Monday, February 8, 2021

#சங்க_இலக்கியத்தில்_பொங்கல்_திருநாள்.


———————————————————-
இந்த தைத்திருநாளில்
ஞாயிறு போற்றுதும்
ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரி போல்
பொற்கோட்டு
மேரு வலம் திரிதலான் !
என்ற உழவுக்கும் உழவருக்கும் நன்றி பாராட்டும் நாள்.
தமிழ் இலக்கியத்தில் கம்பன் மட்டுமல்ல ஏர் எழுவது, சிலப்பதிகாரம் என்ற பண்டைய இலக்கியங்களில் சூரிய வணக்கத்தையும் அறுவடையையும் போற்றும் நாளாகும்.
புறநானூற்றுப் பாடலில்
“வருபடை தாங்கிப் பெயர்ப் புறத்தார்த்துப்
பொருபடை தரூஉங் கொற்றம் உழுபடை
உழாஅ நாஞ்சில் பொருந” (புறம் - 35)
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சிலப்பதிகாரத்தில் நீர்ப்படைக்காதையில் சேரன் செங்குட்டுவன் பகையரசரை வென்று கழுதை ஏர் உழுததாக இளங்கோவடிகள்
“வடதிசை மன்னர் மன்னெயில் முருக்கி
கவடி வித்திய கழுதையேர் உழவன்
குடவர் கோமான் வந்தான்” என்று பாடியுள்ளார்.
“தைத் திங்கள் தண்ணிய தரினும்” – குறுந்தொகை 196,
“தைஇத் தண்கயம் போலப் பலர் படிந்துண்ணும் பரத்தை மார்பே” – ஐங்குறுநூறு 84,
”மகளிர் படிந்தாடும் தைஇத் தாண்கயம் போல”
”இழையணியாயமொடு தகுநாண் தடை இத்தை இத் தண்கயம் படியும் பெருந்தோட்குறுமகள்” – நற்றிணை 4
“தாயருகா நின்று தவத்தைந் நீராடுதல்” – பரிபாடல் 11:19
“தையில் நீராடிய தவம்” – கலித்தொகை 59
என்பன போன்ற வரிகளில் பெண்கள் குளங்கள், ஆறுகளில் தை நோன்பு கொள்ள நீராடியதாகவும் நாம் சங்க இலக்கியங்களில் அறிகின்றோம்.
முதல் நாள் போகிப்பண்டிகை. இதை இந்திரனுக்குரிய விழாவாக புராணிகர்கள் கூற, மக்களோ, பழையன போக்கி புதியன கொண்டாடப்படும் விழாவெனக் குறிப்பிடுகின்றனர்.
இரண்டாம் நாள் பெரும் பொங்கல். இந்நாளில் மக்கள் தம் வாழ்விற்குக் காரணமாக விளங்கும் கதிரவனைத் தெய்வமாகக் கருதிப் புதிய பானையில் புத்தரிசி இட்டு பொங்கி அத்துடன் காய்கனிகளைப் படைத்து வழிபடுகின்றனர். இந்நாளை புராணிகர்கள் சிவனாகிய சங்கரனுக்குரிய நாளாகக் கருதிச் ‘சங்கராந்தி’ என்ற பெயரில் கொண்டாடுகின்றனர்.

சூரியனுக்குப் பரிதி, ஞாயிறு, பகலவன், கதிரவன், தினகரன், ஆதித்தன், இரவி என பல்வேறு பெயர்கள் உண்டு.
‘உலகம் உவப்ப வலனேர்பு திரிதிகு
பல்கதிர் ஞாயிறு கடல் கண்டாங்கு’
என்ற திருமுருகாற்றுப் படையின் அமுதமொழிக்கு ஏற்ப உலகம் முழுவது சூரியன் வழிபாடு நிகழ்கிறது.
எகிப்தியர் சூரியனை ‘ஆமன் -ரா’ என்றும், கிரேக்கர்கள் ‘போபஸ் அப்பலோ’ என்றும், ஈரானியர் ‘மித்ரா’ என்று கூறி வழிபாடு செய்து வருகின்றனர்.
‘கருங்கடல் கரையோரப் பகுதியில், சூரிய வழிபாடு உண்டு என்று ரஷ்யாவின் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். சுமேரியர்கள் ‘சாமாஷ்’ என்ற பெயரில் சூரிய வழிபாடு செய்வர். லண்டன் அருகில் உள்ள ‘ஸ்டோன் ஹென்க்’ என்ற கிராம மக்கள் மாலையில் கிழக்கு முகமாக நின்று சூரிய வழிபாடு செய்வர். சிலி நாட்டு மன்னர் ‘சூரியன் மைந்தர்’ என்றே அழைக்கப்படுகின்றார். மேலும் சீனா, ஜப்பான், மெக்சிகோ, பெரு நாடுகளில் சூரிய வழிபாடு உண்டு.
“உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து”
உழவர்கள் தான் உலகத்தவருக்கு அச்சாணி போன்றவர்கள், ஏனெனில் உழவுத் தொழிலில் ஈடுபட முடியாமல் உயிர் வாழ்வோரை சேர்த்து அவர்கள் தாங்குகிறார்கள் என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.

புதிய கற்காலம் தொடங்கிய காலக்கட்டத்திலேயே தமிழர்கள் உழவுத் தொழிலைச் செய்யக் கற்றிருந்தனர். தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சியின்போது கிடைத்துள்ள புதிய கற்காலக் கருவிகள் பல உழவுத் தொழிலுக்குரியவைகளாக உள்ளன, என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
நெல்பயிரிடும் முறையில் பண்டைக்காலம் முதலே தமிழர்கள் சிறப்புற்று விளங்கி வந்துள்ளனர். நெல்லைப் பயிரிடும் முறையை முதன் முதலாகக் கண்டறிந்தவர்கள் தமிழர்களே.
தமிழ்நாட்டில் இருந்துதான் நெல் சாகுபடி முறை தென்கிழக்காசிய நாடுகளில் பரவிற்று எனலாம். இந்நாடுகளுக்குத் தமிழர் சென்றபோது தமிழர் வேளாண்மை முறைகளும் அந்நாடுகளில் பரவின.
தொன்றுதொட்டே தமிழர்கள் பொங்கல் விழாவினைச் சிறப்பாகக் கொண்டாடி வந்திருக்கின்றனர். புறநானூற்றுக் காலத்தில் இவ்விழா எவ்விதம் கொண்டாடப்பட்டது என்பதை
“வலங்கு செந்நெல் கதிர்வேய்ந்த
வாய் கரும்பின் கொடிக் கூரை
சாறு கொண்ட களம் போல,
வேறு வேறு பொலிவு தோன்ற
குற்றானா வுலக்கையால்
கலிச் சும்மை வியாலங் கண்”
என்று குருஞ்கோழியூர்க் கிழார் என்னும் புலவர் பாடியுள்ளார்.
நெற்கதிரைக் கொண்டு வேயப்பட்ட கூரைவீடுகள். அவ்வீடுகளின் வாசலில் கரும்பைத் தோரணமாகக் கட்டியிருக்கிறார்கள். அங்கு தானியம் குவிந்து கிடக்கிறது. உலக்கையைச் சுற்றி அலங்காரம் செய்து வைத்திருக்கிறார்கள். அது நெல் குற்றுவதற்காக அல்ல. வள்ளக்கூத்தாடு களத்தின் நடுவே கிடத்துவற்காக வைத்திருக்கிறார்கள். வள்ளைக்கூத்து என்பது நெல்குற்றுவது போல பெண்கள் ஆடும் கூத்து என இப்பாடல் நமக்கு கூறுகிறது.
தமிழரின் பொங்கல் விழாவில் கரும்பும், சருக்கரையும் முதன்மை இடம் பெற்றுள்ளன. உலக மக்களுக்குக் கரும்பையும் சருக்கரையும் அறிமுகப்படுத்திய பெருமை தமிழர்களையே சாரும்.
“அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்து
நீரக இருக்கை ஆழி சூட்டிய
தொன்னிலை மரபின் முன்னோன் போல”
என ஒளவையார் பாடிய புறநானூற்றுப் பாடல் கூறுகிறது. சேரமரபைச் சேர்ந்த அதியமானின் முன்னோர்களுள் ஒருவன் கடல் கடந்த நாடுகளுக்குச் சென்று திரும்பியபோது கரும்புப் பயிரை முதன் முதலாகத் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்தான் என்பதை இப்பாடல் மூலம் அறிகிறோம்.
இப்படியாக பொங்கல் திருநாளை சங்க இலக்கியங்களில் பல புலவர்கள் பாடியுள்ளனர்.
கே.எஸ்.இராதா கிருஷ்ணன்
14.01.2021

No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...