------------------------
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்,
நந்தகோபாலன் மருமகளே ! நப்பின்னாய் !
கந்தம் கமழும் குழலீ ! கடைதிறவாய்,
வந்தெங்கும் கோழி அழைத்தனகாண், மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்,
பந்தார் விரலி ! உன் மைத்துனன் பேர்பாட,
செந்தாமரைக்கையால் சீரார் வளையொலிப்ப,
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்,
----------------
பதவுரை
உந்து – பெருகுகிற, மத – மதநீரையுடைய, களிற்றன் – மத்தயானையோடு, ஓடாத – எதிர்த்துத் தோல்வியில்லாத, தோள்வலியன் – புஜபலவானான, நந்தகோபாலன் – ஸ்ரீநந்த கோபருடைய, மருமகளே – ஸ்நுஷையே என்று கூற அவள், ஸ்ரீ க்ருஷ்ணன் அவதரித்த பிறகு நந்தகோபனுடைய மருமகளல்லாதார் யார் என்று பேசாதிருக்க, நப்பினாய் – நப்பினைப் பிராட்டியே !, கந்தம் – பரிமளம், கமழும் – வீசும், குழலீ – கூந்தலையுடையவளே, கடை – தாழ்ப்பாளை, திறவாய் – திற என்று கூறியெழுப்ப நடுநிசியில் வந்து இவ்வாறு எழுப்புகிறீர்களே நானெழுந்து வருகைக்குப் போது விடிந்துவிட்டதோ என்று கேட்க, கோழி – கோழி, வந்து – துயிலுணர்ந்து வந்து, எங்கும் – எல்லாரிடத்திலும், அழைத்தனகாண் – கூவுகின்றது, காண்பாய், அன்றியும், மாதவிப்பந்தல் மேல் – குருக்கத்திக் கொடிகளாலான பந்தலின் மீது உறங்கும். குயிலினங்கள் – குயிற்கூட்டம், பல்கால் – இடைவிடாமல், கூவினகாண் – கூவுகின்றன என்று எழுப்ப அவள் என்ன கார்யத்திற்காகக் கூப்பிடுகிறீர்கள் என்ன, பந்து – பந்து, ஆர் – பொருந்திய, விரலி – விரல்களையுடையவளே !, உன் மைத்துனன் – உன் கணவன், பேர் – பெயரை, பாட – பாடுவதற்காக, சீர் ஆர் – அழகுமிக்க, வளை – சூடகம் தோள்வளை முதலிய வளைகள், ஒலிப்ப – ஒலிக்கும்படி, வந்து – நடந்துவந்து, மகிழ்ந்து – ஸந்தோஷித்து, செம் – சிவந்த, தாமரை – தாமரைபோன்ற, கையால் – கையாலே திறவாய் கதவைத் திறவாய்.
“மதங்கொண்ட யானையைப்போல், வலிமை உடையவரும், போர்க்களத்தில் புறமுதுகுக் காட்டி ஓடாதவருமான ஸ்ரீநந்தகோபரின் மருமகளே..!
நப்பின்னையே..! நறுமணம் வீசும் கூந்தலைக் கொண்டவெளே…!
எழுந்து வந்து உனது வாசற்கதவைத் திறப்பாயாக.! உதயமாவதற்கு அடையாளமாக, அனைத்து இடங்களிலும் கோழிகள் கூவி அழைக்கின்றன… மாதவிக்கொடி படர்ந்த பந்தலின் மேல், குயில்கள் பலமுறை கூவுகின்றன..
இவை அனைத்தையும் வந்து பார்ப்பாயாக.!
பூப்பந்தைப்போல் மென்மையான விரல்களைக் கொண்டிருப்பவளே.!
எங்களுக்காக எழுந்து வந்து, அழகிய வளையல்கள் ஒலித்திடும் உனது செந்தாமரைக் கைகளால் மணிக்கதவினைத் திறந்து எங்களை மகிழ்விப்பாயாக..!”
என்று பாடுகிறாள் கோதை…!
முன் பாடலின் குறிப்பிட்டவாறு அன்பினால் எழுப்பினவிடத்திலும் அவர்கள் எழுந்திராமையினால் தங்களுக்கு அருள்செய்து ஆட்கொள்ளும் நப்பின்னைப் பிராட்டியை எழுப்புகிறார்கள்.
பிராட்டியை விரும்பாமல் அண்ணலைப் பற்றி நின்ற சூர்ப்பணகையும் சீரழிந்தாள். பெருமாளை விரும்பாமல் பிராட்டியைப் பற்றி நின்ற இராவணனும் சீரழிந்தான். இருவரையும் பற்றி நின்றால் வீடணனைப் போல் வாழ்வுறலாம், ஆதலால் நப்பின்னைப் பிராட்டியை நாடி வந்தார்கள்.
பெருகும் மதம் படைத்த களிறு போன்ற வலிமையை உடையவனும் களிறுகளையும் தள்ளவல்ல ஆற்றல் படைத்தவனுமாகத் திகழ்பவன் நந்தகோபன். எவருக்கும் பின்னிடாத தோள்வலிமை உடையவன் அவன். கம்சனின் நிழலிலே ஆயர்பாடியில் கண்ணனைக் காத்து வருகிற வலிமை உடையவன் அல்லனோ நந்தகோபன்?
மருமகளே என்றழைத்தால் நந்தகோபனுக்கு எத்தனையோ மருமகள்மார், இந்த ஆயர்பாடியில், நமக்கென்ன என்று நப்பின்னை கிடந்தாளாம். ஆதலாலே ‘நப்பின்னாய்’ என்று பெயர் சொல்லிக் கூப்பிட்டார்கள்.
அவள் உரையாடாமல் கிடக்க, ‘நீ பேசாமையால் உன் இருப்பை அறியாத போய் விடுவோமோ? உன் நறுமணக் குழலின் வாசனை எங்கும் வீசுகிறதே’ என்கிறார்கள். இனிய மணத்துக்கும் நிறம் கொடுக்கும் பூங்குழலாள் அன்றோ?
சாத்திய கதவுக்கப்பாலிருந்து கசிகிற நறுமண வெளிச்சத்தைத் தாழ் திறந்து விட வருக என்ற கருத்துப்பட ‘கந்தம் கமழும் குழலீ கடை திறவாய்’ என்கிறார்கள்.
அப்போது அவள், ‘போது விடிய வேண்டாமோ’ என்ன, ‘கோழிகள் எங்குமாய்த் திரண்டு வந்து ஒலிப்பது கேட்கவில்லையா?’ என்று வினவுகிறார்கள். ‘அது சாமக்கோழியாக இருக்கலாமே’ என்று அவல் கூற, ‘குயில் கூவிற்று’ என்று அவர்கள் கூறினார்கள். ‘ ஒரு குயில் கூவினால் விடியுமோ?’ என்று அவள் மறுதலிக்க, ‘மாதவிப் பந்தரில் பல்கால் குயிலினங்கள் கூவின காண்’ என்று சான்று காட்டினார்கள்.
’இப்படிச் சொன்னதையெல்லாம் மறுத்துப் பேசுகிற உனக்கு ஒரு செருக்கு இருக்கிறது. அது யாதெனில், கண்ணனை ஒரு கையாலும், அவனோடு விளையாடி அவனைத் தோற்பித்த பந்தினை ஒரு கையாலும் பற்றியவாறு அணைத்துக்கிடக்கின்றாய்; அதனாலே காண்’ என்று பொருள்பட, பந்தார் விரலி என்றார்கள். நாங்களும் அதுபோலே ஓர் அஃறிணைப் பொருளாயிருந்தால் உன் கைக்குள் கிடக்கலாகுமே என்றும் மனம் விட்டு எண்ணினார்கள்.
‘இங்கே வந்தது ஏன்’ என்று அவள் கருதுவதை உணர்ந்து சொன்னார்கள். ‘நாங்கள் உன் பக்கலிலே நின்று அவன் தோல்வியையும் உன் வெற்றியையும் குறித்துப் பேசுவதற்கு வந்துள்ளோம்’ என்று சொல்ல, ‘நீங்களே கதவு திறந்து செல்லுங்கள்’ என்றாள் பிராட்டி.
அவர்கள் அப்பெருமாட்டியை நேசித்து உணர்ந்தவர்களான படியால், ‘உன் சிவந்த தாமரைக் கையால்தான் திறக்க வேண்டும்.’ என்றார்கள். அவனும் ஆசைப்படும் கை. பந்து பிடித்துச் சிவந்த கை, வாழ வைக்கும் கை என்று ஆர்வமுடன் சொன்னார்கள்.
அதுகேட்டு வளையல்களை ஓசைசெய்யாது ஒடுக்கிக்கதவு திறக்க முற்பட்டாள், ‘அது முடியாது, நாங்கள் கேட்டு மகிழ இனிய ஓசையுடன் வளையல்கள் ஒலிக்கும்படி வருக. கழலாதிருக்கையன்றோ அவற்றின் சீர்மை. அவ்வொலி கேட்கும்படி நாலடி எடுத்து வைத்து வருவாயாக’ என்று பிராட்டியிடம் குழைந்து கொஞ்சிக் கேட்கின்றனர். மெல்லிடை வல்லிகளான ஆய மகளிர், கண்ணனுக்குப் பசி தீர, செவிக்குப் பட்டினி தீர, நாவுக்கு குறைதீர, மெய்க்குக் கலி தீர, மூக்கு நுகர்ச்சி வறுமை தீர, ஐம்புல விருந்து தரவேண்டும் என்றார்கள்.
பெரிய நம்பிகள் வீட்டு வாசலில் பிட்சைக்கு வந்த எம்பெருமானார் இப்பாடல் சொல்லி நிற்க, பந்தும் கையுமாகக் கதவு திறந்த அத்துழாயின் கோலம் கண்டு பிராட்டியாராக எண்ணித் தொழுதனர் என்பர் (திருக்கோட்டியூர் நம்பி வீட்டில் அவர் மகள் தேவகிப் பிராட்டியைக் கண்டதாகவும் கூறுவர்.)
வைணவத் தாயான இராமாநுசர் உகந்து அனுபவித்த பாடல் ‘உந்து மத களிற்றன்’ என்னும் உயர்வான இப்பாசுரம், கண்ணனையும் நப்பின்னையையும் மாறி மாறி எழுப்புவதாய் அமைகிறது இப்பாட்டு.
No comments:
Post a Comment