இன்று உயர்நீதிமன்ற பணிகளை முடித்துவிட்டு எதிரில் உள்ள பிராட்வேக்கு ஒரு வேலையாக சென்றுவிட்டு காமா பென் சென்டருக்கு சென்றேன் .
இந்த பேனா கடை ஒருகாலத்தில் சென்னையில் மிக பிரசித்திபெற்ற கடை. இங்கு பார்க்கர் பேனாக்கள் அதிகமாக விற்பனையானது உண்டு . இன்றும் பலவிதமான நிப் பேனாக்கள் பல வண்ண மை கூடுகளும் இங்கு கிடைக்கும் .
எப்போது அங்கு சென்றாலும் புதுவகையான பேனாக்கள் வந்துள்ளதா என்று ஆவலோடு பார்த்துவிட்டு, சில நேரங்களில் அவற்றை வாங்கி கொண்டு வருவதுண்டு .ஒரு காலத்தில் அந்த கடையில் அமோகமாக வியாபரம் நடக்கும் . இன்றைக்கு கடை வாடகைக்கு கூட கட்ட முடியாத வியாபரமாக இருந்தாலும் லாபத்தை கருதாமல் இன்னும் அந்த கடையை நடத்திக்கொண்டு வருகிறார் செட்டியார்.
அந்த காலத்தில் அந்த கடையின் வாடிக்கையாளர்களாக ஓமந்தூரார், அறிஞர் அண்ணா ,நீலம் சஞ்சீவி ரெட்டி ,சி சுப்பரமணியம் , ஏன் நானே தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் , ஆன்டன் பாலசிங்கம் ஆகியோரை அந்த கடைக்கு அழைத்து சென்றதுண்டு . மறைந்த நடிகை பானுமதிக்கு பிடித்தமான கடை .அதே பழையை மேஜை நாற்காலிகளுடன் பழமை மாறாமல் அலங்கரித்து வருகிறது. அந்த கடையில் இருந்து பார்த்தால் சட்டகல்லூரி கோபுரங்கள் மிக கம்பிரமாக தெரியும் .
பேனாக்களை எல்லாம் பார்த்துவிட்டு அங்கிருந்து சட்டகல்லூரி கோபுரத்தை பார்த்போது, மேற்கு கோபுரத்தில் ஒரு நீண்ட செடி ஒன்று வளர்ந்து இருந்தது . சட்டகல்லூரி நிர்வாகம் இதை பார்க்காமலா விட்டுவிட்டது . இதை பார்த்தும் அந்த செடியை அப்புறப்படுத்த விட்டுவிட்டதா என்பது தெரியவில்லை . இதை கவனித்ததும் வேதனையுற்றேன் . ஏற்கனவே அந்த பகுதி மெட்ரோ ரயில் பணிக்கு அல்லோலப்பட்டு கொண்டு இருக்கிறது . எழுபதுகளில் இந்த கல்லூரியில் படித்தப்போது இந்த கோபுரத்தை மெய்மறந்து ரசித்தது உண்டு . நான் சட்டகல்லூரி விடுதியில் தங்காமல் பிராட்வேயில் உள்ள சென்னை பல்கலைக்கழகத்தின் யுனிவர்சிட்டி கிளப்பில் தங்கி படித்தேன் .
தேர்வு நாட்க்களில் நள்ளிரவுகளில் சட்டகல்லூரி எதிரில் உள்ள பிராட்வே தெற்கு முனையில் ஒரு மளையாளி தேனீர் கடையில் தேனீர் அருந்திக்கொண்டு இந்த இரு கோபுர இடையில் நிலாவின் காட்சிகளை பார்க்கும் போது அவ்வளவு அற்புதமாக இருக்கும் . எழுபதுகளில் கண்ட காட்சியும் நேற்று மேற்கு கோபுரத்தில் மரம் வளர்ந்துள்ள காட்சியை பார்த்து உடனே சட்டகல்லூரி முதல்வரை சந்திக்க அவர் அறைக்கு சென்றேன் . அவர் இருக்கையில் இல்லை. நாங்கள் படித்தபோது இருந்த சட்டகல்லூரியின் கம்பீரம் தற்போது தேய்ந்துவிட்டதா ? அதுமட்டுமின்றி அம்பேத்கர் பெயரில் பொருத்தப்பட்டுள்ள கருப்பு பெயர் பலகையை இன்னும் கம்பீரமாக வைக்காமல் ஒப்புக்கு வைத்துள்ளனர் என்பது பார்த்தவுடனே தெரிகிறது . இந்த பதிவை பார்த்தாவது சென்னை சட்டகல்லூரியின் மாட்சிமையை பாதுகாக்க வேண்டும் .
கே.எஸ் .இராதாகிருஷ்ணன்
16/12/2016
#ksrposting
No comments:
Post a Comment