21.11.2016 அன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெற்கு சீமையின் அடையாளமான தாமிரபரணியில் தண்ணீரை கபளீகரம் செய்யக்கூடாது என்று பெப்சி, கோகோ கோலா ஆலைகளுக்கு இடைக்கால தடை வழங்கியது ஓரளவு நிம்மதியை தந்துள்ளது. எனது நிமிர வைக்கும் நெல்லை 2005ல் நெல்லை இந்துக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் நடந்தபோது நெல்லை பிரமுகர்கள் தி.க.சி., பொன்னீலன், மாலன், தோப்பில் மீரான், தொ. பரமசிவம், கழனியூரான், தீப. நடராஜன், சுப.கோ. நாராயணசாமி போன்றவர்கள் கலந்துகொண்டனர். அச்சமயம்தான் குளிர்பான நிறுவனத்துக்கு பொருநை ஆற்றுத் தண்ணீரை விலைக்கு விற்பது என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதைச் சொல்லி விழாவிலும் மறைந்த தி.க.சி. கண்ணீர் விட்டு அழுதார். அவருடைய கோரிக்கை ஓரளவு நேற்று நிறைவேறியது. என்னை பார்க்கும்போதெல்லாம் இதற்கு எதாவது செய்யவேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். 

தாமிரபரணியின் சுவை நீரை வெறும் ரூ. 3600 க்கு விலைபேசி குளிர்பான நிறுவனங்கள் கபளீகரம் செய்தன. இதற்கு மத்திய மாநில அரசுகளும் துணை போனது. நெல்லையின் உயிரோட்டமான பரணியாற்றை விலை பேசிய பேடிகளை சட்டம் தண்டிக்க வேண்டும். 

தென் தமிழகத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரும் பெப்சி கோலாவாக மாறியது. இதற்காக நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில் ஆலை அமைக்கும் பணியை பெப்சி நிறுவனம் நிறுவியது. 

இந்நிலையில்  கங்கை கொண்டானில் பெப்சி ஆலை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியது. 

கங்கை கொண்டானில் சிப்காட் வளாகத்தில்,  36 ஏக்கர் பரப்பளவில் பெப்சி ஆலை அமைந்த நிலத்தின் அரசு மதிப்பு ரூ. 5.40 கோடி ஆகும். சந்தை மதிப்புப்படி பார்த்தால், 15 கோடிக்கும் மேல். ஆனால் இந்த நிலத்துக்கு ஆண்டுக்கு 36 ரூபாய் மட்டும்தான் பெப்சி நிறுவனம் குத்தகையாக  அரசுக்கு செலுத்தும். அப்படியென்றால்  இவ்வளவு மதிப்புள்ள நிலத்துக்கு 99 ஆண்டுகளுக்கு  வெறும் 3,600 ரூபாய்க்கும் குறைவாகத்தான்,  குத்தகையாக பெப்சி நிறுவனம் அரசுக்கு செலுத்தியது. எவ்வளவு குறைவான சந்தை மதிப்பில் இந்த நிறுவனத்துக்கு கொள்ளையடிக்க வழங்கப்பட்டது.

அது மட்டுமல்ல, தாமிரபரணி நதியில் இருந்து தினமும் 15 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கவும், தமிழக அரசுடன் பெப்சி நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டது. ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு 37 ரூபாயை அரசுக்கு பெப்சி நிறுவனம் வழங்கும்.  அப்படி தினமும் 15 லட்சம் லிட்டர் தண்ணீரை எடுத்து அதனை சுத்திகரிக்கப்பட்ட குடிநீராகவோ, கோலாவாகவோ மாற்றி  பெப்சி நிறுவனம் எத்தனை ரூபாய்க்கு நுகர்வோர்க்கு விற்கும்  என்று யோசித்து பார்த்தால் தலை சுற்றுகிறது.

தாமிரபரணியில் இருந்து பல லட்சம் லிட்டர் ஊற்றுநீர் உறியப்பட்டால், நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில்,விளை நிலங்கள் பாதிக்கப்படும் நிலை. இதனால் கங்கை கொண்டானில் பெப்சி நிறுவனம் அமைய எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் போராடி வருகின்றன. இந்த போராட்டத்தையெல்லாம் கண்டு கொள்ளாமல் குளிர்பான நிறுவனங்கள் இயங்கின. 

தமிழத்திலேயே உற்பத்தியாகி தமிழகத்திலேயே கடலில் இணையும் ஒரே நதி தாமிரபரணிதான். பாபாநாசம் மலையில் உற்பத்தியாகி தூத்தூக்குடி மாவட்டம், புன்னக்காயல் என்ற இடத்தில் கடலில் கலக்கிறது தாமிரபரணி. இந்த இரு மாவட்டங்களின் ஒரே நீராதாரமும் கூட.

அத்தகைய பெருமை வாய்ந்த ஜீவ நதியும் பெப்சி கோலாவுக்கு தாரை வார்க்கப்படுவதை தடுக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால தடை வழங்கியது நெல்லை மக்களுக்கு ஒரு ஆறுதலான செய்தி.
பொருநை ஆற்றைப் பாதுகாக்க வேண்டுமென்ற அக்கறையுள்ள லட்சக்கணக்கானவர்களில் அடியேனும் ஒருவன். தாமிரபரணி தமிழ் கூறும் நல்லுலகத்தின் அடையாளம். தமிழ் பிறந்த பொதிகைதான் பரணியின் நதிமூலம். அப்படிப்பட்ட தொன்மையும், நாகரீகத்தின் அடையாளத்தை தொடர்ந்து பாதுகாக்கவேண்டியது அனைவரின் கடமையாகும். கங்கை-காவிரி இணைப்பு என்று சொல்கின்றனர்.  கங்கை – காவேரி - வைகை - தாமிரபரணி இணைத்து, கங்கையின் நீர் குமரியைத் தொட வேண்டும் என்ற கோஷத்தை முன்வைத்தவன்.  உச்சநீதிமன்றம் வரை இந்தக் கோரிக்கையை வைத்து, தீர்ப்பையும் பெற்றவன். நதிநீர் இணைப்பு மட்டுமல்லாமல் தாமிரபரணியின் மீது தெற்குச் சீமைக்காரர்களுக்கு என்றைக்கும் தனிப்பிரியம் உண்டு. 

அதைப் பற்றிய சுருக்கமான வரலாற்று பதிவு;

  “குளிர்நீர்ப் பொருநை
சுழி பலவாய்”  - சடகோபர் அந்தாதி.

ஊற்றெடுத்த மாவட்டத்திலேயே கடலில் கலக்கின்ற ‘தட்சிண கங்கை’என்ற சிறப்பினைப் பெற்ற தாமிரபரணிநதி, பாபநாசத்திலிருந்து புன்னைக்காயல் வரை 130 கி.மீ. நீளம் பாய்ந்து வருவது நெல்லைச் சீமையில்தான்! தென்மேற்கு, வடகிழக்குப் பருவக்காற்று மழைதான் இந்நதியின் நீராதாரமாக அமைந்துள்ளது.

பொருநை நதியில் கல்லிடைக்குறிச்சிக்கு அருகில் உள்ள கன்னடியன் அணைக்கட்டை அடுத்து மணிமுத்தாறு வந்து சேருகிறது. திருப்புடைமருதூரில் வராக நதியும், கடனா நதியும் இதில் கலக்கின்றன. பச்சையாறு முதலிய சிற்றாறுகளும் இதில் சேருகின்றன. இதன் துணை நதிகள் மணிமுத்தாறு, கருணை, வரநதி, சிற்றாறு ஆகும். பொதிகையிலிருந்து புறப்பட்டு ஐந்து தலைகளாகப் பிரிந்து, ஐந்தலைப் பொதிகையாகப் பிரிந்து பாய்ந்து வருகிறது. பொருநையாறு, மலையில் மட்டும் 26 கிலோ மீட்டர் பயணம் செய்யும் ஆறு. 121 கிலோ மீட்டர் என்று மொத்த நீளத்தில் 1,750 ச.கற்கள் பரப்பை வளப்படுத்திப் பாய்கிறது.

பொதியம், தென் பொதியம் என்றெல்லாம் போற்றப்படும் பொதிகை மலையில்தான் தமிழ் பிறந்தது என்பதனை ‘வானார்ந்த பொதியின்மிசை வளர்கின்ற மதியே!’ எனத் தமிழன்னை போற்றப்படுகிறாள். அந்தப் பொதிய மலையில் தோன்றிக் கடலொடு கலக்கும் ‘தண்பொருநை ஆறு பற்றிய நாகரிகமே முதல் நாகரிகம்’ என்கிறார் நுண்கலை அறிஞர் சாத்தான்குளம் அ. இராகவன்.

உலகின் தொன்மையான நாகரிகங்கள் எனப்படும் சிந்துவெளி நாகரிகம், சுமேரிய நாகரிகம், எகிப்து நாகரிகம், பாபிலோனிய நாகரிகம், அசிரிய நாகரிகம், போனிசிய நாகரிகம், சீன நாகரிகம், ஜெர்மன் நாகரிகம், கிரேக்க நாகரிகம், உரோம நாகரிகம் என்றெல்லாம் போற்றப்படும் பதினைந்து நாகரிகங்களுள் சிந்துவெளி நாகரிகம் ஏறத்தாழ கி.மு. 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என ஆராய்ச்சியாளர்கள் கண்டு போற்றினர்.  குமரிக் கண்டத்திலிருந்து முகிழ்த்த முதல் நாகரிகம். அதுவே பொருநை நாகரிகம் ஆகும்.  ஆதிச்சநல்லூர் இரும்புப் பயன்பாடு காலத்தில் தோன்றிய தென்னாட்டு நாகரிகம் என்கிறார் உ.வில்லியம் மெய்யர்.

‘தென்பாண்டி நாட்டின் செல்வி’, ‘பொதிகையின் குழந்தை’, ‘பொன் நிறத்துப் புனல் பெருகும் பொருநை’, ‘பாணதீர்த்தம்’ என்று பலவாறாக அழைக்கப்படும் தாமிரபரணி, சொரிமுத்து அய்யனார், முத்துப்பட்டன் கோயில்களைக் கடந்து வருகின்றது.

இன்றைக்கு இந்த மாவட்டத்தில் முத்துப்பட்டன் வீரசுவர்க்கம் அடைந்தது நாடோடிப் பாடல்களாகப் பாடப்பெறுகின்றது. அமரகவி பாரதியாரின் துணைவியார் செல்லம்மா பாரதி பாணதீர்த்தம் வந்தபோது சொரிமுத்துப் பட்டனின் மீது பாடப்பட்ட நாடோடிப் பாடல்களை மிகவும் ரசித்ததாகக் கூறப்படுகிறது.
பாபநாசத்தின் பாணதீர்த்தம் எனும் பகுதிதான் விடுதலை வேராகத் திகழ்ந்த வ.வே.சு. அய்யரின் உயிரைப் பறித்தது.

பாரதியின் வர்ணனைகள்
______________________

வரகவி பாரதி பொருநை பற்றிக் கீழ்க்குறிப்பிட்டவாறு வர்ணிக்கிறார்.
“எத்தனை வருஷங்களாக, எத்தனை யுகங்களாக இந்தக் குன்றங்களின் மீதும் சங்கீதக்காரியாகிய தாமிரபரணியின் மீதும் இங்ஙனம் அற்புதமான ஸுர்யோதயம் நிகழ்ச்சி பெற்று வருகிறதோ! எத்தனை யுகங்களாக இந்தத் தாமிரபரணி இங்கே இடைவிடாமல், ஓயாமல், தீராமல், ஒரே ரசமான பாட்டு பாடிக் கொண்டிருக்கிறாளோ!
தண்ணீரில் காலை வைத்தால் காலைச் சுற்றி மீன்கள்! பாபநாசத்து மீன்கள் அழகுக்கும், தைரியத்துக்கும் கீர்த்தி பெற்றவை.

அவை மனிதருக்கு அஞ்சுவதில்லை. அவற்றை இங்கு மீன் வலைஞனேனும் பிறரேனும் பிடிக்கக் கூடாதென்ற சம்பிரதாயமொன்று இருந்து வருகிறது. யாரோ ஓர் ஆங்கிலேயன் இங்கே மீன் பிடித்ததாகவும், அவனுக்கு கண் தெரியாமல் போய்விட்டதாகவும் ஒரு கட்டுக்கதை வழங்கி வருகிறது. இவற்றுள்ளே பெரும்பான்மையானவை பொன்னிறமுடையவை. இலேசான தங்கக் கம்பியினிõல் ஒரு சிறு வளையம் பண்ணி அதனிடையே நீலரத்னம் பதித்தது போல் இவற்றின் கண்கள் மிளிர்கின்றன. சோறு போடத் தொடங்கினால் நீரோட்டத்தை எதிர்த்து இந்த மீன்கள் அணியணியாக வந்து நிற்பதைப் பார்க்கும்போது, எதிரியின் குண்டுகளைக் கருதாமல் அணிவகுத்து நிற்கும் காலாட் படைகளைப் போன்ற தோற்றமுண்டாகின்றது.

பாபநாசத்து ஜலம் மிகவும் இன்பமானது. வாய்க்குத் தேன் போன்ற ருசியுடையது. பல்லாயிரம் கிளைகளாகத் தோன்றி, வரும் வழியிலேயே எண்ணற்ற ஔஷாதிகளைத் தீண்டி வருவதால், இந்த ஜலத்தில் ஸ்நான பானங்கள் செய்வதினின்றும் எல்லாவித நோய்களும் நீங்கிப் போய்விடுமென்று சொல்கிறார்கள்.
நான்கு புறமும் ஜலமேடை, நடுவே ஒரு பாறைத் திட்டின் மீது பளிங்கு போல் வழவழப்பான கல்லைக் கழுவி அதன் மேல் தோசை அல்லது அன்னத்தை வைத்துக் கொண்டு தின்றால் அது வாய்க்கு அமிர்தம் போலிருக்கிறது.”

- சுப்பிரமணிய பாரதியார், பாபநாசம் (1919)

வாலிமீகி இராமாயணத்தில், தாமிரபரணியை மகாநதி என்கிறார். வேதவியாசரும் பொருநையின் புனிதத்தை எடுத்துச் சொல்லியுள்ளார். தாமிரபரணியின் 149 புனித குளியல் கட்டங்கள் இன்றைக்கும் இருக்கின்றன. தாமிரபரணிக் கரையில் உள்ள குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோயில் பாறையில்தான், திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமிகளின் விக்கிரகம் படைக்கப்பட்டது என்று வரலாறுகள் சொல்கின்றன.

எல்லா ஆறுகளும் கடலில் மீன்களையும், தவளைகளையும் கொண்டு சேர்க்கும். ஆனால், பொருநையாறு மணிகளையும், முத்துக்களையும் கொண்டு சேர்க்கிறது. தண்பொருநைக் கரையில் தான் தமிழுக்கு இலக்கணம் படைத்த அகத்தியரின் மாணாக்கர்களான அதங்கோட்டாசான், தொல்காப்பியர், செம்பூட்சேய், காக்கைப் பாடினியார், நத்தத்தனார், பனம்பாரனார், அவிநாயனார், வாய்ப்பியனார், வாமனார், வையாடிகளார் போன்ற தமிழ் ஆசான்கள் வாழ்ந்துள்ளார்கள்.சங்ககாலப் புலவர் மாறோக்கந்து நப்பசலையார் மாறமங்களத்தில் வாழ்ந்திருக்க வேண்டும். மாறமங்கலம் பின்னர் மாறோக்கம் என்றாகியிருக்கலாம். கொற்கையின் பக்கத்திலுள்ள பன்னம்பரையில்தான் பனம்பாரனார் வாழ்ந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

காளிதாசரின் ரகுவம்சத்தில்,
‘தாமிரபரணி மேதயை முக்தாசாரம் மகோததே’
எனப பாடப்பட்டுள்ளது.

‘தண் பொருநைப் புனல் நாடு’
- சேக்கிழர்

‘பொன் திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருந்தி’
- கம்பர்

செம்புச் சத்து கொண்ட பொருநை என்பது, பொரு என்ற வினைப் பகுதியினால் அழைக்கப்பட்டது என வரலாற்று பேராசிரியர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறுகிறார்.

கல்கி ரா. கிருஷ்மூர்த்தி அவர்கள் இந்நதியைப் பற்றி, “திருநெல்வேலி மக்களின் முக்கால்வாசிப் பேரைத் தினம் அதிகாலையில் தாமிபரணி நதியில் குளித்துக் கொண்டிருக்கக் காணலாம். பொழுது விடிந் சூரியன் உதயமாவதே காலையில் தாமிரபரணியில் ஸ்நானம் செய்வதற்குத்தான் என்பது திருநெல்வேலியாரின் அசையா நம்பிக்கை” என்று குறிப்பிட்டுள்ளார்.

“திரைபடு பொருநை நீத்தம் செவிலி போல் வளர்க்கும்’ என்று பரஞ்சோதி முனிவர் கூறியது போல இவ்வாறு நெற்பயிரைச் செழிக்கச் செய்வதோடு இன்று வரை.. .. தமிழ் அறிஞர்களை அளித்து கல்விப் பயிரை வளர்த்து வற்றாத ஜீவநதியாக மக்களின் உயிரையும் உள்ளத்தையும் துளிர்க்கச் செய்து வருகிறது.”
. அ. ராகவன், ‘கோநகர் கொற்கை’ (1971)

‘தாமிரபரணி (அல்லது தாம்ரவரணி) திருநெல்வேலி மாவட்டத்தில் ஓடுகிற நதி. அது ஒரு ஜீவ நதி; இரு பருவ மழையுமே அதன் உற்பத்திக்கு மூலம். கோடை காலத்திலும், அது சிறிதாக, மெதுவாக மணலும் பாறையுமான படுகையில் பாய்கிறது. அதன் தலை, காடு அடர்ந்த பொதிகையடி; அகத்திய மாமுனிவரின் மலை; முத்துக்கள் குவிந்துள்ள கொற்கை வரை அது தன் பாதத்தை நீட்டுகிற. சங்கப் புலவர்கள் பொதிகையையும் கொற்கையையும் பாடியுள்ளனர்.”
- பேரறிஞர் பெ.நா. அப்புசாமி
பத்தமடை ராமசேஷையர் நினைவு மலர் (1977)

தாமிரபரணி ஆறானது தண்பொருநை என்று பெரிய புராணத்தாலும், ‘தண்பொருநல்’, ‘வண்பொருநல்’ என்று திருவாய்மொழியாலும் குறிப்பிடப் பட்டுள்ளது. கம்ப இராமாயணம் ‘பொன் திணிந்த புனல் பெருகும் ஆறு’ என்றும், திருச்செந்தூõ பிள்ளைத் தமிழ் ‘பொய்க்காத வளமை தரும் ஆறு’  என்றும் கூறுகின்றன. ‘தண்பொருத்தம்’ என்று பிங்கல நிகண்டும்,  ‘தண்பொருநை’யென்று நச்சினார்க்கினியமும், ‘பெண் ஆறு’ என்று புலவர் புராணமும் கூறுகின்றன. ‘பொதியமலைப் பெற்றெடுத்த பொற்கொடி’ என்று திருவிளையாடற் புராணம் விளக்குவது சிறப்பிற்குரியதாகும்.

இராமாயணத்தில், ‘ஆற்றல்மிக்க அகத்திய முனிவரது ஆன்மாவின் கருணையால் நீங்கள் முதலைகள் நிறைந்த பெரிய ஆறாம் தாமிரபரணியைக் கடப்பீர்களாக’, 1915-ம் ஆண்டு நிலவரப்படி அப்போதும் கன்னடியன்கால் அணைக்கட்டின் மேற்பகுதியிலே முதலைகள் இருந்ததாக ஆங்கில ஆட்சியாளர்கள்  கூறியுள்ளார்கள்.

தாமிரபரணி ஆறு தனது காதலனுடன் விளையாடும் ஒரு நங்கை போல் தனது தெளிந்த நீரோடும், சின்னஞ்சிறிய அழகிய தீவுகளோடும் கவர்ச்சியூட்டும் சந்தனக் காடுகளினூடே மறைந்து சென்று கடலாடுகிறாள். தாமிரபரணி ஆறு, சிவப்புச் சந்தன மரக் காடுகளின் ஊடே பாய்ந்து ஓடுகிறது என்ற கருத்தும் நிலவுகிறது.
பொருநை ஆற்றின் கரையில் உள்ள செப்பறையைச் சேர்ந்ததுதான் ராஜவல்லிபுரம். தமிழ்கூறும் நல்லுலகிற்கு எத்தனையோ அறிஞர் பெருமக்களை ஈன்ற ஊர்.

வடநாட்டில் திரிவேணி சங்கமத்திற்கு நிகராகத் தென்னாட்டில் முக்கூடலாகும். பொருநையும், குற்றாலத்திலிருந்து வரும் சிற்றாறும், கழுகுமலையின் அருகே உள்ள ஓர் ஊற்றிலிருந்து எழும் ஓடையும் (கோதண்டராம நதி) முக்கூடலில் கலக்கின்றன. முக்கூடலின் தொன்மையை முக்கூடற்பள்ளு கூறுகின்றது. ஸ்ரீவல்லபன் முக்கூடலில் ஒரு பெரிய ஏரியை வெட்டினான். அதை ஸ்ரீ வல்லவப் பேரேரி என அழைத்தனர். நாளடைவில் அது பேரேரி என்று அழைக்கப்பட்டு, சீவலப்பேரியாகச் சிதைந்தது. சீலவப்பேரி துர்க்கை கோயில் சனீஸ்வரன் சன்னதி சிறப்பு வாய்ந்ததாகும்.

செஞ்சிக்கும் கூடலுக்கும்
தஞ்சைக்கும் ஆனைசொல்லும்
செங்கோல் வடமலேந்திரன்
எங்கள் ஊரே.

இந்தத் தனிச் சிறப்புமிக்க தாமிரபரணி ஆற்றைத் தாண்டிய பிறகு, போர்க்கோலத்தில் படைவீடாக இருந்த பணப்படை வீடு, கேமளாபாத் என்ற ஊர் ஒரு வித்தியாசமான ஊராகத் தெரியும். கமாலி என்ற வெள்ளைய கலெக்டர் அமைத்த ஊர். இங்கு இஸ்லாமியப் பெருமக்கள் அதிக அளவில் வாழ்கின்றனர். குரங்காணி பகுதியானது இராமர் தன் வானரச் சேனைகளை அணிவகுத்துக் கொண்ட இடம் என்று ஆன்மிகச் செய்திகள் சொல்கின்றன.

பாண்டி நாட்டின் தலைநகரினில் உள்ள கோட்டைகளிலே பொன்னாலாகிய வாயில்களைக் காணலாம். இங்கே பாண்டிய நாட்டுத் தலைநகர் எனப்படுவது கொற்கையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. புத்த சமயத்தைத் தழுவிய பேரரசராகிய அசோகர் கிர்னர் என்னுமிடத்தில் உள்ள கல்வெட்டில் தான் தமது வெற்றி நினைவுத் துணைத் தாமிரபரணியில் நாட்டியதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

 டாக்டர் கால்டுவெல், தாப்ரோபணி என்பது தாமிரபரணிதான் என்று ஆராய்ச்சி மூலம் விளக்கம் கொடுத்து இருக்கிறார். இயேசு பெருமானின் அவதாரத்திற்கு முன்பு இலங்கை தாப்ரோபணி என்று கிரேக்கர்களால் அழைக்கப்பட்டதாகவும், மேலும் அவர் தமது ஆராய்ச்சியில் கூறுகிறார். கி.மு.302-ல் மெகஸ்தனிஸும் இவ்வாறே கூறியிருக்கிறார். கி.பி.80-ல்  பெரிப்ளூஸின் ஆசிரியரும் இலங்கையின் அந்தக் காலத்துப் பெயர் தாப்ரோபணி என்று இருந்ததாகக் கூறியிருக்கிறார்.

இந்தப் பெயரை ஆங்கிலக் கவிஞர் மில்டனும் குறிப்பிட்டிருக்கிறார். இப்பெயர் தாமிரபரணி ஆற்றிற்கு வந்ததா அல்லது வைகைக்கு  சென்றதா? அல்லது இலங்கையில் இருந்து தாமிரபரணி ஆற்றிற்கு வந்ததா என்பது பற்றி டாக்டர் கால்டுவெல் விவாதித்துவிட்டு, இப்பெயர் இலங்கையில் இருந்து திருநெல்வேலி நாட்டிற்குக் குடியேறிய மக்களால் தாமிரபரணி ஆற்றுக்குச் சூட்டப்பட்டிருக்கலாம் என்ற கருத்துக்கு அவர் உடன்படுகிறார். ஆனா, இக்கருத்து இறுதியானது அல்ல.

 “கோடும் குண்டும் பொருதரங்கக்
குமரித் துறையில் படுமுத்தும்
கொற்கைத் துறையில துரைவாணர்
குளிக்கும் லாபக் குவால்முறுத்தும் ….   ”

#பொருநையாறு
#தாமிரபரணி
#நெல்லை
கே.எஸ் .இராதாகிருஷ்ணன்
25/12/2016
#ksrposting
#ksradhakrishnanposting


No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...