தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் கனிமொழியை ஆதரித்து செயல்வீரர்கள் கூட்டம்.
--------------------------
இன்று கோவில்பட்டி நகரில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் கழக வேட்பாளர் கனிமொழி அவர்களை ஆதரித்து நான் பேசிய பேச்சின் சாரம் வருமாறு,
இந்த கோவில்பட்டி நகருக்கு தாமிரபரணி குடிநீரை 1970களில் வழங்கியவர் கலைஞர். இரண்டாவது பைப்லைன் குடிநீர்த் திட்டத்தையும் கலைஞர் ஆட்சியில் தான் கோவில்பட்டிக்கு கிடைத்தது. இதற்காக நான் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடுத்த பின்னர் தான் கலைஞரின் உத்தரவு இந்த அதிமுக ஆட்சியில் நடைமுறைக்கு வந்தது.
கலைஞர் ஆட்சியில் விவசாயிகள் மீது அன்பு காட்டி செய்த சாதனைகள் அதிகம். இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் இலவச மின்சாரமும், உழவர் சந்தை மற்றும் 7000க்கு மேல் கோடி விவசாயக் கடனையும் ரத்து செய்தார்.
இந்த கோவில்பட்டி விவசாயிகள் போராட்டக் களமாகும். என்னுடைய கிராமத்திலேயே 8 பேர் மீது துப்பாக்கிச் சூடு நடந்தது. ஜெயலலிதா ஆட்சியில் 1992 காலக்கட்டத்தில் 2 பேர் பலியானார்கள். இப்படியெல்லாம் போராடிய விவாசயிகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டியவர்தான் தலைவர் கலைஞர். இது விவசாயிகளின் கேந்திரப் பகுதியாகும்.
எந்த நகராட்சிக்கும் கிடைக்காத வகையில் மத்தியில் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் கோவில்பட்டி நகராட்சிக்கு இரயில்வே மேம்பாலங்கள் மூன்றைக் கட்ட அனுமதி கிடைத்தது. அன்று 1999இல் கலைஞரின் ஆட்சி. அன்றைக்கு நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக மறைந்த தா.கிருட்டிணன் இருந்தார். அந்த மூன்று பாலங்களையும் கட்டுவதற்கான மாநில அரசின் பங்குத் தொகையை வழங்க கலைஞர் உத்தரவிட்டதெல்லாம் இன்றைக்கும் மனக்கண்ணில் தெரிகிறது.
நமது தலைவர் கலைஞர் அவர்கள் திமுக துவங்கியவுடன் அன்று ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் திமுக கொடியை அறிமுகம் செய்து ஏற்றி வைத்த இடம் இந்த கோவில்பட்டி. இன்றைக்கும் தெற்கு பஜார் ஜில் விலாஸ் சோடா பான உற்பத்தி நிலையத்தின் அருகில் தான் அந்த கொடியை தலைவர் கலைஞர் அவர்கள் அன்று ஏற்றி வைத்தார்.
அதேபோல திருநெல்வேலி மாவட்ட முதல் மாநாட்டையும் தலைவர் கலைஞர் தான் கோவில்பட்டியில் நடத்தினார்.
இன்றைக்கு நாராயணசாமி திரையரங்கம் இருக்கும் இடத்தில் முதல் உருவாக்க மாநாடு அன்றைக்கு அண்ணா, கலைஞர், ஈ.வி.கே. சம்பத், நாவலர் போன்ற முக்கியத் தலைவர்களெல்லாம் அங்கே பங்கேற்றனர். எனவே கோவில்பட்டிக்கும் திமுகவிற்கும் அழிக்கமுடியாத தொடர்புண்டு. இன்றைக்கு இங்கே கலைஞரின் புதல்வி களத்தில் உள்ளார்.
கவிஞர் கனிமொழி இந்த தூத்துக்குடி வட்டாரத்திற்கு புதியவர் அல்ல. திருவைகுண்டம் பகுதி கிளாக்குளத்தில் புனிதா என்ற பெண் பாலியல் பலாத்காரத்தை உட்பட்டு உயிர் இழந்தார். அதை கண்டித்து இந்த மண்ணுக்கே வந்து போராடியவர்.
இங்குள்ள வெங்கடேசபுரம் என்ற கிராமத்தை தத்தெடுத்து அந்த கிராமத்தின் தேவைகளை உணர்ந்து கடமையாற்றியவர்.
ஸ்டெர்லைட் போராட்டத்தில் பலர் துப்பாக்கிச் சூட்டில் சாகடிக்கப்பட்டதை குறித்து ஹென்றி டீபன் அறிக்கையை தூத்துக்குடி நகருக்கே வந்து வெளியிட்டார்.
ஏற்கனவே நான் விரிவாக தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கான தேவை என்ன என்பதை ஒரு நீண்ட பட்டியலாக தொகுதி தேர்தல் பிரகடனமாக பட்டியலிட்டேன். அதை நிச்சயம் பரிசீலித்து அதற்கான முயற்சிகளை மேற்கொள்வார் என்றேன்.
1. கோவில்பட்டி நகருக்கு இரண்டாவது குடிநீர்த் திட்டம், நீண்டகாலமான கோரிக்கையாகும்.
2. உச்சநீதிமன்றம் தேசிய நதிகளை இணைக்க வேண்டுமென்று 1983இல் நான் தொடர்ந்த பொதுநல வழக்கின்படி வழக்குக்கு தீர்ப்பளித்தது. அதன் ஒரு பகுதியாக கேரளாவின் அச்சன்கோவில் - பம்பை – தமிழகத்தின் வைப்பாற்றில் இணைக்கும் திட்டமாகும். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டம் பயன்பெறும். சாத்தூர் வைப்பாற்றில், அச்சன்கோவில் பம்பையை இணைத்து நீர்வரத்தின் போது அதற்கு தெற்குமுகமாக ஒரு வாய்க்கால் வெட்டப்பட்டால், எட்டையபுரம், கோவில்பட்டி விவசாயிகளுக்கு பாசன வசதி கிடைக்கும். குடிநீருக்கும் தண்ணீர் கிடைக்கும்.
3. வானம் பார்த்த கரிசல் கந்தக பூமியான விளாத்திக்குளத்தில் விளையும் மிளகாய், சின்ன வெங்காயம் மற்றும் விவசாய விளை பொருட்களை பாதுகாக்க குளிர்பதனம் செய்யப்பட்ட சேமிப்பு கிட்டங்கிகள் அமைக்க வேண்டும்.
4. நீண்டகாலமாக கோவில்பட்டி, கயத்தாறு பயன்பாட்டில் இல்லாத விமான நிலையங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவந்து இந்த வட்டார இளைஞர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
5. கோவில்பட்டி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும்.
6. கோவில்பட்டி நகருக்கு முழுமையாக பாதாள சாக்கடை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
7. வானம் பார்த்த விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு கட்டுப்படியான விலையை நிர்ணயிக்க வேண்டும். விவசாயிகளுடைய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
8. அனைத்து இரயில்களும் கோவில்பட்டி இரயில் நிலையத்தில் நின்று செல்லவேண்டும்.
9. ஹாக்கிப்பட்டி என்று அழைக்கும் கோவில்பட்டியில் ஹாக்கி விளையாட்டு கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே நடந்து வந்தது. அகில இந்திய வகையில் இந்த போட்டிகள் கோவில்பட்டியில் நடைபெறும். மேலும் அதை உலகத் தரத்திற்கு எடுத்துசெல்ல வேண்டும்.
10. கோவில்பட்டி, அதன் சுற்று வட்டாரங்களில் நடக்கும் தீப்பெட்டித் தொழிலில் பிரச்சனைகளை களைந்து அந்த தொழில் சிறக்க வேண்டும்.
11. கோவில்பட்டியில் பருத்தி அரவைத் தொழிலையும், நெசவாலைகளையும் பாதுகாக்க வேண்டும்.
12. எட்டையபுரத்தில் பாரதி, உமறுப்புலவர், நாவலர் சோமசுந்தரபாரதி, முத்துசாமி தீட்சிதர் போன்ற ஆளுமைகள் உலாவிய மண். இங்கு நாட்டுப்புறக் கலைகளை ஆய்வு செய்யும் மையத்தை அமைக்க வேண்டும். தேவராட்டம், வில்இசை போன்ற நாட்டுப்புறக் கலைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கரிசல் இலக்கிய ஆய்வுகளும் இங்கே மேற்கொள்ள வேண்டும்.
13. தியாகராஜ பாகவதர், கே.பி.சுந்தராம்பாள் போன்றோரால் மதிக்கப்பட்டு அவர்களுக்கு முன்னோடியாக விளங்கிய விளாத்திக்குளம் சாமிகளை பற்றிய நினைவைப் போற்றும் வகையில் விளாத்திக்குளத்தில் அவரது நினைவிடத்தில் அவரது வரலாற்றை பதிவு செய் வேண்டும்.
14. விவசாயிகளின் தலைவராக விளங்கிய நாராயணசாமி நாயுடு கடந்த 1984இல் கோவில்பட்டியில் பயணியர் விடுதியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மரணமடைந்தார். நீண்டகாலமாக அவருடைய சிலையை வைக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் எழுந்தும் இதுவரை எந்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
15. தூத்துக்குடியில் பத்திரிக்கை உலகின் முன்னோடியாகத் திகழ்ந்த சி.பா.ஆதித்தனாரைக் குறித்து ஆய்வுகளை செய்ய நடவடிக்கைகள் வேண்டும்.
16. விடுதலைப் போர் வீரர் வ.உ.சி., தனது இறுதி நாட்களில் கோவில்பட்டியில் வாழ்ந்த பகுதியில் உள்ள தெருவின் பெயரை அவரது நினைவைப் போற்றும் வகையில் நடவடிக்கைகள் வேண்டும்.
17. சென்னையில் இருந்து குமரி முனை வரும் கிழக்கு கடற்கரைச் சாலை இராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்ட மணப்பாடை தாண்டியும் சாலைப் பணிகள் சரியாக அமையவில்லை. அவை மேலும் நவீனப்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
18. காவிரி டெல்டாவை நாசம் செய்துவரும் ஹைட்ரோ கார்பன் திட்டம் இராமாநாதபுரத்தில் வழியாக திருந்செந்தூர் வரை செயல்படுத்தும் திட்டத்தை தடுக்க வேண்டும்.
19. மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை, எட்டையபுரம், தூத்துக்குடி, திருச்செந்தூர் வழியாக கன்னியாகுமரி வரை செல்ல தொடர்வண்டி இருப்புப் பாதை அமைக்கும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும்.
20. குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. அதை நிறைவேற்ற வேண்டும்..
21. தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பாறு, சிப்பிக்குளம், தூத்துக்குடி, பழைய காயல், புன்னைக்காயல், வீரபாண்டியப்பட்டணம், அமலிநகர், கொம்புதுறை, ஆலந்தலை, மணப்பாடு, பெரியதாழை போன்ற மீனவர் பகுதிகளில் மீன்பிடிக்கும் திட்டங்களை குறித்து விரிவான செயல்பாடுகளையும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.
22. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம், சாத்தான்குளம் பகுதிகள் மூன்றில் ஒருபங்கான செம்மண்ணான தேரிக்காடு இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும்
23. கடலோரங்களில் கடல் ஓதங்களினால் சராசரியாக 1 மீட்டர் அளவுக்குத்தான் நீர்மட்டம் உயரவோ அல்லது குறையவோ செய்கிறது. தூத்துக்குடி பக்கில் ஓடை இவைகளில் சாக்கடை நீர் கடலில் கலக்காமல், உயர் ஓதத்தின் போது பின்னோக்கிப் போகின்றன. இந்த பக்கில் ஓடை பிரச்சனை தூத்துக்குடி மாநகராட்சியில் நீண்டகாலமாக இருக்கின்ற பிரச்சனை.
24. பனை மரங்ளையும், பனைத் தொழிலை பாதுகாக்கவும், உரிய நடவடிக்கைகள் வேண்டும்
25. தாமிரபரணி நதி வங்கக்கடலில் சேரும் புன்னைக்காயல் முகத்துவாரப் பகுதிகள் சீர்செய்ய வேண்டும்.
26. ஸ்டெர்லைட் போன்ற நச்சைக் கக்கும் ஆலைகளை ஒருபோதும் இந்த மண்ணில் வர அனுமதிக்க கூடாது.
27. ஆதிச்சநல்லூர் அகழாய்வு செய்த சத்தியமூர்த்திக் குழு அறிக்கைகயை நீண்டகாலமாக மத்திய அரசு மேல் நடவடிக்கை எடுக்காமல் இருகிறது. இனியும் தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
28. கட்டபொம்மன் சிலை சென்னையில் நிறுவ வேண்டும்.
29. தூத்துக்குடியில் சரக்கு வாகன நிறுத்தவதற்குத் தனி முனையம் ஏற்படுத்த வேண்டும்.
30. திருவைகுண்டத்திற்கும் – ஆத்தூருக்கும் இடையே தாமிரபரணியில் ஓர் அணை கட்ட வேண்டும்.
31. காயல்பட்டினத்திற்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும்.
32. தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி நதியில் உள்ள வடகால், தென்கால், மருது மேலக்கால், கீழக்கால் வாய்க்காலில் உள்ள 53 குளங்களையும் தூர்வார வேண்டும்.
33. திருநெல்வேலி, திருச்செந்தூர் தேசிய நெடுஞ்சாலையை விரிவுபடுத்த வேண்டும்.
34. தூத்துக்குடி கடற்கரை அருகேயுள்ள முயல் தீவு போன்ற சிறு தீவுகள் சுற்றுச் சூழலை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
35. தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லுர், வைணவ நவதிருப்பதிகள், திருச்செந்தூர் செந்திலாண்டவர் ஆலயம், குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழா, தூத்துக்குடி பனிமயமாதா தேவாலயம், பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டை, எட்டையபுரம் பாரதியின் நினைவில்லம், மணப்பாடு புனித சவேரியார் உலாவிய கடற்கரை, தேரிக்காடு போன்ற பகுதிகளை சுற்றுலாத் தலங்களாக உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
36. கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீட்டு அங்கீகாரம் வழக்கப்பட வேண்டும்.
எனவே கனிமொழியை நாம் ஆதரித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவைக்க வேண்டும்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
27-03-2019
#தூத்துக்குடி_தொகுதி
#KSRPostings
#KSRadhakrishnanPostings
No comments:
Post a Comment