Wednesday, February 3, 2021

#திருப்பாவை ------------#பாசுரம்_22


________________
அங்கண்மா ஞாலத் தரசர், அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே,
சங்கமிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்,
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே,
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ,
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்,
அங்கண் இரண்டுங்கொண் டெங்கள்மேல் நோக்குதியேல்,
எங்கள்மேல் சாபம் இழுந்தேலோ ரெம்பாவாய்.
___________
பதவுரை
அங்கண் – அழகிய இடமுடைய, மாஞாலத்து – பெரிய பூமியை ஆண்ட, அரசர் – ராஜாக்கள், அபிமான பங்கமாய் – நம்மைவிட மேம்பட்டவரில்லை என்ற அபிமானத்தை விட்டு, வந்து – வந்து, நின் பள்ளிக்கட்டில் கீழே – உம்முடைய ஸிம்ஹாஸநத்தின் கீழ், சங்கமிருப்பார் போல் – கூட்டங் கூட்டமாக வந்து ஒலக்கமாக இருக்குமவர்களைப் போல், வந்து – கீழ்ப்பட்ட வருத்தமனைத்தும் தீரும்படி வந்து, தலைப் பெய்தோம் – அணுகப் பெற்றோரும், கிண்கிணிவாய் செய்த – கிண்கிணியைப் போலே பாதி மலர்ந்த, தாமரைப் பூப்போலே – தாமரைப் புஷ்பத்தைப் போல், செங்கண் – அன்பினால் சிவப்புற்ற திருக்கண்கள், சிறிச்சிறிது – கொஞ்சம் கொஞ்சமாக, எம்மேல் விழியாவோ – அண்டி வந்த எங்கள் பக்கம் விழிக்கலாகாதோ, திங்கள் – சந்த்ரனும், ஆதித்தியனும் – ஸூர்யனும், எழுந்தாற்போல் – உதித்தாற்போல், அங்கண் இரண்டும் கொண்டு – அழகிய இருகண்களால், எங்கள் மேல் – எங்கள் மீது, நோக்குதியேல் – கடஷித்தாயேல், எங்கள்மேல் – எங்களுடைய, சாபம் – அநுபவித்தே கழிய வேண்டிய வ்யஸநம், இழிந்து – கழிந்து விடுமென்கிறார்கள்.
“உன்னிடம் தோல்வியடைந்த அகிலத்து அரசர்கள் அனைவரும், தங்களது ஆணவம் தொலைந்து உனது அரியணையின் கீழே, ஒன்று சேர்ந்து நிற்பது போல, நாங்களும் உன்னைச் சரணடைந்து நீ கண் விழிப்பதற்காக வந்து நிற்கின்றோம்.
சற்றே வாய் பிளந்த சலங்கை போல, பாதி மலர்ந்த செந்தாமரையின் சிவந்த கண்களை உடையவனே..உனது பார்வை, சிறிதேனும் எங்கள் மேல் படாதா…?
எம்பெருமானே…
சூரிய சந்திரர்கள் ஒரே நேரத்தில் உதயமாவது போல, இரு விழிகளால் நீ எங்களைப் பார்த்தால், எங்கள் பாவங்கள் அனைத்தும் அகன்று விடும் என்பதால், விழி திறவாயாக…!” என்று அழைக்கிறாள் கோதை..!
கண்ணனிடத்தில், அவன் திருப்பார்வை தம்மேல் பட வேண்டுமென்று கோரிக்கை வைப்பதாய் இப்பாட்டு அமைந்திருக்கின்றது. முன் பாசுரத்தில் தம் செருக்கிலாநிலையைச் செப்பினார்கள். இப்பாசுரத்தில் அவனுக்கே உரியவர்களாகிவிட்ட தம் அடிமைத்திறத்தை முன் வைக்கின்றார்கள்.
‘அழகியதும் பரந்ததுமான பெரிய உலகப்பரப்பில் ஆட்சி செலுத்தும் மன்னர்கள் அகங்காரம் தொலைந்தவர்களாய் உன்னுடைய சிம்மாசனத்தின்கீழே திருவோலக்கம் கொண்டு அமர்ந்திருக்கிறார்கள். அதுபோன்று நாங்களும் கூட்டம் கூட்டமாக வந்து நின்பால் நெருங்கப்பெற்றோம்’ என்கிறார்கள்.
மன்னர்கள் போக்கற்றுப் புகுந்தார்கள். ஆனால், இவர்களோ, ‘எம் கடன் பணி செய்துகிடப்பதே’ என்று அடிமைத்திறத்தால் வந்து புகுந்தார்கள். ஆறுகள் வந்து கடலில் சங்கமித்தாற்போல அவன் சந்நிதியில் வந்து இணைந்து கலந்துவிட்ட பெருமிதம் அவர்களுக்கு.
ஆனால் சந்நிதி மட்டும் போதுமா? அவன் கடைக்கண்ணின் ஒளிபட்டுக் களிக்க வேண்டாமோ? இந்த எண்ணத்தால் பின்வருமாறு வேண்டுகிறார்கள்.
‘சின்னஞ்சிறு சதங்கையைப் போன்று சற்றே மலர்ந்த தாமரைப் பூப்போன்று விளங்கும் உன் சிவந்த கண்கள் மெல்ல மெல்ல எம்மீது திருநோக்கம் செலுத்தல் ஆகாதோ?’ என வினவுகின்றனர்.
நப்பின்னை மென்கரத்தால் வருட விழி மலர்வான். நம் குற்றம் காண விழி மொட்டிப்பான். பின்னர் குற்றம் பொறுக்கும் குணத்தால் விழி மலர்வான். இவ்வாறு திறந்து திறந்து மூடுகின்றன அவன் விழிகள். ஆனால் ஆதித்தனைக் கண்டு மலரும் தாமரைபோல், இவர்கள் ஆற்றாமை கண்டால் அவன் விழி மலராமல் இருப்பானோ?
சாதகப்பறவை மேகத்தின் துளிக்காகக் காத்திருப்பதைப்போலக் காத்திருக்கின்றோமே, கோடைப் பயிருக்கு ஒரு பாட்டம் மழை பொழிவது போல் பார்வையமுது பொழியாதோ? இவ்வாறு பொருள்படும்படி, ‘எம்மேல் விழியாவோ ?’ என்றனர்.

சூரியனும் சந்திரனும் ஒருசேர எழுந்ததைப்போல் அழகிய கண்கள் இரண்டும் எங்கள்மேல் நோக்குதல் வேண்டுமென விண்ணப்பிக்கின்றார்கள். தீயோர்க்கு நெருங்கவொண்ணாமையும், நல்லோர்க்குத் தண்ணளிபொழிவதுமாகிய சிறப்பினால் ஞாயிறும் திங்களுமாகக் கண்கள் பேசப்பட்டன.
ஒரே சமயத்தில் இரண்டு ஒளிக்கதிகளும் எழுந்தால் இருளின் கீற்றுகள் எங்கேனும் இருக்க முடியுமா? அவ்வாறே அஞ்ஞானமாகிய இருட்டு நீங்கும். அது மட்டுமன்று, எல்லையற்ற அருட்பாவை மெல்ல மெல்ல நம்மேல் படிகிறபோது துன்பத்தின் அணுத்தூசியும் இல்லாது தொலைந்தோடுமே என்று கண்ணனின் கண்பார்வை நாடி நிற்கிறார்கள் கன்னியர்கள்.
சாபத்தை நீக்குதற்கு அவன் பாதத்துத் தூசியே போதுமானதாக இருக்க, இவர்களோ அவன் தாமரைக்கண்பார்வையை இரந்தார்கள்.
பார்வை படுவது என்பதே மோட்சவீட்டுக்கு வாசல் திறக்கும் வைபவம் அல்லவா? உள்ளும் புறமும் ஒளியைப் பரப்பி தூய்மைப்படுத்தும் ஞானக் குளியல் அல்லவா, கண்ணனின் அருட்கடாட்சம்?
ஒன்றும் தெரியாத இடைக்குலம் தானே என்று இருக்கவொண்ணாது. ஏனெனில், அவன் திருப்பார்வையை அவாவி நிற்பதால் தலைக்குலமாகவன்றோ மதிக்கத்தக்கதாயிற்று அவன் அருள் நோக்கம் அசுரனுக்கும் வாழ்வு கொடுத்தமை அறிந்தவர்களாக ஆய்ச்சியர் இருப்பது வியப்பல்லவா?.
கே.எஸ்.இராதா கிருஷ்ணன்
06-01-2021

No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...