"ராஜீவ் கொலை மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்"-பா. ஏகலைவன்
-------------------------------------
அன்புக்குரிய பத்திரிகையாளர் பா. ஏகலைவன் "ராஜீவ் கொலை மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்" என்ற தலைப்பில் சிறைவாசி நளினியின் நூலை எழுத்தாக்கி தொகுத்துள்ளார். இது அற்புதமான வரலாற்றுப் பதிவாகும். சமகாலத்தில் ராஜீவ் படுகொலை அனைவராலும் கவனிக்கப்பட்டு விவாதிக்கப்பட்ட துயர சம்பவமாகும். ராஜீவ் படுகொலையில் சம்பந்தமில்லாத நளினி 25 ஆண்டுகளாக சிறை கொட்டடியில் பூட்டப்பட்டு சித்திரவதையான கொடுமைகளை ஏகலைவன் தொகுத்துள்ளார். அவருடைய இந்த நூலை ஒரு பத்தியில் விரிவாக சொல்ல முடியாது. தன் கணவர் முருகனும் வேலூர் சிறையில் இருந்தும் தன்னுடைய குழந்தையை லண்டனுக்கு அனுப்பி குடும்ப அமைப்பு என்ற சிதைந்த வகையில் சித்திரவதைகளை அனுபவிக்கும் நளினிக்கு நாம் எப்படி ஆறுதல் சொல்லப் போகிறோம். உண்மைகளை உறுதியாக சொல்லப்பட்டும், நீதிமன்றங்களில் வாதங்கள் வைத்தும் தில்லி குடியரசுத் தலைவர் மாளிகை வரை கோரிக்கைகள் வைத்தும், எதுவும் நளினி விசயத்தில் ஈடேறாமல் போய்விட்டது என்பதுதான் ரணமான விசயம். அவரே சொல்கின்றார், "என்னுடைய மனத்துயரங்களை தோண்டிப் பார்க்கிறேன்" என்று. வேலூர் சிறையில் நளினியின் கணவர் முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் என இந்த வழக்குக்கு சம்பந்தமில்லாதவர்கள் எல்லாம் அடைக்கப்பட்டு எண்ணற்ற வதைகள். இப்படியான நிலையில் அவர்கள் அனுபவித்த துயரங்களை படம்பிடித்து காட்டுகிறார் ஏகலைவன். நளினி சொல்கிறார், "இப்போது 26 ஆண்டுகாலம், நீண்ட நெடிய சிறைவாசத்தை அனுபவித்தபடி நிற்கின்றேன். இதில் பாதி காலம் நாளை என் உடல் தூக்கில் தொங்குமோ என்ற மிரட்சியில் கழிந்தது".
ஒன்றும் அறியாத அமைதியான வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்த நளினிக்கு இப்படியா கொடுமை. இதுதான் நமக்கு சிந்திக்கத் தோன்றுகிறது. ஒரு வீட்டில் தலைமகளாகப் பிறந்த நளினி, ஆரம்பகட்டத்தில் பல பிரச்சினைகளை சந்திக்கிறார். 1964ல் நேரு இறந்த நாளில் பிறந்த நளினியின் குடும்பத்தினர் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற பாரம்பரியமும் உண்டு. முருகனை மானசீகமாக காதலித்து கணவராக ஏற்றுக்கொண்டார். இப்படியான வாழ்க்கை நகர்ந்துகொண்டிருக்கும்போதுதான் வாழ்க்கையில் எந்த காரணமும் இல்லாமல் ராஜீவ் கொலை வழக்கில் வெள்ளந்தியான நளினியை குற்றவாளியாக பதிவு செய்தனர். காவல்துறையினரின் அத்துமீறலும் கொடுமைகளும் வேறு எவரும் எதிர்கொள்ள முடியாத வகையில் தன்னுடைய வேதனைகளையும் வெளிகாட்டாத வகையில் தைரியமான மங்கையாக வேலூர் சிறையில் கழித்துவிட்டார். இந்த தியாகங்களை எல்லாம் வேறு எவரும் செய்யவும் முடியாது. நினைத்து பார்க்கவும் முடியாது. நளினி சொல்கிறார், "சிறை வளாகத்தில் என்னுடைய கணவர் முருகனிடம் கண்களால்தான் நலம் விசாரிக்க முடியும். சாப்பிட்டீர்களா என்று சைகையால்தான் கேட்க முடியும். அப்படி செய்யும்பொழுது, ஒரு காவலர் கவனித்துவிட்டு, என் தலை மேல் தாக்கினார். எனக்கு இடி போல இருந்தது" என்று சொல்லும்போது கண்களே குளமாகின்றன. "எனது மானசீகமான கணவரையே எனக்கு எதிராக திருப்பப்பார்த்தனர் காவல்துறையினர். நாங்கள் நிரபராதிகள் என்று சொல்ல முடியாமல், கட்டுக்கதைகளை சி.பி.ஐ.னர் உருவாக்கினர். மிரட்டல், பசப்பு வார்த்தைகள் என பல வகையில் எங்களை சீரழித்த கொடுமைகளை சொல்லி மாளாது. அது மட்டுமல்ல என்னுடைய அம்மா, தங்கை, தம்பி ஆகியோரை மிரட்டியுள்ளனர். இப்படியாக ஆண்டுகள் போகின்றன. வேலூர் சிறையில் நடந்த உளவியல் தாக்குதல், மன உளைச்சல்கள், நிர்பந்தங்கள், அதனால் ஏற்பட்ட ரணங்கள் என்பது பெரும் சோகம். விசாரணைகள் என்று இழுத்தடிப்பது என்ற சித்திரவதைகளில் மாட்டிக்கொண்டு எங்களுடைய வாழ்க்கையே நிர்மூலமாகிவிட்டது. அதுவும் சி.பி.ஐ. கண்காணிப்பில் இருந்தபோது அனுபவித்த சித்திரவதைகள் ஏராளம். கடைசி இருபது நாட்களில் கண்களை மூடி தூங்கக்கூட விடாமல் கொடுமை செய்தனர்." இப்படியெல்லாம் அவர் சொல்வதை ஏகலைவன் தன்னுடைய எழுத்தாக்கத்தில் விவரிக்கும்போது மனம் கனமாகிறது. என்னடா வாழ்க்கை என்று தோன்றுகிறது. ஒரு இடத்தில் சொல்கின்றார் நளினி. அப்போது சயனைடு குப்பி இருந்திருந்தால் அதை வைத்து தற்கொலையாவது செய்துகொண்டிருப்பேன் இவர்களுடைய சித்திரவதை தாங்கமுடியாமல் என்று குறிப்பிடுகிறார். என் வயிற்றில் உள்ள குழந்தைக்காகவும், தினமும் இந்த கொடுமைகளை எல்லாம் தாங்கிக்கொண்டு என் வாழ்க்கை சில காலம் கழிந்தது.
ஒரு கட்டத்தில் நளினியின் உறவுகளும் எதிரிகள் ஆகிவிட்டனர். கைதியாகி 6 மாத காலம் எங்களைப் பார்க்க உறவுகள் யாரும் வரவில்லை. உடல் உபாதைகள் வேறு. ஒப்புதல் வாக்குமூலங்களுக்குப் பிறகும், சட்டத்தை மீறி எங்களை சி.பி.ஐ. கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். சட்டங்கள் எதுவும் எடுபடவில்லை. ராஜீவ் படுகொலையில் ஒப்புதல் வாக்குமூலம் தரவேண்டும் என்று ரகோத்தமனின் நெருக்கடி ஒரு பக்கம். நாங்கள் விரும்பிக்கொடுத்த வாக்குமூலங்களில் பல முரண்பாடுகள். சி.பி.ஐ.யே தங்கள் விருப்பத்திற்கேற்றவாரு வாக்குமூலங்களை தயார் செய்துகொண்டது.
ஒரு முறை நான் பெற்ற குழந்தையே சிறையில் என்னிடம் வர மறுத்தது ஒரு தாய்க்கு எப்படி இருக்கும் என்பதை சிந்தனை செய்து பாருங்கள். இதற்கிடையில் 19.3.2008 திங்கட்கிழமை காலை 11 மணி அளவில் வேலூர் சிறையே பதற்றமாக இருந்தது. இது ஒரு வித்தியாசமாகவும் பட்டது எனக்கு என்று சொல்கிறார் நளினி. திடீரென சிறை அதிகாரிகள் என்னை அழைக்கிறார்கள். அவர்கள் பின்னால் நடந்து செல்கின்றேன். ஏதாவது தப்பான செய்தி வந்துவிட்டதா, கொடுமை நேர்ந்துவிட்டதா என்ற சிந்தனையில் நடக்கின்றேன். அறையின் உள்ளே சென்று சிறை கண்காணிப்பாளரை பார்க்கின்றேன். அவர் பக்கத்தில் பச்சைக் கலர் புடவையில் ஒரு பெண் இருந்தார். முதலில் யார் என்று புரியவில்லை. அதன்பின் அவர் சோனியாவின் மகள் பிரியங்கா என்று தெரிய வந்தது. என்னை சந்திக்க வந்திருக்கிறார் என்று யூகித்துக் கொண்டேன். அப்போது ஒரு நீண்ட விவாதம் அவருக்கும் எனக்கும் நடந்தது. விவாதத்தின் இடையே பிரியங்காவின் முகம் மாறத் தொடங்கியது. அவர் பார்வையும் சிவந்து கொண்டிருந்த முகம் அதை வெளிப்படுத்தியது. ஒரு கட்டத்தில் ஒவ்வொன்றையும் குறுக்குக் கேள்வி மூலம் மறுத்தபடி அதிருப்தியை வெளிப்படுத்தியபடி இருந்தார். எதிர்க்கேள்வியால் மறுத்தபடி, உன்னைப் பற்றி சொன்னாய், உன் கணவரைப் பற்றி சொன்னாய். அதில் ஒரு நியாயம் உண்டு. அவர்களைப் பற்றி ஏன் பேசுகிறீர்கள்? அவர்களைப் பற்றி நீங்கள் ஏன் அக்கறை எடுத்துக் கொள்கிறீர்கள் என்று காட்டமாக கேட்டார். அதற்குப் பிறகு அவருடன் பேச முடியாமல் தவித்தேன். சி.பி.ஐ. யினுடைய மிரட்டல்கள் தவறான போக்குகள்தான் இதற்கு காரணம் என்று சொல்லி மேற்கொண்டு என்னால் பேச முடியவில்லை. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. அவர் காட்டிய கோபமும் என்னை மிரள செய்தது என்றெல்லாம் நளினி சொல்கின்றார். இந்த சந்திப்பை மிகவும் ரகசியமாக வைத்திருந்தார்கள். இதை யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் எனக்கு கண்டிப்பான உத்தரவு போடப்பட்டது. இப்படியாக என்னுடைய வாழ்க்கை கழிந்துகொண்டே போகின்றது. இந்த துயரத்திற்கு எப்போது முடிவோ தெரியவில்லை என்று தன்னுடைய வாழ்க்கையை சொல்கிறார் நளினி.
ஏற்கனவே ராஜீவ் படுகொலை குறித்து அவிழ்க்கப்படாத முடிச்சுகள் என்ற ஒரு பத்தி 1991ல் எழுதியிருந்தேன். அதில் விசாகப்பட்டினத்திலிருந்து சென்னைக்கு வந்து திருப்பெரும்புதூர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு செல்லும் திட்டத்தில் விமானம் பழுதடைந்துவிட்டது என்று சொல்லி பயணம் தள்ளிப் போகும் என்று ராஜீவிடம் சொல்லப்பட்டது. ஆனால் திடீரென விமானம் சரியாகிவிட்டது. நீங்கள் புறப்படலாம் என்று கூறியதில் உள்ள மர்மங்கள் என்ன. அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் வாழப்படி ராமமூர்த்தி திருப்பெரும்புதூரில் கூட்டம் நடத்தும் இடம் பாதுகாப்பானது அல்ல என்று மறுத்தபோதும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அங்குதான் கூட்டம் நடத்தவேண்டும் என்று வற்புறுத்தியதன் நோக்கம் என்ன? தனுவுக்கும், சிவராசனுக்கும் காங்கிரஸ் தலைவர்களோடு தொடர்பு இருந்ததா? பெங்களூருக்கு அவர்கள் எப்படி சென்றார்கள். அங்கு யார் யாரை சந்தித்தார்கள்? என்பதையெல்லாம் விசாரிக்கவேண்டும் என்று எழுதியிருந்தேன். கிட்டத்தட்ட 26 ஆண்டுகள் ஆகின்றன. இன்றைக்கும் ராஜீவ் படுகொலையில் உள்ள முடிச்சுகள் அவிழ்க்கப்படவில்லை. நளினியைப் போல அப்பாவிகள் பாதிக்கப்பட்டனர். எந்த தவறும் இழைக்காதவர்களுக்கு இப்படியா ஒரு கொடுமை என்று எதிர்கால வரலாறு சொல்லக்கூடாது. அந்த வரலாற்றுப் பிழைக்கு நாம் சம்பந்தப்படாமல் நியாயங்கள் பக்கம் இருந்து நளினியைப் போன்ற அபலைகளின் உரிமைகளை பாதுகாக்க உறுதி எடுப்போம்.
நளினியின் ரணங்களை நண்பர் ஏகலைவன் ஒரு சிறு காப்பியமாக படைத்துவிட்டார் .
இதிகாச காப்பியத்தில் கொடுமைகளை எதிர்த்து போராடி வெற்றி வாகை சூடுவதோடு , மட்டுமல்லாமல் மக்களுக்கு அறத்தையும் போதிப்பதும் உண்டு .
இந்த நூலில் , கொடுமைகளில் வாடும் நளினிக்கு விடியல் கூடிய வசந்தகாலம் வரும். இருளுக்கு பிறகு வைகறை வருவது போல இயற்கை சகோதரி நளினிக்கு நீதி வழங்கும். மகாபாரதம் , ராமாயாணம் , மற்றும் தமிழ் இலக்கியத்தில் உள்ள ஐம்பெரும் காப்பியங்களில் அறம் வெற்றி பெற்று , துயரப்பட்டோர் இறுதியில் துயரத்தில் இருந்து வெளிவருவர் . கொடுமைகள் புறந்தள்ளப்படும் ,அம்மாதிரியே ரணங்களும் வேதனைகளும் அகலும் . வேலூர் சிறையில் வாழும் நளினி விடுதலை பெற்று மாதர் குல மங்கையாக கீர்த்தியோடு விடுதலை பெறவேண்டும் என்று இயற்க்கையை இறைஞ்சிகிறோம் .
No comments:
Post a Comment