Tuesday, February 2, 2021


#காருக்குறிச்சி_அருணாசலம் நூற்றாண்டு விழா குறித்து இரண்டுக் நாட்களுக்கு முன்பு ஒரு பதிவு செய்தேன்.
திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் சீடர் அமரர் காருக்குறிச்சி அருணாசலம். வேறு எந்த சிறப்பும் இல்லாத தன் பிறந்த ஊருக்குத் தன் நாயனத்தால் பெருமை சேர்த்த அபூர்வமான இசைமேதை அவர்!திருமணத்துக்குப் பின் தன்னுடைய மனைவியின் ஊரான இடைசெவலில்(கோவில்பட்டி அருகே) குடியேறிவிட்டாலும காருகுறிச்சி என்றுதான் அவரை இசைப்ரியர்கள் அன்போடு அழைத்தனர்.இடைசெவலில் இவர் வீட்டுக்கு எதிர்த்தவீட்டுக்காரர் கி.ராஜநாராயணன். அவரைக் குறித்தான கிராவின் சில குறிப்புகள் வருமாறு.
*"எத்தனையோ தரம் காருகுறிச்சி அருணாசலம் தன்னுடைய ஊருக்கு வரும்படி என்னை அழைத்திருப்பார். நானும் போகக்கூடாது என்று இல்லை; எப்படியோ கடேசி வரைக்கும் போக முடியாமலே போய்விட்டது._*
*எப்பவாவது காருகுறிச்சி வழியாக ரயிலில் போகவேண்டியது ஏற்படும். அப்போது மனசில் ஒரு பரபரப்புத் தோணும். அங்கு தெரிகின்ற வீடுகளில் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் எது அவருடைய வீடாக இருக்கும் என்று யூகிப்பேன்!_*
*அவர் தட்டுப்படும் போது உங்கள் ஊர் வழியாகப் போனேன் என்று சொல்லுகிறதில்லை. ஆனால் அவர் கோவில்பட்டி வந்து நிரந்தரமாக இருக்க ஆரம்பித்த பிறகு எத்தனையோ தரம் சொல்லியிருக்கிறேன், உங்கள் ஊர் வழியாகப் போனேன் என்று. ஆனால் அவருக்கு முந்தி இருந்ததில் அரைக்கால் வாசிகூட ஊர்ப்பிடித்தம் இல்லாமல் போய்விட்டது பிறகு. அதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்..._*

*சிறிய வயசிலேயே அவர் ரொம்ப ஜோராகப் பாடுவார். சாப்பிடுகிற நேரம், தூங்குகிற நேரம் தவிர பாக்கி நேரங்களிலெல்லாம் சதா ஏதாவது ஒரு ராகத்தை முனகிக் கொண்டிருப்பார். அது கேட்க மிக மனோரம்மியமாக இருக்கும்..._*
*கோவில்பட்டிக்கு அவர் குடிவந்த புதிதில் ஒரு நாள் அவர் வீட்டுக்குப் போயிருந்தேன். தற்செயலாக ஒரு அலமாரியைத் திறந்தார் அதில் பல புஸ்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. "புஸ்தகங்களா! ; எங்கே பார்ப்போம்" என்று வரிசையாய் ஒவ்வொன்றாய் எடுத்துப் பார்த்தேன். அவ்வளவும் இலக்கியத்தரம் மிகுந்த நாவல்கள், சிறுகதைகள்! எனக்கு ஒரே ஆச்சரியமாகப் போய்விட்டது. எனக்குத் தெரிந்த வரை தமிழ்நாட்டில் நாதஸ்வரம் வாசிப்பவர்களில் சிறந்த இலக்கியப் படைப்புகளை உட்கார்ந்து படிக்க நான் பார்த்ததும் இல்லை. கேள்விப்பட்டதும் இல்லை._*
*ஒரு தடவை அவர் மார்க்ஸிம் கார்க்கி எழுதிய " அன்னை" யை மிகவும் அனுபவித்துப் படித்துக் கொண்டிருக்கக் கண்டேன்...*
கே.எஸ்.இராதா கிருஷ்ணன்
04-01-2021

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...