திங்கள்திருமுகத்துச் சேயிழையார்சென்றிறைஞ்சி
அங்கப்பறைகொண்டவாற்றை, அணிபுதுவைப்
பைங்கமலத்தண்தெரியல் பட்டர்பிரான்கோதைசொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும்தப்பாமே
இங்கு இப்பரிசுரைப்பாரீரிரண்டுமால்வரைத்தோள்
செங்கண்திருமுகத்துச் செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள்பெற்றின்புறுவரெம்பாவாய்.
----------------------
பதவுரை
வங்கக் கடல் – கப்பல்களையுடைத்தான திருப்பாற் கடலை, கடைந்த – கடைந்து தேவர்களுக்கு அமுதத்தை அளித்த, மாதவனை – ஸ்ரிய:பதியாயும், கேசவனை – ப்ரஹ்மலுக்கும்,ஸிவனுக்கும் தலைவனாயிருக்குமவனே, திங்கள் – நிறைமதியைப் போன்ற, திருமுகத்து – அழகிய முகத்தையுடையவராய், சேயிழையார் – செவ்விதான அணிகலன்களையுடைய கோபிமார், சென்றிறைஞ்சி – சென்று மங்களாஸாஸநம் செய்து, அங்கு – திருவாய்ப் பாடியில், அப்பறைகொண்ட – நாட்டுக்குப்பறையென்றொரு வ்யாஜத்தையிட்டு-அடிமைகொண்ட, வாற்றை – அந்த ப்ரகாரத்தை, அணிபுதுவை – அழகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தவராய், பை – பஸுத்து, தண் – குளிர்ந்த, கமலம் – தாமரை மலர்களாகிய, தெரியல் – மாலையையுடையராய், பட்டர்பிரான் – ப்ராம்ஹணோத்தமரான பெரியாழ்வார் (மகளான), கொதை சொன்ன – ஆண்டாள் அருளிச் செய்ததாய், சங்கம் – கோபியர் திரள் திரளாகக் கூடி அநுபவித்த ப்ரபந்தமாய், தமிழ் மாலை – த்ராவிடமயமாய் மாலாரூபமான, முப்பதும் – முப்பது பாட்டுகளையும், தப்பாமே – தப்பாமல், இங்கு இப்பரிசு உரைப்பார் – இந்த ஸம்ஸாரத்தில் இப்பாசுர மாத்திரத்தைச் செல்லுமவர்கள், மால்வரை – பெரிய மாலையையொத்தான, ஈரிரண்டு தோள் – நான்கு திருத்தோள்களையும், செங்கண் – சிவந்த திருக்கண்களையும், திருமுகம் – அழகிய திருமுக மண்டலத்தையும் உடையவனாய், செல்வம் – ஐஸ்வர்யத்தை உடையவரான, திருமாலால் – ஸ்ரிய:பதியான நாராயணனாலே, எங்கும் – எல்லாவிடத்தும், திருவருள் பெற்று – ஒப்பற்ற க்ருபையை அடைந்து, இன்புறுவர் – ப்ரஹ்மாநந்தத்தைப் பெற்றவராய் இருக்கப் பெறுவர்கள்.
“அலைகள் நிறைந்த பாற்கடலைக் கடைந்த மாதவனும், கேசி என்ற அரக்கனைக் கொன்ற கேசவனுமான கண்ணனை, நிலவைப் போன்ற அழகிய முகம் கொண்ட அணிகலன்கள் அணிந்த ஆயர்குலப் பெண்கள் தரிசித்து, பாவை விரத பலனாகிய பறை என்ற மோட்சம் பெற்ற செய்தியை ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த, குளிர்ந்த தாமரை போன்ற முகத்தையுடைய பெரியாழ்வாரின் பெண்ணான ஆண்டாள், இனிய தமிழில் முப்பது பாடல்களாகப் பாடி பாமாலை தொடுத்திருக்கிறாள்…
இதனை தவறாமல் முப்பது நாட்களும் படிப்பவர்கள், உயர்ந்த தோள்களையும், அழகிய கண்களையும் கொண்ட செல்வத் திருமாலின் ஆசியுடன், எங்குச் சென்றாலும் செல்வச்செழிப்பு பெற்று இன்பமுடன் வாழ்வர்… என்று மார்கழி உற்சவத்தை நிறைவு செய்கிறாள் கோதை…!”
திருப்பாவையில் முத்தாய்ப்பான முப்பதாம் பாசுரம் இது. மார்கழி என்னும் காலமும், காலத்தே நோற்கும் நோன்பும் நோன்பின் அங்கங்களும் எடுத்துக்கூறி, அந்நோன்பினால் நாடு செழிக்க நல்ல மழை பொழிவதைச் சுட்டிக்காட்டி, பாகவத சகவாசம் என்கிற கூட்டு வழிபாட்டை எண்ணி ஆயர் சிறுமியரைத் திரட்ட முனைந்து, புதிதாய் இவ்வழிபாடு மேற்கொள்கிறவளை எழுப்பி, காலைப் போதின் சின்னங்கள் காட்டி, கண்ணன் அன்பின் இனிமையில் தன்னை மறந்த கிடப்பாளை எழுப்பி, இவ்வாறே பதின்மரை எழுப்பும் அழகைச் சொல்லி, எல்லோரும் திரண்டு நந்தகோபன் வாயில் காப்பானையும், கோயில் காப்பானையும் எழுப்பி, கண்ணன் திருமனையில் நந்தகோபன், யசோதை, நப்பின்னை, பலராமன், கண்ணன் என ஒவ்வொருவராய் உணர்வித்து, பாவை நோன்புக்குத் தேவையாயின கேட்டு, அவனும் சம்மதிக்க, அதற்கும் அப்பால் அவனையும் அவன் அடித்தொண்டையும் நாடியே வந்ததாகப் பாசுரங்களிலே அழகும் இனிய பாவனையுமாக ஆண்டாள் பாடியளித்தார்.
ஆயர்பாடியிலே நிகழ்வதாக கற்பித்துத் தன் காலத்திலும் நடப்பதாக நாச்சியார் பாடிய திருப்பாவையில் சொல்லழகும், பொருளழகும் உயிரும், உணர்வும் கொஞ்சிக் கிடக்கின்றன.
கலங்கள் திரியும் கடலைக் கடந்து தேவ்ர்களுக்கு அமுதம் அளித்தவன் திருமகள் கேள்வனும், கேசவன் என்ற திருப்பெயரை உடையவனுமாகிய கண்ணன், விண்ணவர் அமுதுண்ண, அமுதில் வரும் பெண்ணமுதம் உண்ட பெருமான் அவன். பாற்கடலைக் கடைந்து பிராட்டியைப் பெற்றாற் போல இங்கு தயிர் கடைவதைச் சாக்காகக் கொண்டு ஆயமகளிரைப் பெறுகிறவனும் அவனே.
பிராட்டி அருகிருக்க அன்பர் பிழையெல்லாம் பொறுப்பான் அவன் என்பதால் ‘மாதவன்’ என்றார். வங்கக் கடல் கடையுங்கால் அவன் அழகிய கேசம் அசையும் நேர்த்தி நினைவு வரக் ‘கேசவன்’ என்று சிறப்பித்தார்.
இப்பெறலரும் பேற்றைப் பெற்ற வரலாற்றை வில்லிபுத்தூர் வாழ்ந்தவரும், தாமரை மாலை அணிந்த வருமான பட்டர்பிரான் பெரியாழ்வாரின் அருமை திருமகள் கோதை நாச்சியார் சங்கத் தமிழ்மாலை முப்பதாகத் தொடுத்துரைத்தார். இம்முப்பது பாசுரங்களையும் விடாது இம்மானுட வாழ்விலே இருப்பார் சொல்லுவாராகில் சிவந்த தாமரைக் கண்கள் கொண்டவனும் செல்வத் திருமாலுமாகிய அப்பெருமானின் திருவருளைப் பெற்று இன்புறுவார்கள். இது இப்பாசுரத்தின் கருத்து.
பாசுரம் மாதவனில் தொடங்கி செல்வத் திருமாலில் நிறைவு பெறுகின்றது. பிராட்டியின் பெருந்துணையால் அவனருள் பெற்றுய்ய வேண்டும் என்பதால் இரு நிலைகளிலும் திருமகள் நினைவுகூரப் பெறுகின்றனர்.
சீர்மல்கும் ஆய்பாடி என்றார்போல், ‘அணி புதுவை’ என வில்லிபுத்தூரைச் சிறப்பித்தார். வடபெருங் கோயிலுடையானும், பட்டர்பிரானும் ஆண்டாளும் அணிகலனாய் அமைந்த ஊர் அன்றோ அது, அதனால் அவ்வாறு கூறினார்.
‘சங்கத் தமிழ்மாலை’ என்ற தொடர் பொருளாழம் மிக்கது, பண்டு சங்கம் கண்ட புலமை நலமுடையாரெல்லாம் பரிபாடல் முதலான நூல்களிலே புகழ்ந்தேத்தும் மாயோனின் சிறப்பைத் தன்னுள் ஏற்று ஆண்டாள் தொடுத்த தமிழ்மாலை இது. அது மட்டுமன்று. செவிப்பூ தந்தவனுக்குச் செந்தமிழ்த் தேன் சிந்தும் முப்பது பூக்களால் அடுக்கித் தொகுத்து அளித்த மாலை. இது மாலைக் கட்டிய மாலை…பூவை பூட்டிய பூச்சரம்.
மந்திரம்போல் முழுவதும் கருக்காலும் வேதம் போல் பெரிதாய் விரியாமலும் விளங்கும் விழுமிய மறை திருப்பாவை. இதனைத் தப்பாமல் செப்புவார் நான்கு தோள் உடைய பெருமான் அருள் பெறுவார். அன்பால் அணைக்கும் அவன் தோள்கள் இரட்டிப்பு இன்பத்தால் நான்காயின.
‘விடிந்தவாறே எழுந்திருந்து முப்பது பாட்டையும் அநுசரித்தல், மாட்டிற்றில்னாகில் ‘சிற்றஞ் சிறுகாலே’ என்கிற பாட்டையும் அநுசரித்தல், அது மாட்டிற்றினாகில் நாமிருந்த இருப்பை நினைப்பது’ என்று பட்டர் அருளிச் செய்வார்.
ஆம், எங்கும் திருவருள் பெற்ற இன்புறுவார் எம்பாவாய் என்று நிறைவு பெறுகிறது திருப்பாவை.

No comments:
Post a Comment