-----------------------
மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்,
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து,
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி,
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலேநீ பூவைப்பூ வண்ணா, உன்
கோயில்நின் றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து, யாம்வந்த
காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்
----------------
பதவுரை
மாரி – மழைகாலத்தில், மலைமுழஞ்சில் – மலைக்குகைகளில், மன்னி – நிலையாக, கிடந்து – படுக்கையிற் கிடந்து, உறங்கும்சிங்கம் – தூங்குகிற சிங்கம், அறிவுற்று – உணர்ந்து கொண்டும், தீவிழித்து – தீப்பொறி சிதறுமாறு கண்களை விழித்துக் கொண்டும், வேரிமயிர் பொங்க – பிடரிமயிர் சிலும்பும்படி, எப்பாடும் போர்ந்து – எல்லா அவயவங்களையும் அசையச் செய்து, உதறி – உடம்பை உதறிக் கொண்டு, முழங்கி – உரத்த ஸபதத்துடன், புறப்பட்டு – குகையினின்றும் வெளியேறி, போதருமாபோலே – வருவது போலே, பூவைப் பூவண்ணா – காயாம் பூ நிறங்கொண்ட, நீ – நீ, உன் கோயில் நின்று – நின் கோயிலிலிருந்து, இங்ஙனே – ஆஸ்தாநமணி மண்டபத்தில், போந்தருளி – வந்தருளி, கோப்புடைய – அழகிய அமைப்புப் பொருந்திய, சீரிய – சிறந்த, சிங்காசனத்திருந்து – ஸிம்ஹாஸநத்தே எழுந்தருளி, யாம் வந்த – வேறு புகலற்ற நாங்கள் வந்த, காரியம் – கார்யத்தை, ஆராய்ந்தருள் – விசாரித்து க்ருபை செய்தருள வேண்டும் என்கிறார்கள்.
“மழைக் காலத்தில், மலையில் இருக்கும் குகைக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் வீரமுடைய சிங்கமானது, மழைக்காலம் முடிந்தவுடன், தனது உறக்கத்தை விட்டு, தீப்போல விழித்தெழுந்து பிடரிமயிர் சிலிர்க்க, எல்லாத் தடைகளையும் உடைத்துக் கொண்டு உடலை நிமிர்த்தி, கர்ஜனை செய்து புறப்பட்டு வரும்…
அந்த சிங்கத்தைப் போல, பூவைப்பூ வண்ணக் கண்ணா, நீயும் உனது இல்லத்திலிருந்து புறப்பட்டு, உனது அரண்மனைக்கு வந்து பெருமை வாய்ந்த உனது அரியணையில் அமர்ந்து கொண்டு நாங்கள் உன்னிடம் வந்த காரியத்தைக் கேட்டு, ஆராய்ந்தறிந்து, எங்களுக்கு அருள் புரிவாயாக..” என்று பாடுகிறாள் கோதை..!
திருநோக்கம் செலுத்த வேண்டுமென்று சொல்லிய பெண்களுக்கு இனிதாகச் சொல்லி ‘உங்கள் எண்ணம் ஈடேறச் செய்வோம். உங்கள் காரியத்தைச் சொல்லுங்கள்’ என்று கண்ணன் தலைப்பெய்து கூறுகின்றான். ஆனால் இவர்களோ நீ திருவோலக்கமாக இருந்து யாம் கூறுவன கேட்டருள வேண்டுமென்று விண்ணப்பிக்கின்றார்கள்.
மாரிக்காலத்தில் எங்கும் வெள்ளக்காடாகக் கிடக்கின்ற பருவச் சூழ்நிலையில், வழிகளெல்லாம் நீர் சுரந்து கிடக்கும். அப்போது, அரசிகளும் போர் முதலியன தவிர்ந்து ஓய்வுகொள்வார்கள். அதுபோல, சிங்கங்களும் மிருகராசரானதால் மலைக்குகைகளில் பகை விலங்குகளையும் பொருட்படுத்தாது ஓய்வுகொள்ளும். அதனைத்தான், ‘மாரி மலை முழைஞ்சில் மன்னிக்கிடந்து உறங்கும் சீரிய சிங்கம்’ என்று குறிக்கின்றார்கள்.
‘உறங்குமாயினும் மன்னவன் தன் ஒளி, குன்றாது சுடர்விடுவது போல் சிங்கம் ஓய்வுகொண்டபோதிலும், கம்பீரம் குறையாத இயல்புடையது என்பதால், ‘சீரிய சிங்கம்’ என்றார்கள். கண்ணனும் அவ்வாறே உறங்கும்போதும் சிற்றாயர் சிங்கமாகத் திகழ்கின்றான்.
ஓய்வுகொண்ட சிங்கம் உணர்வு பெற்றெழுந்து, நெருப்புப்பொறிகள் சிதறும்படியாகப் பார்வையை வீசி, மணம் கம்ழ்கின்ற பிடரிமயிர்கள் சிலிர்த்துக்கொள்ள, எல்லாப்பக்கங்களிலும் புடைபெயர்ந்து, உடம்பை உதறி, வலிமை மிக்க தோற்றத்தோடு நிமிர்ந்து, கர்ச்சனை முழக்கமிட்டுப் புறப்பட்டு வரும். அதுபோல், கண்ணனும் புறப்பட்டு வர வேண்டுமாம். அரண்மனையிலிருந்து புறப்பட்டுப் போதை தரும் நடையழகு புலப்பட எழுந்து வரவேண்டுமென ஆசைப்படுகிறார்கள் ஆய்க்குலப் பெண்கள்.
இப்படி அவர்கள் தங்கள் பேரார்வத்தைப் புலப்படுத்தவும், அவன், ‘மங்கையரே! எனக்குச் சிங்கம் தானா உவமையாய்க் கிடைத்தது?’ என்ற வேடிக்கையாகக் கேட்கின்றான். உடனே, அவர்கள், ‘உன் நிகரற்ற கம்பீரத்துக்கும், முழக்கத்துக்கும், நடையழகுக்கும் அவ்வாறு குறித்தோமேயன்றி வேறில்லை. உன் மென்மை நலமெல்லாம் பெருகிட்டுச் சொல்வதெனில், நீ ‘பூவைப் பூவண்ணன்’ அல்லவோ?’ என்று சொன்னார்கள்.
‘ஆகில், நான் செய்யத்தக்கது யாது?’ என அவன் கேட்கவும், நீ உறங்கும் அழகைப் பருகி விட்டோம். இனி உன் நடையழகும், சிங்காதனத்தில் வீற்றிருக்கும் வடிவழகும் காண நேசித்தோம். என்றார்கள். அவ்வாறு சபைக்கு அலங்காரமாய் அரசுக் கோலத்தில் கொலுவிருந்து எம் காரியத்தை ஆராய வேண்டும் என்று விருப்பதை விநயமாகத் தெரிவித்தார்கள்.
‘சீரிய சிங்கம்’ என்பதற்கேற்ப அச்சிங்கம் அமரும் இருக்கையையும் ‘சீரிய சிம்மாசனம்’ என்றார்.
கண் வளரும் அழகுபோலே நடையழகும், இருக்கும் பேரழகும் காண வேண்டுமென வரிசையுறக் கேட்டார்கள். ‘கிடந்தமை கண்டோம்’ நடந்தமையும், இருந்தமையும் கண்டு கண்கள் குளிர வேண்டும் என விருப்புற்று வேண்டினார்கள்.
நாம் செல்லுமிடம் தேடி, காலம் பார்த்து, எதிர்ச்சூழலையும் வசமாக மாற்றி, புருஷகாரமாவாளையும் பற்றி நம்மை விடாது தொடர்கிறார்களே! ஏனோ? என்று சிம்மாசனத்திலிருந்து ஆராய வேண்டுமாம்.
அதாவது ஊரிலுள்ள ஒவ்வொருவரையும் எழுப்பி, எல்லாரும் திரண்டுவந்து, வாசல் காப்பானை எழுப்பி, நந்தகோபனை எழுப்பி, யசோதையை எழுப்பி, பலராமனை எழுப்பி, நப்பின்னையை எழுப்பி, தன்னையும் எழுப்பி, இத்தனை துன்பங்கள் பட்டார்களே என்று சிந்தித்து ஆராயவேண்டும் என்பது வேண்டுகோள்.
அப்படி ஆராயும்போது மணி மண்டபமும், சிம்மாசனமும், தேவியும் திருச்சபையும், சங்கமிருப்பார்போலிருந்து உசாவ வேண்டும். அக்காட்சியின்பத்தை ஆயர்குடிப்பிறந்தாரெல்லாம் கண்குளிரக் காணவேண்டுமென, ஓர் இனிய அனுபவம் நாடியவர்களாய் நின்றார்கள்.
தமக்கு உரியவன் திருவோலக்கக்கோலம் காணும் உள்ளத்தின் உந்துதல் இயற்கையாக வெளிப்படுகிறது, இப்பாசுரத்தில்.

No comments:
Post a Comment