Sunday, February 10, 2019

போர் களத்தில் பிறந்து விட்டோம்!




*****************************************************

நேற்றைக்கு தலைவர் கலைஞர் அவர்கள், இனமான பேராசிரியர் அவர்கள், தளபதி.மு.கஸ்டாலின் அவர்கள் கலந்தாலோசித்து “தி.மு.கவின் செய்தித் தொடர்பாளராக” அடியேனை நியமித்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகளை அவர்களுக்கு மிக்க அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.









திருவரங்கத்திற்கு இடைத்தேர்தல் பணிகளுக்காகச் சென்றுவிட்டு இன்று மாலை (06-02-2015) சென்னை திரும்பியதால் தாமதமாகவே இந்தப் பதிவை எழுதவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறேன்.



தமிழ்நாட்டிலே முதல்முதலாக அரசியல் கட்சிகளின் செய்தித் தொடர்பாளராக 1994ல் நியமிக்கப்பட்டேன். தி.மு.கவின் முதல் செய்தித் தொடர்பாளர் என்ற பெருமையை மாட்சிமைக்குரிய தலைவர். கலைஞர் அவர்கள் 2001ல் எனக்கு வழங்கினார்.

தெற்குச் சீமையில் வானம் பார்த்த கரிசல் பூமியில் உள்ள கந்தகமண்ணான ஒரு குக்கிராமத்தில் பிறந்து, 1972தொடங்கி ஏறத்தாழ 43 ஆண்டுகாலம் மாணவர் பருவத்திலிருந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டுவர வாய்ப்புக் கிடைத்தது. பெருந்தலைவர் காமராஜர், பழ.நெடுமாறன், கவிஞர்.கண்ணதாசன், தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் சி.நாராயணசாமி நாயுடு,  ஈழதேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், அ.அமிர்தலிங்கம் மற்றும் இந்திய அளவில் தேவராஜ் அர்ஸ், செல்வி.தாரஹேஸ்வரி சின்ஹா, கே.பி.உன்னிகிருஷ்ணன், ராம்விலாஸ் பஸ்வான் போன்றோரோடு நெருக்கத்தையும் பாசத்தையும் பெற்றேன். இதில் சில தலைவர்கள் என்னுடன் தமிழகம் மற்றும் சென்னை மாநகரில் வாடகைக் காரில் கூட வலம் வந்ததுண்டு. என்னுடைய வசிப்பிடத்தில் தங்கியதும் உண்டு.




வை.கோ அவர்கள் தி.மு.கவில் இருந்தபொழுது அவருடைய முயற்சியால் தலைவர்.கலைஞர் அவர்களுடைய வாழ்த்துகளோடு 30ஆண்டுகளுக்கு முன் கழகத்தில் இணைந்தேன். என்னுடைய மணவிழாவை தலைவர்.கலைஞர் நடத்தி வைக்க பழ.நெடுமாறன் தலைமை ஏற்க, வை.கோ வரவேற்புரையாற்ற அனைத்து தமிழ்நாட்டு தலைவர்களும் மற்றும் தமிழீழத் தலைவர்களும் பங்கேற்றது பெரும் பேறாக நினைக்கிறேன். அவை இன்றைக்கும் பசுமையாக நினைவில் உள்ளது.

வழக்கறிஞர் தொழிலில் சகாக்களும், ஜூனியர்களுமாக இன்றைக்கு பத்துபேர் வரை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி / நீதிபதிகள் என்ற நிலையில் உள்ளனர். மகிழ்ச்சியாக உள்ளது. ஒருகாலத்தில் அடியேனின் ஆதரவையும், வழிகட்டுதலையும் பெற்றவர்கள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற பொறுப்புக்கு வந்தனர் என்பதும் மனதிற்கு நிறைவைத்தரும் நிகழ்வுகளாகும்.
1989 மற்றும் 1996 கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் இரண்டுமுறை மட்டுமே தேர்தல் களத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. மிகக்குறைவான வாக்கு வித்யாசத்திலே வெற்றி வாய்ப்பை இழக்க நேரிட்டது.

ஐ.நா மன்றத்தில் 1994ல் பொறுப்பு கிடைத்தபோதும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. பதவி இருந்தால்தான் மதிப்பு என்பது என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஒருபோதும் இருந்ததில்லை. எந்த நிலையிலும் நண்பர்களும், தோழர்களும் என்மீது காட்டிய பாசம் மறக்கமுடியாது.

என்னுடைய அரசியல் வாழ்வில் ஆரம்பகட்டத்தில் என்னைத் 
தட்டிக் கொடுத்து வேலைவாங்கிய பழ.நெடுமாறனையும், வை.கோவையும் இன்றும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். மனவேறுபாடுகளை காலங்கள் மாற்றும். 
நீர்குமிழி ஒருநிமிடம், வானவில்லோ சில நிமிடம், பூக்களும் பூச்சிகளும் சில நாட்கள். மானிடமோ ஆண்டுகள். இதில் டார்வின் கொள்கைப்படி, தன்னை நிலைநிறுத்திக் கொள்ள போராட்டங்கள், முயற்சிகள் என ஒவ்வொன்றையும் கடந்துசெல்லவேண்டிதான் உள்ளது. இந்தப் புரிதல் இருந்தால் மனதில் எவ்வித ரணங்களும் எழாது. இத்தனை ஆண்டுகளில் பெற்ற அனுபவம் தான் கோபங்களையும் தாபங்களையும் மாற்றி என்னை பண்படவைத்தது.

“போர் களத்தில் பிறந்து விட்டோம்
வந்தவை போனவை வருத்தம் இல்லை
காட்டினிலே வாழ்கின்றோம்
முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை”
      -என்ற வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன.

மேலும், என்னிடம் நேசம்காட்டும் அரசியல் கட்சித் தலைவர்களும், பத்திரிக்கையாளர்களும், ஊடகவியலாளர்களும், வழக்கறிஞர்களும், சமூக ஆர்வலர்களும், நண்பர்களும் “எப்போதும் உங்களுக்கொரு வாய்ப்பு வரவில்லையே” என்று என்மீதுள்ள பாசத்தின் காரணமாக ஆதங்கப்படுவதுண்டு. தகுதியே தடையென்றும் ஒருசிலர் சொல்வதுமுண்டு. நானும் அவர்களிடமெல்லாம் பார்ப்போம் என்று சொல்லி பேச்சைத் திசைதிருப்பிக் கொண்டதும் உண்டு. பொறுப்புகளில் இல்லையென்றாலும் செயல்படமுடியும் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடாகும்.

இன்றைக்கு தலைவர் கலைஞர் அவர்கள் “கழகத்தின் செய்தித் தொடர்பாளராக” பொறுப்பை வழங்கியுள்ளது மேலும் உற்சாகத்தோடு செயல்பட வாய்ப்பமைத்துக் கொடுத்திருக்கின்றது. தலைவர் கலைஞர் அவர்களின் மறுபதிப்பாக தளபதி அவர்களின் பீடுநடை இன்றைக்கு கழகத்தை முன்னெடுத்துச் செல்கின்றது.

இதிகாசத்தில் வரும் அணிலொன்று லங்கேஷ்வரம் பாலம் அமைக்க ஒருபுறம் மண்ணில் புரண்டு மறுபுறம் அந்த மண்ணை உதிர்த்துக் கொட்டி எல்லோர்க்கும் நடுவே உதவியாக இருந்தது. தன்னால் ஆனச் சிறுமுயற்சியையும் உழைப்பையும் அந்த இடத்தில் வெளிப்படுத்திய அணில் போல இந்த வேள்விப் பணியில் அடியேன் கழகத்திற்கு உழைக்க வாய்ப்பளித்த தலைவர் கலைஞர் அவர்களுக்கும், இனமான பேராசிரியர் அவர்களுக்கும், தளபதி.மு.க ஸ்டாலின் அவர்களுக்கும் என்னுடைய நன்றிகலந்த வணக்கங்கள்.

-கே.எஸ். இராதாகிருஷ்ணன்.

No comments:

Post a Comment

கனிமொழிக்கும் டி ஆர் பாலுவிற்கும் சிவகங்கையில் ப. சிதம்பரம் மகனையும் போட்டியாக வலுவற்ற வேட்பாளர்களை நிறுத்தி வைத்ததன் மூலம் எதிர்க்கட்சிகளே வெற்றி வாய்ப்பையே வழங்கி விட்டார்கள்

இன்று மாலை  டில்லி மூத்த பத்திரிக்கையாள நண்பர்  தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு தூத்துக்குடியில் கனிமொழி அவர்களின் வெற்றி எப்படி இருக்கி...