Sunday, February 5, 2023

#தண்ணீர் நீரலைகளும்-நினைவலைகளும்

#தண்ணீர் நீரலைகளும்-நினைவலைகளும் ‘அச்சன்கோவில் – பம்பை –வைப்பாறு இணைப்பு திட்டம்
—————————————
‘தண்ணீர் நீரலைகளும் நினைவலைகளும்’ என்ற புத்தகத்தை ஸ்நேகா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர்கள் 60 பேர் தண்ணீரைப் பற்றி எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து சகோதரி மதுமிதா இந்நூலை உருவாக்கியிருக்கிறார். 
இந்த புத்தகம் கையில் கிடைத்தது. ‘அச்சன்கோவில் – பம்பை –வைப்பாறு இணைப்பு திட்டம் குறித்து’ என்ற எனது கட்டுரையும் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. நன்றி Madhumitha Rajaமதுமிதாவுக்கும், sneha_booksஸ்நேகா பதிப்பகத்திற்கும். 

#*அச்சன்கோவில்- பம்பை-தமிழ்நாட்டு வைப்பாறோடு இணைப்புத்திட்டம் குறித்து*
 
 
கேரள சட்டப்பேரவையில் 2015 மார்ச் 3-இல் நடைபெற்ற கூட்டத்தில், பம்பை - அச்சன்கோவில் - வைப்பாறு இணைப்பு செயல்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடைக் காலங்களில் தண்ணீர்த் தட்டுப்பாட்டால் கேரளம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இதற்காக வாமனபுரம், அச்சன்கோவில், மீனச்சில், சாலியாறு நதிகளின் குறுக்கே புதிய அணை கட்டப்படும் என்றும் அந்த உரையில் கூறப்பட்டுள்ளது.
அச்சன்கோவில் ஆற்றில் தண்ணீர் வரத்து வரும் பகுதியில்தான் இந்தப் புதிய அணை கட்டப்படும். மத்திய அரசால் 1972-இல் இருந்து பரிந்துரைக்கப்பட்ட, தமிழகம் பயன்பெறும் திட்டம் இதனால் கேள்விக்குறி ஆகிவிட்டது.
அந்தத் திட்டம் என்ன? கேரளத்தில் உள்ள பம்பை - அச்சன்கோவில் ஆற்றுப் படுகையின் உபரிநீரைத் தமிழகத்தின் வைப்பாறோடு இணைக்கும் திட்டம் 43 வருடங்களாக விவாதிக்கப்பட்டு, மத்திய அரசும் இத்திட்டத்தைப் பரிந்துரைத்தது.
கேரளத்தின் ஒத்துழைப்பு இல்லாததால் இந்தத் திட்டம் கிடப்பில் உள்ளது. ஆறுகள் தேசியமயமாக்கப்படுவதுடன், கேரளத்தில் மேற்கு நோக்கிப் பாயும் நதிகளின் உபரி நீரை தமிழகத்துக்குத் திருப்புவதோடு, அங்குள்ள அச்சன்கோவில் - பம்பை ஆறுகளை தமிழகத்தில் உள்ள வைப்பாறோடு இணைக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தேன்.
இதுதொடர்பாக ஆக்கப்பூர்வமான வழிமுறைகளைக் காண மத்திய அரசு ஒரு குழு அமைக்க வேண்டும் என்றும், அந்தக் குழு இந்தப் பிரச்னைக்கு அவசியம் தீர்வு காண வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் மிகத் தெளிவாக அறிவுறுத்தியது.

அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் தலையீட்டில், மத்திய அரசு 1972-இல் அமைத்த நீர்ப் பாசனக் குழுவின் அறிக்கை தொகுதி ஐஐ பக்கம் 384-இல், "கேரளத்தில் மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளிலிருந்து தண்ணீர் வீணாகக் கடலுக்குச் செல்கிறது. இதைத் தமிழகத்துக்குத் திருப்பலாம்' என்று அப்போதே பரிந்துரைத்தது.
4,134 கியூ.மீ. தண்ணீர் கடலில் கலப்பதாக இந்த அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. இந்தப் பிரச்னை குறித்து, அப்போதிருந்து இதுவரை மத்திய அரசின் முன்னிலையில் 20 சுற்றுகளுக்கு மேல் பேசப்பட்டும் கேரள - தமிழ்நாடு மாநிலங்களுக்கு இடையே எந்த முடிவும் எட்டப்படவில்லை.
அச்சன்கோவில் - பம்பை - வைப்பாறு இணைப்பால், விருதுநகர், திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்கள் பாசன வசதி பெறும். குடிநீர் வசதியும் கிடைக்கும். இங்கு 500 மெகாவாட் நீர்மின் திட்டத்தையும் ஏற்படுத்தி மின் உற்பத்தியையும் பெற முடியும்.
1992-93 -ஆம் ஆண்டில், இந்தத் திட்டத்தின் மதிப்பீடு ரூ.1,397.91 கோடி. எட்டு வருடங்களில் இந்தப் பணியை முடிக்கலாம் என்றும் திட்டமிடப்பட்டது. 17 ஆண்டுகளுக்கு முன்பு, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, சுரேஷ் பிரபு தலைமையில் இயங்கிய நதிநீர் இணைப்புக் குழு, பம்பை - அச்சன்கோவில் - வைப்பாறு இணைப்பு பற்றி ஆய்வு செய்தது.
பம்பை - கல்லாறு புன்னமேடு என்ற இடத்தில், 160 மீட்டர் உயரத்தில் அணை கட்டுவதும், அதுபோல, அச்சன்கோவில் கல்லாறு ஆற்றில் சித்தார்மூழி என்ற இடத்தில் 160 மீட்டர் உயர அணை கட்டி, அந்த ஆற்று நீரைத் தேக்கி, அச்சன்கோவில் அருகே 35 மீட்டர் உயரத்துக்கு கிராவிட்டி அணை கட்டி, புன்னமேடு, சித்தார்மூழி இரண்டு அணைகளையும் இணைத்து 5 மீட்டர் விட்டத்துக்கு சுரங்கம் வெட்டி, 8 கி.மீ. தொலைவு சுரங்கம் வழியாக தமிழக எல்லைக்கு வந்து 550.68 கி.மீ. தொலைவில் வைப்பாற்றோடு அந்தத் தண்ணீரை இணைக்கலாம்.
செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், திருவேங்கடம், வெம்பக்கோட்டை, சாத்தூர் அருகில் உள்ள வைப்பாற்றில் இணைந்து தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வழியாகக் கடலில் சேரும். இதுதான் அச்சன்கோவில் - பம்பை - வைப்பாறு இணைப்புத் திட்டம்.
இந்தத் திட்டத்தின் வாயிலாக, சிவகாசி வடபுரத்திலும், தெற்கே கோவில்பட்டி வரையிலும் நீர்ப் பாசனப் பரப்புக்கும், குடிநீருக்கும் பயன்பெறும் வகையில் கிளைக் கால்வாய்களும் இடம்பெறும்.
இந்தக் கால்வாய்களில் வரும் நீர் வரத்தைக் கிளைக் கால்வாய்களாக சிவகிரி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் வரை கொண்டு செல்ல முடியும். ஏற்கெனவே ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அழகர் அணைத் திட்டமும் பரிசீலனையில் இருக்கும்போது, வைப்பாறு கிளைக் கால்வாய் சேர்ந்தால் நீர் வரத்து அதிகமாகும்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள அடவிநயினார் அணைக்கும், திட்டத்தில் உள்ள உள்ளாறு, செண்பகத்தோப்பு அணைகளுக்கும் நீர்வரத்து பெருகும்.
நெல்லை மாவட்டத்தின் கடையநல்லூர் - சங்கரன்கோவில் தெற்கு நோக்கி கால்வாய் வெட்டினால், மேலநீலிதநல்லூர், மானூர் பகுதி வழியாகச் சென்று தாமிரபரணியில் இணைக்கலாம். மேலும், இந்தக் கால்வாய் தெற்கே நான்குநேரி வரை கொண்டு சென்று தற்போது பணி நடக்கிற தாமிரபரணி- கருமேனி ஆற்றோடும் சேர்க்கலாம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் அருகே தெற்கு நோக்கி கால்வாய் வெட்டினால், எட்டையபுரம், ஓட்டப்பிடாரம் வரை சென்று தூத்துக்குடி நகருக்கே குடிநீர் வழங்கலாம். இந்தத் திட்டத்தால் இவ்வளவுப் பயன் உள்ளது.

வீணாகக் கடலுக்கு செல்லும் நீரைப் பெறுவதற்குத்தான் கேரளத்திடம் மண்டியிடுகிறோம். ஆனால், ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தமிழ்நாட்டுக்குத் தரமாட்டோம் என்பதில் அங்கு உள்ள ஆட்சியாளர்கள் உறுதியாக இருக்கின்றனர்.
அச்சன்கோவில் - பம்பை - வைப்பாறு இணைப்புத் திட்டம் குறித்து தமிழக மக்களிடம் இன்னும் விழிப்புணர்வு ஏற்படவில்லை. கன்னியாகுமரி நெய்யாறு, திருநெல்வேலி மாவட்டத்தின் அடவிநயினார், உள்ளாறு, செண்பகத்தோப்பு, விருதுநகர் மாவட்டம் அழகர் அணைத் திட்டம் மற்றும் முல்லைப் பெரியாறு, பாண்டியாறு-புன்னம்புழா, ஆழியாறு-பரம்பிக்குளம், சிறுவாணி, பம்பாறு என அனைத்துப் பிரச்னைகளிலும் கேரளம் தாராளமாகத் தண்ணீர் வழங்கலாம். ஆனால், கேரளத்துக்கு மனம்தான் இல்லை.
இதுகுறித்து முதல்வர் உம்மன் சாண்டி கேரள சட்டப் பேரவையில் பேசியபோது, பம்பை, அச்சன்கோவில் ஆறுகளைத் தமிழகத்தின் வைப்பாற்றுடன் இணைக்க முடியாது என்றும், முல்லைப் பெரியாறுக்குச் சொன்ன கற்பனைக் காரணமான பேரழிவு ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்
இதனால் குட்டநாடு பகுதி பாலைவனமாகிவிடும் என்றும், உபரி நீரை தமிழகத்துக்குத் திருப்பினால் கேரளத்தில் மீன் பிடிப்புத் தொழில் பாதிக்கும் என்ற வினோதமான காரணத்தையும் சொல்கிறார். அங்கு கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதே பதில்தான். தமிழகமோ 20 சதவீத உபரிநீரைத்தான் வைப்பாறு இணைப்புக்குக் கேட்கிறது.
ஐரோப்பாவிலுள்ள யூகோஸ்லாவியா கேரள மாநிலத்தைப் போன்று மலைப் பிரதேசமாகும். அதற்கு அண்டை நாடான ருமேனியாவுக்கு, யூகோஸ்லாவியா தன் நாட்டிலுள்ள எஞ்சிய நீரைக் கொடுத்து உதவும்போது, இந்தியாவிலுள்ள ஒரு மாநிலத்தின் எஞ்சிய நீரை மற்ற மாநிலத்துக்குக் கொடுப்பதால் எந்தவிதமான சிக்கலும், பாதிப்பும் ஏற்படாது.
இதைப் போன்று சோவியத் யூனியனின் அங்கமாக இருந்தபோது, அண்டை மாநிலங்களுக்கு எஞ்சிய நீரைக் கொடுத்து உதவி செய்தது துருக்மேனியா. சோவியத் நாட்டில் வட பகுதிகளில் பாயும் ஆற்று நீர் தென் பகுதிகளுக்குத் திருப்பப்பட்டுள்ளது.
கேரளப் படுகையில் உள்ள பாண்டியாறு, புள்ளம்புழா, மோயாறு, சோலாத்திப் புழா, பன்சிகல்லா ஆகிய ஆற்று நீர் மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் வரை பயன்பெறும். இதில் எஞ்சிய நீர் சுமார் 150 டி.எம்.சி. ஆகும். இந்த நீரில் சுமார் 18 டி.எம்.சி. நீரைத் திருப்பினால் 2.80 லட்சம் ஏக்கர்களுக்கு பாசன வசதி கிடைக்கும்.
மற்ற ஆற்றுப்படுகைகளில் இருந்து கிழக்கு முகமாகத் தமிழகத்துக்குத் திருப்பினால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்கள் வளம்பெறும்.
நாகர்கோவில், திருநெல்வேலி, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், பழநி, திருச்சி, பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய நகரங்கள் குடிநீர் வசதி பெறும்.
பம்பை - அச்சன் கோவில் - வைப்பாறு இணைப்புத் திட்டத்தை மத்திய அரசின் தேசிய நீர் மேம்பாட்டு ஆணையம் வரையறை செய்தது. இதனால், தென் தமிழகப் பகுதிகள் பாசன வசதி பெறும் என்பதால் தமிழக அரசு ஒப்புதல் அளித்தது.
ஆனால், உபரி நீரை வழங்க வேண்டிய கேரள அரசு இன்றுவரை ஒப்புதல் தராமல் இழுத்தடித்து வருகிறது.
கேரளத்தில் உற்பத்தியாகும் ஆற்று நீரை முழுமையாகக் கேரள மக்கள் பயன்படுத்தவில்லை. அதிகமான மலைப் பிரதேசங்கள் இருப்பதால் விவசாய நிலங்கள் குறைவு. கேரள மாநிலத்தின் நீர் வளம் தமிழகத்தைவிட அதிகமானதாகும். தமிழ்நாட்டின் நீர் வளம் 1,300 டி.எம்.சி. ஆகும்.
ஆனால், கேரளத்தின் நீர்வளம் சுமார் 2,500 டி.எம்.சி. இதில் சுமார் 1,100 டி.எம்.சி.க்கும் அதிகமான நீர் வீணாகி அரபிக் கடலில் சேருகிறது. (இந்தத் தண்ணீரின் அளவு மேட்டூர் அணையிலுள்ள நீரைப் போல சுமார் 11 மடங்கு ஆகும்.)

கேரள மாநிலத்துக்குத் தேவையான நீர் அளவு 800 டி.எம்.சி. மீதமுள்ள நீரைத் தமிழகத்துக்குக் கொடுத்தால் சுமார் 8.20 லட்சம் ஏக்கர்கள் பாசன வசதி பெறும். இதனால், கேரளத்துக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை.
கேரளத்தில் மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகள் 85 உள்ளன. 1,96,000 மில்லியன் கியூபிக் மீட்டர் தண்ணீர் இந்த ஆறுகளின் மூலம் செல்கிறது. கேரளத்தில் உள்ள நெய்யாறு நீர்ப்பிடிப்பு பகுதி 138.24 சதுர.கி.மீ. பாம்பாறு (230 டி.எம்.சி.), அச்சன்கோவில் (77 டி.எம்.சி.), பெரியாறு படுகை (380 டி.எம்.சி.), கல்லட ஆறு (180 டி.எம்.சி.) நீர்ப் படுகைகளில் உபரி நீர் உள்ளது. இதில் சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் மில்லியன் கியூபிக் மீட்டர் நீர் கடலுக்குச் செல்கிறது என்று திட்டக் குழுவின் 1978-ஆம் ஆண்டு அறிக்கை கூறுகிறது.
மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளைத் தமிழகத்துக்குத் திருப்புவது பற்றி மத்திய அரசு 1978ஆம் ஆண்டு ஒரு குழு அமைத்து, இந்தத் திட்டத்தைப் பற்றி ஆராய்ந்து, இந்த ஆறுகளின் நீரைத் தமிழகத்துக்குத் திருப்புவதற்கான சாத்தியக் கூறுகளை அறிந்தது.
கேரள மக்களுக்கு அரிசி, காய்கறிகள், பால், மீன், இறைச்சி, மணல், மின்சாரம் போன்ற அத்தியாவசியப் பொருள்களை தமிழகம் வழங்குகிறது. அதற்காகவாவது தண்ணீர் கொடுத்தால்தானே விளைச்சல் செய்து அரிசி, பருப்பு, பால் என்று அவர்களுக்கு வழங்க முடியும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?
அமைதியும், அருட்கொடையும் தவழ்கிற கேரள மண்ணில், தவித்த வாய்க்குத் தண்ணீர் கொடுக்க வேண்டும் என்ற மனிதநேயப் பண்பை இயற்கைதான் வழங்க வேண்டும்.

#அச்சன்கோவில்_பம்பை_தமிழ்நாட்டு_வைப்பாறோடு_இணைப்புத்திட்டம்.
எஸ். இராதா கிருஷ்ணன்.
K.S.Radhakrishnan. 
#KSR_Post
5-2-2023.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...