Saturday, December 24, 2016

"தேசிய விவசாயிகள் தினம் டிசம்பர் - 23"

"தேசிய விவசாயிகள் தினம் டிசம்பர் - 23"

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம். உண்மைதான். இன்றும் இந்தியாவின் மக்கள்தொகையில் 60 சதவிகிதத்துக்கு மேலானோர் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்தியாவின் முக்கியமான விவசாய விளைபொருட்களான நெல், கோதுமை, பருப்பு வகைகள்  உற்பத்தியில் தன்னிறைவை பெற்று வருகிறது. பயிர் சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்கள், நவீன பண்ணைக் கருவிகள், மகசூல் அதிகரிக்கும் விதைகள் என்று நாளுக்கு நாள் விவசாயத்தில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே வருகிறது. பசுமை புரட்சியின் பாதிப்புகள் மண் வளத்தை நஞ்சாக்கி இருந்தாலும், விவசாயிகள் தொடர் உழைப்பால், ஆண்டுக்கு 265 மில்லியன் டன் உணவு பொருள்களை உற்பத்தி செய்து வருகிறார்கள் விவசாயிகள். இப்படி விவசாயத்தில் சாதனைகள் தொடர்ந்து கொண்டிருந்தாலும், இன்னும் விவசாயம் ஆட்சியாளர்களுக்கு முதன்மை துறையாக இல்லாதிருப்பது வருத்தத்தை அளித்து வருகிறது.

ஜமீன்தாரி ஒழிப்புமுறை சட்டம்!

இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23-ம் தேதி 'தேசிய விவசாயிகள் தினமாக' கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் பிறந்த நாளே கடந்த 15 ஆண்டுகளாக விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 10-க்கும் மேற்பட்ட பிரதமர்கள் இந்தியாவை ஆட்சி புரிந்து வந்திருந்தாலும், சரண் சிங்கின் பிறந்த நாளை விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுவதற்கு காரணம் உண்டு.

பல அரசியல் நெருக்கடி சூழல்களுக்கிடையே ஜூலை 1979-ம் ஆண்டு, 5-வது பிரதமராக பதவியேற்றார் சவுத்ரி சரண் சிங். 1980-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி வரை 7 மாதங்கள் ஆட்சியில் இருந்த சரண் சிங்

'ஜமீன்தாரி ஒழிப்புமுறை சட்ட'த்தை கொண்டு வந்தார். அதேசமயம் நிலச் சுவான்தார்கள், வட்டிக்கு பணம் வழங்குவோர் மீது கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும், விமர்சனங்களையும் முன்வைத்தவர் சரண்சிங். அவருடைய ஆட்சியின்போதே விவசாயிகளின் விளைபொருள் விற்பனைக்காக 'வேளாண் விளைபொருள் சந்தை மசோதா'வையும் அறிமுகப்படுத்தினார். இதுதான் அவர் ஆட்சியின் போது விவசாயிகளின் நலன்களுக்காக கொண்டுவரப்பட்ட முக்கிய அம்சங்கள்.

அதேசமயம் உத்தர பிரதேச மாநிலம், மீரட் மாவட்டம், நூர்பூர் என்ற ஊரில் நடுத்தர விவசாய குடும்பத்தில் பிறந்த சரண் சிங், எளிமையான விவசாயத்தை நேசிக்கக்கூடிய மனிதராகவே வாழ்ந்து வந்தவர். உத்தரபிரதேச அரசில் வேளாண்துறை, வனத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தவர். உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்த நிலச் சீர்திருத்தங்களில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. உத்தர பிரதேச முதலமைச்சராக இருந்தபோது, நிலக் கையிருப்புச் சட்டம் கொண்டு வருவதற்கு முக்கிய பங்காற்றினார். இச்சட்டம் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான நிலக் கையிருப்பின் உச்ச அளவை குறைக்கும் முயற்சியாக அமைந்தது. இந்தியாவில் நெடுநாளைய பிரச்னையாக இருந்துவந்த உழுபவர்களுகே நிலம் என்பதை பல கூட்டங்களில் முன்வைத்தவர்.

'ஜமீன்தாரி முறை ஒழிப்பு', 'கூட்டுறவு பண்ணை முறை', 'இந்தியாவில் வறுமை ஒழிப்பும் அதற்கான தீர்வும்', 'வேலை செய்பவர்களுக்கு நிலம்' உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியவர். தன் வாழ்நாளில் விவசாயிகளின் நில உரிமைக்காக குரல் கொடுத்து வந்தவர். 1987-ம் ஆண்டு மே 29-ம் தேதி இறந்தார். புது டில்லியில் உள்ள அவரது நினைவிடத்துக்கு, வட இந்திய விவசாய சமூகங்களின் அன்பின் காரணமாக 'கிசான் காட்' (விவசாயிகளின் நுழைவாயில்) என பெயரிடப்பட்டுள்ளது.

தன் வாழ்நாளில் விவசாயிகளின் நில உரிமைக்காக குரல் கொடுத்ததற்காக 2001-ம் ஆண்டிலிருந்து வட இந்திய விவசாயிகள் சார்பாக தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் விவசாயம் சம்பந்தமாக கருத்தரங்குகள், கூட்டங்கள், பயிற்சிகள் நடத்தப்பட்டு அவர் பெயருக்கு சிறப்பு சேர்க்கப்பட்டு வருகின்றன.
---------

விவசாயிகளின் துயரங்கள் இனியாவது மறைய வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம்.

நாம் சோற்றில் கை வைக்க நித்தமும் சேற்றில் கை வைக்கும் விவசாயிகளுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...