Sunday, March 17, 2019

*தேர்தல் களத்தில் வியாபார அரசியல்.*

இன்றைய (17/03/2019) தினமலரில் *#தேர்தல்களத்தில் வியாபார அரசியல்* என்ற தலைப்பில் வெளிவந்துள்ள எனது முழுமையான பேட்டி வருமாறு.



-------------------------------------
-திமுக செய்தித்தொடர்பாளர், கே.எஸ்.இராதாகிருஷ்ணன் முழுமையான சிறப்பு பேட்டி.

*லோக்சபா தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி சந்திக்க இருக்கின்ற ‘சாதகம், பாதகம்’ என்ன?*

தமிழகம் மட்டுமல்ல இந்தியாவையும் வாட்டி வதைக்கும் மத்திய, மாநில அரசுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்ற மனநிலையில் மக்கள் உள்ளனர். வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். ஜிஎஸ்டி வரிவிதிப்பு, பணமதிப்பிழப்பு, போன்ற பல பிரச்சினைகளில் மத்திய அரசின் அடக்குமுறை எங்கள் கூட்டணிக்கு சாதகமாக உள்ளது. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு “செய்ய வேண்டியதை செய்யாமல், செய்யக்கூடாததை எல்லாம் முக்கியத்துவம் கொடுத்து செய்வது”. இந்த பழமொழியை தான் மத்திய, மாநில அரசுகள் பின்பற்றி வருகின்றனர். எனவே எங்கள் கூட்டணி மக்களை சந்தித்து இந்த இரு அரசுகளும் வீழ்த்துவதற்கு பிரச்சாரம் செய்வது எங்களுக்கு சாதகமாக அமையும். பாதகம் என்ற பேச்சுக்கு இடமில்லை.
---

*ஜெயலலிதா இல்லாத அதிமுக அணியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?*

அதிமுக கூட்டணி என்ற கப்பலில் ஜெயலலிதா என்று ‘கேப்டன்’ இல்லை. அதனால், கப்பல் கரைசேர வாய்ப்பில்லை. கப்பலில் சேர்ந்துள்ள ‘எக்ஸ்ட்ரா லக்கேஜ்’களால் ஓட்டை விழுந்துவிட்டதால் அது மூழ்கும் நிலையில் தான் உள்ளது.

---

*தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் உங்களுக்கு, தேர்தலில் போட்டியிட்ட அனுபவம் உண்டா?*

பல்வேறு தேர்தலில் காமராஜர், நெடுமாறன், வைகோ, கம்யனிஸ்ட் தலைவரும், நீண்டநாள் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த சோ.அழகிரிசாமியுடன் பணியாற்றிய அனுபவம் உண்டு. தேர்தல் களப்பணியாளர், தேர்தல்களில் வேட்பாளர், வேட்பாளர்களின் முகவர், களப்பணியாளர் என 48 ஆண்டு காலமாக தேர்தல் களத்தில் அனுபவமும் எனக்குண்டு. நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காமராஜர் போட்டியிட்டபோது அங்கு பணிகள் செய்ததெல்லாம் நினைவுக்கு வருகின்றது. 1989, 1996இல் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்டு குறைந்த ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றியை இழந்தேன். 

---

*அன்றும், இன்றும் தேர்தலுக்காக வேட்பாளர்கள் செய்யும் செலவு விபரம் ஒப்பிடுங்களேன்?*

கடந்த 30, 40 ஆண்டுகளுக்கு முன் தேர்தலில் போட்டியிட்டபோது பணம் பிரதானமாக இல்லை. தற்போது பணம் தான் தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கிறது. இதை நினைத்து நான் மிகவும் வேதனைப்படுகிறேன். வெட்கப்படுகிறேன்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சோ. அழகிரிசாமி, கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்ட போது, அவரிடம் பணம் கிடையாது. ஆடம்பர கார் கிடையாது. அப்போது பிரசாரம் செய்ய மைக்செட் இணைக்கப்பட்ட வாடகை அம்பாசிடர் கார் மட்டுமே இருந்தது. ஊர் ஊராக பிரச்சாரம் செய்வோம். கிடைத்ததை சாப்பிட்டு திண்ணையில் ஓய்வு எடுத்துவிட்டு பிரச்சாரத்திற்கு செல்வோம். நல்லகண்ணுவுடன் இணைந்து கிராமம், கிராமமாக எங்களின் பகுதி கிராமங்களில் பிரச்சாரம் செய்த நினைவுகளும் இருக்கின்றன. 

மதுரை மத்திய தொகுதியில் நெடுமாறனுக்கு வேலை செய்தேன். பெரியகுளம் நாடாளுமன்ற இடைத்தேர்தல், திருநெல்வேலி, மயிலாப்பூர், பெருந்துறை, ஆண்டிப்பட்டி, சைதாப்பேட்டை, சங்கரன்கோவில் போன்ற சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு பணியாற்றிய அனுபவம் உண்டு. இப்போது போல் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் செலவு கிடையாது. தற்போது படித்தவர்களும், அரசு பணியாளர்கள் கூட எங்களுக்கு ஏன் பணம் தரவில்லை என வாய்கூசாமல் கேட்கின்றனர். ஏண்டா அரசியலுக்கு வந்தோம் என்ற வேதனை தான் மிஞ்சுகிறது. அன்று கோவில்பட்டியில் நான் போட்டியிட்டபோது ராஜமரியாதையுடன் மக்கள் வரவேற்பார். ஆரத்தி எடுப்பர், ஆனால் பணம் வாங்க மாட்டார்கள். வீடுகளில் சாப்பிடச் சொல்வார். சிவகாசியில் வைகோ போட்டியிட்டபோது பூத் கமிட்டி செலவுக்கு பணம் கொடுத்தால் அதை வாங்க மறுப்பர். எங்களை அசிங்கப்படுத்தாதீர்கள் என்று அவர்கள் சத்தம் போடுவர்.

இன்று அதே பூத் கமிட்டிகள் தேர்தல் செலவுக்கு பணம் தர வேண்டும் என கறாராக கேட்கின்றனர். இந்த மாதிரியான வியாபார அரசியல் போக்கு தேர்தல் களத்தில் இருப்பது ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை. 

---

*அப்படியானால் தேர்தல் சீர்திருத்தம் வருவதற்கு உங்கள் சிந்தனையில் என்ன வழி இருக்கிறது?*

தேர்தல் முடிவை பணம்தான் நிர்ணயிக்கும் என்ற புரையோடிய புற்றுநோயை அகற்ற வேண்டும். அதற்கு ஒரே வழி நீதிமன்ற தீர்ப்பு தான். விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை வேண்டுமா, வேண்டாமா என்ற விவாதம் நடத்தி அதை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும். உலக நாடுகள் பலவற்றில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை உள்ளது. சின்னம் மட்டும் இருக்கும். மக்கள் அதற்கு ஓட்டு போட வேண்டும்.

விகிதாச்சார அடிப்படையில் அதிக ஓட்டுகள் பெற்ற கட்சிகளுக்கு பதவிகள் ஒதுக்கப்படும். கட்சியின் தலைமையே எம்.பி., எம்.எல்.ஏக்களை தேர்வு செய்யலாம். இந்த முறை வந்தால் அரசுக்கும், வேட்பாளர்களுக்கும், கட்சிக்கும் தேர்தல் செலவு ஏற்படாது.

இது தொடர்பாக ஆய்வு செய்த இந்திரஜித் குப்தா கமிட்டியின் பரிந்துரையை மத்திய அரசு நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும். ஓட்டுப் போடுவதை கட்டாயமாக்க வேண்டும். ஓட்டு போடாதவர்கள் ரேஷன் கார்டை ரத்து செய்ய வேண்டும். இப்படி 30, 40 சீர்திருத்த பட்டியலுடன், உச்சநீதிமன்றத்தில் நான் தொடுத்த வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது. 

---

*திமுக கூட்டணியில், பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் இடம் பெறாமல் போனதால் நீங்கள் ஏமாற்றம் அடைந்தீர்களா?*

எந்த ஏமாற்றமும் எங்களுக்கு ஏற்படவில்லை. கூட்டணிக்காக 4 தலைவர்கள் வருவர், 4 தலைவர்கள் செல்வர். சில தலைவர்கள் அவர்களுடைய தனிப்பட்ட லாப - நட்ட கணக்குகளுக்காக திமுக கூட்டணியில் சேராமல் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளனர். 

--- 

*திமுக கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு அதிகம் என கருதுகிறீர்களா?*

கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பதை தளபதி ஸ்டாலின் அவர்கள் சிந்தித்து பார்த்து தான் முடிவெடுத்துள்ளார்.

---

*திமுகவுக்கு மக்கள் செல்வாக்கு எப்படி இருக்கிறது?*

இன்று தொட்டு அல்ல. தொடங்கப்பட்ட நாளிலிருந்து திமுக மக்கள் செல்வாக்கு பெற்ற கட்சியாகவே இருக்கிறது.

---

*நீங்கள் பல கட்சிகளுக்கு ஜம்ப், ஆனது பற்றி?*
என் 48 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, நாராயணசாமி நாயுடு போன்றவர்களிடம் பழகியுள்ளேன். பல கட்சிகளில் பணியாற்றியுள்ளேன். அந்தக் கட்சிகள், கூடு கட்டுவதற்கு உதவியாக இருந்துள்ளேன். ஆனால், அந்த கூட்டிலிருந்து ஒரு குச்சி கூட நான் எடுத்து செல்லவில்லை. என் உழைப்பு, அனைத்து கட்சிகளுக்கும் பயன்பட்டுள்ளதே தவிர, எந்த ஒரு பலனும் எனக்கு இல்லை. ஏனென்றால் தகுதியே தடை. என்ன செய்ய?

தேசிய நதிகளை இணைக்கவேண்டுமென்று 1983 முதல் 30 ஆண்டுகள் போராடி 2012 பிப்ரவரி மாதம் வரை வாதாடி இறுதி உத்தரவை பெற்றேன். தமிழகத்தின் பிரச்சனைகளான முல்லை-பெரியாறு, காவிரி, கூடங்குளம், கண்ணகி கோவில் பிரச்சனை, வாக்குரிமை, விவசாயிகள் மீது ஏவப்பட்ட ஜப்தி நடவடிக்கைகளை ரத்து செய்தது, மனித உரிமைகள் பிரச்சனைகள், தமிழக குளம், ஏரி போன்ற நீர்நிலைகள் பாதுகாப்பு, தமிழக சட்ட மேலமை அமைக்க வேண்டும். தூக்கு தண்டனை கூடாது என்று 1983லேயே இரண்டெழுத்து தந்தியை வைத்து தூக்குதண்டனையை, ஜனாதிபதியின் கருணை மனுவை நிராகரித்த பின்னர் நீதிமன்றத்தால் தண்டனையை தடுத்து நிறுத்தியது என்று பல பிரச்சனைகளில் பொதுநல வழக்குகளை முப்பது ஆண்டுகளுக்கு முன்னாளில் இருந்தே நீதிமன்றத்தில் தாக்கல் செய்து உத்தரவுகளை பெற்றதெல்லாம் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. 

இம்மாதிரி செயல்பாடுகள் தான் ஒரு மனிதனுடைய தரத்தையும், தகுதியையும் வெளிப்படுத்தும். தேர்தலில் வெற்றி பெற்றும், எம்.எல்.ஏ, எம்.பி., ஆகியும் பொம்மைகளாக இருப்பதை விட இந்த பணிகளும், எழுத்துப் பணிகளும் திருப்தியும், மகிழ்ச்சியும் அளிக்கிறது. இதுவே எனக்கான அடையாளத்தையும், முகவரியையும் தரும் என்று நம்புகிறேன். மற்றபடி வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று அக்கறையானவர்கள் பலர் என்னிடம் குறிப்பிட்டு பேசினாலும், என்ன செய்ய? இதுதான் இன்றைய நிலைப்பாடு. இந்நிலையில் இதையும் எளிதாக எடுத்துக் கொண்டு கடந்து செல்ல வேண்டும்.

---

*அதிமுக – பா.ஜ.க., கூட்டணி பற்றி உங்கள் கருத்து?*

பா.ஜ.க.,வின் பினாமி தான் அதிமுக அரசு. மாநில அரசின் அதிகாரத்தை டில்லிக்கு தாரைவார்க்கும் விதமாக பவர் ஆஃப் அட்டர்னியே கொடுக்கப்பட்டுள்ளது. அதிமுகவை இயக்குவது பா.ஜ.க., தானே. பாவைக்கூத்து போல அதிமுகவை பா.ஜ.க., ஆட்டிப் படைக்கிறது.

--- 

*மத்தியில் திமுக தயவுடன் காங்கிரஸ் ஆட்சி அமையுமானால், தமிழகத்தில் மீண்டும் மேல்சபை வருமா?*

தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருவரும் தனிப்பட்ட காரணங்களுக்காக மேல்சபை வராமல் முட்டுக்கட்டையாக இருந்தனர். தமிழகத்தில் திமுக ஆட்சியும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும் அமையும் போது நிச்சயம் மேல்சபை வரும். இது தேர்தல் அறிக்கையில் இடம் பெறும்.

#தேர்தல்_திருவிழா
#Indian_Elections
#KSRadhakrishnanpostings 
#KSRpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
17-03-2019

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...