Wednesday, March 27, 2019

*தேர்தல் களம்*

இன்று (23/02/2019) தினமலர் திருநெல்வேலி பதிப்பில் *தேர்தல் களம்*  குதியில் வெளிவந்துள்ள தேர்லைக் குறித்தான எனது பேட்டி வருமாறு.

*மக்கள் மத்தியில் மனமாற்றம், தேர்தல் முடிவில் எதிரொலிக்கும்.*
வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
கே.எஸ்.ஆர். என்றழைக்கப்படும் திமுகவின் செய்தி தொடர்பாளர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் நமது தேர்தல் களத்தில் பேசுகிறார்.

*தற்போதைய தேர்தல் களத்தில் கூட்டணிகளை விடவும் பேசப்படும் விவகாரம் வைட்டமின் ‘ப’ எப்போது வரும் என்பதில் தான் இருக்கிறது….*

எனக்கு 1957 தேர்தலில் சற்று மங்கலான நினைவுகள். 1962ஆம் தேர்தலில் சற்று தெளிவான நினைவுகள் இன்றைக்கும் இருக்கின்றன. அப்போதெல்லாம் பிரச்சாரம் என்பது பெரிதாக இல்லை. போட்டியிடும் வேட்பாளர் ஏதாவது ஒரு வீட்டிற்கு வந்து அமர்ந்து வாக்களியுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றுவிடுவார். இது மாதிரியான ஒலிபெருக்கி பிரச்சாரங்கள் அப்போது கிடையாது. கோவில்பட்டி அருகேயுள்ள சித்திரம்பட்டி சுப்பா நாயக்கர், சங்கரன்கோவில் ஊர்க்காவலன் போன்றோர் வேட்பாளராக போட்டியிட்ட களத்தையும் எங்கள் பகுதியில் நான் பார்த்ததுண்டு. அதற்கு முன்னர் தேர்தல்களில் வர்ணப்பெட்டிகளில் வாக்களிக்கும் சூழல் இருந்தது. அதற்குப் பிறகு சின்னங்கள் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு கட்சிகளுக்கு வாக்களிக்கும் நிலை ஏற்பட்டது. கட்சியின் வேட்பாளர் தங்களுடைய சின்னங்களை பிரபலப்படுத்தினர். காங்கிரஸ் கட்சியின் இரட்டை மாட்டுச் சின்னம், கம்யூனிஸ்டின் கதிர் அரிவாள், சோசலிஷ்ட் கட்சிகள் (பி.எஸ்.பி, எஸ்.எஸ்.பி) ஆலமரம், மண்குடிசை சின்னத்திலும் போட்டியிட்டன. திமுகவுக்கு ஆரம்பக் கட்டத்தில் வெவ்வேறு சின்னங்களில் நின்றனர். முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி போட்டியிட்ட உதயசூரியன் சின்னம் பிற்காலத்தில் திமுகவின் சின்னமாக மாறியது.

நான் 1967ஆம் ஆண்டிலிருந்து தேர்தல் களத்தில் இருந்து வருகிறேன். அப்போதெல்லாம் தேர்தல் திருவிழா போல் நடக்காது. 1964 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் தேர்தல் பிரச்சார மேடைகளில் பாடுவார். இன்று ஒத்த ரூபா தாரேன் என்ற பாடல் அந்த காலத்து அரசியல் மேடைகளில் போட்ட மெட்டு. அந்த காலத்தில் அவர் ராகம் போட்டு பாடுவதைக் கேட்டு இருக்கிறேன். 1964 ஆம் ஆண்டில் ஆலடி அருணா திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட போது அவருக்காக பணியாற்றி இருக்கிறேன்.

அப்போதெல்லாம் வீதிக்கு வீதி வேட்பாளர்களுக்காக டோர் சிலிப் மட்டுமே விடுவார்கள். 1964 ஆம் ஆண்டில் தான் கொஞ்சம் சின்ன சைஸ் போஸ்டர்கள் தேர்தலில் தலைகாட்டியது. 1964ஆம் ஆண்டு காரில் மைக்கோடும், ஒலிப்பெருக்கியோடும் தான் வேட்பாளர்கள் வருவார்கள். அந்த கார் கூட அதிசயமாக எங்கோ ஒரு இடத்தில் தான் காணப்படும். இதன் பின்னர் தேர்தலில் பணியாற்றும் தொண்டர்களுக்கு பொதுவான இடத்தில் சாப்பாடு போடும் கலாச்சாரம் வந்தது. 1987ஆம் ஆண்டில் தான் தேர்தலில் பெரிய அளவிலான போஸ்டர் கலாச்சாரமே வந்தது. அப்போதெல்லாம் வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுப்பவர்களுக்கு ஐந்து ரூபாய் போடுவார்கள். ஆனால் எங்க ஊர் பெண்கள் வாங்கமாட்டார்கள். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கிராமம் சார்பில் இந்தாங்க இரண்டாயிரம் ரூபாய் என்று மொய் எழுதிக் கொடுத்து அனுப்புவார்கள். கட்சியின் தொண்டர்கள் தேர்தல் செலவுக்கு பணம் வாங்குவதை வெட்கப்படும் தொண்டர்களைப் பார்த்து எனது தலைமுறை.

நான் 1989, 1996 ஆம் ஆண்டுகளில் கோவில்பட்டியில் போட்டியிட்ட போது மிகவும் எளிமையாக ஓட்டுக் கேட்டேன். கிராமங்களில் எங்களுக்காக சாப்பாடு தயாரித்து தருவார்கள். சுமார் 100 பேருக்கான உணவை தயாரித்து வழங்குவர். அதுமட்டுமல்லாமல், மக்கள் கடலை மிட்டாய், வாழைப்பழம், கருப்பட்டி போன்றவற்றை கொடுத்து அனுப்பினார்கள். எங்கள் கிராமத்து மக்கள் வேட்பாளர்கள் சாப்பிட மறந்தால் அதுதான் அன்றைய சாப்பாடாக இருக்கும். கோவில்பட்டியில் நான் வேட்பாளராக போட்டியிட்ட போது மக்களும் பணம் கேட்டதில்லை. நானும் கொடுத்ததில்லை. கொடுக்கவும் மாட்டேன்.
---
*பணப் பட்டுவாடா இல்லாத தேர்தலுக்கு என்ன தான் வழி?*

தேர்தலில் பல்வேறு வகையான சீர்திருத்தங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை. அதை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இந்திரஜித் குப்தா தலைமையிலான குழு அறிக்கையாக வழங்கியது. அந்த குழு வேட்பாளர்களுக்கான பிரச்சார செலவை அரசே ஏற்க வேண்டும். ஓட்டளிப்பதை கட்டாயப்படுத்த வேண்டும். ஓட்டு அளிக்காவிட்டால் ரேஷன் கார்டு உள்ளிட்ட அரசு சலுகைகளை பறிக்க வேண்டும். ஒருவர் தேர்தலில் போட்டியிடும் போது வைத்திருந்த சொத்து, தேர்தலுக்குப் பின் அவரது சொத்து என்ன என்பது குறித்தும், அவர் தேர்தலுக்குப்பின் எவ்வளவு சொத்துக்களை இழந்தார் என்றும், அதையும் கணக்கில் காட்ட வேண்டும் என்றும், தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சொத்துக்களை இழந்திருந்தால் அதுவும் நாட்டு மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக அதை வெளிப்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. 

அந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோரி நான் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தேன். ஒரு நபர் 50,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார். இன்னொருவர் 40,000 ஓட்டுகள் வாங்கி கொண்டு தோல்வி அடைகிறார் என்றால் அதைவிட சோகம் வேறு எதுவும் இல்லை.
விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் அடிப்படையிலான தேர்தல் சின்னம் மட்டும் தான் கதாநாயகன். சின்னத்திற்கு விழும் ஓட்டுகளின் அடிப்படையில் வேட்பாளரை கட்சிகள் தீர்மானித்துக் கொள்ளும். இதனால் கொள்கை அடிப்படையில் மக்கள் ஓட்டளிக்கும் நிலையை அடைவார்கள். அதனால் தனிநபரைவிட நாட்டு நலனே முக்கியமாக மக்கள் கருதும் நிலை ஏற்படும். 
---
*ஓட்டு சீட்டு முறையில் மீண்டும் வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து குரல்கள் எழுந்து இருக்கிறது?*

ஓட்டுச்சீட்டு முறை குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதுகுறித்த தீவிரமான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஓட்டுச்சீட்டு முறையிலிருந்து நாம் மாறி கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அதிலிருந்து மீண்டு வருவதற்கு பல சிரமங்கள் இருக்கின்றன. இது குறித்து உச்ச நீதிமன்றமும் தேர்தல் கமிஷனும் தான் முடிவெடுக்க வேண்டும். 
---
*இன்றைய தேர்தலில் சமூக வலைதளங்கள் பெரும் பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது?*

காலம் தரும் மாற்றங்கள் அணிவகுத்து வந்த வண்ணம் இருக்கிறது. ஒரு காலகட்டத்தில் செய்திகளை தந்த பத்திரிக்கைகள் புலனாய்வு பத்திரிகைகள் ஆக மாறின. போபர்ஸ் வழக்கில் புலனாய்வு பத்திரிகைகள் பெரும் பங்கை வகித்தன. இப்போது தொழில்நுட்ப யுகம். அதற்கேற்ப வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் வந்து தகவல்களை தந்து கொண்டிருக்கின்றன. அது உண்மையா, தவறா என்று மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.
---
*விளாத்திகுளத்தில் விருப்பமனு கொடுத்த உங்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கவில்லையே?*

முதலில் சீட் கேட்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. என்னுடைய நண்பர்கள் சிலர் எனக்காக விருப்ப மனு  கொடுத்திருந்தனர். அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் நேர்காணலில் கலந்து கொண்டேன். சீட் கொடுக்காததால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. மக்களுக்கு தொண்டாற்ற எனக்கு தேர்தல் திருவிழாவில் கதாநாயகனாக நடிப்பது ஒன்றும் பெருமை இல்லை என்று கருதுகிறேன். 
---
*திமுக தொகுதி பகிர்வும் வேட்பாளர் தேர்வு தொண்டர்களுக்கு திருப்தி அளிக்கும் என்று கருதுகிறீர்களா?*

நிச்சயம். திமுக கூட்டணியில் தலைவர் ஸ்டாலின் சரிசமமாக கட்சிகளுக்கு தொகுதிகளை பகிர்ந்தளித்திருக்கிறார். இதை ஒரு சமயோசிதமான புதிய வியூகமாக நான் கருதுகிறேன். கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் தொகுதி உடன்பாட்டில் திருப்தியோடு ஏற்றுக் கொண்டுள்ளனர். நேர்காணல் நடத்தி சிறப்பான முறையில் ஒன்றியம், வட்டம், மாவட்டம், பொதுக்குழு உறுப்பினர்கள் என்று கட்சியினர் அனைவரும் ஒப்புதலோடுதான் திமுக வேட்பாளர்களை தலைவர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார், அதை கட்சிகளும் வரவேற்கிறார்கள், மக்களும் வரவேற்கிறார்கள்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வீதிவீதியாக அலைந்து திரிந்ததை தமிழக மக்கள் மறக்கவில்லை. ஜி.எஸ்.டி என்ற பெயரில் புதுப்புது வரிகள் போட்டுக் கொள்ளும் மத்திய அரசுக்கு மக்கள் சரியான சம்மட்டி அடி கொடுப்பார்கள். மக்கள் மத்தியில் உள்ள மனமாற்றம் தேர்தல் முடிவில் எதிரொலிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. திமுக கூட்டணிக்கு தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி தேடித்தரும்.

*இன்னா நாற்பது என்பது இனியவை நாற்பதாகும் மாறும்.*

#KSRadhakrishnanpostings 
#KSRpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
23-03-2019


No comments:

Post a Comment

*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*

*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*. Learn that the simplest of times brings the grandest of pleasures ...