நினைத்து முலைவழியே நின்றுபால் சோர,
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்,
பனித்தலை வீழநின் வாசல் கடைபற்றி,
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற,
மனத்துக் கினியானைப் பாடவும் நீ வாய்திறவாய்,
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்,
அனைத்திலத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்.
--------------------
பதவுரை
இளம் – இளையதான, கன்று – கன்றுகளையுடைய, எருமை – எருமைகளானவை (பால் கறப்பாரில்லாமையால் முலைகடுத்து), கனைத்து – கதறிக் கொண்டு, கன்றுக்கு – தன் முலைக்கடுப்புக் கிடக்க, கன்று என்படுகிறதோ என்று கன்றுகள் விஷயத்தில், இரங்கி – இரக்கமுற்று, நினைத்து – கன்று ஊட்டுவதாக நினைக்கையாலே, முலைவழியே – முலைகளின் வழியாக, நின்று – இடைவிடாமல், பால்சோர – பால் பெருக (அத்தாலே), இல்லம் – வீடுகளையெல்லாம், நனைத்து – ஈரமாக்கி, சேறாக்கும் – சேறாகபண்ணும், நற்செல்வன் – நல்ல ஸம்பத்தை உடைய ஸஹோதரியானவளே, தலை – எங்கள் தலையிலே, பனி – பனியானது, வீழ – விழும்படியாக, நின்வாசல் – உன் வாசக்காலின், கடைபற்றி – தண்டயத்தைப் பற்றிக்கொண்டு, சினத்தினால் – ‘திருவடியை நலிந்தான்’ என்கிற கோபத்தினாலே, தென் – அழகிய, இலங்கைக்கோமானை – இலங்கையிலுள்ள ராஷஸர்களுக்கு அரசனான ராவணனை, செற்ற – நிரஸித்தவனாய், மனத்துக்கு – மநஸ்ஸுக்கு, இனியானை – போக்யனாயிருக்கும் (சக்கரவர்த்தித் திருமகனை), பாடவும் – பாடாநிற்கச் செய்தேயும், நீ வாய்திறவாய் – நீ வாய் திறந்து பேசுகிறிலே, இனித்தான் – இனியாயினும், எழுந்திராய் – எழுந்திருக்க வேணும், ஈது – இது, என்ன – என்ன, பேருறக்கம் – பெருந்தூக்கம் (நாங்கள் திரண்டுவந்து உன் வாசலிலே நிற்கிறமையை), அனைத்து, இல்லத்தாரும் – ஊரார் எல்லாரும், அறிந்து – அறிந்தார்கள் (ஆகையால் எழுந்திராய் என்கிறார்கள்).
”தங்கள் கன்றுகளின் பசிக்குரலினைக் கேட்டவுடன் எருமைகள் தங்கள் மடியில் பாலைச் சுரந்தபடி அங்குமிங்கும் செல்கின்றன..
அப்படிச் சொரிந்த பால் இல்லத்து வாசல்களையெல்லாம் சேறாக்கும் அளவு பால்வலமிக்க வீட்டை உடையவனது தங்கையே…!
கொட்டுகின்ற பனி எங்கள் தலையில் விழ, உனது வீட்டு தலைவாசலில் நாங்கள் காத்து நிற்கின்றோம்..
சீதையைக் கவர்ந்து சென்ற இராவணனின் மீது கோபம் கொண்டு அவனை அழித்த இராமனின் பெருமையைப் பாடுகின்றோம்..
நீயே பேசாமல் இன்னமும் உறங்கிக் கொண்டிருக்கிறாய்..அனைவரும் எழுந்தப் பிறகும், உனக்கு மட்டும் என்ன பேருறக்கம்…? இப்போதே எழுந்திராய்..”
என உரங்கும் தோழியைத் துயிலெழுப்பிப் பாடுகிறாள் கோதை..!
--------------
இப்பாட்டுக்கு இராமனைப் பிரியாத ‘கைங்கர்ய லட்சுமி’ யான இலக்குவனைப் போலக் கண்ணனைப் பிரியாது பணிசெய்வான் ஒருவனுடைய தங்கையை எழுப்புவதாக அமைகிறது.
இளங்கன்றையுடைய எருமைகள் கண்ணனுக்குச் சேவகம் புரிபவன் கறக்க வாராமையால் முலைகடுத்துக் கதறுகிறபோது தம் கன்றுகளை எண்ணி, அவை மடியிலே வாய்வைத்ததாய்க் கருதி மயங்கும். அக்கருத்தல் தானாப் பால்சொரியும் திருமையில் அருவிகள் போல் சொரியும் அப்பாலால் முற்றமெல்லாம் சேறாகிவிடும்.
‘பனியானது எம் தலைமேல் பொழியுபடி உன்வாசல் நிலையைப் பற்றி நிற்கின்றோம்’ என்றனர். அப்போது அவல் எழுந்து வாராமையால், தங்கள் பரந்தாமனைப் பாடும் அழகைச் சொன்னார்கள். ‘எல்லார்க்கும் கருணை காட்டும் இயல்புடையவன் அடியார் பொருட்டுச் சினங்கொண்டு இலங்கை வேந்தன் இராவணனை அழித்தான். அவ்விராமனவதார மாண்பினைச் செப்பி அந்த மனத்துக்கு இனியவனைப் பாடி நிற்கின்றோம். இதனைக் கேட்டும் உறங்குகின்றாயே, வாய்திறக்க மாட்டாமல் இப்படியும் ஒரு பேருறக்கம்? அண்டை வீட்டாரும் எங்கள் அழைப்பொலி கேட்டு எழ நீ படுத்து கிடப்பது முறையன்று. இனியேனும் எழுவாயாக’ என்று வேண்டி நின்றனர்.
‘எருமை கறக்கப்படாமல் கடுப்புற்றுக் கதறுவது போன்று நாங்கள் உன் வாசலில் படாத பாடுபட்டு வருந்தும்படி செய்கிறாயே’ என்று குறிப்பால் கூறினார்கள்.
கறக்கும் கைவழியுமின்றிக் கன்றின் வாய் வழியுமின்றிக் கன்றின் நினைப்பாலே எருமைகள் பால் சொரிந்தன என்பது அவற்றின் சிறப்பை உணர்த்தும். கடலில் சென்று முகந்து களைப்பெய்திப் பின் சொரிவது மேகம். அவ்வாறின்றி நினைவு கொண்டே ஊற்றாகப் பால் சுரப்பன இவ்வெருமைகள். அவன் எருமைகள் கறவாது காவாது விட்டாற் போல நீயும் என் விண்ணப்பம் கேட்டு உதவாது போனாய் எனச் சுட்டுகின்றார்கள்.
மேலே மழை வெள்ளம்; கீழே பால் வெள்ளம்; இடையில் எங்கள் மனமெல்லாம் மால்வெள்ளம் சுழித்தோட நிற்கின்றோம் என்று கரைகாணாது மயங்கும் நிலையை உணர்த்துகின்றனர். அதனால் அவள் வீட்டு நிலைக்கால் பற்றி நிற்பதன் காரணத்தையும் கூறுகின்றார்கள்.
கண்ணன் திருவடிச் சேவை என்னும் செல்வம் பெற்றவல் என்பதால் ‘நற்செல்வன்’ எனப் புகழ்ந்துரைக்கின்றார்கள். இங்கு ஆய்ப்பாடியில் இராமவதாரப் பெருமை பேசுவதற்குக் காரணத்தையும் செப்பலாம். பெண்களுக்கு நெஞ்சுசுடும்படி செய்கிற கண்ணனைப் போலன்றிப் பெண் பிறந்தார்க்குத் தஞ்சமானவன் இராமபிரான் என்பதால் சொல்கிறார்கள். அதனால் ஏகதார விரதனாகப் பெண் குலத்திற்கே இனிமை தந்தமையால் ‘மனத்துக்கு இனியான்’ என்று மொழிந்தார்கள். அவன் புகழ் பாடியும் அவள் வாய் திறக்கவில்லையே என ஆதங்கம் கொள்கிறார்கள்.
எங்களுக்காக எழவில்லையாயினும் உன் பெறலரும் பேற்றுக்காகவேனும் எழுந்திருக்க வேண்டாமோ?
உலமெல்லாம் நலம் பெறுதலை அகத்தில் வைத்துக்கொண்டு அனைத்துமறிந்தவனாய் அறிதுயிலில் உறங்குவான் பெருமாள். காலம் குறித்துச் சொன்னால் அறிந்து துயில் நீக்கும் உறக்கத்துக்கு உரியவர்கள் சம்சாரிகள். இந்த இரண்டுக்கும் ஒவ்வாத உறக்கம் கொண்டாயே என்று சுட்டிக்காட்ட ‘ஈதென்ன பேருறக்கம்?’ என வினவினார்கள்.
அனைவரும் வந்து வாசலில் கூடி நிற்பதை அண்டை அயலார் உணர வேண்டும் என்பது உன் கருத்தாகில் அதுவும் நிறைவேறி விட்டது. அனைத்தில்லாத்தாரும் அறிந்துவிட்டார்கள். உன் காரணமாக அனைவருமே கண்ணனாகின்ற சம்பத்தை அறிந்துவிடார்கள். இனி இரகசியம் ஏதுமில்லை என்றும் உணர்த்தி ஆயர் செல்வமகளை அன்போடு எழுந்திருக்க வேண்டுகின்றார்கள் தோழிப் பெண்கள். ‘மனதுக்கு இனியான்’ என்ற தொடர் இப்பாசுரத்தால் நெஞ்சில் இனிக்கிறது.
கே.எஸ். இராதா கிருஷ்ணன்
26-12-2020
No comments:
Post a Comment