Saturday, December 24, 2016

கச்சத்தீவு

இன்றைய தமிழ் இந்து நாளிதழில் 23/12/2016 கச்சத்தீவு அந்தோணியார் கோவிலுக்கு தமிழக மீனவர்கள் செல்வது தொடர்பான என்னுடைய பத்தி வெளிவந்துள்ளது !
.................

கனவாகிப் போன
கச்சத்தீவு

- வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்
email: rkkurunji@gmail.com

கச்சத்தீவில் கடந்த 7, 8ம் தேதி புதிய அந்தோணியார் கோவில் திறப்பு விழா நடக்க இருந்தது. இராமேஸ்வரத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவில் உள்ள இந்த தீவிற்கு தமிழக மீனவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள புறப்பட்டபொழுது, இலங்கையிலிருந்து சரியான அழைப்புகள் வராதது தமிழக மீனவர்களை புண்படுத்தியது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கும் தொடுக்கப்பட்டது.  யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் ஜோசப் ஜெப ரத்தினம், மன்னார் மறை மாவட்ட ஆயர் ஆகியோர் இந்த திறப்பு விழாவை முன்னின்று நடத்துவதாக செய்திகள் வந்தன. இலங்கை அரசு சார்பில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் புதிய அந்தோணியார் கோவில் இலங்கை கடற்படை மேற்பார்வையில் கட்டப்பட்டது. ஆனால் எதிர்பாராதவிதமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானதால் இந்த விழா எதிர்வரும் டிசம்பர் 24க்கு ஒத்திவைக்கப்பட்டது. துவக்கத்தில் மூன்று படகுகளுக்கு மேல் 200 பேராவது இராமேஸ்வரத்திலிருந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொண்டபோது இலங்கை அரசு மறுத்துக்கொண்டே வந்தது. இராமேஸ்வரம் பங்கு தந்தை சகாயராஜும், சிவகங்கை பங்கு தந்தையும் சேர்ந்து தமிழக அரசுக்கு இது குறித்தான கோரிக்கை வைத்தபின், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம்மோகன ராவ் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இலங்கை அரசு தமிழக மீனவர்களை கச்சத்தீவிற்கு இந்த நிகழ்ச்சிக்கு செல்வதற்கான ஒப்புதலை இழுத்தடித்தது. யாழ்ப்பாண ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் அப்போது இந்த விழா எளிய விழா. இராமேஸ்வரம் பங்கு தந்தையோடு மூன்று பேரை அழைத்துவரலாம் என்று குறிப்பிட்டது தமிழக மீனவர்களை மிகவும் வேதனைப்படுத்தியது. 

ஆனால், இலங்கை அரசின் நிலைப்பாடு இன்னும் தமிழக மீனவர்களுக்கு எதிராகத்தான் இருக்கிறது. நிகழ்ச்சிக்கு தமிழக மீனவர்கள் 100 பேர் செல்வார்கள் என்று சொல்லப்பட்டாலும் அதற்கான உறுதியான ஆணைகள் பிறப்பிக்கப்படவில்லை. இந்நிலையில் தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள 115 படகுகளையும் விடுவிக்க முடியாது என்றும் இலங்கை அரசு கூறிவிட்டது. அத்துடன், இலங்கைக் கடல் பகுதிக்குள் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களின் படகுகளுக்கு 30 லட்சம் ரூபாய் முதல் பல கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வகையில் அந்நாட்டின் பன்னாட்டு மீன்பிடிச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும் என்று இலங்கை அமைச்சர் மகிந்தா அமரவீரா மிரட்டல் விடுத்துள்ளார். இந்திய அரசு இதைத் தீர்க்கக் கூடிய வகையில் தீர்வுகளை அவசரமாக காணவேண்டும். 

இப்படியான சிக்கலான கச்சத்தீவு பிரச்சினையை 8.7.1974ல் முறையான ஒப்பந்தங்கள் இல்லாமல் நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் இந்திய அரசு அளித்தது சட்டத்துக்கு புறம்பானது. இது குறித்தான வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் உள்ளன. கச்சத்தீவிற்கு பாரம்பரியமாக தமிழக மீனவர்கள் செல்வது வாடிக்கை. ஒப்பந்தத்திற்குப் பிறகும் கச்சத்தீவிற்கு செல்வதும், மீனவர்கள் தங்களுடைய மீனவர்கள் மீன்பிடி வலைகளை உலர்த்துவதற்கும், ஓய்வு எடுப்பதற்கும் உரிமை உண்டு என்று ஒப்பந்தத்தில் ஷரத்துக்கள் இருந்தாலும், தொடர்ந்து இலங்கை கப்பற்படை, இதை பொருட்படுத்தாமல் தமிழக மீனவர்களை சுட்டுத் தள்ளியது. 

அந்தோணியார் தேவாலய விழாவிற்கு இலங்கை தமிழர் பிரச்சினையால் 1983லிருந்து தமிழக மீனவர்கள் செல்ல முடியாமல் இலங்கை அரசு தடுத்தது. திரும்பவும் 2010ல் இந்த திருவிழாவிற்கு தமிழக மீனவர்கள் ஏறத்தாழ 28 வருடங்கள் செல்ல முடியாமல் தவித்தனர். கச்சத்தீவு அந்தோணியார் தேவாலயத்திற்கு சென்றால் ஆண்டு முழுவதும் மீன்பிடித் தொழிலில் வளமும் கடலில் தங்களுக்கு பாதுகாப்பும் இருக்கும் என்பது தமிழக மீனவர்களுடைய பெரும் நம்பிக்கை. 

கச்சத்தீவும் அந்தோணியார் திருவிழாவும் குறித்தான கடந்தகால நிகழ்வுகள். 

இந்தியாவின் தென் கிழக்குக் கடற்கரையில் பாம்பன் தீவு அருகில் 285.2 ஏக்கர் அளவும், பரப்பளவில் சுமார் 4 மைல் கொண்ட அமைதியான தீவே கச்சத்தீவு. கள்ளி, கத்தாழை, கருவேல மரங்கள், பனை மரங்கள், செடி, கொடிகள் படர்ந்த எந்த சலசலப்பும் இல்லாத நிர்சலமான பகுதியாக ஒரு காலத்தில் இத்தீவு இருந்தது. சங்குகளும், முத்துக்களும் இங்கே கிடைக்கின்றன. கால்சியம் கார்பனேட் கற்கள் இங்கு மிகுதி. கச்சத்தீவு என்பது பசுமை நிறம் வளத்தைக் கொண்டதால் பச்சைத் தீவு என்று வழங்கப்பட்டு, கச்சன் – கச்சம் என்ற ஆமைகள் அதிகமாக இத்தீவில் இருந்த காரணத்தினால் ‘கச்சத்தீவு’ என்று பெயர் பெற்றது. இத்தீவில் எண்ணெய் வளமும் உள்ளதாக ரஷ்ய ஆராய்ச்சிகள் சொல்கின்றன. இராமேஸ்வரத்திலிருந்து 12 மைல் தொலைவில் உள்ள இந்த தீவில் பறவைகளின் ஒலி, கடலலைகளின் ஒசை, மரங்கள் அசையும்போது எழும் சத்தம் போன்றவை தவிர வேறெந்த ஓசையும் இல்லாமல் அமைதி தீவாக இருந்தது. கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக துப்பாக்கி சத்தம் கேட்கும் அமைதியற்ற நிலை அங்கு ஏற்பட்டது.

சமீபத்தில், கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவில், தமிழகத்தின் ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தைச் சார்ந்தவர்களும், இலங்கையைச் சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர். தமிழகத்திலிருந்து கிட்டத்தட்ட 2,910 பேர்கள் 71 விசைப் படகு மற்றும் 40 நாட்டுப் படகுகளில் சென்றனர்; இலங்கையிலிருந்து 800 பேர்கள்; அனைவரும் கடந்த 2010 பிப்ரவரி 27ஆம் தேதி மதியம் கச்சத்தீவில் கூடினர். அங்கு இலங்கை நெடுந்தீவு பாதிரியார் அமல்ராஜ், தேவாலயத்தில் கொடியேற்றினார். இலங்கை நெடுந்தீவு அரசு அதிகாரி திரிலிங்கநாதன், இலங்கை கடற்படை கமாண்டர் வீரசேகரா, இராணுவ மகேந்திர மதுரசிங்கே, யாழ்ப்பாண மாவட்ட ஆட்சித் தலைவர் கணேசன் மற்றும் அந்நாட்டு அதிகாரிகள் வந்திருந்து அந்த மண்ணை இலங்கை இராணுவத்தினர் ஆக்கிரமித்தனர். நற்செய்தி கூட்டமும், திருப்பலியும் அங்கு நடந்தேறியது. தமிழகத்தின் சார்பில் சிவகங்கை மறைவாட்ட முதன்மை குரு ஜோசப் லூர்து ராஜ் மற்றும் அமல்ராஜ், பாதிரிமார்கள் மைக்கேல் ராஜ், ஜேம்ஸ், வின்சென்ட் அமல்ராஜ் ஆகியோர் சென்றிருந்தனர்.

பிப்ரவரி 28 அன்று காலை 6 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தேறின. அப்பூஜையில் இரு நாட்டு உறவுகள் வலுக்கவும், மக்கள் நலமுடன் வாழவும், தொழில்கள் சிறக்கவும் ஜெபிக்கப்பட்டது. காலை பூஜை நடந்ததற்கு பின், ஒன்றரை மணி நேரத்திற்குள் தமிழகத்திலிருந்து சென்றவர்கள் வெளியேறவேண்டும் என இலங்கை கடற்படையினர் கடுமையாக எச்சரித்திருந்தனர். இதனால் இராண்டவது பூஜையில் இராமேஸ்வரத்திலிருந்து சென்றவர்கள் கலந்து கொள்ளவில்லை. பின் 8.30 மணிக்கு கொடி இறக்கப்பட்டது. திருப்பலி பூஜைகள் ஒரு பக்கம் நடைபெற்றாலும் இறுக்கமான சூழலே அங்கு நிலவியது. மக்களிடம் ஏதோ இழந்துவிட்ட மன அழுத்தம் இருந்ததாக அங்கிருந்து திரும்பியவர்கள் தெரிவித்தனர். அங்கு சென்றவர்கள், இரண்டு நாட்களும் இரண்டு நாட்டு தமிழ் உள்ளங்களும் நேசமுடன் பழகினர் என்றனர்.

இங்கு வந்து மெழுகு திரியை ஏற்றும் வழக்கம் இருந்தது. அங்குள்ள சூசையப்பருக்கும் பூஜைகள் செய்வதும் உண்டு. இடைக்காலத்தில் அந்த வேண்டுதல் நீண்டகாலம் நடக்காமல் போய்விட்டது. இரண்டு நாட்டு பாதிரிமார்கள், கன்னியாஸ்திரிகளும் மக்களிடையே சமாதானம் தழைக்க வேண்டுமென்பதற்காக தங்களுடைய பாணியில் பூஜைகளை, 28 ஆண்டுகளுக்குப் பின் நடத்தியது அனைவரையும் நெகிழச் செய்தது.

இவ்வளவு காலத்திற்குப் பின் அந்தோணியார் கோவிலுக்கு எவ்வித தடையும், தடங்கலும் இன்றி செல்லக் கூடிய பெரும்பேறு கிட்டியது என்ற மகிழ்ச்சியும் இருந்தது. அங்கு வந்த கடற்படை இராணுவத்தினர் நோ என்ட்ரி என்ற பகுதிக்குள் இலங்கையிலிருந்து வந்தவர்களை மட்டும் அனுமதித்தனர். தமிழகப் பயணிகள் அங்கு அனுமதிக்கப்படவில்லை என்ற குறையையும் தெரிவித்தனர். கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்குக் கூட இந்த தீவை பார்வையிட நீண்டகாலத்திற்குப்பின் அப்போதுதான் அனுமதி கிடைத்தது. நெடுந்தீவை தவிர யாழ்ப்பாணத்திலிருந்து வந்தவர்கள் குறைவாக இருந்தனர். இந்த தீவில் எங்கு பார்த்தாலும் சீன எழுத்துகள் எழுதிய படுதாக்களை கொண்டு குடில்கள் அமைத்திருந்தார்கள். இம்மாதிரி 30க்கும் மேற்பட்ட குடில்கள் இருந்தன. அதில் ஆட்கள் தங்கிய சுவடுகள் தென்பட்டன. ஏற்கனவே இந்தியாவை நோக்கி சீனாவின் கண்காணிப்பு கோபுரம் அங்கு இருந்ததாக குற்றச்சாட்டு கடந்த காலங்களில் எழுந்தது. எங்கும் சிங்கள கொடிகள் அப்போது பறந்தன. இதுகுறித்து தமிழக பயணிகளின் மனதில் ஆயிரம் உரிமைக் கேள்விகள் எழுந்தன.

அந்தோணியார் கோவிலை 1930இல் தொண்டி அருகே உள்ள நம்புதாலையில் பிறந்த இந்து மதத்தைச் சேர்ந்த சீனிகுப்பன் என்பவர் எழுப்பினார். அதற்கு இராமேஸ்வரம் ஓலைக்குடா மீனவர்கள், கள்ளிக்கோட்டிலிருந்து கொண்டு வந்த ஓடுகளை 1951இல் வேய்ந்தனர். இந்த தேவாலயத்தில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரியே முன்பு திருப்பலிகளை நடத்துவார். இராமநாதபுரத்தைப் பற்றி 1964இல் சோமலே எழுதிய நூலில்கூட, இந்தியா வசம் இருந்த கச்சத்தீவுக்கு அந்தோணியார் திருவிழாவின்போது இலங்கை இராணுவம் மோட்டார் படகில் வந்து ரோந்து சுற்றுவார்கள் என்றும், இந்திய இராணுவம் அப்போது அங்கு செல்வது கிடையாது. அந்த வகையில் எப்போதும் இலங்கையின் பார்வை கச்சத்தீவின் மீது இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

அக்காலத்தில், இராமேஸ்வரம், தங்கச்சிமடம் மீனவர்கள் மட்டுமல்லாமல் தெற்கே உள்ள ஆத்தங்கரை, பாம்பன், வேதாளை, மண்டபம், பெரியபட்டினம், கீழக்கரை, சேத்துப்பாறை மீனவர்களுடன், குமரி, ஒன்றுபட்ட நெல்லை மாவட்ட வேம்பாறு, தருவைக்குளம், தூத்துக்குடியிலிருந்து மணப்பாடு, உவரி, மதுரை நகர் கே.புதூரைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக ரோமன் கத்தோலிக்க பர்வதர்களும் அந்தோணியார் திருவிழாவுக்குச் சென்றனர். தூரத்தில் இருந்து வரும் பயணிகள், இராமேஸ்வரத்தில் இருக்கும் தங்களுடைய உறவினர்களிடம் திருவிழாவுக்கு வருகிறோம் என முன்கூட்டியே சொல்லி, அவர்களின் உதவியோடு படகுகளில் செல்வது உண்டு. அப்போது சமையலுக்கான பொருள்கள், ஆடுகள் போன்றவற்றை உடன் எடுத்துச் செல்வர். கொடியேற்றும் நாளுக்கு முன்னாடியே சென்று விடுவார்கள். தார் பாய்களை கொண்டு குடில்கள் போட்டு திருவிழா நடைபெறும் பத்து நாட்களும் தங்குவர். இரு நாட்டு மக்களும் ஒன்றாக சமைத்து, உண்டு, உறங்கி தங்கள் உறவுகளை புதுப்பித்தும், நேசமாக ஆர்பரித்து இருக்கும் காட்சியை காண கண் கொள்ளாது. கச்சத்தீவில் குடிதண்ணீர் கிடைப்பது அரிது. அதனால் தனுஷ்கோடியிலிருந்து குடிநீர் கொண்டு போவார்கள். அரை அணாவிற்கும், 1960களில் ஐந்து பைசாவுக்கும் தண்ணீர் விற்பனை ஆனது. கடலில் குளிப்பது, உண்பது இவை மட்டுமே பணியாக திருவிழா நாட்களை கழிப்பர்.

திருவிழாவின்போது சிறுவர்களிடையே விளையாட்டுப் போட்டிகள், இரு நாட்டு பெண்கள் அளவாவது, மீனவர்களின் நாட்டுப்புற தரவுகள், பாடல்கள் இனிமையாகக் கேட்க முடிந்தது. கிராமப்புற மீனவர்களின் பண்பாடுகளும் இத்திருவிழாவில் சிறப்புற விளங்கும். இவர்கள் படகுகளில் செல்லும்பொழுது கீழ்வரும் பாடலை பாடிக் கொண்டு செல்வர்.

“கொடும கொடும இது மதுர ஜெயிலு கொடும
ஒத்தக் கொட்டரையாம் ஓயா விசாரமாம்
வால் மொளைச்ச கொசுக்கள் ஏராளமாம்
சிறைக்குள் மூட்டைப் பூச்சிகளுடன் போராட்டமாம்
காஞ்ச களிக்கிம் தீஞ்ச ரொட்டிக்கிம்
கையேந்தி நிக்கிறோம் போதாமையால்
கைதிகள் கையேந்தி நிக்கிறோம் போதாமையால்
அச்சடிச்ச சோறுக்கும் அவுன்சு கொழம்புக்கும்
ஆலாப் பறக்குறோம் போதாமையால்
நாங்க ஆலாப் பறக்குறோம் போதாமையால்
கொடும கொடும இது மதுர ஜெயிலு கொடும”

இந்த மகிழ்ச்சியான சந்திப்பின்போது, இலங்கையிலிருந்து வந்திருந்தவர்களுக்கும், இந்தியாவிலிருந்து போனவர்களுக்கும் இடையில் பண்ட மாற்றங்கள் நடைபெற்றது. சங்கு மார்க் லுங்கிகள், பிளாஸ்டிக் வாலிகள், பட்டுச் சேலைகள், சொக்கலால் பீடி, சினிமா பிலிம்கள், அவற்றைப் பார்க்கின்ற லென்ஸ், பாய்கள், கை கடிகாரங்கள், டிரான்சிஸ்டர், ஹேர் பேண்ட், தோடுகள், செயின்கள், ஷாம்பு, மாசி மற்றும் சில கருவாடு வகைகள், மிளகாய் வத்தல் போன்ற பொருட்களை இராமேஸ்வரம் கரையிலிருந்து சென்றவர்கள் கொண்டு சென்று அவர்களிடம் கொடுத்து, இலங்கையிலிருந்து வருகின்ற ராணி சோப், தேங்காய் எண்ணெய், சீட்டித் துணி, பிஸ்கெட், துப்புக்கட்டை, ரப்பர் செருப்பு, கிராம்பு, ஏலக்காய், பாக்கு, தேயிலைத் தூள் குறிப்பாக ஈஸ்டன் டீ, ஜப்பானில் செய்யப்பட்ட பேனா போன்ற பொருட்கள், முகத்திற்கு போடும் பவுடர், டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள், டெர்லின் சட்டை, ஹார்லிக்ஸ் மற்றும் இலங்கை பெண்கள் உடுத்தும் துணிகள் போன்றவற்றை தமிழகத்தைச் சார்ந்தவர்கள் வாங்குவர். இவ்வாறு பொருட்களை வாங்கி வருவதை காண்பதற்கு களிப்பாக இருக்கும். இது எல்லாம் மலரும் நினைவுகளாக இன்றளவும் உள்ளன. ஆனால் 2010ல் அந்த மாதிரியான பண்டமாற்று வியாபாரம் நடைபெறவில்லை. போதை வஸ்துகள், மதுபானம் போன்றவை தடை செய்யப்பட்டிருந்தது.

இப்படி நீண்டகாலமாக போராடி, அந்தோணியார் கோவில் திருவிழாவுக்கு தமிழக, இலங்கை பயணிகள் கூடினர். நெகிழ்வு, பிரிந்த உறவுகள் மீண்டும் சந்திப்பு சங்கமம் என்ற மகிழ்ச்சி இப்படியாக கச்சத்தீவில் 20 மணி நேரம் உறவாடி, அப்போது கலைந்தனர். ஆனால் துப்பாக்கி ரவைகளின் சத்தம் கேட்ட இடத்தில் அமைதியும், பரவசமுமாக இருந்தது அப்போது ஒரு மன ஆறுதல். தீவில் அமைதியும், சமாதானமும் அந்தோணியார் திருவிழா மூலம் ஏற்பட்ட மகிழ்ச்சி தற்போதுள்ள சூழ்நிலையில் மறைந்துவிடுமோ என்ற அச்சம் தமிழக மீனவர்களிடையே ஏற்பட்டுள்ளது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்வு என்று நம்பினோம். திரும்பவும் கச்சத்தீவில் சிக்கலை உருவாக்குகின்றது இலங்கை அரசு. எவ்வளவோ முன் உதாரணங்கள் இருந்தும், சர்வதேச சட்டங்களில் தமிழக மீனவர்களுக்கான நியாயங்கள் இருந்தும் கச்சத்தீவு பிரச்சினை தீராமல் இருப்பது ரணத்தை தருகின்து.
கே.எஸ் .இராதாகிருஷ்ணன்
23/12/2016
#ksrposting
#ksradhakrishnanposting
#கச்சத்தீவு

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...