---------------------
நாயக னாய்நின்ற நந்தகோ பனுடைய
கோயில்காப் பானே ! கொடித்தோன்றும் தோரண
வாயில்காப் பானே ! மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமியை ரோமுக்கு, அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்,
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்,
வாயால் முன்னம்முன்னம் மாற்றாதே அம்மா ! நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்.
-----------------
பதவுரை
நாயகனாய் நின்ற – எங்களுக்கு ஸ்வாமியாயிருக்கிற நந்தகோபனுடைய – ஸ்ரீ நந்தகோபருடைய, கோயில் – திருமாளிகையை, காப்பவனே – காக்குமவனே, உள்ளே புக அனுமதிக்க வேணும் என்ன, அவன், கண்ணாலே போங்கோள் என்று சைகை காட்டி நிற்க இரண்டாம் வாசல் அளவும் சென்று, கொடிந்தோன்றும் – துகில்கொடிகள் விளங்கா நிற்பதாய், தோரணம் – தோரணங்கள் கட்டியிருப்பதான, வாசல் காப்பானே – திருவாசலைக் காக்குமவனே, மணிக்கதவம் – மணிமயமான கதவினுடைய, தாள் – தாழ்ப்பாளை, திறந்து – திறந்து உள்ளே புகவிடவேணுமென்ன, அவன் நீங்கள் பூதனையைப் போல வஞ்சகைகளாயிருப்பீர்கள் எனவே, உங்களைப் புகவிட அஞ்சுகிறேன் என்று சொல்ல, ஆயர் சிறுமியர் – இடக்கையும் வலக்கையுமறியாத இடையர் வயிற்றிற் பிறந்த சிறு பெண்கள் என்ன, அவள் போகையில் கார்யம் எது ? என்ன, எமக்கு – எங்களுக்கு, மாயன் – ஆச்சர்ய ஸேஷ்டிதனாய், மணிவண்ணன் – நீலமணி போன்ற நிறமுள்ள ஸர்வேஸ்வரன், அறை – ஒலி செய்யும், பறை – பறை என்ற வாத்யத்தைத் தருகிறோமென்று, நென்னாலே – நென்னேற்றே, வாய் நேர்ந்தான் – திருவாய் மலர்ந்தருளினான் என்று சொல்ல அவன், நீங்கள் நடு நிசியில் வருகையாலே அச்சமாயிருக்கிறது க்ருஷ்ணன் எழுந்தபின் தெரிவித்துக் கதவைத் திறக்கிறேன் என்ன, துயிலெழ – க்ருஷ்ணன் தூக்கத்தை விட்டெழுமாறு, பாடுவான் – திருபள்ளியெழுச்சி பாடுவதற்கு, தூயோமாய் – பரிஸுத்தராய்க் கொண்டு, வந்தோம் – நாங்கள் வந்துள்ளோம், அம்மா – ஸ்வாமியான நீ, முன்னம் முன்னம் – முதன்முதலில், வாயால் – உன் வாயாலே, மாற்றாதே – மறுக்காதொழிய வேணும் அன்றியும், நிலை – நிலையோடு, நேசம் – சேர்ந்திருக்கிற, கதவம் – கதவை, நீக்கு – திறக்கவேணுமென்கிறார்கள்.
நமக்கெல்லம் காவல் நாயகனாய் இருக்கும் நந்தகோபனுடைய மாளிகையைப் பாதுகாக்கும் காவலனே!
கொடித் தோரணம் கட்டப்பட்ட வாயிலுக்கு, காவலாக நிற்பவனே!
மணிகளோடு கூடிய மாளிகைக் கதவை திறப்பாயாக!
மாயச் செயல்கள் செய்பவனும், கரிய நிறத்தவனுமான கண்ணன் ஆயர்குலச் சிறுமியரான எங்களுக்காக, ஒலியெழுப்பும் பறையைத் தருவதாக நேற்றே கூறியுள்ளான். அவனைப் பாடித் துயிலெழுப்பி பறையைப் பெற்றுச்செல்ல நாங்கள் நீராடி வந்துள்ளோம்.
உன் வாய்திறந்து மறுத்து விடாமல், எங்களுடைய வேண்டுகோளை ஏற்று, மூடியுள்ள இந்த நிலைக்கதவை எங்களுக்கு திறப்பாயாக என்று வாயில் காப்போனைப் பார்த்து, கோதை பாடிய பாடல் இது!
முன் பத்துப் பாடல்களிலும் அனைவரையும் ஒருங்கு திரட்டிய பின் எல்லாரும் கூடிவந்து நந்தகோபர் திருமனையில் கோயில் காப்போனையும் வாயில் காப்போனையும் எழுப்புவதாய் அமைகின்றது இத்திருப்பாட்டு.
‘நந்தகோபருடைய திருமாளிகைக்குக் காவலாய் நின்று எங்களுக்கு உதவி புரிகின்ற பெருமைக்கு உரிய நாயகனாகவும் திகழும் கோயில் காப்போனே’ எனக் காவலனை ஆயர்குலச் செல்வியர் அழைத்தார்கள். நந்தகோபரை நாயகன் என்றார்கள் எனவுமாம். காவலனும் இவர்கள் ஆவல் கண்டு கண் சைகையால் உள்ளே அனுமதித்தான்.
மணிவண்ணன் உறைகின்ற மாளிகையின் மணிக்கதவு தாள் திறக்க வேண்டும் என்று காவலனிடம் விண்ணப்பித்தார்கள். அவனோ இவர்களைப் பரிசோதித்துப் பல வினாக்கள் எழுப்புவதாய் வைணவ உரையாசிரியப் பெருமக்கள் விசேஷித்து உரைக்கின்றார்கள்.
‘நள்ளிரவில் வரும் உங்களுக்குக் கதவு திறப்பதோ?’ என்ற காவலன். ‘நீங்கள் யார்?’ என்கிறானாம். ‘இவ்விடத்திலும் அச்சம் உண்டோ?’ என்று அவர்கள் கேட்கிறார்களாம். அதற்கு அவன் ‘இது அயோத்தியன்று; ஆயர்பாடி; காலம் கலியுகம். தகப்பன் நந்தகோபன். கண்ணனோ சிறுபிள்ளை. கம்சன் எதிரி. புல் பூண்டு கூட அசுர வடிவாக உள்ளன. பயம் கொள்ளாதிருக்கலாமோ?’ எனக் கேட்கிறான்.
நாங்கள் பெண்கள்தானே? என்றார்கள். அதற்கு அவன் ‘சூரப்பணகையும் பூதனையும் பெண்கள்தானே’ என்றான்.
அவர்கள் ‘நாங்கள் அவன் பிறந்த இடைக்குலத்தோம்’ என்றார்கள். அதற்கு அவன் ‘எதற்கு வந்தீர்கள்?’ எனக் கேட்கிறான்.
‘நாங்கள் நோன்புக்குப் பறை வேண்டி வந்தோம்’ என்று அவர்கள் கூறவும், ‘இதோ கேட்டுச் சொல்கிறேன்’ என்று அவன் மறுமொழி கூறினான். உடனே அவர்கள் ‘நேற்றே எங்களுக்குக் கண்ணன் வாக்குறுதி தந்து விட்டான்’ என்று முந்திச் சொன்னார்கள். ‘எங்களைப் படுத்துகிற மாயமும் வடிவழகும் உடையான் அவன்’ என்று மணிவண்ணனை நினைவு கூர்ந்தார்கள்.
‘இருந்த போதிலும் எங்கள் பணி ஆராய்ந்து பார்ப்பதன்றோ?’ எனக் காவலன் மொழியவும், ‘நாங்கள் அவனே காவல் எனத் தூய மனத்தவராய் வந்தவர்கள்’ என்றனர் ஆயர் மகளிர் அப்போது அவன் மணிக்கதவம் திறக்க எண்ணுகிறான்.
‘நெஞ்சால் நினைத்ததையே நிறைவேற்று. மறுபடியும் வாயால் மறுப்பு ஏதும் சொல்லிவிடாதே’ என்று அவர்கள் மன்றாடி நின்றார்கள். அவர்களின் கைம்மீறிய அன்பின் பெருக்கை உணர்ந்த அவன், ‘நீங்களே தாழை உருவிக் கதவைத் திறந்து செல்லுங்கள்’ என்றான்.
‘அக்கதவு நின்னிலும் கண்ணன் மேல் பரிவும் பாசமும் கொண்ட நேய நிலைக்கதவு. எங்களால் தள்ளித் திறக்க முடியாது. நீயே திறக்க வேண்டும்’ என அப்பெண்கள் விண்ணப்பம் செய்கிறார்கள்.
‘சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடான்’ என்ற பழமொழி போல், இடைநின்ற காவலர்களால் இடையூறு நேருமோ என்று அஞ்சும் அன்பு நெஞ்சங்களின் பரிதவிப்பையும், பாசப் பிணிப்பையும் ஒரு சேரப் படம் பிடிக்கின்றது இப்பாசுரம்.
மணிவண்ணன் மீது மாயாக் காதல் கொண்ட நாச்சியாரின் மணக்கடல் அலைகளே இங்கு மாற்றுருவம் கொண்டு காட்சி தருகின்றன.
பக்தி பூணுவார்க்குப் பரமனைத் தரிசிக்கத் தடைகள் ஒன்றா, இரண்டா? அப்படி நேரும் தடைகளையும் நேசத்தோடும் காதலோடும் தாண்டிச் செல்லவேண்டிய நுட்பத்தின் பெட்டகமாகத் திகழ்கிறது இப்பாடல்.
No comments:
Post a Comment