Tuesday, February 2, 2021


-------------------------
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று,
கப்பம் தவிர்க்கும் கலியே ! துயிலெழாய்,
செப்ப முடையாய் ! திறலுடையாய் ! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா ! துயிலெழாய்,
செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்,
நப்பின்னை நங்காய் ! திருவே ! துயிலெழாய்,
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை,
இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்.
--------------------
பதவுரை
முப்பத்து மூவர் – முப்பது மூன்று வகையான, அமரர்க்கு – தேவர்களுக்கு, முன் சென்று – துன்பம் வருமுன்னரே அவர்கள் நினைத்த இடத்திற் சென்று, கப்பம் – அவர் தம் நடுக்கத்தை, தவிர்க்கும் – போக்கத்தக்க, கலியே – மிடுக்கையுடையனே ! நாங்கள் கண்டு வாழும்படி, துயிலெழாய் – திருப்பள்ளியுணர்ந்து வரவேணும், செப்பமுடையாய் – அண்டினவரைக் காக்குமவனாய், திறலுடையாய் – அவர் தம் விரோதிகளை பழிக்கும் வன்மையுடையனாய், செற்றார்க்கு – அவருடைய பகைவர்க்கு, வெப்பம் – துன்பத்தை கொடுக்கும் பண்ணா நின்றுள்ள, விமலா – பரிசுத்தனானவனே, துயிலெழாய் – தூக்கத்தையொழிந்து வருதல் வேண்டும், செப்பன்ன – பொற்கல சத்தையொத்த, மென்முலை – மிக மெல்லிய ஸ்தந்தகளையும், செவ்வாய் – பவளம்போற் சிவந்த வாயையும், சிறுமருங்குல் – நுண்ணிய இடையையுமுடையவளான, நப்பின்னை நங்காய் – பெண்மைப்பூர்த்தியையுடைய நப்பின்னையே !, திருவே – பெரிய பிராட்டியாரை யொத்தவளே!, துயிலெழாய் – துயில் நீங்கி வந்து, எங்கள் நோன்புக்குக் கருவிகளான, உக்கமும் – விசிறியும், தட்டொளியும் – கண்ணாடியும், தந்து – கொத்து, உன் மணாளனை – உன் மணவாளனான க்ருஷ்ணணையும், எம்மை – க்ருஷணன் பிரிவால் மெலிந்த உடலையுடைய எங்களையும், இப்போதே – இந்த ஷைணத்திலேயே, நீராட்டு – ஸம்ஸ்லேஷிக்கும்படி செய்ய வேணுமென்கிறார்கள்.
”முப்பத்து மூன்று கோடி தேவர்களுக்கு ஏதேனும் துன்பம் நெருங்குவதற்கு முன்பே, ஓடிச்சென்று, அவர்களது துன்பத்தை விலக்கி, காத்தருளும் கண்ணனே.. கண் விழிப்பாயாக..!
குற்றமில்லாதவனே.. வலிமை மிக்கவனே… எங்கும் நிறைந்தவனே.. பகைவருக்குத் துன்பங்களைக் கொடுப்பவனே.. உறக்கம் நீங்கி எழுவாயாக..!
கலசத்தைப் போன்ற மார்பினையும், சிவந்த உதடுகளையும், மெல்லிய இடையையும் உடைய நப்பின்னையே.. திருமகளே.. துயிலெழுவாயாக..!
எங்கள் நோன்புக்குத் தேவையான விசிறியையும், கண்ணாடியையும் வழங்கி, உன் கணவனான கண்ணனையும் எங்களுடைன் அனுப்பி, நாங்கள் நோன்பு நீராட வழி செய்வாயாக…!”
என்று பாடுகிறாள் கோதை…!
தன்னை ஆய்க்குல மகளிர் சில குற்றம் சொன்னார்களாயினும் தக்க சமயத்தில் கண்ணனிடம் இவர்களுக்காக விண்ணப்பம் செய்யக் கருதி நப்பின்னைப்பிராட்டி பேசாது கிடந்தாள். இப்போது, அவனும் வாய் திறவாமலிருக்க, ‘நப்பின்னையை நொந்து கூறியதால் பேசாதிருக்கிறானோ’ என்று அவன் ஆற்றலையும் பண்புகளையும் புகழத் தொடங்கினார்கள்.
பன்னிரு ஆதித்தர்கள், பதினொரு உருத்திரர்கள், எட்டு வசுக்கள், இரு அசுவினி தேவர்கள் என முப்பது மூன்று வகையான தேவர்களுக்குத் துன்பம் என்பதற்கு முன்னே ஓடி அவர்கள் நடுக்கத்தைத் தவிர்க்கும் மிடுக்கு உடையவன் கண்ணன். அவனை எழுந்திருக்க வேண்டினர். ‘உன் வாசலிலே வந்தவர்களுக்கு உதவலாகாதோ? தேவர் உலகிற்கு ஓடோடி உதவுகின்றாயே’ என்றனர். ‘துன்பம் வருமுன் அவர்களுக்கு உதவுகிற நீ நோவுபட்டு வந்த எங்களைக் காக்கவொண்ணாதோ’ என்றனர். (கப்பம் - நடுக்கம்)
அடியவர்களோடு நெருக்கமான செம்மை உடையவன் என்பதால், ‘செப்பம் உடையாய்’ என்றார்கள். வல்லமை மிக்கவன் என்பதால், ‘திறலுடையாய்’ என்றார்கள். உன் செம்மை எங்கள்பால் ஏறிப் பாயாதது ஏனோ? உன் ஆற்றல் எளியோமையாகிய எங்களை நலிவிப்பதோ? என்ற பொருளில் இவ்வாறு பேசினார்கள்.
பகைவர்களுக்கு அச்சமாகிய காய்ச்சல் உண்டுபண்ணி அன்பர்களுக்கு மீட்சியைத் தருகிற தூய்மையாளன் என்பதால், ‘செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா’ என்றார்கள். துரியோதனனுக்குப் படைகளைக் கொடுத்து அருச்சுனனுக்குத் தன்னையே தருகிற மாசற்ற பண்பையே விமலன் என்று குறித்தார்கள்.
அவனிடமிருந்து மறுமொழி எழாமையாலே, மீண்டும் நப்பின்னைப் பிராட்டியை எழுப்புகிறார்கள். தாயை நாடி ஓடும் சேயாக மாறுகிறார்கள் கோகுலத்துக் கோபிகையர். அவள் செப்புப் போன்ற மெல்லிய மார்பும், சிவந்த வாயும், சிற்றிடையும் கொண்டவள் என்று சிறப்பித்து அழைக்கின்றார்கள்.

இப்போது காரியம் சித்திக்க வேண்டுமென்பதால் நப்பின்னையைப் புகழ் மொழிகளால் அர்ச்சிக்கின்றார்கள். நிதி இட்டு வைக்கும் செப்புப்போல் அவனை ஏந்தும் அவள் திருமார்பு திகழ்கிறதாம். கண்ணனைத் தனதாக்கிக் கொள்ளும் கனியும் தேனுமான இதழ்களில் புன்னகையும் குடியிருப்பதால் செம்பவளத்திரள் வாயனைத் தோற்கடித்த வாய் அது.
துணுக்கெனப் பண்ணும் அச்சத்தின் உறைவிடமும் அன்பின் உறைவிடமுமாகிச் சிறுகும் இடையினைப் பாராட்டினார்கள். இத்தனையும் சொல்லி நப்பின்னையை, ‘நங்கையே’ என்று விளித்தார்கள். சம்பூரணமான பண்புகள் நிறையும்போது ஆண்மகனை ‘நம்பி’ என்பது போல, அத்தகைய நிறைகுடமானாளை ‘நங்கை’ என்று அழைத்து மகிந்தார்கள். எங்களுக்கும் கண்ணனை அளித்து நிறைவடையச் செய்யலாகாதோ என்பது கருத்து.
திருமகளின் ஸ்தானத்தில் கிருஷ்ணாவதாரத்தில் திகழ்ந்து அருள்பாலிக்கிறவளாகையாலே ‘திருவே’ என்று புகழ்ந்தார்கள். திருமகள் பேர் சொல்லுதற்குக் காரணம் அவள்போல் உதவவேண்டுமென்று எடுத்துரைப்பதற்காக.
என்னைத் துயிலெழச் செய்ய வேண்டுவதில்லை. நான் உறங்கவில்லை. ஆனால் நான் செய்யத்தக்கது யாது? என்று நப்பின்னை வினவுகிறாள்.
உடனே, மறுமொழியாகத் தம் வேண்டுதல்களை அப்பெண்கள் முன் வைக்கிறார்கள். ‘எங்களுக்கு ஆலவட்டமும் (உக்கம் - விசிறி) கண்ணாடியும் (தட்டொளி) தந்தருளவேண்டும். இவை நோன்புக்கு உரிய கருவிகள். கருவிகளைத் தருவதுபோன்றே கருத்தாவாகிய கண்ணனையும் தந்தருளவேண்டும்.’
‘உன் மணாளன் அவன்’ ஆயினும் எங்களுக்கும் இனிய செல்வமாகிறவன். அவனையும் எங்களையும் நீராட்டி உதவுவாயாக’ என்றனர்.
இங்கே ‘நீராட்டு’ என்பது ‘அன்பில் முழுக்காட்டு’ என்றும் ‘அவனுக்குச் சேமித்த நீரிலே எங்களையும் நீராட்டு என்றும், ‘எங்கள் காதல் வெப்பம் களையக் குளிர்ந்த ஆறுதல் மொழிகளால் நீராட்டு’ என்றும் பொருள்பட நின்றது.
நீ தந்த ‘கண்ணனென்று நித்தமும்’ கொண்டாட அவனைத்தா என்று மடிபிடிக்காத குறையாய் மன்றாடுகிறார்கள் ஆயர்திருமகளிர்.
கே.எஸ்.இராதா கிருஷ்ணன்
04-01-2021

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...