Tuesday, February 2, 2021


———————————————————-
கடந்த 1994 ம்ஆண்டு, மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் தினமணி நாளிதழின் முதல் பக்கத்தில் பிரசுரமாகி இருந்தது ஒரு புகைப்படம்‌.
ஒரு முதியவர் தெருவில் நின்று கொண்டிருந்தார். அவர் காலடியில் சில மூட்டை முடிச்சுகள், பாத்திர பண்டங்கள் கிடக்கின்றன.
ஒரு வீடு, பூட்டு பூட்டித் தொங்கியபடி பின்னணியில் தெரிகிறது.
புகைப்படத்திற்குக் கீழே குல்சாரிலால் நந்தா வாடகை கொடுக்க முடியாததால் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்ற ஒரு செய்தி எழுதப்பட்டிருக்கிறது.
யார் இந்த குல்சாரிலால் நந்தா?
இருக்க வீடின்றி ரூ.500 பென்சனில் வாழ்ந்த பிரதமர் குல்சாரிலால் நந்தா!
நேர்மையான ஆளுமைமிக்க தலைவர்கள் சரித்திர காலத்தில் மட்டுமல்ல நேற்று கூட வாழ்ந்திருக்கிறார்கள்.
நமது கவனத்தையும், கருத்தையும் சிறிது பின்னோக்கி நகர்த்திச் சென்றோம் என்றால் அற்புதமான பல தலைவர்களின் அடிச்சுவடுகளைக் காண முடியும்.
இவர் பஞ்சாப் மாநிலம் சியால் கோட்டில் பிறந்தவர். மிகச்சிறந்த பொருளாதார நிபுணர். விடுதலைப் போரில் மகாத்மா காந்தியோடு பங்குபெற்று பலமுறை சிறை சென்றவர்.
நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே இந்தியத் தொழிலாளர்களின் அவல நிலையை சர்வதேச அரங்கம் அறிந்து கொள்வதற்கு பல உலக மாநாடுகளில் கலந்துகொண்டு தனது சொல்லாற்றால், பல தலைவர்களை வசீகரித்தவர்.
விடுதலைக்குப் பிறகு, இந்திய திட்டக்கமிஷனின் துணைத் தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார். பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த குல்சாரிலால் நந்தா தொழிலாளர் துறை அமைச்சராக இருந்திருக்கிறார்.
பிரதம மந்திரிக்கு சமமான அதிகாரம் படைத்த இந்திய உள்துறை மந்திரியாகவும் இவர் இருந்துள்ளார்.
ஆச்சரியப்படாதீர்கள்.. இரண்டுமுறை இந்தியாவின் பிரதம மந்திரியாகவும் பதவி வகித்துள்ளார்.

இத்தனை சிறப்புமிக்க செல்வாக்கு மிக்க இவர் கடைசி வரையில் சுதந்திரப்போரட்ட வீரர்களுக்கான பென்சன் தொகையான ரூபாய் ஐநூறிலேயே குடும்பம் நடத்தினார்.
தொன்னூற்றி ஐந்தாம் ஆண்டு, அதாவது தான் வாடகை வீட்டிலிருந்து விரட்டப்பட்ட பிறகு தியாகிகளுக்கான சலுகையாக சிறிய வீடு தரமுடியுமா என்று அரசாங்கத்திடம் விண்ணப்பம் செய்தார்.
கருணையே வடிவான இந்தியப் பேரரசு அந்தத் தியாகியின் கோரிக்கையை அவர் இறக்கும் வரையில் ஏற்றுகொள்ள வில்லை.
ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள்.
பஞ்சாயத்து யூனியனில் கவுன்சிலராக பொறுப்பேற்ற இரண்டு வாரத்திலேயே ஆடி காரில் பயணம் செய்யும் மனிதர்கள் மிகுந்த *இந்த நாட்டில் மந்திரியாகவும், பிரதம மந்திரியாகவும் இருந்த ஒருவர், ஐநூறு ரூபாய் பணத்திலே சாகும் வரை வாழ்ந்தார்.
தனது அதிகாரத்தை செல்வாக்கைப் பயன்படுத்தி ஒரு சல்லிக்காசு கூட தனக்கென்று சேர்க்காமல் நேர்மையாக இருந்தார்* என்பதை நினைத்துப் பார்க்கும் போது உடம்பு சிலிர்க்காமல் இருக்கவில்லை.
*மொரார்ஜி தேசாய்களும், குல்சாரிலால் நந்தாக்களும் மாண்டு போயிருக்கலாம். ஆனால் அவர்கள் விதைத்து விட்டுப் போன மாண்புகள் இன்னும் மாண்டுவிடவில்லை*
ஆயிரம் இடிமுழக்கங்கள், ஆயிரம் எரிமலைகள் தொடர்ந்து தாக்கினாலும் *இந்தியாவின் ஆத்மா எந்த அதிர்வும் அடையாமல் இன்னும் ஜீவித்துக் கொண்டிருப்பது போல தேச தர்மம் என்பதும் இன்னும் உயிரோடேயே இருக்கிறது.
அதன் நிழலில் சில தலைவர்களும் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களை அடையாளம் காண வேண்டியது மட்டும் தான் நமது வேலை*
அந்தத் தலைவரையும் இன்றைய நமது தலைவர்களையும் ஒப்பிட்டால் உள்ளத்தில் ஏதோ ஒரு மூலையில் எரிமலை வெடிக்கச் சித்தமாக இருப்பதை அறிய முடிகிறது.

No comments:

Post a Comment

2023-2024