நேற்றைய முன் நாள் பதிவில் மயிலாடுதுறையில் தமிழக அரசு கல்வித்துறையின் 6 மற்றும் 12-ஆம் வகுப்பு பாடப் புத்தக்கங்கள் பயன்படுத்தாமல் இரும்புக் கடையில் எடைப்போட்டு விற்கப்பட்ட அலங்கோலமான காட்சியைப் பதிவு செய்தேன்.
மயிலாடுதுறையில் பழைய இரும்புக்கடையில் இலவச பாடப்புத்தகங்களை விற்பனை செய்த மாவட்ட கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சுமார் 2 டன் புத்தகங்களை எடைக்கு வாங்கிய பழைய இரும்புக்கடை உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்னொரு சேதி,2006 என்று நினைவு, திருவனந்தபுரம் சென்றபோது பத்மநாபசுவாமி தெப்பக்கோவில் அருகே நானும் ராம்குமாரும் நடந்து வந்துகொண்டிருந்தபோது தமிழக அரசின் இலவச வேட்டி அரசு முத்திரையுடன் தெருவோரக் கடையில் விற்கப்பட்டது, நான் கடைக்காரரிடம் வேட்டி என்ன விலை என்று கேட்டேன், அவர் கொடுப்பதை கொடுங்க என்றார், நான் கிண்டலாக பத்து ரூபாயைக் கொடுத்தேன், கடைக்காரர் நூறு ரூபாயாவது தாருங்கள் என்றார். நான் அவரிடம் எங்கள் மாநிலத்தில் இலவசமாக வழங்கும் வேட்டி உங்களுக்கு எப்படி இங்கு கிடைக்கிறது என்றேன், அவர் பத்மநாபசுவாமி கோவில் உள்ளே செல்ல வேட்டியும் துண்டும் மட்டும்தான் அணிந்து செல்லவேண்டும், அதனால் நாங்கள் தமிழக கேரள எல்லையில் இருக்கும் ஊரில் இருந்து வேட்டியைப் பாதி விலைக்கு வாங்கிவந்து இங்கு விற்கிறோம் என்றார்.
ஒரு பக்கம் தமிழக மாணவர்கள் படிக்கக்கூடியப் புத்தகங்கள் இரும்புக் கடையில் குவியலாக இருக்கிறது, மறுபக்கம் தமிழக அரசு மக்களுக்கு இலவசமாக வழங்கும் வேட்டிகள் பிறமாநிலங்களில் விற்கப்படுகிறது. மக்களின் வரிப்பணம் இப்படித்தான் வீணாகிறது. இன்றைய அரசும், அரசு அதிகாரிகளும் எப்படி வேலை செய்கிறார் என்பதற்கு இந்த நிகழ்வுகளே சாட்சி.
கே.எஸ்.இராதா கிருஷ்ணன்
31-12-2020
No comments:
Post a Comment