Sunday, March 31, 2019

கக்கன்

#கக்கன் ,இவர் போன்ற அரசியல்வாதிகள் வாழ்ந்த மண்ணில் தற்பொழுது யார் யாரைப் பற்றி விவாதிக்கிறோம் என எண்ணி மனம் வேதனை அடைகிறது.

நேர்மையான அரசியலின் அடையாளம் என்று தமிழகமே கொண்டாடும் தலைவர் கக்கன். இப்படியொரு தலைவர் தமிழகத்தில் ரத்தமும் சதையுமாக இருந்திருக்கிறார், இயங்கியிருக்கிறார் என்று சொன்னால் அதை இன்றைய தலைமுறையினர் ஏற்பார்களா என்பது மிகவும் சிரமம்தான். 1909 ஜூன் 18-ல் மதுரை அருகே தும்பைப்பட்டியைச் சேர்ந்த பூசாரி கக்கன் - குப்பி தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் கக்கன். ஆம், தந்தைக்கும் மகனுக்கும் ஒரே பெயர். வறுமையின் காரணமாக பள்ளிப்படிப்பை இடையிடையே விட நேர்ந்தது. எனினும், பல்வேறு சிரமங்களுக்கு இடையில் பள்ளிப்படிப்பை முடித்தார் கக்கன்.

அரசியல் ஆர்வம்

சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்துகொண்டிருந்த காலகட்டம் அது. பள்ளி மாணவரான கக்கனுக்கும் சுதந்திர வேட்கை தொற்றிக்கொண்டது. காந்தியும் காங்கிரஸும்தான் கக்கனுக்கான ஈர்ப்புப் புள்ளிகள். படிக்கும் நேரம் போக எஞ்சிய நேரங்களில் அரசியலில் ஆர்வம் செலுத்தினார். படிப்பு சரியாக வரவில்லை. என்றாலும், கக்கனின் காங்கிரஸ் பாசத்தையும் மக்களுக்குத் தொண்டாற்றும் ஆர்வத்தையும் புரிந்துகொண்ட வைத்தியநாதய்யர், மதுரையில் உள்ள சேவாலயம் என்கிற விடுதியில் காப்பாளர் வேலையைக் கக்கனுக்கு வாங்கிக் கொடுத்தார்.

1932-ல் சொர்ணம் பார்வதி என்ற பெண்ணை மணம் செய்துகொண்டார் கக்கன். அதன் பிறகுதான் அரசியல் நடவடிக்கைகளில் அதிக அளவில் ஈடுபட்டார். காந்தி மதுரைக்கு வந்தபோது அவருக்கு கக்கனை அறிமுகம் செய்துவைத்தார் என்.எம்.ஆர்.சுப்பராமன் என்கிற மூத்த காங்கிரஸ் தலைவர். அது கக்கன் வாழ்வில் முக்கியமான நிகழ்வு. தமிழகத்தின் பல இடங்களுக்கும் காந்திக்குத் துணையாகச் சென்றுவந்தார் கக்கன். அந்தப் பயணமும் பழக்கமும் கக்கனின் மனதில் தனிப்பட்ட முறையிலும் அரசியல்ரீதியாகவும் பல மாற்றங்களைக் கொண்டுவந்தது. மதுரை மீனாட்சி அம்மன் ஆலயப் பிரவேசத்தை வைத்தியநாதய்யர் நடத்தியபோது, அந்தப் போராட்டத்தில் பங்கேற்றார் கக்கன்.
முதல் பதவி, முதல் சிறை

1940-ல் மதுரை மேலூர் வட்டார காங்கிரஸ் செயலாளரானார். அதுதான் காங்கிரஸில் அவர் வகித்த முதல் பதவி. அப்போது காந்தி அறிவித்த போராட்டம் ஒன்றில் பங்கேற்ற கக்கன், பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டார். முதல் சிறைவாசம் அதுதான். அதன் பிறகு, போராட்டங்களும் சிறைவாசங்களும் தொடர்ந்தன. வட்டார காங்கிரஸ் தலைவராக இருந்த கக்கன், மதுரை மாவட்டப் பொருளாளரானார்.
மதுரை மீனாட்சி அம்மன் ஆலைய நுழைவு போராட்டத்தில் வைத்தியநாத 
அய்யர் தலைமையில் நடந்ததில் கக்கன்
கலந்து கொண்டார்.

1942-ல் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் ஈடுபட்டபோது, போலீஸாரின் கண்ணில் சிக்காமல் தப்பிக்கத் தலைமறைவாக இயங்கினார் கக்கன். ஒருகட்டத்தில் கைதுசெய்யப்பட்டார். தமிழகத்தில் நடக்கும் போராட்டத்தைப் பற்றிய முழு அம்சங்களும் கக்கனுக்குத் தெரியுமென்பதால், தலைமறைவாக உள்ள மற்ற தலைவர்களைப் பற்றிய விவரங்களைச் சொல்லுமாறு சித்திரவதை செய்தனர் காவலர்கள். ஆனால், கக்கனிடமிருந்து ஒரு துப்புகூடக் கிடைக்கவில்லை. ஆத்திரம் அடைந்த பிரிட்டிஷ் அரசு, கக்கனை அலிப்பூர் சிறைக்கு அனுப்பிவைத்தது. 18 மாதங்களுக்குக் கொடும் சிறைவாசம்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்

1946-ல் மத்திய சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்வானார் கக்கன். 1952-ல் சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடந்தபோது, மதுரை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். கக்கனின் எளிமையான வாழ்க்கைமுறையும் பொதுமக்களை அணுகும் பாங்கும் மதுரை வட்டாரத்தில் அவரைச் செல்வாக்கு மிக்க தலைவராக உயர்த்தியது. 1954-ல் காமராஜர் முதல்வரானபோது, அவர் வகித்துவந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி கக்கனுக்குத் தரப்பட்டது.

தமிழக காங்கிரஸ் தலைவராக மூன்று ஆண்டுகள் பணியாற்றிய கக்கன், 1957-ல் நடந்த தேர்தலில் மேலூர் சட்ட மன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் அமைந்த காமராஜர் அமைச்சரவையில் பொதுப்பணித் துறை, மின்சாரத் துறை, தாழ்த்தப்பட்டோர் நலத் துறை ஆகிய துறைகளுக்கு அமைச்சரானார் கக்கன்.

நேர்மையும் எளிமையும்

அமைச்சர் பதவியில் இருந்தபோது அதிகபட்ச நேர்மையைக் கடைப்பிடித்தவர் கக்கன். சிபாரிசு, பரிந்துரை போன்ற வார்த்தைகளை அடியோடு நிராகரித்தார். துறைசார்ந்த திட்டங்களைக் கொண்டுவருவதில் அக்கறையும் ஆர்வமும் செலுத்தினார். அமைச்சராக இருந்தபோதும் தனது குழந்தைகளை அரசு மாநகராட்சிப் பள்ளிகளிலேயே படிக்கவைத்தார்.

1962 தேர்தலில், சமயநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கக்கனை விவசாயத் துறை அமைச்சராக்கினார் காமராஜர். மணிமுத்தாறு, அமராவதி போன்ற நீர்த்தேக்கத் திட்டங்கள் அமலுக்கு வந்தது, மேட்டூர் அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டது, வைகை, பாலாறு திட்டங்களை நிறைவேற்றியது, பூண்டி நீர்ப்பாசன ஆய்வு மையம் அமைத்தது ஆகியவற்றில் கக்கனின் பங்களிப்பு முக்கியமானது.

விவசாயிகளுக்குக் குறித்த நேரத்தில் உரம் கிடைக்க வேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்தினார் கக்கன். பசுந்தாளுரம் அறிமுகமானது கக்கனின் காலத்தில்தான். கூட்டுறவு விற்பனை நிலையத்தின் வழியாக விவசாயிகளுக்கான பொருட்களை வழங்க வழிவகை செய்தவர் கக்கன்.

பதவியும் பணிகளும்

1963-ல் காமராஜர் ராஜினாமா செய்ததை அடுத்து, பக்தவத்சலம் முதல்வரானார். அப்போது தமிழக அரசின் உள்துறை அமைச்சரானார் கக்கன். தேர்வுகள் வழியே காவலர்களின் எண்ணிக்கையை உயர்த்தியது, காவலர் பயிற்சிப் பள்ளிகளை உருவாக்கியது, சாதிக் கலவரங்கள் மூள்வதை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க ரகசியக் காவலர் பிரிவைத் தொடங்கியது, லஞ்ச ஒழிப்புக் காவல் பிரிவை உருவாக்கியது என கக்கனின் பணிகள் அநேகம்.

1967 தேர்தலில் மேலூர் தெற்குத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஓ.பி.ராமனிடம் வெற்றிவாய்ப்பை இழந்தார் கக்கன். தூய்மையான அரசியலுக்கு விழுந்த சம்மட்டி அடியாகவே கக்கனின் தோல்வி பார்க்கப்பட்டது. தான் வசித்துவந்த அரசு வீட்டிலிருந்து வெளியேறி, குடும்பத்தோடு வாடகை வீட்டுக்குக் குடியேறினார். சுதந்திரப் போராட்டத் தியாகி என்ற அடிப்படையில், தனக்குத் தரப்பட்ட நிலத்தை வினோபா பாவேவின் பூமிதான இயக்கத்துக்குத் தானமாகக் கொடுத்துவிட்டவர் கக்கன் என்பது இங்கே நினைவுகூர வேண்டிய சங்கதி. 1971 தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளராகக் கக்கனை நிறுத்தினார் காமராஜர். வெற்றி வசப்படவில்லை. ஆகவே, அரசியலிலிருந்து முற்றிலுமாக விலகிக் கொண்டார் கக்கன்.

வறுமையும் நோயும்

கக்கன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்வதும் அரசுப் பேருந்தில் பயணிப்பதும் வரிசைகளில் காத்திருப்பதும் பொருளாதாரரீதியாகச் சிரமப்படுவதும் பத்திரிகைகளில் அவ்வப்போது செய்திகளாக வந்தன. அதைப் பார்த்த சிவாஜி கணேசன், தனக்குப் பரிசாக வந்த தங்கச் சங்கிலி ஒன்றைப் பொதுவெளியில் ஏலம் விட்டு, அதில் கிடைத்த தொகையைத் தனியார் நிதி நிறுவனத்தில் நிரந்தர முதலீடு செய்து, அதன்மூலம் கிடைக்கும் வட்டித்தொகை ஒவ்வொரு மாதமும் கக்கனுக்குக் கிடைக்க ஏற்பாடுசெய்தார்.

சில ஆண்டுகள் வீட்டிலேயே இருந்த கக்கனுக்கு மீண்டும் உடல்நலன் பாதிக்கப்படவே, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரின் உத்தரவால் தரமான மருத்துவ சிகிச்சைகள் தரப்பட்டபோதும் கக்கனுடைய உடல்நலன் நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே போனது. இறுதியாக, 23 டிசம்பர் 1981 அன்று மரணம் அடைந்தார் கக்கன். அரசியலிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அதிகபட்ச நேர்மையைக் கடைப்பிடித்த கக்கனைப் போல் இன்னொரு தலைவர் வருவாரா என்று பேசவைத்தது அவரது வாழ்நாள் சாதனை!

No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...