-----------------------
எல்லேயிளங்கிளியே ! இன்னமுறங்குதியோ ?
சில்லென்றழையேன்மின் நங்கைமீர் ! போதர்கின்றேன்,
வல்லையுன்கட்டுரைகள் பண்டேயுன்வாயறிதும்,
வல்லீர்கள்நீங்களே நானே தானாயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்னவேறுடையை,
எல்லோரும்போந்தாரோ போந்தார்போந்தெண்ணிக்கொள்,
வல்லானைகொன்றானை மாற்றாரைமாற்றழிக்க –
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.
----------------
பதவுரை
எல்லே – ஏ ஸகியே, இளங்கிளியே – இளங்கிளி போன்ற சொற்களையுடையவளே, இன்னம் – நாங்கள் உணர்ந்து வந்த பின்னும், உறங்குதியோ – தூங்குவது ந்யாயமோ என்று எழுப்ப, நங்கைமீர் – பூர்னைகளானவர்களே, சில்என்று – சிலுகுசிலுகென்று அழைக்காதீர்கள், போதருகின்றேன் – புறப்பட்டு வருகிறேன் என்ன, வல்லை – பேச்சில் ஸமர்த்தையான, உன் – உனது, கட்டுரைகள் – உறுதிமொழியையும், உன் – உனது, வாய் – பேச்சுவல்லமையையும், பண்டே – முன்பே, அறிதும் – அறிவோம் என்ன, நீங்களே – நீங்களே, வல்லீர்கள் – பேசுமாற்றல் படைத்தவர்கள், நானேதான் – நாந்தானே, ஆயிடுக – ஆகக்கடவேன் என்று கூறி உங்களுக்குச் செய்யவேண்டுவதென்ன என்று வினவ, நீ – நீ, ஒல்லை – சடக்கெனப்புறப்பட்டு, போதாய் – எங்கள் திரளிலே புகவேணும் என்ன ஆகில் புறப்படாநின்றேன் என்று சொல்ல, உனக்குவேறு – உனக்கு வேறே, என்ன உடையை – எந்த ப்ரயோஜநத்தையுடைத் தாயிருக்கிறாய் என்று கேட்க, எல்லாரும் – உணர அறியாத சிறுமியரும், போந்தாரே – உணர்ந்து வந்தனரோ என்ன, போந்தார் – உன்னைக்காண உன் வாசலிலே கிடந்தார்கள் என்ன, போந்து புறப்பட்டுவந்து எண்ணிக்கொள் – எண்ணிக்கொள் என்ன நாமெல்லாரும் கூடினால் செய்வதென் என்ன, வல் – வலிய, ஆனை – குவலயாபீடமென்னும் யானையை கொன்றானை கொன்றவனாய், மாற்றாரை – பகைவரான கம்ஸன் முதலியவர்களுடைய, மாற்று – ‘நம்மை வெல்பவரில்லை’ என்ற மதிப்பை – அழிக்கவல்லானை – அழிப்பதற்கு ஸமர்த்தனாய், மாயனை – பெண்கள் மாயையில் அகப்பட்ட ஆச்சர்ய பூதனானவனை, பாட – பாடுவதற்காக என்கிறார்கள்.
அதிகாலையில் தோழியைத் துயிலெழுப்ப வந்த பெண்களுக்கும், எழாமல் வீட்டிற்குள் இருப்பவளுக்குமான உறையாடல் தான் இன்றைய பாடல்.
‘இளங்கிளியைப் போன்றவளே, இன்னுமா உறங்குகிறாய்.?’ என்று எழுப்ப வந்தவர்களில் ஒருத்தி கேட்க, ‘கேலி வேண்டாம். இதோ கிளம்பிவிட்டேன்.!’ என்கிறாள் உள்ளே இருப்பவள்.
அவள் எழவில்லை என்பது தெரிந்தால், ‘வாய்ப்பேச்சில் வல்லவளே, உன்னைத் தெரியாதா எங்களுக்கு.!’ என்று ஒருத்தி வம்பிழுக்க, ‘வாய் பேசுவதில் வல்லவர்கள் நீங்களா? நானா? சரி, நானாகவே இருக்கட்டும். என்ன வேண்டும் உங்களுக்கு?’ என்கிறாள்.
அவள் கோபம் கொண்டிருப்பதாக எண்ணிய தோழியர் சமாதானமாக, ‘சரி சரி…விரைந்து வா..கோவிலுக்குச் செல்வோம்…! என்றழைக்க, கிளம்பாத இவளோ ‘எல்லோரும் வந்தாகிவிட்டதா?’ என்று கேட்கிறாள்.
‘எல்லோரும் வந்துவிட்டார்கள். நீயும் வந்தால், அந்த வலிமையான யானையைச் சாய்த்தவனை, மாயச்செயல்கள் செய்யும் கண்ணனை நாம் மகிழ்வுடன் பாடலாம்.!’ என தோழியை அழைப்பதாக பாடலைப் பதிவு செய்துள்ளாள் கோதை..!
பாவை நோன்பிருக்கும் மங்கையரை எல்லாம் ஒருசேரப் பார்க்க விரும்பியவள் ஒருத்தியை எழுப்புவதாக அமைகிறது இப்பதினைந்தாம் பாசுரம்.
சென்ற பாசுரத்தில் ‘சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்’ என்று பாடக்கேட்டு மற்றோர் இல்லத்துப் பெண்பிள்ளை அப்பாசுரத்தை மெல்லிய குரலால் பாட, பாவை நோன்புக்கு அழைக்க வந்தோர் அவள் இல்லத்துக்கு அப்பாடலே வழி காட்ட வருகின்றனர்.
அவள் குரலினிமையை ‘என்னே’ (எல்லே) என்று வியந்தவர்களாய் அவளை ‘இளங்கிளியே’ என அழைக்கின்றனர். அழைக்க வந்தோர் கிளிகள் எனில் இவள் அவர்களிலும் இளையவளாய், பசுமைக்கும் பேச்சுக்கும் இளங்கிளியாய் அமைந்திருக்கின்றாள்.
‘அம்மம்மா’ உன் வாய்ப்பேச்சின் தன்மையை நாங்கள் இன்றுதானா கேட்கிறோம்? பண்டே அறிவோம். எங்கள் மீது குற்றம் சுமத்தும் உன் உரையழகும் அறிவோம் என்றார்கள் அழைக்க வந்த பெண்கள்.
‘என் வீட்டு வாசலுக்கே வந்து இத்தனையும் பேசுகிற வல்லமை பெற்றவர்கள் நீங்கள்தான். என்னைக் குற்றம் கூறுக்கிறீகளாயின் சரி, அவ்வாறே இருந்து விட்டுப் போகட்டும்’ என்று வைணவ இலக்கணப்படிப் பிறர் குற்றமும் தன் குற்றமாக ஏற்றுக்கொண்டாள் இளங்கிளியாள். அதன்பின் ‘இப்போது நான் செய்யத்தக்கது யாது?’ எனக் கேட்டாள்.
‘நீதான் உன் குற்றத்தை ஏற்றுக்கொண்டாயே, அதனால் சட்டென்று இக்கூட்டத்துக்குள் வந்து புகுந்து கொள். ஐந்து இலட்சம் இடைக்குல மாதர்களை விட்டு, நீ மட்டும் தனித்து நுகர்தலும் உண்டோ?’ என அவர்கள் மொழிந்தார்கள்.
இதுகேட்ட அம்மங்கை ‘பரதனுக்கு எதிராக அயோத்தியில் அம்பு பூட்டிய இலக்குவனிடம், அவனுக்கு நாட்டிலே தேட்டமில்லை. உனக்கு வேண்டுமாயின் வைத்துக்கொள்’ என்று இராகவன் சொன்னபோது அவன் அதிர்ந்து போனாற்போல் அதிர்ந்தாள். அதனால், ‘சிறுமியர் உட்பட எல்லாரும் வரட்டுமென்றுதானே காத்திருந்தேன். எல்லாரும் வந்தாரோ?’ என்று நொந்து கேட்டாள்.
‘வந்து விட்டார்கள், நீயே வந்து எண்ணிப் பார்த்துக்கொள்’ என்றார்கள் அவர்கள். ‘இனி நாம் அனைவருமாய்யாது செய்யவேண்டும்?’ என அவள் வினாவி நிற்க அவர்கள் விடையாயிறுத்தார்கள். குவலயாபீடமென்னும் வலிய யானையை அழித்தவனும், பகையழிக்கு திறமுடையவனும், நமக்குத் தோற்றாற்போல மாயம் செய்யும் இயல்புடையனுமான கண்ணனைப் பாடிப் பரவுவோமாக’ என்று ஆய்ச்சியர் கூறி அழைத்தார்கள். கண்ணனோடு பழகிக் கலந்தமையால் ‘பசகு பசகு’ என்று உடல் பசந்து, வாயும் சிவந்து விளங்கியதால் இளங்கிளியே என்றார்களாம்.
வல்லானைக் கொன்றது போல் நம் செருக்கை அழித்து, மல்லாரை வென்றது போல் நமக்கும் அவனுக்கும் இடைசேர ஒட்டாதார் இயல்பைத் துடைத்து, நமக்குத் தோற்பது போல்தான் வெல்லும் மாயமுடையான் என்று கண்ணனைச் சிறப்பித்து கூறுகின்றார்கள்.
வைணவ நெறியில் ஒருவர் தவிர்ந்தாலும் பகவானை உகந்து மகிழும் அனுபவம் பூர்த்தியாகாதென்னும் பாகவதப் பெரும்பண்பாட்டினால்தான் ‘எல்லாரும் வந்தாரோ?’ என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. இப்பேரன்பின் பெருக்கமாய், நெருக்கமாய் எழுந்தது இப்பாசுரம்.
No comments:
Post a Comment