மறைந்த நடிகர் மயில்சாமியைக் குறித்து கீழ்க்கண்ட பதிவு கண்ணில்பட்டது. இப்படிப்பட்ட மயில்சாமிகள் பலர் இன்றும் இருக்கின்றனர்.
*****************
வாழ்க்கை மிகவும் புதிரானது..
நல்லவர்..
வல்லவர்..
மனித நேயமிக்கவர்..
எல்லோருக்கும் ஓடி ஓடி உதவி செய்தவர்..
பலரது பசியையும் ஆற்றியவர்..
இளகிய மனம் கொண்டவர்..
என்றெல்லாம் இன்றைக்கு புகழுகின்ற ஒருவர் கூட,
அந்த மனிதர் விருகம்பாக்கம் சட்டமன்ற தேர்தலில் (2021) சுயேச்சையாகப் போட்டியிடுகின்ற பொழுது..
மயில்சாமி மிகவும் நல்ல மனிதர் என்று கூறி..
அவருக்காக வாக்கு கேட்கவில்லை..
அவருக்கு ஆதரவாக ஒரு அறிக்கைக்கூட விட்டதில்லை..
தேர்தல் செலவுகளுக்காக எதுவும் கொடுத்ததில்லை..
நானிருக்கிறேன் நண்பா..வா.. களமாடலாம் என்று ஒருவர்கூட பிரச்சாரத்திற்குப் போனதில்லை..
கேவலம்.. ஒரே ஒரு பேஸ்புக் பதிவுகூட அவருக்காக அந்தத் தேர்தலில் யாரும் ஆதரவாக எழுதி நான் பார்த்திருக்கவில்லை..
அவருக்கு யாரும் வாக்களிக்கவும் இல்லை..
அந்தத் தேர்தலில் அவர் பெற்ற வாக்குகள் வெறும் 1,440..
இத்தனைக்கும் அந்த தொகுதிக்குதான் மயில்சாமி விழுந்து விழுந்து பேரிடர் காலங்களில் உதவினார்.. அதைவிட, நம் மக்கள் எதைப் பார்த்து வாக்களிக்கிறார்கள் என்பதும் புரியாத புதிராகவே இருக்கிறது. அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார்கள் என்று நினைத்துதான், எத்தனையோ புதுமுகங்கள் காலடி எடுத்து வைக்கிறார்கள்.. ஆனால், நல்லது செய்துவிட்டு அதன்பிறகு அரசியலுக்கு வந்த மயில்சாமிக்கே இந்த நிலைமை என்றால்?!!
*இன்று அவர் மரணத்திற்குப் பிறகு...*
-மைக் பிடித்து அழுவது..
உருகி உருகி பதிவு போடுவது..
ஆளுயர மாலை கொண்டு வந்து போடுவது..
என்று செய்வது எல்லாம் சரிதான்..
ஆனால்..
அது எதுவும் அவருக்குத் தெரியாது..
அதையெல்லாம் அவர் பார்க்கவும் முடியாது..
இதுதான் வாழ்க்கை..
இவ்வளவுதான் வாழ்க்கை..
இனியாவது..
மனிதர்களை.. அதிலும் பிறருக்கு உதவி செய்து வாழும் நல்லவர்களை
அவர்கள் இந்த பூமியில் வாழும் போதே
கொண்டாடப் பழகுங்கள்..
*வாழ்க்கை மிகவும் புதிரானது...*
————————————————————-
இப்படியாக;
மகாகவி பாரதி உயிரோடு இருந்தவரை, யாரும் அவரைக் கொண்டாடவில்லை. அவர் மறைந்த பின் அவருடைய இறுதிப் பயணத்தில் வெறும் ஏழு, எட்டு பேர் மட்டுமே கலந்து கொண்டனர். நாம் இப்போது பாரதியைக் கொண்டாடுகிறோம். அவர் மறைந்து இப்போது சரியாக நூறாண்டுகள் ஆகிவிட்டன.
சீமான் வீட்டுப் பிள்ளை வ.உ.சிதம்பரனார், தன்னலமில்லாமல் நாட்டுக்கு உழைத்ததை யாரும் கண்டுகொள்ளவில்லை. இறுதிக் காலத்தில் அவர் பட்ட சிரமங்கள் அதிகம். வக்கீல் - பிலீடர் - ஆக இருந்த வ.உ.சி., பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, எண்ணெய்யை விற்று சென்னையில் கடைசிக் காலத்தைக் கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. காலில் செருப்பு கூட இல்லாமல் கோவில்பட்டியில் அவர் வக்கீலாகப் பணியாற்றியதை எல்லாம் மறக்க முடியுமா?
விடுதலைப் போராட்டத்தில் திலகரோடு இணைந்து தீவிரவாதியாக இயங்கிய வ.உ.சிதம்பரனாருக்கு, பொது வாழ்வு கொடுத்த கொடை, ரணங்களும் சிரமங்களும்தான்.
சேலம் பி.வரதராஜுலு நாயுடு ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ஸையும், நல்ல தமிழ்நடையில் தினசரி பத்திரிகை வர வேண்டும் என்பதற்காக ‘தமிழ்நாடு ’ பத்திரிகையையும் நிறுவினார். ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ஸை வரதராஜுலு நாயுடுவிடமிருந்து எக்ஸ்பிரஸை வாங்கியவர் சதானந்த். அவர் அதை பின்னர் கோயங்காவிற்கு விற்றார் (கோயங்காவுக்கும்), ‘தமிழ்நாடு’ தின ஏட்டை மதுரை கருமுத்து தியாகராஜ செட்டியாருக்கும் இறுதியாக வழங்கிவிட்டார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் இருந்த வரதராஜுலு நாயுடுவின் கீழ்தான் ஈ.வெ.ரா. பெரியார் காங்கிரஸ் காரியதரிசியாகப் பொறுப்பிலிருந்தார். காமராஜரும் சி.சுப்பிரமணியமும் தமிழ்நாடு முதல் அமைச்சர் பதவிக்குப் போட்டியிட்டபோது, காமராஜர் அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் பொறுப்புக்கு வர சேலம் வரதராஜுலு நாயுடு உதவியாக இருந்தது, இன்றைக்கு எத்தனை பேருக்குத் தெரியும்?
நாட்டின் விடுதலைக்கு முன்பு, காந்தி, நேரு ஆகியோர் இலங்கைக்குச் செல்வதற்கு காரணமாக அவர் இருந்தது மட்டுமல்ல, இலங்கையில் வாழும் தமிழர்கள் பட்ட சிரமங்களை ஆங்கிலேயர் காலத்திலேயே எடுத்துச் சொன்னவர் சேலம் வரதராஜுலு நாயுடு. சேலம் ராசிபுரத்தில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் அவருக்குச் சொந்தமாக நிலங்கள் இருந்தன. அவருடைய இடத்தில்தான் அரசுக் கல்லூரியும் கட்டப்பட்டது. வரதராஜுலு நாயுடு 1930- 40 களில் மக்கள் பயணிக்கும் 7 பேருந்துகளுக்கு உரிமையாளராக இருந்தார். இப்படிப்பட்ட கண்ணியமிக்க பொதுவாழ்க்கை வாழ்ந்தவர்களைப் பதம் பார்த்தது தானே நம்முடைய மண்?
அதைப் போலத்தான் இன்றைக்கும் பல மயில்சாமிகள் நம் முன் இருக்கிறார்கள். ‘வாய்மையே வெல்லும்’ என்பதற்கு மாறாக, தரகு அரசியல், வியாபார அரசியல் செய்யும் மனிதர்கள் நிரம்பியிருக்கும் இந்தக் காலத்தில், என்ன சொல்லி என்ன பயன்?
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#KSR_Post
22-2-2023.
No comments:
Post a Comment