Friday, December 30, 2016

ரீகல் தியேட்டர்.

அறிஞர் அண்ணா , காமராசர் , ராஜாஜி , தலைவர் கலைஞர் எம் ஜி ஆர், ஜெயலலிதா ஆகியோர் திரைப்படம் பார்த்த டெல்லி ரீகல் தியேட்டர். மூடப்படுகிறது 
-------------------------------------
டெல்லியில் 84 ஆண்டுகள் பழமை வாய்ந்த கன்னாட் பிளேசில்  உள்ள ரீகல் தியேட்டர் மூடப்படுகிறது. (Hindustan Times 22/12/2016)இந்த திரை அரங்கத்தின் இன்றைய உரிமையாளர் விசால் சௌத்ரி," எங்களுடைய முன்னோர்கள் இந்த திரையரங்கை ஒரு லட்ச ரூபாய்க்கு  வாங்கினர். இன்று நஷ்டத்தில் ஓடுவதால் பெருமைக்காகவோ, பிடிவாதத்திற்கோ இந்த திரையரங்கை நடத்த முடியவில்லை. இந்த அரங்கத்தில் ஒரு காட்சிக்கு நாற்பது பேர் தான் வருகின்றனர். திரை அரங்கிறக்கான வரிகள்கூடகட்டமுடியவில்லைஆதலால்  இந்த அரங்கை மூட முடிவுசெய்துள்ளோம் "என்று கூறினார் .

ஒரு காலத்தில் இந்த அரங்கில்  ராஜ்கபூர் , நர்கீஸ் , அமிர்தாப் பச்சன், , தர்மேந்திரா, ஹேமமாலினி போன்ற பலர்  இந்த திரை அரங்கில் படம் பார்த்துள்ளனர். 2002 இல் மத்திய அமைச்சராக இருந்த அண்ணன் திரு.முரசொலி மாறன் அவர்கள் , டெல்லி சம்பத்தையும் என்னையும் உடனே டெல்லிக்கு வரச்சொன்னார்.

இருவரும் அவரை சந்திக்க டெல்லி சென்றோம். அங்கு அண்ணன் மாறன் அவர்கள் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு தமிழகத்தில் நடப்பதால் நியாயமான தீர்ப்பு வராது, ஆதலால் வேறுமாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று கூறினார்.  உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் மோகனிடம் இதுக்குறித்து பேசி உள்ளேன், உச்சநீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட வேண்டிய மனுவை தயாரிக்க வேண்டிய விவரங்களை கொடுத்து  அதற்கான மனுவை தயாரியுங்கள் என்று எங்களிடம் கூறினார். 

இன்று அண்ணன் முரசொலி மாறனும் இல்லை. டெல்லி சம்பத்தும் இல்லை. அன்றைக்கு மத்திய சுகாதாரத்துறை ராஜாங்க அமைச்சராக இருந்த திரு.ஆ.ராசா அவர்கள் அனுப்பிய கார் தான் நாங்கள் பயன்படுத்தினோம் .  அவருக்கு செயலாளராக அகிலன் இராமாநாதன்  அவர்கள் தான் எங்களுக்கு வேண்டிய உதவிகளை அப்போது  செய்தார்.

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு கர்நாடகத்திற்கு மாற்ற வேண்டிய அடிப்படை பணிகளை டெல்லி சம்பத்தும்  நானும் செய்தோம் என்பதற்கு சாட்சி ஆ.ராசா வின் நேர்முக உதவியாளர் திரு.அகிலன்  இராமநாதன்க்கும் ஆ.ராசா க்கும் தெரியும். இதுக்குறித்து கழக பொதுக்குழுவில் என்னை பாராட்டி அண்ணன் முரசொலி மாறன் அவர்கள்  பேசியது விரிவான செய்தியாக தினமலரில் வந்தது .14 ஆண்டுகள் கடந்துவிட்டது காலசக்கரங்கள்  வேகமாக ஓடிக்கொண்டு இருகின்றது .

இரண்டு நாட்கள் டெல்லியில் தங்கி இருக்க வேண்டிய சூழலில்  ஒரு மாலை வேளையில் கன்னாட்(cannaught) பிளேஸில் உள்ள ரீகல் தியேட்டர்ககு நானும் டெல்லி சம்பத்தும் மாலை காட்சி பார்க்க சென்றோம். அப்போது சம்பத் குறிப்பிட்டார்,

பேரறிஞர் அண்ணா ராஜ்யசபா உறுப்பினராக இருந்த போது என் வீட்டில் தங்கி இருந்த  போது சில நேரங்களில் இந்த திரைஅரங்கிற்கு அழைத்து வந்தது உண்டு . ராஜாஜியும் , காமராசரும் ,இந்த திரை அரங்கிற்கு வந்து படம் பார்த்தது உண்டு  எனவும் கூறினார் .

தலைவர் 1972 இல் முதல்வராக டெல்லி வந்து, இங்கு இரண்டு  நாள் தங்கிய போது இந்த திரையரங்கில் படம் பார்த்தார். அதற்கு சிறிது காலத்திற்கு முன்  எம்.ஜி.ஆரும்  ஜெயலலிதா வும், அடிமைப் பெண் படப்பிடிப்பிற்காக ராஜஸ்தான் செல்வதற்கு முன் டெல்லியில்  தங்கிய போது  இந்த திரை அரங்கில் படம் பார்த்தனர். அவர்களுக்கு தேவையானவற்றை நான் தான் செய்துக்கொடுத்தேன் என்றார்.

டெல்லி சம்பத் நாகை பகுதியில் பிறந்து ஆலிகார்(aligarh) பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். பேரறிஞர் அண்ணாவுக்கும் தலைவருக்கும் , அண்ணன் மாறனுக்கும்  நம்பிக்கையான அதிகாரியாக டெல்லியில் விளங்கினார் கிட்டதட்ட 35 ஆண்டுகள்  டெல்லி தமிழ்நாடு இல்லத்தினை  நிர்வகிக்கும் அதிகாரியாக இருந்தார். அவருக்கு டெல்லி அரசியல் அனைத்தும் அத்துப்படி.டெல்லியில் ஆட்சிகள் கவிழ்ம் போது எல்லாம் அங்கு என்ன நடக்கிறது என சம்பத்திடம் தான் தலைவர் கேட்டுத்தெரிந்துக்கொள்வார்.
டெல்லி சம்பத்தின் தில்லி நினைவுகளை புத்தகமாகவே எழுதினார் நானும் சிவபிரகாசம் அவர்களும். 2012 இல் வெளியிட முடிவு செய்து அந்நூலை திரு.மனுஷ்யபுத்திரன் வெளியிட்டார்.

திரும்பவும், ரீகல் தியேட்டர் பிரச்சனைக்கு வருகிறேன். 1950,60 களில் இங்கு திரைப்படம் பார்த்த பிரதமர்கள்,குடியரசு தலைவர்கள்,மத்திய மந்திரிகள்,வெளிநாட்டு தூதர்களும் என பட்டியல் நீளும். தில்லியின் அடையாளமாக திகழ்ந்த ரீகல் தியேட்டர் மூடப்படுகின்றது.இதன் பக்கத்தில் இருந்த கதர் அங்காடியும் , கன்னாட்பிளேஸில் இருந்த அடையாளங்கள்ஆகும்.அதன் அருகில் 1950,60களில் பிரசித்திபெற்ற மெட்ராஸ் ஹோட்டல் அமைந்து இருந்தது .  அந்த ஹோட்டலில் விற்பனையான சூடான சாம்பார் இட்லியின் சுவை டெல்லி வாசிகளை வெகுவாக ஈர்த்தது.ரீகல் தியேட்டரில் நானும் வாழப்பாடி ராமமூர்த்தி , தஞ்சை ராமமூர்த்தி , குடந்தை ராமலிங்கம ஆகியோர் பாபி திரைப்படத்தை பார்த்தோம் அப்படியான அந்த திரையரங்கு மூடப்படுகிறது என்பது வருத்தமாக உள்ளது .

#ரீகல்தியேட்டர் 

#டெல்லி 

#ஜெயலலிதாசொத்துகுவிப்புவழக்கு 

#முரசொலிமாறன் 

#KSRPost 

#KSRadhakirushnanpost 
கே.எஸ் .இராதாகிருஷ்ணன்
28/12/2016


No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...