Wednesday, February 3, 2021

#திருப்பாவை --------#பாசுரம்_21


ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப,
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்,
ஆற்றப் படைத்தான் மகனே ! அறிவுறாய்,
ஊற்றமுடையாய் ! பெரியாய் ! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே ! துயிலெழாய்,
மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன் வாசற்கண்,
ஆற்றாது வந்து உன் னடிபணியு மாபோலே,
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்.
------------------
பதவுரை
ஏற்ற – ஏந்தின, கலங்கள் – எதிராகப் பொங்கி, மீது அளிப்ப – மேலே வழியும்படியாக, மாற்றாதே – மாறாதே, பால் சொரியும் – பாலைச் சொரிகின்ற, வள்ளல் – உதாரங்களான, பெரும்பசுக்கள் – பருத்த பசுக்களை, ஆற்றப்படைத்தான் – கணக்கின்றியுடையவரான ஸ்ரீ நந்தகோபர் பெற்ற, மகனே – பிள்ளையே, அறிவுறாய் – திருப்பள்ளியுணர வேணும், ஊக்கமுடையாய் – வேதத்தால் ப்ரதிபாதிக்கப்படுகையாகிற திண்மையை உடையவனாய், பெரியாய் – அந்த வேத்தாலும் அறியபடாமையாகிற பெருமையை உடையவனாய், உலகினில் – உலகில், தோற்றமாய் – ஆஸ்ரிதபஷைம் விளங்குபடி, நின்ற – நிற்கிற, சுடரே – தேஜோரூபனாவனே, துயிலெழாய் – துயிலெழுந்து வரவேணும், மாற்றார் – பகைவர், உனக்கு – உன் வலிமை கண்டு, வலிதொலைந்து – தம் வலிமை மாண்டுபோய், உன் வாசல்கண் – உன் வாசலிலே, ஆற்றாது – தங்கள் எளிவரவை நினைத்து ஸஹிக்கமாட்டாமல், உன் அடி – தேவரீர் திருவடிகளில், வந்து பணியுமாபோலே – வந்து விழுமாப்போலே, யாம் – நாங்கள், புகழ்ந்து – ஸ்தோத்ரம் செய்து, போற்றி – மங்களாஸாஸநம் செய்து கொண்டு, வந்தோம் – வந்து ஆஸ்ரயித்தோம் என்கிறார்கள்.
“பாத்திரங்கள் எல்லாம் பொங்கி வழியுமாறு பாலைப் பொழிகின்ற வள்ளல் தன்மையுடைய பசுக்களை வைத்திருக்கும் நந்தகோபனின் திருமகனே… துயில் நீங்குவாயாக..
வலிமை மிக்கவனே..எல்லோருக்கும் தலைவனே..ஒளிச்சுடராய் உலகமெங்கும் நிறைந்தவனே.. எழுந்திராய்..
பகைவர்கள் எல்லோரும் உன்னிடம் தோற்று, தங்களுடைய வலிமையெல்லாம் இழந்து, உன் வாசல்தேடி வந்து உனது திருவடிகளில் விழுந்து சரணடைவது போல, நாங்களும் உனது திருவடிகளைப் பணிந்து உனது புகழ்பாட வந்துள்ளோம்..
மகிழ்வுடன் நீ எழுந்து வந்து, எங்களுக்கு அருள் புரிவாயாக..” என்று வேண்டுகிறாள் கோதை.
உணர்ந்தெழுந்த நப்பின்னைப்பெருமாட்டி இடைக்குல மகளிரைப் பார்த்து, ‘நானும் உங்களில் ஒருத்தியன்றோ? வாருங்கள். அனைவருமாகக் கண்ணனை எழுப்புவோம்’ என்று கூற, அதற்கிசைந்து எல்லாரும் பெருமானைத் தந்தமைக்கு இசைய அன்பு மொழிகள் கூறி எழுப்புகின்றார்கள்.
ஏற்கின்ற பாத்திரங்கள் பாலால் நிறைந்து வழிந்து பொங்கிப் பெருக்கெடுக்கும்படி இடைவிடாது பாலைச் சொரிகின்ற வள்ளல் பெரும்பசுக்கள் மிகுதியும் உடையவன் ஆயர்பாடித் தலைவன் நந்தகோபன்.
உண்மையில் கலம் இடமுடியாமை, நம் இயலாமையே அன்றிப் பால் பொழிவதிலே எதிர்கூற முடியாத பெரும்பசுக்கள் அவை. கண்ணனைப்போல் பெண்ணென்றும் பேதையென்றும் வேறுபாடு பாராட்டாத எளிமையும் வண்மையும் உடையவை பசுக்கள்.
இக்கண்ணன் பாற்கடல்வாசியன்றோ? அவன் அவதரிக்க விரும்பி வந்த இடமும் பாற்கடலாகவே இருந்தது.
பசுக்களின் செல்வத்தை இயல்பாகப் பெற்றவன் நந்தகோபன். அங்கு கண்ணன் பிறந்தமையாலும் அவ்வளம் பெருகிக் கொழிந்தது. நந்தகோபன் மகனே என்று அழைத்து ‘அறிவுறாய்’ என்று வேண்டினார்கள்.
அனைத்தும் அறிந்த அவனிடம் அறிவுறாய் என்று கூறுதல் பொருந்துமோ? செல்வவளம் நிறைந்த குடிகளில் பிறந்திருத்தாலே இந்த எளியவர்களை அவன் நினைக்காதிருத்தலும் கூடுமென அறியாமை மிக்க ஆய்ச்சியர் கருதியதால் இவ்வாறு கூறினர்போலும்.

அவ்வாறு கூறுவதற்கும் இல்லாதபடி கண்ணனின் தெய்விகச் சிறப்புகளை அடுக்கியும் உரைக்கிறார்கள். அவன் மறைகளால் பரம்பொருளாகக் கூறப்படும் மாண்புடையவன்; எனினும் வேதங்களும் தேடிக்காண முடியாத விழுமிய பெரியவன்; அத்துணைப் பெரியவனாக இருந்தும் அனைவரும் கொண்டாடுமாறு மண்ணில் தோற்றமாய் அவதரித்த ஒளிப்பொருளும் ஆனவன். இவ்வாறு குளிரக் குளிரப் போற்றி அழைத்தனர்.
பிறந்து கரையேறுகின்ற மக்களைப்போலன்றிச் சாணையிட்ட மாணிக்கம்போல் ஒளியேறுகின்றவன் என்பதால், ‘சுடரே’ என்றனர். ‘திருப்பள்ளி எழுவாயாக!’ என்று வேண்டினர்.
கண்ணன் திருமாளிகையில் தாங்கள் வந்து காத்துக்கிடப்பது குறித்தும் கட்டுரை செய்தனர் அக்கன்னியர். மாற்றார் தம் ஆற்றல் இழந்து, அவன் வாசலிலே ஆற்றாது வந்து அடிபணிவது போல் மங்கை நல்லாரெல்லாம் அவன் மாளிகை முற்றத்தில் வந்து நிற்பதாக வாய்பேசுகின்றார்கள்.
அம்புக்குத் தோற்று எதிரிகள் வந்ததுபோல் உன் அன்புக்குத் தோற்று நாங்கள் வந்திருக்கிறோம் என்று சொல்லி மகிழ்ந்தார்கள். அவ்வாறானால் பரம்பொருளுக்கும் எதிர்கள் உண்டோ? எனில், உண்டு. அடியார்க்கு எதிரிகள் யாரோ அவரெல்லாம் ஆண்டவனுக்கும் எதிரிகளாம்.
‘போற்றி யாம் வந்தோம்’ என்று புகன்றார்கள். இதன் பொருள் தம்மைப் பேணாது மணிவண்ணன் தன்னையே பேணிப் பல்லாண்டு பாடிப்போற்றிய பெரியாழ்வார் போலப் போற்றிப் பாட வந்துள்ளோம் என்று மொழிந்து தம் பேரன்பைப் புலப்படுத்தினார்கள் ஆய்ச்சியர்.
இத்திருப்பாட்டில் ஒன்றுமறியாத இடைக்குலத்துப் பெண்களின் பேச்சாகத் தொடங்கிக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கோபுரம் ஏறுதல்போல் கடவுள் இலக்கணத்தையே கரைகண்டு பேசுகிறார்கள் ஆயர்குல கோதையர்.
பால்வளம் பொழியும் திருமுற்றத்தில் நின்று பரமன் புகழ்வளம் பாடுகின்ற ஆன்மாக்களில் அதிசயக்கோலமாகப் பாசுரம் விரிகின்றது.
அத்தனையும் வித்தகச் செல்வி ஆண்டாளின் சித்திரத்திறமையன்றோ?
கே.எஸ்.இராதா கிருஷ்ணன்
05-01-2021

No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...