—————————————
இலங்கை விடுதலை பெற்று இன்றைக்கு 75 ஆண்டுகள் முடிகின்றன. ஆனால் இலங்கையில் தமிழர்களுக்கு இதுவரை சம உரிமை வழங்கப்படவில்லை. 1948 - இல் விடுதலை பெற்ற காலத்திலிருந்து தமிழர்களுக்கும் சிங்கள அரசினருக்கும் இடையே ஏறத்தாழ 9 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. ஆனால் ஈழத் தமிழர்களுக்கான உரிமைகள் இதுவரை வழங்கப்படவே இல்லை.
இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தாலும், அங்கு வாழும் தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. இதற்கான போராட்டங்கள், துயரங்கள் இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அந்த சோகக் கதைகளும் 75 ஆண்டுகளைக் கடந்துவிட்டன.
இலங்கையில் சோல்பரி அரசியல் அமைப்புச் சட்டம் 1947- இல் நடைமுறைக்கு வந்தாலும், 1948 - இல்தான் ஆங்கிலேயர்கள் முழுமையான சுதந்திரத்தை இலங்கைக்கு வழங்கினர்.
இலங்கை அரசியல் அமைப்புச் சட்டம், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தைப் போல அரசியல் அமைப்பு நிர்ணயக் குழுவில் விவாதித்து முழுமையாக்கப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டமில்லை.
கடந்த காலங்களில் ஏறத்தாழ 18 அரசியல் அமைப்புச் சட்ட திருத்தங்கள் இலங்கையில் கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்த 1970 - 72 -இல் ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சி சோசலிச ஜனநாயக குடியரசு என்று சட்டத்தைத் திருத்தியது. அதன் பின் ஜெயவர்த்தனே அதிபராட்சி முறையை ஏற்படுத்தும் வகையில் தன் விருப்பம்போல அரசியல் அமைப்புச் சாசனத்தை திருத்தினார். அதன் மூலம் தன்னையே அதிபராக்கிக் கொண்டு, தமிழர்களை அவர் வதை செய்ததெல்லாம் கடந்த கால நிகழ்வுகள்.
இன்றைக்கு இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை. மின் உற்பத்தி சரிவர இல்லாத நிலையில் அடிக்கடி ஏற்படும் மின் தடை, அதிகரித்திருக்கும் விலைவாசி என கடுமையான நெருக்கடிகள் தொடர்கின்றன. ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்கான போராட்டங்களை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளில் இலங்கை அரசு ஈடுபட்டதே இந்த நிலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
ஈழத்தமிழர்களுக்கு எதிரான போரில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பாக ஐநா மனித உரிமைப் பேரவை தனது அறிக்கையில் தெளிவாகப் பதிவு செய்துள்ளது. போர் முடிவுக்கு வந்த பிறகும் கடந்த 13 ஆண்டு காலமாக கடுமையான மனித உரிமை மீறல்களை இலங்கை அரசு மேற்கொண்டுள்ளதாக ஐநா மனித உரிமைப் பேரவை குற்றம்சாட்டியுள்ளது. உள்நாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.
கடந்த 2009 - இல் நடந்த போரில் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் இல்லாமல் போனநிலையில் 2010 இல் கூடிய ஐநா சபையில் இந்தப் பிரச்னை சரியாக அணுகப்படவில்லை. 2015 - இல்தான் முதன்முறையாக இலங்கைக்கு எதிராக ஐநா தீர்மானம் கொண்டு வந்தது. அதற்குப் பிறகு ஐநா மனித உரிமைப் பேரவையில் கொண்டு வரப்பட்ட 30/1, 34/1, 40/1 ஆகிய தீர்மானங்களையும் இலங்கை அரசு பொருட்படுத்தவில்லை.
கடந்த ஆண்டு ஐநா மனித உரிமைப் பேரவை கொண்டு வந்த 46/1 தீர்மானம் தொடர்பாக ஐநாவின் ஆணையாளர் மிச்சல் பச்லெட் கடந்த காலத்தில் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் நிகழ்வுகள் தொடர்பான விசாரணையை வலியுறுத்தினார். மீண்டும் மனித உரிமை மீறல் நிகழாதவாறு சட்டங்கள் கொண்டு வரப்படவேண்டும்,பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ராணுவம் தமிழர் பகுதிகளில் கையகப்படுத்திய நிலங்களைத் திரும்ப அளிக்க வேண்டும் என்றும், தமிழர் பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகளைக் குறைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் இலங்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தவுடன் அவர்களைப் பயமுறுத்தும் நடவடிக்கைகளில்தான் இலங்கை ராணுவம் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த முன்னாள் அதிபர்களான மகிந்த ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சே, ராணுவ அதிகாரிகளான சுனில் ரத்நாயக, சந்தன ஹெட்டியாராச்சி ஆகியோர் கனடாவுக்குள் நுழையக் கூடாது என்று கனடா அரசு தடைவிதித்திருக்கிறது. இதை இவர்களுக்கு எதிரான தடையாகப் பார்க்க முடியாது. இலங்கைக்கே விதித்த தடையாகவே பார்க்கப்பட வேண்டும் என்று கருதப்படுகிறது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீர வேண்டுமானால், இனப் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும். ஈழ விடுதலைப் போரில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மறைக்காமல், தமிழர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை விசாரித்து, அவர்களுக்கு உரிய தண்டனை வழங்குவதே இனப் பிரச்னைக்கான தீர்வின் முதல் படியாக இருக்கும். ஐநா மனித உரிமைப் பேரவை வலியுறுத்துவதும் அதைத்தான். முன்னாள் இலங்கை அதிபர்கள், இராணுவ அதிகாரிகள் கனடாவில் நுழைவதற்கான தடையும் அதைத்தான் வலியுறுத்துகிறது.
#இலங்கை_விடுதலை_பெற்று_75_ஆண்டுகள் #ஈழத்தமிழர்
கே.எஸ். இராதா கிருஷ்ணன்.
K.S.Radhakrishnan.
#KSR_Post
4-2-2023.
No comments:
Post a Comment